அறிவியல் நிறம் சிவப்பு - நூல் அறிமுகம் (Ariviyal Niram Sivappu) - The scientific color is red book review by Ilayavan Siva - https://bookday.in/

அறிவியல் நிறம் சிவப்பு – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : அறிவியல் நிறம் சிவப்பு

ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்

வெளியீடு :  புக்ஸ் ஃபார் சில்ரன்

முதல் பதிப்பு :  ஜனவரி 2018

இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2022

பக்கம் : 88

விலை : ரூ. 80

தமிழின் முன்னணி அறிவியல் மற்றும் அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் தன் அறிவியல் புனைக்கதை நூல்களுக்காக சாகித்திய அகடமி விருது தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை வென்றுள்ளவர் சிறார்களுக்காக 150 க்கும் மேற்பட்ட நூல்களை படைத்த இன்னும் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் ஆயிஷா இரா நடராஜன் அவர்களின் இந்த நூலின் வழியே கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர்களையும் அவர்களின் நூல்கள் எப்படி அறிவியலின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன என்பதையும் நாம் அடையாளம் காண முடிகிறது.

புத்தகங்கள் வழியே புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடிக்க கற்பனையின் ஊற்று எப்படியெல்லாம் பயன்பட்டது என்பதையும் நூலாசிரியர்களின் மனங்களில் முளைத்திட்ட அற்புதமான சிந்தனைகளின் வழியே பிரசவித்த கற்பனையான கருவிகள் எவ்வாறு உண்மையில் உமிர்பெற்று மனித குலத்தையும் உலகத்தின் நகர்வையும் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தியது என்பதையும் அறிவியலும் புத்தகங்களும் எல்லாக் காலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி அவர்களுக்குள் சிவப்புச் சிந்தனைகளை உருவாக்குவதில் முன் நிற்கின்றன என்பதையும் தெளிவுற விளக்குகிறது அறிவியல் நிறம் சிவப்பு நூல்.

புனைக்கதை எழுத்தாளர்கள் தங்களின் கற்பனைக்குக் கடிவாளம் இடாமல் சுதந்திரப் போக்கில் கனவுகளை விதைத்துச் சென்றதன் விளைவுகளே அறிவியலின் அடுத்த கட்டத்தை விரைவாக்கிட உதவி செய்தது என்பதை இந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் நூல் அறிமுகமுழ் நூல் விமர்சனமும் எடுத்துரைக்கின்றன.

மூடநம்பிக்கைகளையும் அறிவியலின் துணைகொண்டு நம்ப வைக்கும் நிலையிலும் கோமியம் மருந்தென ஏகபோகத்திற்கும் அறிவிக்கும் போலித்தனத்திலும் பண்டைய இந்தியர்களின் எல்லா செயலகளும் அறிவியலின் துணை கொண்டே நிகழ்ந்தவை என்ற கற்பனையான நம்பிக்கையிலும் உலவும் இன்றைய சூழலில் அறிவியலின் கண்டுபிடிப்புகளும் கருவிகளும் மனிதனின் கடுமையான உழைப்பிற்கு விடுதலை தரவும் வறுமையில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையின் எதிர்காலத்தை வளமையாக்கிடவும் எல்லோரும் எல்லாமும் வெறவேண்டுமென்ற சிவப்புச் சிந்தனையை வளர்த்திடவும் புத்தகங்கள் அரும்பணியாற்றுகின்றன என்பதை நூல் நிரூபிக்கிறது.

மனிதன் நிலவில் கால் வைத்தது 1969. ஆனால் 1865 லேயே ஃபிரம் எர்த் டு மூன் என்று புத்தகம் எழுதப்பட்டது என்றால் மனிதனின் கற்பனையை உணர்ந்து பாருங்கள். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் நனையாத கைக்கடிகாரம் பால்பாயிண்ட் பேனா மழைக்கோட்டுத் தலைக்கவசம் வீடியோ கேம்ஸ் என அனைத்துக் கருவிகளையும் கண்டுபிடிப்பதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்னால் தனது கற்பனையால் உருவாக்கி வைத்த அறிவியல் புனைக்கதை மேதை ஜுல்ஸ் வெர்ன். புவியின் மையத்தை நோக்கி ஒரு பயணம், எண்பது நாட்களில் உலகைச் சுற்றி என அடுத்தடுத்து அறிவியல் கற்பனைவாத பேருலகை படைத்தவர் ஜூல்ஸ் வெர்ன். இவர் தொடங்கிய குடும்ப அருங்காட்சியகம் என்ற இதழில் அறிவியல் புவியியல் வரலாறு என அனைத்தும் கலந்து தொடர்கள் எழுதியவர் இவரது கதைகளில் கடவுள் என்ற பாத்திரம் எங்குமே இல்லை என்று பிரெஞ்சு மன்னர் லூயி அவற்றை தடை செய்கிறார் தேவாலயங்கள் இவரது எழுத்துக்கு எதிராக சாத்தானின் தூதுவர் என்று அறிவித்து அவரது எழுத்துக்களை வாசிப்பவர் யாராக இருந்தாலும் தேவாலய இணைவிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என அறிவிக்கின்றனர். எழுத்து மதத்தை எப்படி பயமுறுத்தி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். ஆனால் தனது அனைத்து நாவல்களிலும் புதிய புதிய கருவிகளை உருவாக்கிக் கொண்டே இருந்தவர் ஜூல்ஸ் வெர்ன். நாசா இன்று அனைத்து விண் ஆராய்ச்சிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் இவர் வர்ணித்த அறிவியல் கற்பனை வாத சட்டங்கள் உதவிக் கொண்டு இருக்கின்றன. அவர் நாவலில் வர்ணித்த விண்கப்பல் இன்றும் ஸ்பேஸ் சிப் என்று அறியப்படுகிறது. ஜூல்ஸ் வெர்ன் நாவல்களில் இடம்பெற்று இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வராத அறிவியல் கருவிகள் பற்றி பேச வருடத்திற்கு ஒருமுறை ஆங்கில கால்வாய் மேல் கப்பலில் ஒரு கூட்டம் வெர்ன் கூட்டாளிகள் என பிப்ரவரி மாதம் கூடுகிறார்கள் என்பது எவ்வளவு ஆனந்தமான ஆச்சரியம் .

நாம் உணரும்போது அறிவியல் புத்தகங்கள் வழியே நமக்குள் அறிவும் ஆற்றலும் கடத்தப்படுவதை இந்த நூலின் வழியே உணர முடிகிறது. அறிவியல் புனைக்கதை வித்தகர் மற்றும் ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு மேல் அனுமதித்தவர் என்று ராபர்ட் ஹைனீன் அவர்களை மெச்சலாம். செல்போன் என்ற ஒன்றை நாம் கண்டுபிடித்தது 1983. தனது நாவலில் 1948 இல் பதிவு செய்கிறார்.. இவரது கதைகளும் அனைத்து அறிவியல் புனைக்கதைகளையும் உள்ளடக்கி புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமக்கு அறிமுகம் செய்கிறது செல்போன் சைலன்ஸர் துப்பாக்கி கண்ணீர் புகை குண்டுகள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஸ்பேஸ் ஷிப் என இன்னும் அப்போது மனித இனம் அறியாத பல கண்டுபிடிப்புகளை இவரது நாவல் முன்வைத்து அறிவியல் உலகை நமக்கு அறிமுகம் செய்கிறது.

மனிதனுக்கு ஏழாவது அறிவு என்று ஒன்று இருக்குமேயானால் அதை பகுத்தறிவித்தவர் பிராங்க் ஹெர்பல் இவர் தனது 1100 பக்கம் உடைய ஒரே படைப்பான டியூன் என்ற நூலில் மிக முக்கியமான மூன்று விஷயங்களைப் பற்றி அறிவுறுத்துகிறார் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது மனிதனின் வியாபாரத் தலையீடுகளால் முழுவதும் அழிந்து போகும் உயிரினங்களை திரும்ப படைத்து புவிக்கு கொண்டு வருது சாத்தியமில்லை மனிதனின் உயிரினத் தக்க அமைப்பு சுற்றுச்சூழல் தகவமைப்பின் தக்க வைத்ததால் மட்டுமே சாத்தியம் மனிதன் உருவாக்கிய செயற்கை பேரிடர்கள் இயற்கையை சீர்குலைத்து விடும் என பல ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் இவர். தனது நூலின் வழியே தனது முழு கவனத்தையும் பிராந்தியத்தின் வாழிடங்கள் மனித பரிணாம வளர்ச்சி சூழலியத் தாக்கம் மனித தலையிட்டால் வரும் பேரிடர்கள் என்பதை முதன் முதலில் அரசியல் சூழலில் விதைத்தவர் ஹெர்பர்ட்.

உலக சைபர் இலக்கியத்தின் தந்தை என்று வில்லியம் கிட்சன் அழைக்கப்படுகிறார் இன்றைய கூகுள் விக்கிபீடியா உள்ளிட்ட இணையத்தின் பல் அடுக்கு சாத்தியங்களை முன் அனுமானித்த அற்புதமான மனிதர் இவரது பத்து நாவல்களிலும் இணையத்தின் இன்றைய புதிய புதிய போக்கு அன்றே விவரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும்போது மனித மனத்திற்குள் ஒளிந்து கிடக்கும் எத்தனையோ பேராற்றல்களும் கற்பனை சக்திகளும் எழுத்தின் வழியே வெளிப்படுவதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அறிவியல் புனைத்தது உலகின் ஒரே பெண் எழுத்தாளர் ஆக்டோவியா பட்லர் எழுதிய ரத்தக்குழந்தை நூலில் இன்று பரவலாக மருத்துவத் துறையிலும் ஆராய்ச்சித் துறையிலும் நீண்டு கொண்டிருக்கும் மரபணுப் பொறியியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை வரை விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது.

புத்தக வாசிப்பை தடை செய்யும் எதிர்கால அமெரிக்காவை குறிப்பிட்டு அதன்மூலம் மக்களின் மனங்களுக்குள் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி மிகப் பெரிய புத்தக வாசிப்பிற்கு தூண்டியவர் பாரன்ஹீட் 451 என்ற புத்தகத்தை எழுதியவர் ரே பிராட்பரி. அறிவியல் புனைக்கதைகள் என்பவை மாயாஜால பூ திரிகள் அல்ல அவை அரசியல் அறிவும் மனித நேயமும் குழைத்த அறிவியல் சிந்தனைகளின் வழியே பொங்கும் தீப்பிழம்புகள் என்பதை உணர வைத்தது இந்த நாவல்.

இப்படியாக 15 நூல்களைப் பற்றிய சிறப்பான அறிமுகத்தை இந்த நூல் நமக்கு அறியத் தருகிறது நூல். அறிமுகம் என்ற நிலையில் மட்டும் நின்று விடாமல் ஒவ்வொரு நூல் ஆசிரியரின் கற்பனையையும் அவை எவ்வாறு மனித குலத்தின் மேன்மைக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் அறிவின் அடுத்த கட்ட நகர்விற்கும் மனிதனுக்கு உதவி செய்கின்றன என்பதையும் கோடிட்டுக் காட்டி இருக்கும் இந்நூலின் வழியே அறிவியல் என்றும் மனிதர்களுக்கான மனித நேயத்தை விதைப்பதிலேயே முன்னிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சிவப்புச் சிந்தனைகள் எப்போதும் மனித குல மேம்பாட்டிற்காகவே அர்ப்பணிக்கப்படும் காலகட்டத்தில் இதில் வரும் 15 எழுத்தாளர்களின் கதைகளும் அவர்களின் கற்பனைக்குள் பிறந்திட்ட கருவிகளின் வழியேயான சிறப்பும் உலகத்தின் மேன்மைக்கு உதவுகின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக நூல் நிரூபித்துக் காட்டுகிறது. இந்த ஒரே நூலின் வழியே நாம் உலகத்து அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து நாமும் வாழ்ந்து முடித்த திருப்தியை ருசிக்க பிரியப்படலாம்.

 

நூல் அறிமுகம் எழுதியவர்  : 

அறிவியல் நிறம் சிவப்பு - நூல் அறிமுகம் (Ariviyal Niram Sivappu) - The scientific color is red book review by Ilayavan Siva - https://bookday.in/

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



One thought on “அறிவியல் நிறம் சிவப்பு – நூல் அறிமுகம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *