அறிவியல் புனைகதை உலகம்:-
இலக்கியத்தைப் பிடித்த செவ்வாய் தோஷம்..!
– ஆயிஷா இரா.நடராசன்
சொன்னால் நம்புவது கஷ்டம். சர்வதேச அளவில் இதுவரை வெளிவந்திருக்கும் அறிவியல் புனை கதை நாவல்களில் செவ்வாய் கிரகம் என்பதை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்ட நாவல்கள் ஐயாயிரத்திற்கும் மேல்! இப்படி ‘செவ்வாய் தோஷம்’ அறிவியல் புனைகதை உலகைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் ராஜாராம் மோகன் ராய் நூலகம் என்று ஒரு பிரம்மாண்டம் உண்டு. என்னுடைய ஆயிஷா நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு வெளியீடு சம்பந்தமாக தாகூரின் சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்ட பொழுது நான் விஜயம் செய்த இடங்களில் ஒன்று இந்த பிரம்மாண்ட நூலகம். இந்த நூலகத்தில் அறிவியல் மற்றும் அறிவியல் புனை கதை பகுதி எங்கே உள்ளது என்று வழக்கம் போல் நான் தேடி சென்றேன். அங்கு தான் எனக்கு முதன் முதலில் அந்த குறிப்பிட்ட முழு அலமாரி இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஏறத்தாழ 1000 புத்தகங்கள் அடுக்கப்பட்ட அந்த அலமாரியில் ‘சர்வதேச அறிவியல் புனை கதைகள் – செவ்வாய் கிரகம் சம்பந்தமானவை மட்டும்’ என்று குறிப்பிடப்பட்ட பெயர்ப் பலகை அன்று இரவு என்னை உறங்கவிடவில்லை.

1600 இன் நடுப்பகுதியில் இருந்து புனைகதை உலகம் செவ்வாய் கிரகத்தை கதாநாயக அந்தஸ்தோடு அணுகி வருகிறது.. என்பதிலிருந்து நாம் தொடங்கலாம். சூரியனிலிருந்து நான்காவது கிரஹம் செவ்வாய். சூரிய குடும்பத்தின் உயிரிகள் உள்ள ஒரே கோள் ஆன பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துவது அதிசயமல்ல. ஏனெனில் அதுதான் நமக்கு அருகே இருக்கும் கிரஹம்.1800 களின் பிற்பகுதியில் சந்திரனையில் உயிர் இல்லை என்பது தெளிவாக தெரிந்த பொழுது செவ்வாய் கிரகமே புனை கதைகளில் மிகவும் பிரபலமான வான பொருளாக ஆகி இருந்தது.. அறிவியல் புனைகதை இலக்கியத்தை தொடர்ந்து ஆய்வுசெய்து கருத்துக்களை வெளியிடுகின்ற நிக்கி ஜென்னர், வெஸ்ட் பால் போன்ற அறிஞர்கள் 2000 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரக அறிவியல் புனைக்கதைகள் குறித்து தனியாக ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். இந்த கருத்தரங்கில் செவ்வாய் கிரக நாவல்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமே வெளியிடப்பட்டது. அனைத்துவகையான கற்பனை கதை களங்களையும் உள்ளடக்கும் அளவிற்கான சாத்தியங்களை செவ்வாய் கிரகம் தான் கொண்டுள்ளது என்று நிக்கி ஜென்னர் விவரிக்கிறார். இன்று நாவல்கள் மட்டுமல்ல வீடியோ கேம்கள் திரைப்படங்கள் கூட செவ்வாய் கிரகத்தை வைத்து தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன
செவ்வாய் கிரகம் தொடர்பான வரைபடங்கள் அல்லது கரு பொருட்களை பயன்படுத்துவது என்பது காலனித்துவம், விண்வெளி பயணம், அறிவியல் ஆய்வு, குடியேற்றங்கள் அண்ட போர் வேற்றுகிரக வாசிகள் என அனைத்து வகையான கற்பனைகளையும் தூண்டுவதாக உள்ளது.
முதலில் செவ்வாய் கிரகம் கதாநாயக அந்தஸ்தை பெற்ற கதை 1656 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஏத்தான் சீச பிக்சர் எனும் எழுத்தாளரின் இடினேரேரியம் எக்ஸ்டெட்டி என்ற தலைப்பில் வெளிவந்தது. செவ்வாய் கிரகத்தை எரிமலை பாலைவனமாக அது சித்தரித்தது ஏறத்தாழ 30 ஆண்டுகள் கழித்து இன்னொரு சிறுகதை 1686 ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலகங்களின் தன்மை பற்றிய உரையாடல்கள்’ பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டது டோரிட்டோ டெஸ்மண்ட்ர்ஸ் எழுதிய கதை இந்த கதையில் பூமியில் இருந்து இறந்து போனவர்களின் ஆவி செவ்வாய் கிரகத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது என்ற கற்பனை முன்மொழியப்பட்டது.
1700 களின் நடுப்பகுதியில் பல படைப்புகளில் செவ்வாய் கிரகம் இடம் பெறத் தொடங்கியது..1755 ஆண்டு வெளிவந்த சொர்க்கத்தின் ராஜ்யம் என்கிற ஒரு புனைகதை குறுநாவலில் (மல்வின் ஜோஷுவா) மகா அலெக்சாந்தர் தனது இரண்டாவது வாழ்க்கையை செவ்வாய் கிரகம் என்கிற சொர்க்கத்தில் எப்படி அனுபவிக்கிறார் என்பதை விவரித்தது. 1758 ஆம் ஆண்டில் நமது சூரிய குடும்பத்தில் பூமியின் மாற்று என்று டி ஒய் டெல்லூரி இத்தாலிய மொழியில் எழுதிய கதையில் தார்மீக நல்-ஒழுக்கத்தால் வகைப்படுத்தப்படும் உயிரினங்கள் மட்டுமே வாழ்கின்ற கிரகம் என்று செவ்வாய் கிரகத்தை பற்றி பேசுகிறார்.

இந்த ஆரம்ப கால அறிவியல் புனைக்கதைகள் செவ்வாய்கிரகத்தை மறுபிறவி எடுக்கின்ற ஒரு இடமாக மத அடிப்படைவாதத்தின் சின்னமாக சொர்க்கமாக என்று புராணீக படுத்துவதைப் பார்க்கிறோம். ஆனால்1897 ஆண்டு வெளிவந்த ஹெச் ஜீ வெல்ஸ் எழுதிய நாவல் ‘தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்’ செவ்வாய் கிரகத்தை மிகவும் பிரபலமாக்கி விட்டது. இந்த கிரகத்திலிருந்து பூமியின்மீது படமெடுத்து வருகின்ற ஒரு கூட்டத்தை பற்றி இந்த நாவலில் விரிவாக பரபரப்பாக எடுத்துரைத்தது. மனித சமூகம் எப்படி வெற்றி பெறுகிறது என்பது புவியின் ஒற்றுமையை பொறுத்தது என்கிற முடிவு போர் வெடித்து அந்த காலத்தின் சிறப்பான முன்னெடுப்பாக வர்ணிக்கப்பட்டது.
மனிதன் செவ்வாய் கிரகத்திற்கு சென்று சாதிக்கின்ற நாவல்கள் ஒருபுறம் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்து அந்த கிரகவாசிகள் இங்கே சாதிக்கும் விதமான கதைகள் மறுபுறம் என்று இரண்டு விதமாக செவ்வாய் கிரக கதைகள் பிரிந்து போயின.1880 ஆம் ஆண்டு பெர்சி கிரை எழுதிய ‘அக்ராஸ் தி சோடியாக்’ நாவலில் அப்பர்ஜீ என்று அழைக்கப்படுகின்ற எதிர் ஈர்ப்பு விசையின் மூலம் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்கிறார்கள் செவ்வாய் கிரக வாசிகள் உயர் தொழில்நுட்பம் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டப்படுகிறார்கள் ஆனால் வர்களிடம் ஆன்மீக சக்தி இல்லை பூமியிலிருந்து அங்கே போகிறவர்கள் அவர்களுக்கு ஆன்மிக வகுப்புகள் எடுக்கிறார்கள். இந்த நாவல் முதன்முதலில் செவ்வாய் கிரகத்தை ஒரு ஊமை சமூகமாக காட்டுகிறது.. மனிதர்கள்தான் அவர்களுக்கு பேசுவதற்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
![]()
அமெரிக்காவிலிருந்து வெளிவந்த எட்கர் ரைஸ் பர்ரோஸ் எழுதிய ‘பிரின்சஸ் ஆஃப் மார்ஸ்’ மிகப் பிரபலமான நாவல். 1912 ஆண்டு வெளிவந்தது. பார்சும் என்று அழைக்கப்படுகின்ற மிகப்பெரிய பிரம்மாண்ட யுத்த களத்தில் ஜான் கார்ட்டர் என்கிற மனிதன் பூமிக்காக போராடுகிறான் பல்வேறு கிரகங்களின் இனங்கள் ஒன்றினையும் ஒரு ஸ்டார் வார்ஸ் நாவல். பூமியினுடைய நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை நடத்துவதற்கு ஒரு சரியான யுத்த பகுதி செவ்வாய் கிரகத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த அறிவியல் புனை கதைகளின் கிளாசிக் மற்றும் புராதன காலகட்டம் சி எஸ் லூயிஸ் (இங்கிலாந்து) போன்ற எழுத்தாளர்களால் ஸ்தாபிக்கப்பட்டது. தத்துவம் ஆன்மிகம் பல இனங்களுக்கிடையே அமைதியாக வாழ்கின்ற பூமியாக செவ்வாயை சித்தரித்தல் மனிதனின் அகந்தை சிதைக்கப்பட்டு ஆன்மீக மதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒன்றாக அவருடைய ‘அவுட் ஆஃப் தி சைலன்ட் ப்ளானெட்’ நாவலை நாம் சொல்ல முடியும்.

அந்த நாட்களில் மிக பிரபலமான அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் ராபர்ட் எய்லீன் மற்றும் ஆர்தர் சி கிளார்க் செவ்வாய் கிரகத்தில் நடைபெறுகின்ற அரசியல் மோசடி இளைஞர் புரட்சி அடிப்படை ஆய்வுகள் அங்கு நடக்கின்ற வேளாண்மை என்று அடுத்தடுத்து புனைவுகளை முன்வைத்தார்கள் செவ்வாய் கிரகத்தில் பிறந்து அங்கேயே வளர்க்கப்படுகின்ற ஒரு மனிதன் பூமிக்கு திரும்பி வரும் பொழுது ஏற்படும் சமூக அதிர்ச்சியை த ஸ்ட்ரேன்ஜர் இன் ஸ்டிரேஞ்ச் லாண்ட் நாவல் (1961) முன்வைத்தது.
அடுத்து செவ்வாய் கிரகத்தை கையில் எடுத்தவர் ரே பிராட்பரி. மிகப் பிரபலமான அமெரிக்க எழுத்தாளர் ‘தி மார்ஷியன் கிரானிக்கல்ஸ்’. இந்த நாவலில் பூமி மனிதர்களை செவ்வாய் கிரகத்தை காலனித்துவ படுத்துகின்ற பல்வேறு வசதிகளோடு அங்கே அனுப்பிவைக்கிறது. சிறு தவறுகளை மேற்கொண்டாலும் தோற்றுப் போகும் அவலமான சூழ்நிலையில் மனிதர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதை கவித்துவ நடையில் அற்புதமாக எழுதி இருக்கும் எதார்த்த நாவல். பூமியைப் போல இல்லாமல் செவ்வாய் கிரகத்திற்குள் நுழைந்ததும் பெண்கள் தனிப்பெரும் சக்தியாக உருவெடுகிறார்கள் என்று இந்த நாவல் பரபரப்பை ஏற்படுத்தியது. செவ்வாய் பெண்களுக்கான கிரகம்..(நினைத்து பாருங்கள். நம்முடைய சமூகத்தில் பெண்ணின் திருமணத்தை நிறுத்தி வைக்கும் அதே செவ்வாய் இந்த நாவலில் பெண்களுக்கான கிரகமாக முன் மொழியப்படுகிறது!)

1992 ஆம் ஆண்டில் கிம் ஸ்டான்லி ராபின்சன் செவ்வாய் கிரகம் பற்றி பொன்னின் செல்வன் அளவுக்கு சிவப்பு செவ்வாய், பச்சை செவ்வாய், நீல செவ்வாய் இன்று மூன்று பாகங்கள் கொண்ட பிரமாண்ட நாவலை எழுதி உலகின் அனைத்து வகையான அறிவியல் புனை கதை விருதுகளையும் தட்டிச் சென்றார். மனித குடியேற்றம் புதிய ஒரு சமூகத்தின் கட்டமைப்பு அங்க நடைபெறுகின்ற உணவு உற்பத்தி சொத்து சேர்ப்பு அரசியல் கலகம் சூழலியல் விஞ்ஞானம் மனித எதிர்காலம் என்று இந்த நாவல் பேசாததே இல்லை.
2000 இல் தொடங்கிய இருபத்தோராம் நூற்றாண்டு ஆண்டி உயர் எனும் அமெரிக்க எழுத்தாளரின் 2011 ஆம் ஆண்டு நாவல் தி மார்ஷியன்.. கலையின் அனைத்து வகையான வடிவங்களிலும்(நாவலா கார்ட்டூன் கதையாக திரைப்படமாக ஒலி நாடாவாக) வெளிவந்த முதல் நாவலாக மாறியது புவியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகின்ற விஞ்ஞான குழுவில் மார்க் வாட்னி என்னும் ஒரு மனிதன் செவ்வாய் கிரகத்தில் தவறி போய் அங்கேயே விட்டுவிட்டு வரப்படுகிறார். அவர் அங்கு ஒரு மனிதனாக எத்தனை. தனிமையில் தப்பிப் பிழைத்து வாழ முடிந்தது என்பதை சித்தரிக்கும் தனிமனித வெற்றிக் கதை. நகைச்சுவை உயிர்த்து இருத்தல் என்று மனித சிந்தனையை தன்வயப்படுத்திய நாவல் இது.

இந்தியாவில் செவ்வாய் கிரக நாவல்களை மராத்தியிலும் வங்காளத்திலும் பார்க்கிறோம். ஜெயந்த் நருலிகர் எழுதிய யுகந்தார் எனும் நாவல் விண்வெளி அறிவியலின் அடிப்படையில் செவ்வாய் கிரகத்தில் நடக்கின்ற பரபரப்பான ஒரு திருமணத்தைப் பற்றி விவரிக்கிறது. சத்யஜித் ரே வங்காள மொழியில் செவ்வாய் கிரகத்தை முன்வைத்து மூன்று குறுநாவல்கள் படைத்திருக்கிறார்.
வெறும் ஆங்கிலத்தில் மட்டுமல்ல ஏய்லிட்டா என்று அலெக்ஸி டால்ஸ்டாய் ரஷ்ய மொழியில் எழுதிய செவ்வாய் கிரகம் குறித்த அற்புத நாவல் ஒன்று உண்டு சமத்துவ புரட்சியின் கற்பனை காட்சிகளை உள்ளடக்கியது ஒரு பொறியாளர் செவ்வாய் கிரகத்தில் நடைபெறுகின்ற புரட்சி யோடு இணைவதற்காக தன்னுடைய வானூர்தியை அந்த கிரகத்தை நோக்கி திருப்புவதை மையமாக வைத்து எழுதப்பட்டது. சீன மொழியில் லீவ் சிக்சின் ஜப்பானிய மொழியில் லூஸ் ஷேஈ என்று இந்த நூற்றாண்டிலும் செவ்வாய் கிரகம் குறித்து எழுத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
1989 இரண்டு அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ் விண்வெளி ஆய்வு முயற்சியை செவ்வாய் கிரகத்தை நோக்கி திருப்பினார் இந்தியாவின் மங்கள்யான் உட்பட பூமியின் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை நோக்கி தீவிரமாக தங்கள் பார்வையை செலுத்த தொடங்கினார்கள் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளிப் பயணம் மேற்கொள்கின்ற 160 நாவல்கள் அந்த ஒரே ஆண்டில் படைக்கப்பட்ட சாத னையை நான் பதிவு செய்தே ஆக வேண்டும். செவ்வாய் கிரகத்திற்கான நீடித்த ஏக்கத்தை இந்த இலக்கியங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
அரசியல் சுற்றுச்சூழல் மனிதனின் சமூக ரட்சிப்பு அழிவில் இருந்து தப்புதல் ஆகியவற்றின் பாதுகாப்பான கற்பனையாக செவ்வாய் கிரகம் மனிதனின் மனதிற்குள் ஒரு சொர்க்கபுரியாக ஊற்றெடுக்கிறது. பூமிக்கு மிக அருகில் உள்ள பூமி மாதிரியே அமைக்கப்பட்டிருக்கும் இந்த கிரகம் இன்னும் பல்லாயிரம் நாவல்களை கொண்டு வரும் அளவிற்கான இலக்கிய ஆச்சரியமாக.. எப்படியாவது அங்கு சென்று குடியேற வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்துகின்ற விண்வெளி சாதனையாக சவா லாக நம்முன் இருந்து கொண்டே இருக்கிறது என்பது தான் உண்மை.
‘கலீவரின் பயண கதை’ படித்திருப்பீர்கள் அந்த பயணங்களின் ஊடாக லாபடாவின் பறக்கும் தீவு இடம்பெறும். அதன் வானியலாளர்கள் இரண்டு செவ்வாய்க்கிரக நிலவுகளை கண்டுபிடித்ததாக அந்த கதையில் வரும்.. அதிசயம் என்ன வென்றால் செவ்வாய்க் கிரகத்திற்கு உண்மையிலேயே இரண்டு நிலவுகள் தான் உள்ளன. எனவே வெறும் கதையாக பார்க்காதீர்கள்.. அது உண்மையாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.
📚 எழுதியவர்:
ஆயிஷா இரா நடராசன்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


செவ்வாய் கிரகத்தை சம்பந்தப்படுத்தி கடந்த 500 ஆண்டுகளில் வெளிவந்த கதைகளைப்பற்றிய வரலாற்றை ஆழமாக ஆய்ந்து சுவாரசியமாக எழுதப்பட்ட கட்டுரை. புத்தகங்களின் முகப்புப் படங்களை சேர்த்திருப்பது அழகு. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த முன்னோடி வானவியலாளர், ஷிபரெல்லி தான் (Giovanni Virginio Schiaparelli ) செவ்வாய் கிரக கதைகளின் மூல காரணம் என்றும் குறிப்புகள் உள்ளன (விக்கிபீடியா). இந்த விஞ்ஞானி செவ்வாய் கோளை விரிவாக ஆராய்ந்து வெளியிட்ட வரைபடத்தில் பல நீளமான வழித்தடங்கள் (இத்தாலிய மொழியில் canali ) காணப்படுகின்றன. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் தவறுதலாக canals அதாவது ‘வாய்க்கால்கள்’ என்று எழுதியதுதான் கதாசிரியர்களின் கற்பனைகளை கட்டவிழ்த்து விட்டதாம்! நம் நாட்டில் சோதிட நூல்கலைத் தவிர பழங்கால இலக்கியங்களில் செவ்வாயைப் பற்றிய செய்திகள் இல்லை எனலாம். அன்மை ஆன்மீக இலக்கியங்களில் முருகக்கடவுளுக்கு உகந்தது செவ்வாய்.