அஞ்சலைக்கு வயித்துக்குள்ள கந்தகம் கரைச்சு ஊத்துனாப் போல காந்துச்சி,பசி பத்தி கிட்டு எரிஞ்சுது.
நேத்து ராத்திரி காய்ச்சின கஞ்சியில திருப்பாலு வயித்துக்கு போக ஒரு மடக்கு தான் மிச்சமிருந்தது. வெல்லன எந்திரிச்சு பொழப்புக்கு போற ஆம்பளையை வெறும் வயித்தோட வெளியே அனுப்ப எந்த
பொம்பளைக்குதான் மனசு வரும்..
அஞ்சலை மிச்சமிருந்த கஞ்சி கலையத்தை மண் சாணக்கால மூடி வச்சுட்டு பசி வயித்தோட சுருண்டுகிடுச்சு..
கஞ்சியை குடிச்சிட்டு வழக்கம் போல திருப்பாலு மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கி கிட்டு வெளியே கிளம்புச்சு..
நீ பொழப்புக்கு கெளம்பு மாமா..சொணங்கி நிக்காதே ..சாமி இன்னைக்கு ஏதாச்சும் வயித்து பசிக்கு வழி காட்டும் என்னைப் பத்தி கவலைப் படாதே அக்கம் பக்கத்துல வயித்துக்கு ஏதாச்சும் பீராஞ்சிக்குவேன்
திருப்பாலு கக்கத்துல மேல்துண்டை இடுக்கி கிட்டு நடந்தான்..
அஞ்சலை கன்னியம்மன் கோயில் ஆலமரத்துக்கு கீழே நின்னு ஏரிக்கரை மேல திருப்பால் நடந்து போறத பாத்து கிட்டே நின்னுகிட்டு இருந்துச்சு..
இப்பவெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாமன் இடுப்பையும் புட்டத்தையும் ஆட்டி ஆட்டி சுழிச்சிகிட்டு பொட்டச்சி நட நடக்குது..பேச்சும் நீட்டி இழுத்து கோணி கிட்டுப்போவுது..கொஞ்ச நாளா என்னாச்சு..மாமனுக்கு..
திருப்பாலு மேற்கால நோக்கி நடந்து
ஒலந்துன ஏரிக்கு நடுக்கால இருக்குற நீராழி மண்டபத்தின் பின்னாடி போய் மண்டபத்தின் சுவற்றிலிருந்து சின்ன பாறாங்கல்லை நகட்டி அதற்கு பின்னாடி ஒளிச்சி வச்சிருந்த மஞ்சப்பையை எடுத்துச்சு
திருப்பாலு கிட்ட கூத்து வாத்தியாரு ரங்கமணி கடைசியாக கொடுத்த முனிமாமாவோட சொத்து ஸ்திரீவேஷம் போடுவதற்கு உண்டான அரிதாரம் வச்சிருந்த மஞ்சப்பை..
திருப்பாலு குலத்தொழிலான வண்ணார் தொழில்ல நொடிச்சுப் போய் கைமாத்து கேக்கலாம்னு கூத்து வாதியார் ரங்கமணியை பார்க்க போனப்ப ..
முனிமாமன் எங்கிட்டே விட்டுட்டுப் போன பாரம் ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு நயிஞ்சிப்போன கூரை எருவானத்துல சொருகி வச்சிருந்த பழைய மஞ்சப்பையை உருவியெடுத்து திருப்பாலு கிட்ட குடுத்துட்டு ..
உன்மாமன் கடைசி உசுரு இந்த ஆரிதாரத்துலதான் போச்சு கூத்துமேடையில..அவன் உசுரத்தான் உங்கிட்ட குடுக்கேன் பத்திரமா வச்சுக்கன்னு சொன்னாரு
ரங்கமணி வாத்தியார் கிட்ட பேச்சு வளர்க்க திருப்பாலுக்கு சங்கடமாகவும் பயமாகவும் இருந்துச்சு பேச்சு வாக்குல வாத்தியாரு ஒரு டீத்தண்ணி கேட்டுட்டா வாங்கி கொடுக்க வக்கில்லை. வயித்துல பசியைத் தவிர திருப்பாலு கிட்ட இருப்பு எதுவுமில்லை.
ராத்திரியெல்லாம் சரியா தூக்கமில்ல. ராத்திரி தூக்கத்துல கூட முனிமாமன் ஞாபகத்துல வந்து நின்னுச்சு.
முனிமாமன் துரோபதி வேஷம்கட்டி சுழண்டு சுழண்டு ஆவேசமா ஆடிக்கிட்டே இருந்துச்சு. சட்டுன்னு வாயில மூக்கில இருந்து ரத்தம் கொப்பளிக்க சுருண்டு பொத்துன்னு விழுந்துச்சு. பக்குன்னு தூக்கி வாரிப் போட்டது.. திருப்பாலு தூக்கம் கலைஞ்சி எழுந்து உக்காந்துச்சு. ஒட்டடை குச்சியில் சுத்துன ஒட்டடை போல அதேஞாபகம் மனசுல சுத்தி சுத்தி வந்துச்சு முகமெல்லாம் வேர்த்து கொட்டுச்சு.
முனிமாமன் தன்கிட்ட என்னவோ சொல்ல வந்து சொல்ல முடியாம தவிக்கிறது போல மனசுல பட்டுச்சு ..
திருப்பாலு மனசுல எதையோ தீர்மானிச்சு வெள்ளன எந்திரிச்சு முனிமாமனோட மஞ்சப்பையை கக்கத்துல வச்சுகிட்டு ராமர் கோயில் பக்கம் நடந்து போச்சு .. கக்கத்துல இருந்த மஞ்சப் பையை பிரிச்சு உள்ளக் கிடந்த சவரக்கத்திய எடுத்து முகத்துல திட்டு திட்டா கெடந்த தாடி மீசையை சுப்புட்டமா மழு மழுன்னு வழிச்சிட்டு..ஒடம்புல சுத்தி இருந்த கந்தல் வேட்டி பனியனை கழட்டி வச்சுட்டு தலையில சுத்தி இருந்த துண்டை அவிழ்த்து தனது நீண்ட கூந்தல் முடிய சிலுப்பி விட்டுட்டு கொட்டாங்கச்சி பாடியை மாட்டி ரவிக்கையை போட்டு மாரை சரி பண்ணிகிடுச்சி, பையிலிருந்த மயில் கழுத்து நெற சேலையை இடுப்புல சுத்திகிட்டு முகத்துல அரிதாரம் பூசிக்கிட்டு பொம்மனாட்டி வேஷத்துல கெளம்பிடுச்சி..
அக்கம் பக்கத்துல இருக்குற கடை கன்னிங்க முன்னாடி போய் நின்னு கைதட்டி தட்டி கை நீட்டுச்சி அன்னைக்கு வயத்து பொழைப்புக்கு திசையை தேடி ஆரம்பிச்ச வாழ்க்கைதான் இன்னைக்கு வரைக்கும் திருப்பாலோட அன்றாட வாழ்க்கை கால்வயத்து கஞ்சியோடு நகத்திக்கிட்டு போய்கிட்டு இருந்துச்சு.
இன்னிக்கும் அந்த பொழப்புக்குத்தான் கெளம்புச்சு
திருப்பால தெருக்கூத்து வேஷமா பார்த்த சனங்க பார்வை போக போக வேறவிதமா மாறிகிட்டே வந்துச்சு பொழைப்புக்கு எட்ட கால்வச்சு தூரத்து ஊருங்களுக்கு போனப்ப சிலபேரு திருநங்கையின்னு நெனைச்சு கொச்சையா பேச ஆரம்பிச்சாங்க கையை பிடித்து இழுத்து படுக்க கூப்பிட்டாங்க இந்த அசிங்கங்கத்தை யெல்லாம் திருப்பாலு சட்டைப்பண்ணுல..அஞ்சலையோட பசிவயித்துக்கு கஞ்சி ஊத்தனும் மானம் கெட்டாலும் பரவாயில்லைன்னு ஆயிடுச்சு. மானம் மருவாதியெல்லாம் தோத்துப்போச்சு. எல்லமே சொரணை கெட்டு பழகி போயிடுச்சு .
.திருப்பால் அஞ்சலைக்கு தாய்மாமன் தான். அக்கா யசோதாவும்,மாமா முனிசாமியும் தாயும் தகப்பனுமாக இருந்து தன்னை வளர்த்து ஆளாக்கிய கடனை நிறைவேத்தி வைக்க திருப்பாலு அஞ்சலையை கல்லாணம் கட்டி கிடுச்சு
முனிசாமி குடும்பத்துக்கு குலத்தொழில் வெள்ளாவிவச்சு வெளுக்குற வண்ணார் தொழில். மாமன் முனிசாமிக்கு கூத்து பாட்டுல ஆர்வம் சாஸ்தி. கூத்து வாதியார் ரங்கமணி கிட்ட பாடம் கத்துக்கிட்டு ஊடல வேஷம் கட்டுச்சு
அஞ்சலை ஏரிக்கரை மேல நடந்துபோய் கண்ணில் இருந்து மறையும் வரைக்கும் மாமனை பார்த்துகிட்டு நின்னுகிட்டு இருந்துச்சி..
ஏலா..அஞ்சலை நீ இங்கதான் இருக்கியா.. நான் குடிசையாண்ட போய் தேடிட்டு வாறேன்..
என்னக்கா சேதி .
அடகுகடை செந்தில் வீட்டுல அழுக்கு துணிவெளுக்க வண்ணாத்தியை வர சொல்லுனு ..சோறு பொங்கி வைக்க போனபோது சொல்லுச்சு போவியாம் ..
போவுல அக்கா அவ அப்பட்டமா பொம்பளைங்க மாரை பார்த்து வெரசமா பேசுவான் எச்சிக்கலை நாயி..
வீட்டு வேலை செய்யிற இடத்துல இருந்து கஞ்சிசோறு கொண்டு வந்தேன்.. நிறையகெடக்கு குடிசைக்கு வா நெரவிக் குடிக்கலாம்.
வேண்டாம் அக்கா..
உனக்கு ஒன்னும் தொப்புளுக்கு மேல கஞ்சி தளும்பிகிட்டு இல்லன்னு தெரியும் வா..
அஞ்சலையை கையை புடிச்சு இழுத்து கிட்டு போச்சு செண்பகம் .
அலுமினியக் கிண்ணியில் கஞ்சியை வார்த்து வச்சிட்டு கஞ்சிக்கு வாட்டமா சுண்டக் காய்ச்சிய கத்திரிக்காய் புளிக் குழம்பை சின்ன மண் சாணக்கில் ஊத்தி வச்சிது செண்பகம் .
அஞ்சலை கிண்ணியில இருந்த கஞ்சியை ஒரே மூச்சில் தம்கட்டி சுர்ருன்னு உரிஞ்சிடுச்சு பக்கவாட்டில் கத்தரிக்காய் சுண்டக்குழம்பு ஒரு பக்கம் தாவுகட்டி இழுத்துச்சு.
அடிப் பாதகத்தி இம்புட்டு நெருப்பை வயித்துல கட்டிகிட்டா சும்மா திரிஞ்சுகிட்டு இருந்தே..
நான் ஒன்னு சொல்லட்டா அஞ்சலை ..
சொல்லுக்கா..
என்கூட சேர்ந்து உழைப்பு எடுக்குறேன்னு சொல்லு உனக்கும் நாலு வீட்டுவேலை பிடிச்சித் தாறேன்..கவுரவமா பசிபட்டினி இல்லாம காலத்தை ஓட்டிப் புடலாம்.. உழைச்சி போடும் ஆம்பளை கை சம்பாத்தியம் இல்லாமல் ஓஞ்சி போச்சுனா நாமத்தானடி குடும்பத்தை தூக்கி சுமக்கணும் எத்தனை நாளைக்குத்தான் பசியில கெடந்து சாவிங்க..
நான் மாமன் கிட்ட சொல்லிப் பார்த்துட்டேன் ..நான் உன்னை வச்சு காப்பாத்து வேங்கிற நம்பிக்கையில அக்காவும் மாமனும் உன்னை எங்கிட்ட விட்டுட்டு போயிட்டாங்க .. என் காலம் கொஞ்சம் சரியில்ல கூட துணைக்கு நில்லு எல்லா சரிபண்ணிடுவேன்னு சொல்லுது.
உண்மையை சொல்லு திருப்பாலு நெசமாலும் உன் கூட ஆம்பளையா நடந்துக்குதா..
செண்பகம் அக்கா இதுக்கு முன்னாடி யெல்லாம் இதுமாதிரி நீ என்கிட்ட பேசுனது இல்லையே..
ஏழைகளுக்கு புருஷன் பொண்டாட்டி சுகத்தை விட்டாக்கா இனாம கிடைக்கிற சந்தோஷம் என்ன இருக்கு உலகத்துல அந்த சந்தோசமாவது ஒனக்கு கிடைக்குதான்னு கேட்டேன் என் நிலைமையை பத்திதான் ஒனக்குத் தெரியுமே..காஞ்சுப்போன கம்மாக்கரை
கல்லாணம் கட்டுன நாளுல இருந்து மாமனுக்கு அதுல இஷ்டமில்ல இன்னவரைக்கும் என்கூட படுத்தது இல்லை நாங்க ரெண்டு பேரும் பொண்டாட்டி புருஷன்கிறதே நினைப்புல இல்ல..சின்னவயசுல இருந்து என்னை மாமன் தூக்கி வளத்துச்சி..
இப்ப உன் புருஷன் பொழப்புக்கு என்னதான் செய்யிது
சரியா தெரியல அக்கா ..விடிஞ்சதும் வெளியே பொழப்புக்கு போவும், கை வாட்டத்துக்கு என்ன வேலை கெடைக்குதோ அதை செய்யும்.. இருட்டியதும் குடிசைக்கு வந்துடும். சிலப்போ வரும்பிடி இருக்கும் பல நாளுக்கு தம்பிடி ஒன்னும் காணாது..
அஞ்சல உன்கிட்ட சேதி ஒன்னு சொல்லணும்
சொல்லுக்கா..
செண்பகம் வாயெடுத்து சொல்லத் தயங்குச்சு..
என்னக்கா ..இம்புட்டு இழுத்துப் பிடிச்சு தயங்குற..வெல வெலங்குது
சாமிசத்தியமா நான் கண்ணால பார்த்ததை சொல்லுறேன் அஞ்சலை.
போனகிழமை தங்கச்சி ஊரு திருவிழாவுக்கு கந்தன்கொள்ளை போயிருந்தேன். அப்போ அங்க திருவிழா கூட்டத்துல திருப்பாலு திருநங்கை போல சத்தமா கைகளை தட்டி தட்டி காசு கேட்டுகிட்டு இருந்துச்சு..அங்கிட்டு வந்த திருநங்கை உன் மாமன் சீலையை புடிச்சி இழுத்து ரவிக்கையெல்லாம் பிச்சி எரிஞ்சி அரை நிர்வாணமாக்கி மான பங்கம் செஞ்சிச்சி..
ஆம்பளை நாய் தானடா நீ எங்க பொழப்புல ஏன் மண்ணை அள்ளி போடுற …பொட்டை ..பாடுன்னு ..இன்னும் அசிங்கமா திட்டுச்சி…திருவிழாவுக்கு வந்த சனங்க நடுவுல கோமணத்தோட கூனிக் குருகி முட்டியை கட்டிகிட்டு முட்டிங்களுக்கு நடுவே மூஞ்சை புதைச்சு மானத்தை மறைச்சிக்கிட்டு திருப்பாலு தேம்பி தேம்பி அழுவுறதை பார்த்தேன்..இன்னைக்கு வரைக்கும் மனசு சரியில்ல. .எந்த ஆம்பளைக்கும் இதுமாதிரி உசுருல ஊசிவச்சு குத்துறாப் போல அவமானம் வரக்கூடாது ..உன் வயித்துக்கு கஞ்சி ஊத்த உன்மாமன் ஊருசனங்க முன்னால மானத்தை வித்துட்டு நிக்குதுன்னு மட்டு புரிஞ்சிது .. அதனால்தான் நீ புருஷன் கூட படுத்து எந்திரிச்ச சமாச்சாரங்களை எல்லாம் கேட்டேன். வயித்து பொழப்புக்கு இல்லன்னாலும் ஒம்புருஷன் இனிமேல் மானபங்கம் படாம இருக்கவாவது ஏதாவது வேறபொழப்புக்கு
வழியைத்தேடு..
அக்கா வயித்துக்கு கஞ்சி ஊத்தி குளிர வச்சிட்டு நெஞ்சில நெருப்பை அள்ளிக் கொட்டுறியே ..
செண்பகம் சொன்னதைக் கேட்டு அஞ்சலை ஓன்னு வாய்விட்டு அழுதுச்சு..செண்பகத்துக்கு ஏன் சொன்னேன் என்று மனசுக்கு வேதனையா ஆயிடுச்சு..
வட்டி கடைக்காரன் செந்தில் துணி வெளுக்க கூப்பிட்டு அனுப்பியது ஞாபகத்துக்கு வந்துச்சு சட்டுன்னு வாரி சுருட்டி எந்திரிச்சு முகத்தை முந்தானியில துடைச்சிகிட்டு கிளம்பி ஓடுச்சு. இனி மாமனோட மானத்துக்கு மறைப்பு போடணும் .. துணி வெளுக்குற கூலி ஏதாச்சும் கிடைக்கும். எனக்குத் தெரியாமல் மறைச்சு மாமன் என் வயித்துக்கு கஞ்சி ஊத்த எவ்வளவோ செய்யும் போது ..அது பேச்சை மீறி அதுக்கு தெரியாம நாம இனி சம்பாத்தியத்தை தேடுறது தப்பில்லை.. அஞ்சலை மனச தேத்திக்கிட்டு எழுந்து ஓடுச்சு..
துணி வெளுக்குற அஞ்சலை வந்திருக்கேன்…
வா அஞ்சலை கதவு திறந்துதான் இருக்கு உள்ள வா..
அழுக்கை எடுத்து வெளியே போடு முதலாளி.. துவைச்சு கொண்டாறேன்..
ஊர்ல எங்கேயும் குளம் குட்டையில் சொட்டு தண்ணி இல்ல எங்கபோய் வெளுப்ப ..துட்டுக்கு ஆசைப்பட்டு எங்காச்சும் பீக்குட்டையில வெளுத்துக் கொண்டாந்து போட்டாக்கா எவன் ஓடம்புல நமைச்சல் எடுத்து சொறிஞ்சி கிட்டு அலையறது. வீட்டுல மோட்டார் பம்ப் போட்டு தண்ணி வருது துணி துவைக்கும் கல்லு இருக்கு வசதியா வேலை செஞ்சிட்டு வெளுப்புக் கூலியை வாங்கி கிட்டுப் போ. எம்மூட்டு தண்ணிங்கிறதால ..கூலியை கம்மி பண்ண மாட்டேன் . உள்ள வா
அஞ்சலைக்கு தயக்கமா இருந்துச்சு ..
புழக்கடையில் இருக்குற கிணற்றடிக்குப் போய் காத்திருந்துச்சி ..
ஒருமூட்டை துணிகளை அள்ளிக் கொண்டு வந்து போட்டுவிட்டு எதுக்கால இருந்த பாறாங்கல்லு மேல உக்காந்து கிட்டான் ..
திருப்பாலை பத்தி பேச்சை ஆரம்பிச்சான்..
ஊர்ல உன் புருசனைப் பத்தி ஒரு மாதிரியா பேசிக்கிறாங்க …
அஞ்சலைக்கு சுர்ருன்னு உச்சி மண்டைக்கு ஏறுச்சு…பொழைப்புல மண்ணு உழுந்துடக் கூடாதுன்னு சமுத்திரம் சங்கு குள்ளே அடங்கறா மாதிரி அடக்கி கிடுச்சு ..
நீபோ முதலாளி சத்த நாழியில வெளுத்துட்டு கூப்புடுறேன்
செந்தில் எழுந்து போய் ஜன்னலுக்குப் பின்னாடி நின்னு கிட்டு அஞ்சலை குனிஞ்சு நிமிர்ந்து துணி வெளுக்கறதை வெறியோடு பார்த்து கிட்டு இருந்தான் .
தரித்திரம் புடிச்ச நாயிங்க கிட்டதான் ஓடம்பு மஞ்சள் கிழங்காட்டம் நெம்பி கிட்டு கெடக்கு..
அஞ்சலை துணியை கொடியிலே காயப் போட்டுட்டு ..புழக்கடையில் இருந்து குரல் குடுத்துச்சு..
அஞ்சலையோட கையை பிடித்து சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை கொத்தா எடுத்து திணிச்சான்..
அஞ்சலை கோபமா கையை தட்டி விட்டுச்சு ..ரூபா நோட்டுங்க பறந்து சிதறி விழுந்துச்சு..
ஏன் அஞ்சலை ஓதுங்குற ..உனக்கு புருஷன் சரியில்ல ..எனக்கு பொண்டாட்டி சரியில்ல …..
அஞ்சலைக்கு சுர்ருன்னு உடம்பு பூராவும் பத்தி கிட்டு எரிஞ்சுது.
என்னடா சொன்ன ..பொட்ட நாயே முதல்ல உன் பொஞ்சாதி பக்கத்துல படுத்து அவதெனவை அடக்கி ஆம்பளன்னு சொல்லவை சிறுசாதி பொம்பளைங்க பணத்துக்கு உன் கூட படுக்கையில மல்லாந்துக்கு வாங்கன்னு நினைச்சியா ..
என்னாடி தரித்திரம் புடிச்ச நாயே ரொம்பத்தான் கொலைக்கிற பொட்டப் பய பொண்டாட்டி தானடி நீ..
என்னடா சொன்ன..
அஞ்சலை கையை உதறி விட்டு செந்திலோட நெஞ்சு மேல ஆவேசத்தோடு எட்டி உதைத்து தள்ளிட்டு கீழே சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளில் ஐம்பது ரூபாவை எடுத்து கிட்டு ..
தே ..என் உழைப்பு காசு அம்பது ரூவா ..மிச்சத்தை பொறுக்கி எடுத்து பொட்டியில வை..பொஞ்சாதி கூட படுத்து எழுந்திருக்கும் போது அவளோட உடம்பு சுகத்துக்கு கூலிகொடு..
அஞ்சலை வேகமாக வட்டிக்கடை செந்தில் வீட்டிலிருந்து வெளியேருச்சு ..
மனசுல இதே எண்ணம் ஓடிக்கிட்டு இருந்துச்சு..கொஞ்ச நாளா மாமனோட நீக்கு போக்கும் மாறிகிட்டே போவுது அப்படியே ஒருவேளை ஊரு சொல்றது உண்மையா இருந்தா ..மாமனை விட்டு ஓடியாப் போயிற முடியும்,அது என் சொந்த ரத்தம்..சென்பகம் அக்கா சொன்னது போல நான் உடல் உழைப்பு எடுத்து என் மாமனுக்கு கவுரவமா கஞ்சி ஊத்துவேன்.
மாமன் மேல மனசுல கோபம் பொத்துகிட்டு வந்துச்சு. இன்னும் புள்ள பூச்சியா கெடந்தா தோதுப்படாது.
திருப்பால் இன்னைக்கு உச்சிக்கே குடிசைக்கு திரும்பிடுச்சு
கத்திரி வெயிலு நெத்தியிலும் கழுத்திலும் வியர்வை கொட்டிக்கிட்டு இருந்துச்சு வெயில்ல கருகி மாமன் முகம் தீஞ்சி தீக்கட்டையா நிறம்மாறிப் போயிருந்தது மாமனைப் பார்க்க பாவமா இருந்துச்சு.
ஏன்மாமா எப்பவும் வெயில்
தாழ்ந்துதானே வருவே ..ஏன் வேக்காட்டுல வெந்துபோய் வந்திருக்க. மாமன் மேல இருந்த கோபம் எங்கபோய் ஒளிஞ்சிகிடுச்சின்னு தெரியல திருப்பாலு முகத்தை பார்த்ததும் அஞ்சலைக்கு அழுகை வந்துச்சு ஏன்னு தெரியல ..அதான் ரத்த உறவுங்கறது.
உக்காரு அஞ்சலை…மதியம் உன்னோட வயித்துக்கு ஒன்னும் இல்லாம விட்டுட்டுப் போயிட்டேன் மனசுல வேதனையா இருந்துச்சு ..நீபசி தாங்கமாட்டே கையில காசுதேறனதும் டீக்கடையில பிரிஞ்சி சோறும் வடையும் வாங்கிகிட்டு ஓடியாந்தேன். அவசரமா பொட்டலத்தை பிரிச்சி அஞ்சலைக்கு ஊட்டி விட்டான்.
சாப்பிடு அஞ்சலை உன்வயித்துல ஈரம் விழுந்தாதான் மாமன் மனசு குளிரும். அஞ்சலைக்கு பிரிஞ்சி சோத்தை ஊட்டி விட்டான். அஞ்சலை நிமிர்ந்து முகத்தைப் பார்த்துச்சி தாய்ப்பால் கொடுக்கும் தாயின் அன்பும் பாசமும் திருப்பாலு முகத்துல தெரிஞ்சிது..அஞ்சலை மாமன் நெஞ்சிலே சாஞ்சுகிட்டு ஓன்னு கதறி அழுதுச்சு.
அழாதே அஞ்சலை இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாபோயிடும். அழாம சாப்பிடு,
நீயும் சாப்பிடு மாமா காலையில வெறும் நீச்சதண்ணிய குடிச்சிட்டு போனது..
அஞ்சலை சோற்றை எடுத்து மாமனுக்கு ஊட்டுச்சு..
அஞ்சலை நெருக்கத்துல மாமன் முகத்தை பார்த்துச்சு
முகத்தில் திட்டு திட்டா அரிதாரமும் கண்ணுல மையும் வியர்வையில் நனைஞ்சு அப்பிகிட்டு இருந்துச்சு.. மாமன் கிட்ட ஊரு சனங்க சொன்ன பழைய கதைகளை பேசி மனசை நோகடிக்க மனசு வரல. ஊரு ஊரா இருக்கட்டும் என் மாமன் எனக்கு மாமனா இருக்கட்டும்.
வா மாமா எங்காச்சும் போயி புதுசா ஒரு வாழ்க்கையை தேடலாம் மரத்துக் கீழநிழல் ஆனாலும் நிம்மதியா இருக்கலாம் நாம பொறந்து வளர்ந்து ,வாழ்ந்த பூமி, நம்மள ஒதுக்கிடுச்சு.
என் கூடவா அஞ்சலை..
என் பேச்சுக்கு முடிவை சொல்லு முதல்ல
அதுக்குத்தான் கூட்டிப் போறேன்
திருப்பாலு ராமர் கோவில் படிக்கட்டில் இறங்கி ஏரியில் இருக்கும் நீராழி மண்டபத்துக்கு பின்னாடி போய் நின்னு சுவத்துல இருந்து பாறாங்கல்லை நகத்தி மஞ்சப்பையை உருவி எடுத்தான்
என்ன மாமா இது ..
அஞ்சலை பையை பிரித்து பார்த்துச்சு..
அஞ்சலைக்கு ஆத்திரம் தலைக்கு ஏறுச்சு பையை தூக்கி வீசி எறிஞ்சிது..
நான் எதை மறந்து உன் கூட சந்தோசமா வாழனும் நெனச்சேனோ அதையே மறுபடியும் என்கிட்ட கொண்டாந்து நீட்டுறியே மாமா..நீ கூத்தாடியா இருந்தா கூட ராஜா வேஷம் போடுறவனா இருக்கணும்னு நினைக்கிறவ நான் . ஆனால் நீ ஆம்பளையா இருந்து கிட்டு பொம்பளை வேஷம் போட்டு உன் மானத்தை வித்துட்டு வந்து நிக்கிறியே.
தனக்கு குழந்தை இல்லன்னா தன் புருஷனோட மானம் மத்தவங்க முன்னாடி தலைகுனியக் கூடாதுன்னு தன்கிட்ட எந்தக்குறை இல்லேன்னாலும் தன்னை மலடின்னு சொல்லிகிட்டு தன் புருஷனோட கவுரவத்தை விட்டுக் குடுக்காம நாலுபேரு முன்னால தல நிமிர்ந்து நடக்கவைக்கிற பொம்பளைங்க வாழுற மண்ணு மாமா இது
ஏம்புள்ள இம்புட்டுக் கோவம் ..அதுல இருக்குறது முனி மாமனோட கூத்து வேஷம் கட்டுற பொருளுங்க ..ரங்கமணி வாத்தியாரு என்கிட்ட குடுத்து உன் மாமனோட உசுரு இதுல தான்டா இருக்கு பத்திரமா வச்சுக்கணும்னு குடுத்தாரு.. இந்தப்பை எங்கிட்ட வந்ததுல இருந்து தெனம் மாமன் கூத்து வேஷம் கட்டி கனவுல வந்து சுழண்டு சுழண்டு ஆடுச்சு .மாமன் ஏதோ சொல்ல வருதுன்னு மனசுல பட்டுச்சு. மறுநாள் இங்க வந்து மாமனைப் போல வேஷம் கட்டிகிட்டு கால் போன போக்குல போனேன்..கால் சலங்கை சத்தம் கேக்கும் போது முனி மாமன் என் கூட நடந்து வர்ற மாதிரி .பிரம்மையா இருந்துச்சு. மாமனைப் போல கை கால்களை தூக்கி அசைச்சேன் ஊரு சனங்க வேடிக்கை பார்த்தாங்க.. காசு போட்டாங்க ..அன்னைக்கு ஆரம்பிச்சதுதான் இந்த அவதாரம் இன்ன வரைக்கும் கால் வயித்து கஞ்சியாவது ஊத்துது ..அதை போய் தூக்கி எறிஞ்சிட்டியே அஞ்சலை..
ஏன் மாமா ஊரெல்லாம் உன் பேரை அசிங்க மாக்கி வச்சி இருக்கியே …
அஞ்சலை முகத்திலும் மாரிலும் அடிச்சி கிட்டு ஓ ன்னு அழுதுச்சி ..
திருப்பாலு அஞ்சலையை நெஞ்சோடு அணைச்சி கிட்டான்
மன்னிச்சுடு அஞ்சலை ..அழாதே..
திருப்பாலு தூறக் கிடந்த மஞ்சப்பையை கொண்டு வந்து அதிலிருந்த மஞ்சத் துணியால சுத்திவச்சி இருந்ததை அஞ்சலை இடம் கொடுத்தான்
என்ன மாமா இது ..
பிரிச்சிப் பாரு ..
அஞ்சலை துணி முடிச்சை அவிழ்த்தாள் உள்ளே சில்லரையும் பணமும் இருந்துச்சு
நீ சொன்னியே மானம் கெட்ட பொழப்பு ன்னு அதுல சம்பாதிச்சது .
குடும்பத்துக்காக உழைக்கும் ஆம்பளை யாரும் அசிங்கத்தையும் கேவலத்தையும் பார்க்கமாட்டான் அஞ்சலை. குடும்பத்துக்காக பீக்குழியில் இறங்கி முங்கி மலத்தை அள்ளுறவன் என்னிக்கு அசிங்கத்தை நெனைச்சு பாத்து இருக்கான் அது போலதான் இதுவும் .
வேற பொழப்புக்கு கொஞ்சம் கையில பணம் தேத்திக்கிட்டு ஒருநாளைக்கு நாம ரெண்டு பேரும் இந்த ஊரைவிட்டு போயிடலாம்னு தீர்மானிச்சு வச்சு இருந்தேன்..
அஞ்சலை முந்தானையில் கண்களை துடைச்சு கிட்டு ..எந்திரிச்சு
வா மாமா போலாம் ..இனிமேல் இந்த ஊரு நமக்கு வேணாம்.
அப்பனோட துணிமணியெல்லாம் மண்டபத்திலே வச்சுடு ..இனிமேல் என் அப்பனோட ஞாபகம் உனக்கு வேணாம் என் ஞாபகம் மட்டும் இருக்கட்டும் . பையில் கையை விட்டு சவரக்கத்தி மட்டும் எடுத்து இடுப்புல சொருகி வச்சுடுச்சு
சவரக்கத்தி எதுக்கு அஞ்சலை
வேலை இருக்கு மாமா உன்னை பலி குடுக்க போறேன்.
கன்னியம்மன் கோயிலுக்குப் போய் திருப்பாலு கையை பிடிச்சு சாமிக்கு முடி இறக்குற கல்லுமேல உட்காரவச்சு.. மஞ்ச தண்ணியை தெளிச்சுது
குடுமி முடியை கொத்தா புடிச்சி இடுப்புல சொருகி வைத்திருந்த சவரக்கத்தியால் கர கரன்னு கதிர் அறுக்குறாப்போல அறுத்து எடுத்துச்சி ..திருப்பாலு எதிர்ப்பு சொல்லாம அஞ்சலை இஷ்டத்துக்கு தன்னை விட்டுக் கொடுத்தான்.
கொண்டை முடியிலிருந்து கொத்தா முடியை வெட்டி எடுத்து அய்யனார் சாமி மீசை போல செஞ்சு முடி கயிறு திரித்து மாமன் முகத்துல மீசை வச்சுக்கட்டி விட்டுச்சு எத்தனை நாள் ஆசை மாமன் முகத்துல கம்பிரமான கடாமீசையைப் பார்க்கணும்னு சந்தோஷத்துல மனசு நிறைஞ்சது .
மாமனோடு கன்னியம்மனை கும்பிட்டு
மாமன் கொடுத்த மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்த பணத்தை கோயில் உண்டியலில் போட்டுச்சு.. மஞ்சள் துணியில மாமனோட மழிச்ச கூந்தலை கட்டி சாமிக்கு காணிக்கையாக வச்சிட்டு ஆத்தாளை கும்பிட்டுட்டு .. நல்லவழி காட்டு ஆத்தாண்ணு வேண்டுச்சு..
திருப்பாலுக்கு ஒன்னும் புரியல ..என்ன புள்ள செய்ற..
நம்ம எதிர் காலத்துக்கு சேர்த்து வச்ச பணம்..ஆத்தா உண்டியல்ல போட்டுட்டியே…இனி பொழப்புக்கு என்ன பண்றது ..
அஞ்சலை முந்தானையை அவிழ்த்து மத்தியானம் வட்டி கடைக்காரன் கிட்ட சம்பாதிச்ச ஐம்பது ரூபா நோட்டை மாமன் கிட்ட கொடுத்துச்சு..
என்னது இது ..
உன் அஞ்சலை இன்னைக்கு மானத்தோடபோராடி சம்பாதிச்சது..இது போதும் மாமா நம்மளோட கவுரமான புது வாழ்க்கையைத் தொடங்க ..
திருப்பாலு அஞ்சலையை அணைச்சி கிட்டான் ..ரெண்டு பேரு கண்ணுலயும் மனசு கரைஞ்சு அருவியாக கொட்டுச்சி .
விடியலுக்கு முன்னமே திருப்பாலும் அஞ்சலையும் ஊர் எல்லையை கடந்து கொண்டிருந்தனர் …
சிறுகதையை எழுதியவர்:
ரிஸ்வான்
செல்: 9840497875
email: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.