அறிவியல் பேசுவோம்: இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
04.11.2024
இந்த வாரம் அறிவியல் உலகம் செம கூலாக இருக்கிறது. எரிமலைக் குளிர்ச்சியால் டைனோசர்கள் எழுச்சி பெற்றதா? ஜெல்லி மீன்களுக்கு பாசிகள் நண்பர்களா, எதிரிகளா? என்ற கேள்விகளோடு, மாயன் நகரத்திலிருந்து, கருந்துளைகள் வரை, பல்வேறு சுவாரசியமான கண்டுபிடிப்புகளோடு உங்கள் மூளையை கொஞ்சம் “சூடு” படுத்த இந்த வார அறிவியல் செய்திகள் காத்திருக்கின்றன!
1. காட்டில் மறைந்திருந்த மாயன் மெகாசிட்டி: லைடார் தொழில்நுட்பம் காட்டிய அதிசயம்!
மெக்சிகோவில் அடர்ந்த காடுகளுக்குள் மறைந்திருந்த பிரம்மாண்ட மாயன் நகரத்தை துலேன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லைடார் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்துள்ளனர். லைடார் (LiDAR) என்பது லேசர் ஒளியால் செயல்படும் ஒரு தொலை உணர்வு தொழில்நுட்பமாகும். 6,500க்கும் மேற்பட்ட மாயன் கட்டமைப்புகள், பிரமிடுகள் என மாயன் நாகரிகத்தின் பரந்த தன்மையை இந்தக் கண்டுபிடிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த ஆய்வு, மாயன் குடியேற்றங்கள் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கிறது.
https://doi.org/10.15184/aqy.
2. கூடி வாழ்ந்தால் கூடுதல் ஆயுள்!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், சமூகமாக வாழும் விலங்குகள் அதிக ஆயுளுடனும், அதிக இனப்பெருக்க காலத்துடனும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குரங்குகள், மனிதர்கள், யானைகள் போன்ற சமூக விலங்குகள், தனித்து வாழும் மீன்கள், ஊர்வன போன்றவற்றை விட நீண்ட காலம் வாழ்கின்றன. சமூக வாழ்க்கையானது, வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பு, வளங்களைப் பகிர்தல் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
http://dx.doi.org/10.1098/
3. சாப்பிடுவதற்கு உங்களைத் தூண்டும் மூன்று நியூரான்கள்!
ராக்ஃபெல்லர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மூளையில் பசி சமிக்ஞைகளை தாடை இயக்கங்களாக மாற்றும் மூன்று நியூரான்கள் கொண்ட சுற்றுகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த BDNF நியூரான்களைத் தூண்டுவது உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது, தடுப்பது எலிகளை அதிகமாகச் சாப்பிடவும், உணவில்லாமல் கூட மெல்லும் இயக்கங்களைச் செய்யவும் வைக்கிறது. இது சாப்பிடுவது என்பது ஒரு அனிச்சை செயல் என்பதைக் காட்டுகிறது. உடல் பருமன், மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும்.
https://doi.org/10.1038/
4. எரிமலைக் குளிர்ச்சியால் டைனோசர்கள் எழுச்சி
புதிய ஆய்வு ஒன்று, 20.16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ட்ரையாசிக் காலத்தின் முடிவில் ஏற்பட்ட பேரழிவிற்கு எரிமலை வெடிப்புகளால் ஏற்பட்ட குளிர்ச்சியே காரணம் என்கிறது. எரிமலை வெடிப்புகளால் வளிமண்டலத்தில் பரவிய சல்பேட்டுகள் சூரிய ஒளியைத் தடுத்து பூமியைக் குளிர்வித்தன. இதனால் ட்ரையாசிக் உயிரினங்கள் அழிந்து, டைனோசர்கள் செழித்து வளர வழிவகுத்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். இதுவரை, கார்பன் டை ஆக்சைடு வெப்பநிலையை அதிகரித்து இந்த அழிவை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டது.
https://doi.org/10.1073/pnas.
5. மின்புலங்களுக்கு கட்டுப்பட்டு நீச்சல் வீரர்கள் போல நீந்தும் நுண்திரவத்துளிகள்
மின்புலங்கள் மற்றும் திரவ ஓட்டத்தைப் பயன்படுத்தி, செயற்கையாக உருவாக்கப்பட்ட நுண்ணிய நீர்த்துளிகளை கட்டுப்படுத்தும் முறையை ஆராய்ச்சியாளர்கள் ( IIT ஹைதராபாத் விஞ்ஞானி உட்பட) கண்டறிந்துள்ளனர். இவற்றை குறுகிய சேனல்களில் கூட துல்லியமாக கட்டுப்படுத்த முடிவதால், மருத்துவம், உயிரி தொழில்நுட்பம், மற்றும் சென்சார் வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம்.
https://dx.doi.org/10.1103/
6. வேகமான விண்வெளி தொடர்புக்கு புதிய ஆப்டிகல் ஆம்ப்ளிபையர் தொழில்நுட்பம்.
சால்மர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இரைச்சல் இல்லாத ஆப்டிகல் ஆம்ப்ளிபையர் மற்றும் உணர்திறன் மிக்க ரிசீவர் கொண்ட புதிய தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது விண்வெளியிலிருந்து பூமிக்கு படங்கள் மற்றும் தரவுகளை வேகமாகவும் பிழைகள் இல்லாமலும் அனுப்ப உதவும். சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்திலிருந்து கூட தெளிவான படங்களை பூமிக்கு அனுப்ப உதவும் இந்த முன்னேற்றம் நாசாவின் “the science return bottleneck” பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://dx.doi.org/10.1364/
7. ஜெல்லிமீன் – பாசி கூட்டுவாழ்வில் மறைந்துள்ள அபாயம்
ஜெல்லிமீன்கள் பாசிகளுடன் கூட்டுவாழ்வு உறவில் வாழ்ந்து, அவற்றிடமிருந்து உணவைப் பெற்றாலும், பாசிகள் அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிக்கின்றன. புதிய ஆய்வில், பாசிகள் ஜெல்லிமீன்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மாற்றி, பாக்டீரியாக்களுக்கு அவற்றை மிகவும் பாதிக்கக்கூடியதாக ஆக்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, பவளப்பாறைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது, ஏனெனில் அவை பாசிகளைச் சார்ந்துள்ளன.
https://dx.doi.org/10.1098/
8. ஆல்கஹால்: விலங்குகளின் உணவில் ஒரு பகுதியா?
காட்டு விலங்குகள் புளித்த பழங்கள் மூலம் ஆல்கஹாலை உட்கொள்வது அவற்றின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்கிறது புதிய ஆய்வு. 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகள் எத்தனாலை உட்கொள்ளத் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எத்தனால் விலங்குகளுக்கு கலோரி நன்மைகளை வழங்குவதுடன், அவற்றின் நடத்தை மற்றும் உடலியல் ஆகியவற்றை பாதித்து, பரிணாம வளர்ச்சியிலும் ஒரு பங்கை வகிக்கலாம். இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.
https://doi.org/10.1016/j.
9. கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளாக வாக்கியத்தை உணரும் மூளை!
நியூயார்க் பல்கலையின் புதிய ஆய்வின்படி, சிறிய வாக்கியங்கள், ஸ்மார்ட்போன் அறிவிப்புகள் போன்றவற்றை நம் மூளை கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளாக, அதாவது 150 மில்லி விநாடிகளில் புரிந்துகொள்கிறது. இது பேசுவதை விட மிக வேகமானது. இந்த நேரத்திற்குள், மூளை இலக்கணப் பிழைகளைக் கூட அடையாளம் கண்டு சரிசெய்து விடுகிறது. ஆய்வாளர்கள் மூளையின் இடது டெம்போரல் கார்டெக்ஸ், இப்பணியைச் செய்வதாகக் கூறுகின்றனர்.
https://doi.org/10.1126/
10. கருந்துளைகள் தான் பிரபஞ்சம் விரிவடைவதற்குக் காரணமா?
பிரபஞ்சம் விரிவடைவதற்குக் கருந்துளைகள் தான் காரணம் எனப் புதிய ஆய்வு கூறுகிறது. இருண்ட ஆற்றலின் அடர்த்தி அதிகரிப்பதற்கும் கருந்துளைகளின் நிறை அதிகரிப்பதற்கும் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருண்ட ஆற்றல் கருந்துளைகளின் மையத்தில் இருந்து வெளிப்படலாம் என இந்த ஆய்வு கூறுகிறது. இது உண்மையெனில், பிரபஞ்சம் வெவ்வேறு வேகத்தில் விரிவடைவது ஏன் என்பதை விளக்க உதவும். இதனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை.
https://iopscience.iop.org/
அறிவியல் என்பது ஒரு முடிவில்லாத பயணம். ஒவ்வொரு கண்டுபிடிப்பும் புதிய கேள்விகளை எழுப்புகிறது, புதிய பாதைகளைத் திறக்கிறது. அறிவியலின் இந்த பயணத்தைத் தொடர்ந்து ரசித்திருப்போம். இணைந்திருங்கள்!
த. பெருமாள்ராஜ்
வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் படிக்க… அறிவியல் பேசுவோம் (Ariviyal Pesuvom): இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: இந்த வார முக்கிய அறிவியல் செய்திகளின் சுருக்கம் - Book Day