நூல் : அறிவியல் தேசம்
ஆசிரியர் : முனைவர். ஆயிஷா. இரா. நடராசன்
பதிப்பகம் : அறிவியல் வெளியீடு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Disclaimer 1: இந்த பதிவு இப்புத்தகத்தைப் பற்றிய எனது தீர்ப்பு இல்லை. எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்தல் மட்டுமே. நீங்கள் அனைவரும் வாசித்து மகிழ வேண்டும்.

Disclaimer 2: சுருங்கச் சொல்லும் சொல்வன்மை இன்மையால் எனது நீண்ட பதிவிற்கு மன்னிக்கவும்

நூல் தலைப்பைப் பார்த்தவுடன் இந்தியா ஒரு பண்பாட்டு கலாச்சார தேசம் என்றுதானே கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இதற்கு அறிவியல் தேசம் என்ற தலைப்பு எவ்வாறு பொருந்தும் என்று சற்றே எண்ணியவாறு படிக்கத் துவங்கினேன்.

யானையும், ரயிலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதுதானே. ஆகவேதான் ஆசிரியர் ரயிலை தேர்ந்தெடுத்திருப்பார் என எண்ணுகிறேன்.

ரயில் கண்காட்சி மூலம் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் நாட்டின் கண்டுபிடிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பல நாடுகளில் வழக்கம்.

அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இவ்வாறு நடத்தப்படுகிறது.

அதுபோல நம் நாட்டிலும் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் தொடங்கி ஒரு ஆண்டு முழுவதும் பல ஊர்களுக்கு ரயில் கண்காட்சி சென்று திரும்பியது.

அத்தகைய ஒரு அறிவியல் ரயிலில் பயணம் செய்ய நம்மை ஆசிரியர் அழைத்துச் செல்வதாகவே இப்புத்தகம் அமைந்துள்ளது

புத்தகத்தை திறந்தபோது இந்நூலாசிரியர், அறிவியல் தேசம் அதிவிரைவு வண்டிக்கான டிக்கெட்டுடன் தயாரா என்றவுடன், புத்தகம் வாங்கியதே டிக்கெட்டாக கருதி அறிவியல் தேசம் விரைவு வண்டியில் பயணத்திற்கு ஆயத்தமானேன்.

பள்ளி மாணவர்களுக்காக உள்ள இப்பயணத்தில் நமது அரசியல் கட்சிகளின் இளைஞர் அணி தலைவர்கள் போல 50 வயது தாண்டிய நானும் மாணவனாக பயணிக்கத் தயார் ஆனேன்.



ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் “மேஜிக் பள்ளிக்குக்” கிளம்பும் ரயில் போல் துவங்கியது கதை.

எந்த நடைமேடையில் ரயில் இருந்தது தெரியுமா?
Zeroth platform.

இந்நூல் படிக்கும் பொழுதுதான் அறிந்தேன் நிஜமாகவே zeroth platform ஒன்று இருந்தது என்று. ஆம் அதுவும் நமது மும்பையில்! அங்கு துவங்கிய முதல் பயணிகள் இரயிலுக்கு மூன்று இஞ்சின்களாம்.

அதன் பெயர்கள் சாகிபு, சுல்தான் மற்றும் சிந்து என்பதை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை.

நடைமேடையில் காத்திருக்கும் நேரத்தில் இந்திய ரயில்வேயின் துவக்கம், நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்கள் முதல் ரயில் பெட்டிகள் வரை பல்வேறு தகவல்கள் அறிகிறோம்.

இப்போது ரயில் வந்து விட்டது. ஆனால் ரயில் புறப்பட இன்னும் சற்று நேரமுள்ளது. ரயில் பயணம் தொடங்குவதற்கு முன் ரயில் பெட்டிகள் சிலவற்றை நோட்டமிட்டேன்.

ரயில் பெட்டிகள் முழுவதும் தகவல் களஞ்சியமாக அதன் நிழலே வரலாற்று பொக்கிஷமாக ஆசிரியர் விளக்குகிறார்.

முதலில் நிழலை பார்த்து விட்டு பின் ரயில் பெட்டிகளை பார்க்கலாம்.

மொத்தம் 18 பெட்டி கொண்ட இந்த ரயிலில்
முதல் பெட்டியில், கார்பன் டேட்டிங் ஆய்வுப்படி சரியாக 2600 வருடத்திற்கு முன்பு புதைந்து போன தொழிற்கூட நகரம்.

அந்நகரில் அகழாய்வு செய்து கிடைத்திருக்கும் சான்றுகள் வியப்பின் எல்லைக்கே நம்மை இட்டுச் செல்கிறது. எந்த இடம் தெரியுமா? நம்ம வைகை நதி நாகரிகம் கீழடிதான்.

நேனோ தொழில்நுட்ப துவக்கம் நம் நாட்டில் அதுவும் நம் தமிழ்நாட்டில் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரங்களுடன். சுட்ட செங்கல் பயன்பாடு, பானை ஓட்டில் எழுத்துக்கள் கூறும் சாதாரண மக்களின் எழுத்தறிவு, விவசாய கருவிகள் பயன்பாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நூல் நூற்று ஆடைகள் நெய்திட்ட அறிவியல் தமிழன் உலகிற்கே வழிகாட்டி. கீழடி மட்டுமின்றி மேலும் 40 இடங்களின் அகழாய்வு முடிவுகள் அனைத்தும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது

அதுமட்டுமின்றி ‘இறந்த மனிதர் குன்று’ எனப் பொருள்படும் உருது சொல்லாம் ‘மொஹஞ்சதாரோ’வில் தொடங்கி ஹரப்பா, கலிபங்கன், லொத்தால் முதலான சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டு பிடித்த தராசு மற்றும் உலகின் முதல் அளவீட்டுக் கருவிகள் என்று ஆரம்பித்து நாமே உலகின் முதல் அறிவியல் முன்னோடிகள் என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.



அதே சமயம் தமிழ்நாட்டின் அறிவியல் பெருமையை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்று ‘கல்லணை’. விவசாய அறிவியலிலும் நம் தேசத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது

வெள்ளையர்கள் வந்த பிறகுதான் நம் நாட்டில் கல்வி பரவலாகி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.

அதேசமயம் ஆசிரியர் கூற்றுப்படி வெள்ளைக்காரர்கள் வந்த பின்னர் தான் இந்தியாவில் அறிவியல் நடைமுறைக்கு வந்தது என்ற கருத்து அபத்தம் என்பதை நிரூபிக்கும் அமைப்பே ஜந்தர் மந்தர்.

ஜந்தர் மந்தர் என்றால் என் சிற்றறிவில் வழக்கமாக டில்லியில் தர்ணா போராட்டங்கள் நிகழும் இடம், சில வருடங்கள் முன்பு தமிழக விவசாயிகள் போராட்டத்திற்குப் பிறகு அங்கு பந்தல் அமைத்து போராட அனுமதிப்பதில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாத நிலையில் இந்த அறிவியல் தேசம் மூலமே லக்னோ முதல் டெல்லி வரை எத்தனை ஜந்தர் மந்தர்கள் நம் நாட்டில், அவை நமது இந்தியா உலகிற்கே வழிகாட்டும் வானியல் அறிவியல் புதையல் என்று அறிய முடிகிறது.

ஆரியபாட்டியம் என்ற நூல் பற்றியும் சதுர்புஜ் கணித ஆலயம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கணித நூல்கள் பற்றியும் பூஜ்யம் கண்டறிதலில் நம் தேசத்தின் பங்களிப்பு, பாஸ்கரா தொடங்கி கேரள கணித அறிஞர் ஜயேஸ்ட தேவர், மாதவர், நெல்லுரில் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டின் இராமானுஜம் வரை பல்வேறு கணித மேதைகளை காணலாம்

உள்ளதிலேயே மிகவும் பழமையான கணித நூலாக கொறுக்கை எனும் ஊரில் பிறந்த காரி தமிழில் எழுதிய “கணக்கதிகாரம்” என்ற நூல் “பை”யின் மதிப்பை உலகுக்கு தெரிவித்தது தொடங்கி பூமி சூரியனைச் சுற்றி வருவதாக கி.பி 1150 களிலேயே அறிவித்த “சித்தாந்த சிரோன்மணி”, மற்றும் நமது நாட்டின் பல கணித பங்களிப்புகள் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார்.

அடுத்த பெட்டியில் ஜகதீஸ் சந்திரபோஸ், சர்.சி.வி.இராமன், மேக்நாத் சாஹா, S.சந்திர சேகர், பி.சி.ராய், J.R.D.TATA இவர்களின் அறிவியல் பங்களிப்பும் விளக்கப்படுவதுடன், ஜகதீஷ் சந்திர போஸ் தாவரவியல் பூங்கா எங்கு உள்ளது அறிவீர்களா? நம் நாட்டில் எத்தனை தாவரவியல் பூங்காக்கள் தெரியுமா?

நம் நாட்டின் இயற்பியல் அறிஞர்கள், வேதியியல் அறிஞர்கள் மட்டுமின்றி உலகிலேயே தனது விமானங்களைத் தானே தயாரிக்கும் நாடுகள் எத்தனை தெரியுமா?

இவ்வனைத்திற்கும் விடைகாண உதவியது அடுத்த ரயில் பெட்டி.

பெட்டிகளைப் பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நேரமாகிவிட்டது பயணத்திற்கு தயாராகலாம்.



தற்போது அறிவியல் தேசம் ரயிலின் பயணம் தொடங்குகிறது. இது நம்மை நமது நாட்டின் பல்வேறு அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.

முதலில் சென்றடைந்த இடம் இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம்.

‘மனித இன சேவைக்காக விண்வெளி தொழில்நுட்பம்’
என்ற இலக்கு நோக்கி நம் தேசம் செய்துகொண்டு வரும் ஆக்கப்பூர்வமான அறிவியல் வளர்ச்சி விளக்கப்படுகிறது.

ஆரியபட்டா, ஆப்பிள் விண்கலங்கள் தொடங்கி சந்திராயன், மங்கள்யான் வரை தங்களைப் பற்றி நம்முடன் பேசினால் எப்படி இருக்கும் என்று அறிய இப்புத்தகத்தை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டும்.

அடுத்து நமது அறிவியல் தேசம் ரயிலின் இலக்கு ராணுவ தொழிற்சாலை.

சென்றடைவதற்கு முன்னர் பயணத்தின் போது நடைபெறும் உரையாடல்கள் மற்றும் புதிர் போட்டிகள் மூலம் பல புதிய தகவல்கள் அறிந்தேன். உலகில் மெட்டல் டிடெக்டர் முதலில் கண்டறியப்பட்டது ராணுவத்தாலோ அல்லது ஏதேனும் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினாலோ இல்லை, ஒரு மருத்துவரால் என்பது அதிர்ச்சி தகவல்.

விஜயந்தா டேங்க், சிறப்பான ரேடார் உட்பட நமது நாட்டின் பல ராணுவ திறன் குறித்த கருத்துக்களும் மிக சுவையாக விளக்கப்பட்டுள்ளன.

ராணுவ தொழிற்சாலை சென்றடைந்தவுடன் பிரித்வி, நாக், திரிசூலம், அக்னி I, II, III, என பல்வேறு ஏவுகணைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விபரங்களும், நம் நாட்டில் உள்ள பல்வேறு ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஆய்வு மையங்களின் தகவல்களும் அறிந்த போது அப்துல் கலாம் அவர்களின் அக்னிச் சிறகுகள் நினைவுக்கு வந்தது.

அடுத்த நமது ரயிலின் இலக்கு நம் நாட்டின் பல்வேறு சுரங்கங்கள். நமது நாட்டில் கிடைக்கும் பல்வேறு தாதுக்களை அறிய முடிகிறது. சுமார் 13 இடங்களில் கைபேசி உற்பத்தி செய்யப்படுவது தெரியுமா?

சிட்டுக்குருவிகளை காக்க அறைகூவல் விடுத்த விஞ்ஞானி சலீம் அலி முதல் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வரை ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகள் தங்களை குறிப்புகள் மூலம் கேள்வியாகக் கேட்டு அறிமுகம் செய்வது வித்தியாசமான முயற்சி.

இந்தியாவில் ரூபாய் மற்றும் நாணயங்கள் தயாரிக்கப்படும் காசாலைகள், பல்வேறு மின் உற்பத்தி மையங்களின் தகவல்களும் சிறப்பான முறையில் விளக்கப்படுகிறது.

ரயில் என்ஜினில் பயணித்துக்கொண்டே அதன் விபரங்களை அறிவது சிறப்பு.

இடையில் பல்வேறு புதிர் போட்டிகள் மூலம் கேள்வியாகக் கேட்டு பல அறிவியல் தகவல்களை பகிரும்போது ஒரு ஏக்கம் பிறந்தது எனக்கு.

மீண்டும் மாணவனாகி முதலில் இருந்து துவங்க எச்.ஜி. வெல்சின் டைம் மிஷின் என்னிடம் இருந்தால் இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அறிவியல் மற்றும் விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புகளையும் இணையத்தில் தேடி விரிவாகவும் ஆழமாகவும் அறிவியல் அறியவும், அத்துடன் நிறைவடையாது நம் நாட்டின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அறியும் வண்ணம் கொண்டு செல்ல எண்ணம் பிறக்கிறது.



சேவைத்துறை, இ-மெயில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் நம் தேசத்தின் பங்களிப்பு பற்றியும், சரியாக ஆவணப்படுத்தல் இன்மையால் விடுபட்டுப் போன மருத்துவ துறையில் நமது பங்களிப்பு பற்றியும் அடுத்த பதிப்புகளில் ஆசிரியர் கூடுதல் விபரங்களை சேர்ப்பார் என்று நம்புகிறேன்.

இத்தனை அறிவியல் தகவல்களை திரட்டவும், அவற்றை அப்டேட் செய்து கொண்டே இருக்கவும். சலிப்பு தட்டாமல் ஆர்வத்தை கிளறும் வண்ணம் எழுதவும், சாமானியனுக்கும் புரியும் வகையில் அறிவியலை கூறுவதற்கு எவ்வளவு கடினமான உழைப்பு தேவை என்று எண்ணி பிரமிக்கிறேன்.

நூலாசிரியர் ஆசிரியர் பணி தொடர வாழ்த்துக்கள்

கொரானா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் மக்கள் அறிவியலுக்கு ஒவ்வாத வதந்திகளை நம்பியது தொடங்கி, சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் போன்ற மருத்துவ வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்துவதும், தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குவது வரை அனைத்துமே அறிவியல் சிந்தனைக்குறைவே ஆகும்.

எனவே சமுதாயம் அறிவியல்பூர்வமாக சிந்திக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். அதற்கு நமது அறிவியல் தேசம் போன்ற புத்தகங்கள் அவசியம் மற்றும் காலத்தின் தேவை.

கி.பார்த்தசாரதி,
[email protected]
ரயில் ஓட்டுநர். சென்னை

நூல் தேவை என்றால் கீழ் கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Bharathi Puthakalayam – 7, Elango Salai, Teynampet
Chennai – 600 018
Phone:44 2433 2924

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *