அறிவியல் ஸ்கோப் (Ariviyal Scope)

முனைவர் என்.மாதவன் அவர்கள் எழுதிய அறிவியல் ஸ்கோப் என்ற அறிவியல் நூல் சுமார் 25க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குறித்துப் பேசுகிறது. மறுமலர்ச்சி காலத்திய கலிலியோ முதல் மரபியலியன் தந்தை என அறியப்பட்ட கிரிகர் ஜோகன் மெண்டல் வரை அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகள் குறித்து ரத்தினச் சுருக்கமாக பேசுகிறது. இது இந்து தமிழ்திசை வெற்றிக் கொடியில் வரும் போது அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். சிலவற்றை படிக்க வாய்ப்பில்லாமலும் போயிருக்கிறது. ஆனால் அவற்றைத் தொகுத்து அழகுமிகு நூலாகக் கொடுத்திருக்கிறார்கள்.

உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்கள் அனைவருக்கும் பரிச்சியமான விஞ்ஞானிகள் பற்றிப் பேசுவதால் இது அனைவரையும் படிக்கத் தூண்டுகிறது. அறிவியல் பாடங்களில் ஒரு விஞ்ஞானி ஒரு கோட்பாடு அல்லது ஒரு கண்டுபிடிப்பு என்று அறிந்திருக்கும் பலர் இதைப் படித்தால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஒவ்வொரு விஞ்ஞானியும் ஒன்றுக்கு மேற்பட்ட கோட்பாடுகள், கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் அல்லது அதே தளத்தில் வெளிப்படுத்தி சாதனை படைத்து இருக்கிறார்கள் என்பது படிப்போர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். 

லூயி பாஸ்டர் பால் பதப்படுத்துதலின் அறிவியல் முறையை கண்டறிந்தார் என்பது எல்லோரும் அறிந்திருந்தாலும் வெறிநாய் கடிக்கு அந்த வைரசுக்கான மருந்தை கண்டுபிடிக்க அவர் செய்த கடின உழைப்பும் விடாமுயற்சியையும் கண் முன் கொண்டு வருகிறார். ஒரு பொருள் எரிந்து போவது அதிலுள்ள ப்ளோஜெஸ்டன் என்ற பொருள் காரணமில்லை என்று நிருபித்து மட்டுமல்லாமல் ஆக்ஜிசனைக் கண்டறிந்து அதுவே எரிதலுக்கு ஊக்குவிக்கிறது என்கிறார் லவாய்ஸியர்.  மூலகத்தின் கடைசித் துகள் அணு என்று சொன்னது மட்டுமல்லாமல் காலநிலை குறித்த  டால்டனின் பங்களிப்பு நாம் அறியாத்து. ஹம்ப்ரி டேவி என்றால் நினைவில் வருவது சுரங்க விளக்கு ஆனால் சிரிப்பு வாய்வான நைட்ரச வாயுவையும் கண்டறிந்துள்ளார் என்பது கொஞ்சம் ஆழமாகப் படித்தவர்களுக்கே புரியும். பட்டத்தைப் பறக்கவிட்டு மின்னல் என்பது ஒருவகை மின்னாற்றல் என்று கண்டுபிடித்த ஃபிரான்க்ளீன் கிட்டப் பார்வை, தூரப் பார்வைக்கான லென்ஸ் உருவாக்கியவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் விஞ்ஞானிகள் ஒருபுறம் அவர்களது கண்டுபிடிப்புகளை மறுபுறம் கொடுத்து பொருத்துக கொடுத்திருப்பது இனி பொருத்தமாக இருக்காது என நினைக்கிறேன். 

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு உடல் ரீதியான குறைபாடுகளோ, வறுமை போன்ற  தடைகளோ, ஏன் சர்வாதிகாரமே மிரட்டினாலும் அதை மீறி விஞ்ஞானிகள் செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதற்கு இந்நூலில் பேசப்படுகின்ற விஞ்ஞானிகளே சாட்சி. நிறக் குருடாய் இருந்தும் காண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டால்டன், மூக்குடைந்த டைகோ பிரேகோ, வறுமையின் பிடியில் இருந்த பாரடே, பிரஞ்ச் புரட்சியின் போது கில்லட்டினால் கொல்லப்பட்ட லவாய்சியர், கோப்பர்நிகசின் சூரிய மையக் கொள்கையை ஆதாரங்களோடு விளக்கிக் கொண்டிருந்த கலிலியோ வீட்டு சிறையிலேயெ மடிந்த கலிலியோ என விஞ்ஞானிகளின் துயரங்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒளிந்திருப்பதை வெளிக்கொணர்கிறது இந்நூல். 

மேலும் இந்த நூலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பல விஞ்ஞானிகள் பற்றி எழுதி முடிக்கும் போது நம்பிக்கை தரும் வாசகங்களுடன் நிறைவு தருகிறார். ஒரு தனி மனிதனின் சிந்தனையை விட ஆயிரம் சக்தி வாய்ந்த மனிதரின் கருத்துகள் முக்கியம் என அரிஸ்டாட்டிலின் கருத்துகளுக்கு எதிர் வினையாற்றிய கலிலியோ, எனக்கு தீரம் இருக்கிறதோ இல்லையோ கடமை இருக்கிறது என்கிற லூயி பாயிஸ்டர், நான் எனது முன்னோர்களின் தோள்களின் மீது அமர்ந்து கொண்டு பார்க்கிறேன் என்ற நியூட்டன், நோய்களுக்குக் காரணம் பாவமோ, சாபமோ இல்லை கிருமிகள் என சொல்லும் மெண்டல்… நாம் பிறரது கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்தும் போது நான் ஏன் எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற வேண்டும் எனக் கேட்கும் பெஞமின் ஃப்ராங்க்ளின்… இப்படியாக ஒவ்வொரு விஞ்ஞானியும் நம்மை நம்பிக்கையூட்டுகிறார்கள். 

அறிவியல் ஸ்கோப் மேற்கத்திய விஞ்ஞானிகள் குறித்து மட்டுமே பேசுகிறது என்று ஒரு குறை இருந்தாலும்  அது மறுமலர்ச்சி காலமான 16ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டிய காலத்திய விஞ்ஞானிகள் குறித்துப் பேசவதே அதன் காரணம் என நினைக்கிறேன். விஞ்ஞானிகள் பற்றி எளிமையாக வாசிக்க இருப்பதால் இனிமையாக  இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருநாள் இந்நூலில் உள்ள ஒவ்வொரு விஞ்ஞானியை மாணவர்களே அறிமுகப்படுத்தி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்க முடியும். 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கருத்தாலும், செயல்பாட்டுகளாலும்  அறிஞர்களிடமும் மக்களிடமும் தொடர்ந்து உரையாடிய அனுபவங்கள் இந்நூலை மிகச் சிறப்பாக அவரால் வடிவமைக்க முடிந்திருக்கிறது என நினைக்கிறேன். இது ஒரு அருமையான அறிவியல் இலக்கிய நூல். ஆசிரியர் மாணவ்ர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் படிக்க வேண்டிய நூல்.

நூலின் தகவல்கள்: 

நூல்: அறிவியல் ஸ்கோப்
ஆசிரியர்: முனைவர் என்.மாதவன்
பக்கங்கள்: 102

விலை: ₹.125
பதிப்பகம்:இந்து தமிழ் திசை
வெளியான ஆண்டு: நவம்பர் 2023

அறிமுகம் எழுதியவர்: 

பொ. இராஜமாணிக்கம்/ P.Rajamanickam

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *