நூலின் ஆசிரியர் த, வி. வெங்கடேஸ்வரன் டெல்லியிலுள்ள மத்தியஅரசின் தேசிய அறிவியல் பிரச்சார மய்யத்தில் முதுநிலை விஞ்ஞானியாக உள்ளார். சிறந்த அறிவியல் எழுத்தாளரான இவர், எண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றி, மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனிதக்குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல அறிவியல் நூல்களை வெளியிட்டுள்ளார். பல்துறை அறிஞர்.
இந்நூல் கேள்வி பதில் வடிவத்திலேயே இருக்கிறது. சிறந்த கேள்விகள் ஆகச்சிறந்த பதில்களைப்பெற்றுத்தரும் என்பது இந்நூலின் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நமது செல்களில் மைட்டோகாண்ட்ரியா எனும் பகுதியுள்ளது. அதில் சிறு நுண் DNA உள்ளது. செல்லின் கருவிலுள்ள DNA எனும் மரபணுவில் சரிபாதி அம்மாவிடமிருந்து வருகிறது, சரிபாதி தந்தையிடமிருந்து வருகிறது, ஆனால் மைட்டோகாண்ட்ரியா DNA தாயிடமிருந்து மட்டுமே வழிவழியாக வருகிறது. நமக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா DNA நமது  தாயுடையது மட்டுமே. தாய்வழி  வழியேதான் அறிவியல் பூர்வமாக வம்ச ஆய்வு மேற்கொள்ளமுடியும்.
தொடக்கத்தில் தாவரங்கள் போன்ற ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரிகள் கடலில்தான் தோன்றின. கடலின் உள்ளே குறைந்த ஆற்றல் கொண்ட நீண்ட அலை நீளம் உடைய சிவப்பு, மஞ்சள் நிற ஒளிதான் அதிக ஆழம் செல்லும். ஆழத்தில் செல்லும் ஒளியை பெரும் வகையில் அமைந்த உயிரிதான் நிலைக்கும் அல்லவா? எனவே அந்த முதல் நிலை ஒளிச்சேர்க்கை உயிரிகள், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக் கிரகிக்கும்படியாக இருந்தன. எல்லா நிறத்திலும் சூரியன் ஒளிர்ந்தாலும் குறைந்த ஆற்றல் உடைய சிவப்பு நிற ஒளித்துகள்களையே அதிகம் உமிழ்கிறது. அதிக ஆற்றல் உடைய நீலம் குறைவான ஆழத்திற்குத்தான் செல்லும். இடைப்பட்ட பச்சை நிறம் எண்ணிக்கையில் கூடுதல் இல்லை, ஆற்றலிலும் இடைப்பட்ட நிலை, எனவே நீரின் உள்ளே புகும் திறன் குறைவு. எனவே குறைவான ஆழத்துக்கு வரும் பச்சையைத் தேடிச்செல்வதை விடுத்து, கூடுதல் ஆற்றல்கொண்ட, ஆனால் குறைவான கூடுதல் ஆற்றல் கொண்ட, ஆனால் குறைவான எண்ணிக்கை கொண்ட அதே சமயம் எண்ணிக்கையில் கூடுதல் விகிதம் கொண்ட சிவப்பு நிறத்தையும் உறிஞ்சும் உயிரியின் திறம்தான் உயர்வாக இருக்கும்,. இன்றைய தாவரங்கள் எல்லாம் இந்த முதல் நிலை ஒளிச்சேர்க்கை உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம். எனவேதான் தாவரங்கள் பச்சையை விடுத்துப் பிற நிறங்களை உட்கிரகிக்கும் படியாக உள்ளன.
நிழல் கருப்பாக ஏன் உள்ளது என்ற கேள்விக்கு நிழல் கருப்பாக இல்லை. ஒளியற்று இருக்கிறது, அவ்வளவே. எல்லா நிற ஒளியும் சீரான அளவில் கலந்து இருந்தால் அது வெள்ளையாகப் புலப்படும். சில நிறங்கள் தனித்தோ, கலந்தோ இருக்கும்போது பலவண்ணங்கள் காணப்படும். நிசப்தம் என்பது சப்தம் இன்மை என்பதுபோல கருமை என்பது நிறம் அல்ல. ஒளியின்மை, அவ்வளவே.
வாயில் தொடங்கி பிட்டத்தில் சென்று முடியும் ஒரு குழாய்தான் வயிறு, சிறுகுடல் பெருங்குடல் எல்லாம். டூத் பேஸ்ட்டை வெளிகொண்டுவருவதை போலத்தான்  இந்தக்குழாய் சுருங்கி விரிந்து தொண்டைக்குழியிலிருந்து உணவு வயிற்றுக்குள் உள்ளே செல்கிறது. உணவு, திரவங்கள், பல்வேறு வாயுக்கள் அடங்கிய கலவை இப்படி வயிற்றில் உள்ள குழாய்க்குள் செல்கிறது. வயிற்றுக்குள் உள்ள குழாய்ப்பகுதி நிமிடத்திற்கு மூன்றிலிருந்து பன்னிரண்டு முறை இவ்வாறு சுருங்கி விரிவது நிகழும்போது எழும் ஓசைதான் வயிற்றுக்குள் எழும் சத்தமாக நமக்குக் கேட்கிறது. இந்தச் சத்தத்தை போர்போருக்மி (borborygmi)என்று அழைக்கிறார்கள்.
மனிதன், விலங்குகள் இடும் கழிவுகள் கண்களுக்கு புலப்படும் படியாகவும் அருவருப்பு ஊட்டும் படியாகவும் உள்ளது. தாவரக்  கழிவுகளைப் பெரிதும் பயன்படுத்துகிறோம். தாவரக் கழிவில் உள்ள முக்கியமானப்பொருள் ஆக்சிஜன் ஆகும். மேலும் தாவரங்கள் இலை பட்டைகளில் கழிவுகளைத் தேக்கிவைக்கின்றன. அவ்வப்போது இலைகள் உதிர்ந்தும், பட்டைகள் உரிந்தும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. தாவரங்களில் கசியும் பிசின், பால், ரப்பர் போன்றவை கழிவுகளே ஆகும். தேயிலையின் டானின், தைலமர எண்ணெய், காபியின் காஃபின், புகையிலையின் நிகோடின் எல்லாம் தாவரக் கழிவுகளே.
மூளை பகுதி முழுதும் செரிப்ரோ ஸ்பைனல் ஃப்ளுயிட் (csf)என்ற திரவத்தொட்டியில் மிதக்கிறது. இந்த திரவம் மூளையின் உள்ளே சென்று கழிவு அகற்றும் வேலையைச் செய்கிறது என ஆய்வுகள் நிறுவியுள்ளன.
உடலில் குளுக்கோஸ் அளவு குறையும்போது பசி என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. அதிகமாகும்போது இந்நிலையை ஹைபோகிளைசீமியா என்பார்கள். இந்நிலை ஏற்பட்டால் பல்வேறு வகையான மயக்கங்கள் ஏற்படும். இதை வற்றுணர்வு என்பார்கள். காது அடைத்துக்கொள்ளுதல், தலைசுற்றல், கண்கள் பஞ்சடைந்துபோதல், அடிவயிற்றில் அதிகமாக அமிலம் சுரத்தல் போன்றவையெல்லாம் ஏற்படும்.
தேனீக்களின் வயிற்றில் வினையாற்றும் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் எனும் நொதிதான் தேன் பல ஆண்டுகள் கெடாமல் இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நொதி சர்க்கரை பொருளுடன் வினை புரிந்து க்ளுக்கானிக் அமிலத்தையும் ஹைட்ரஜன் பெராக்ஸைடையும் விடுவிக்கிறது. தேனின் அமிலத்தன்மை பெரும்பாலும்   க்ளுக்கானிக் அமிலம்தான். ஹைட்ரஜன் பெராக்ஸைடு மென்மையான கிருமி நாசினி.
நமது செவியில் உட்செவிப்புற நிணநீர் நிரம்பிய குழலில் சிறு சிறு முடி போன்ற குற்றிழைகள் நேராக நிமிர்ந்து நிற்கும். உடல் சாயும்போதும் ஆடும்போதும் அந்நிணநீர் தளும்பும், அப்போது அந்த குற்றிழைகள் சாயும். அந்தகுற்றிழைகள் எத்துணை அளவு வளைகிறது என்பதை வைத்துத்தான் மூளை நமது சமநிலையை மதிப்பிடுகிறது.அந்த வளைவு சிறுசிறு மின் அதிர்வுகளை ஏற்படுத்தி மூளைக்குச் செய்தியை அனுப்புகிறது. அதைவைத்துத்தான் நமது உடல் சமநிலை குறித்து மூளை மதிப்பீடு செய்கிறது. நாம் சுழன்று நின்ற பிறகும் உட்செவிப்புற நிணநீர் தளும்பிக்கொண்டே இருப்பதால், குற்றிழைகள் வளைந்து இருக்கும், அதனால்தான் மூளை சிறிதுநேரம் சுழன்று கொண்டிருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்ளும்.
நட்சத்திரங்களை O, B, A, AF, G, K, M, R, N, என்று ஒன்பது வகையாகப் பிரித்துள்ளார்கள், இது தவிர W, L, T, S, என்ற சிறப்பு வகைகளும் உண்டு.” O “வகை சூரியன் அளவில் சிறியது ஆகும். அந்தவரிச்சைப்படியே அளவுகள் கூடிக்கொண்டே போகும். எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவு ஒளிர்வுத்தன்மையுடையது அல்ல. நமது சூரியன் G வகை நட்சத்திரமாகும். கேபல்லா என்ற அகஸ்தியர் நட்சத்திரம் சூரியனை விட பத்து மடங்கு பெரியதாகும். பிடெல்ஜியூஸ் என்ற திருவாதிரை நட்சத்திரம் சூரியனை விட 400மடங்கு பெரியதாகும். அதன் பருமன் 64கோடி மடங்கு கூடுதல், அதாவது திருவாதிரை நட்சத்திரத்தில் 64கோடி சூரியன்களை அடக்கலாம். சிரியஸ் என்ற நட்சத்திரம் பூமி அளவுதான் இருக்கிறது. ஒப்பீடாக கூறவேண்டுமென்றால் கால்பந்து அளவு நட்சத்திரத்திலிருந்து கால்பந்து மைதானம் அளவு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் வரை பிரபஞ்சத்தில் இருக்கிறது.
இதேபோன்று ஏழு தலைப்புகளில் எண்ணற்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இந்நூலில் உள்ளன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறந்த நூலாகும்.
அன்புடன் =பெ. அந்தோணிராஜ் 
நூல் =அறிவோம் அறிவியல்
ஆசிரியர் =த. வி. வெங்கடேஸ்வரன்
பதிப்பு =தாமரை பிரதர்ஸ் மீடியா, மதுரை
விலை= ரூ 80/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *