நூல் : அறிவியல் தேசம்
ஆசிரியர் : முனைவர்.ஆயிஷா.இரா.நடராசன்
பதிப்பகம் : அறிவியல் வெளியீடு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
இந்நூலை 2021 சென்னை புத்தககாட்சியில் வாங்கினேன்.
ஓரிரு தினங்களுக்கு முன் ஈரோட்டிற்கு பணி நிமித்தமான பயணம். இந்நூல் பயணத்தின் போது வாசிக்க வேண்டிய நூலாய் அதிர்ஷ்டவசமாய் அமைந்தது.
அறிவியல் தேசம் எனும் நூல் தலைப்பு பார்த்தவுடன் இஸ்ரேலாக இருக்குமோ? ஏனெனில் நோபல் பரிசு அதிகம் பெற்றவர்கள் நாடாயிற்றே! என்று நினைத்தேன்.
புத்தகத்தை திறந்து வாசிக்கையில் இந்நூலாசிரியர்அறிவியல் தேசம் அதிவிரைவு வண்டிக்கான டிக்கெட்டுடன் தயாரா என்றவுடன், புத்தகமே டிக்கெட்டாக நினைத்து புத்தகத்தில் உள்ள பாரத்தை பூர்த்தி செய்து அறிவியல் தேசம் விரைவு வண்டியில் பயணமானேன்.😄
பள்ளி மாணவர்களுக்கான
இக்கதை ரியலிஸம், சர்ரியலிஸம், மேஜிக்கல் சர்ரியலிஸம் என்று கலவையான உணர்வுடன் எழுதப்பட்டிருக்கிறது.
காப்ரியல் கார்ஸியா மார்குவேஸின் “தனிமையில் நூறாண்டு” ஓர் மேஜிகல் சர்ரியலிஸ கதை என் நினைவில் நிழலாடி சென்றது.
நான் B.tech mechanical engg.ல் thermodynamics ல் Zeroth law படித்துள்ளேன்.
Zeroth platform அறிந்தேனில்லை. இந்நூல் படிக்கும்பொழுதுதான் அறிந்தேன் நிஜமாகவே zeroth platform ஒன்று இருந்தது. ஆம் அது மும்பையில் உள்ள போரிபந்தர். (காந்தி பிறந்த குஜராத் போர்பந்தர் இல்லை சாமி😁) அங்கிருந்து தானே (Thane) வரை முதல் இரயில் விடப்பட்டதெல்லாம் அரசு தேர்வுக்கு படிப்பவர்கள் அறிந்திருப்பர். ஆனால் அந்த இரயிலுக்கு மூன்று இஞ்சின். அதன் பெயர்களாவன சாகிபு, சுல்தான், சிந்து என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
முதல் பெட்டியில் நிழல் அறிவியலாக 110 ஏக்கர் பரப்பில், புவியில் சரியாக 951டிகிரி 40 வடக்கு அட்ச ரேகைக்கும், 78டிகிரி 11, 70 கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்த 2600 வருடத்திற்கு முந்தைய தொழிற்கூட நகரம். அந்நகர் உலகுக்கே விவசாயம், ஆடை நெய்தல், ஏர் கலப்பை, அச்சாணியும் ஆணியும் கொடுத்தவர்கள். யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்? நம்ம கீழடிதாங்க என்று ஆரம்பித்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ வில் கண்டு பிடித்த உலகின் முதல் அளவீட்டுக் கருவி என்று ஆரம்பித்து நாமே உலகின் முதல் அறிவியல் முன்னோடிகள் என்று ஆச்சர்யப்படவைத்திருக்கிறார்.
ஆம் வெள்ளையர்கள் வந்த பிறகுதான் அறிவியல் முன்னேற்றம் கண்டோம் என்று பலர் உளறுவதை கேட்டிருப்போம். அக்கருத்து இந்த அறிவியல் தேச இரயிலின் முதல் பெட்டியில் சிதறு தேங்காயாய் சிதறுண்டு போகின்றது. ஆம் ஜந்தர் மந்தர் என்றால் என்ன என்றும், ஆர்யபட்டா ஒருவரல்ல என்பதையும் இப்பயணத்தில் அறிவீர்கள்.
கொறுக்கை எனும் ஊரை சேர்ந்த காரி அவர்கள் எழுதிய கணக்கதிகாரம் பற்றியும், பூமி சூரியனை சுற்றி வருவதை கி.பி.1150லியே அறிவித்த நூல் சித்தாந்த சிரோன்மணி, அதை எழுதியவர் இரண்டாம் பாஸ்கரா என்றும், நமது நிழல் உலக அறிவியல் முன்னோர்கள் குறித்து ஏராளமான தகவல்கள் முதல் பெட்டியில், அதில் பயணம் செய்யும் பல்வேறு மாநிலத்தின் மாணவர்களோடு ஓரமாய் ஒதுங்கி நின்று கவனித்தால் நீங்களும் அறியலாம். 😁
அடுத்த பெட்டியில் ஜகதீஸ் சந்திரபோஸ், சர்.சி.வி.இராமன், மேக்நாத் சாஹா, S.சந்திர சேகர், பி.சி.ராய், J.R.D.TATA இவர்களின் அறிவியல் பங்களிப்பும், விக்ரம் சாராபாய் வின்வெளி ஆய்வு மையம் (ISRO) நாடு முழுவதும் பத்தொன்பது இடங்களில் செயல்படுகிறது என்பதை பற்றியும், அதன் செயல்பாடுகள் மற்றும் poly Hedron உருவான கதை , சந்திராயன், மங்கள்யான் குறித்தெல்லாம் அறியலாம்.
மாணவர்களுக்கான புதிர் போட்டிகள் நடக்கும் பெட்டியில் நீங்கள் உடன் இருந்தால் நம் நாட்டில் என்ன என்ன ஏவுகணைகள் உள்ளது. ஒவ்வொன்றின் சிறப்பம்சம் குறித்தும் நீங்கள் அறியலாம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்தின் மாபெரும் அறிவியலாளர்கள் யார் யார் என்பதையும், அவர்கள் கண்டுபிடிப்புகளும் நீங்கள் அறியலாம்.
நம் நாட்டு அணு உலைகள் ஒவ்வொன்றை பற்றியும், மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி அன்னா மணி அவர்களின் கைங்கர்யம் என்பதையும் அறியலாம்.
முதல் பெண் முனைவர் கமலா சஹானி, இந்திய மருந்தியல் பெண் விஞ்ஞானி அசிமா சேட்டர்ஜி, முதல் பெண் மருத்துவர் மற்றும் போராளி முத்து லட்சுமி,
முதல் அறிவியல் பாட ஆசிரியை சாவித்திரி பாய் பூலே, இயற்கை விவசாயத்தின் தந்தை நம்மாழ்வார் என்று நம் தேசத்தின் பல அறிவியல் வல்லுனர்களைப் பற்றி அந்த 18 பெட்டி இரயிலில் மாணவர்கள் குழுவோடு நீங்களும் அறியலாம்.
பணம் மற்றும் நாணயம் அச்சடிக்கும் இடங்கள் மற்றும் அதன் தகவல்கள் மிக மிக சுவாரஸ்யம்.
அறிவியல் தேச அதி விரைவு வண்டிதான் ஆனால் இதுவரை யாருமே பேசியே இருக்காத நீராவி இஞ்சின் , டீசல் இஞ்சின், மின்சார இஞ்சின்கள் இயக்கம் குறித்து இஞ்சினில் பயணம் செய்தே அறியலாம்.
இந்த இடத்தில்தான் இந்நூல் ரியலிசம் சர்ரியலிசம் மேஜிகல் சர்ரியலிஸம் கலந்திருப்பதை நீங்கள் உணரலாம்.
என்ன ஆச்சர்யம் நானும் மாணவர்கள் குழுவோடு இணைந்திருந்தமையால் சென்னையிலிருந்து ஈரோடு பயணித்ததை மறந்து போனேன்.
பயணம் இனிதே முடிந்தது என்றாலும் இந்த புத்தகத்தோடு நீங்கள் பயணிக்கும் முன் என் கருத்தை நான் பகிர்ந்துவிடுகிறேன்.
1. இந்நூல் பல்வேறு மாநிலத்தவர்கள் அறியும் வண்ணம் ஆங்கிலத்திலும் எழுதப்பட வேண்டும்.
2. வரலாறு என்று ஒரு பாடம் இருப்பது போல் அறிவியல் பின்புல வரலாறு எனும் பாடத்திட்டத்தை என்று சேர்ப்பார்களோ அன்று மீண்டும் நம்மை யாரும் வெல்ல முடியாத அளவிற்கு அறிவியலிலும் தொழிற்நுட்பத்திலும் உயர்ந்து நிற்போம்.
3. அப்துல் கலாம் ஐயாவின் கூற்றிற்கினங்க
வருடத்திற்கொருமுறை
“அறிவியல் இரயில் பயணம்” காலத்தின் கட்டாயம் என்பதை இந்நூலாசிரியர்
உணர்த்தியிருக்கிறார்.
சற்று யோசித்து பாருங்கள் ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த அறிவியல் வரலாற்றை, பல்வேறு தகவல்கள் திரட்டி மாணவர்கள் அறியும் வண்ணம் எழுத எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும். மலைக்க வைக்கும் மகத்தான பல வருட உழைப்பு திரைமறைவில்.
கலாம் ஐயாவின் கனவு நினைவாகிறது என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.
4. இனி தயங்காமல் கூறலாம் நம் பாரத தேசத்தை அறிவியல் தேசம் என்று.🤩
மிக்க நன்றி!
பிரியமுடன்,
சு. ஹரிகிருஷ்ணன்.🤩
Leave a Reply
View Comments