எழுத்துக்களின் பரிணாமம் (The evolution of the alphabet)
அறிவியலாற்றுப்படை
பாகம் 16
முனைவர் என்.மாதவன்
சுமார் 2005 ஆம் ஆண்டு வரை எனக்கு மற்றவர்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் இருந்ததாக நினைவு. குறிப்பாக ஒரே வகையான செய்தியை அஞ்சலட்டையில் எழுதி பல உறுப்பினர்களுக்கும் அனுப்பவேண்டிய தேவை இருக்கும். குறிப்பாக இயக்கத்தின் செயற்குழுகூட்டம், பொதுக்குழு கூட்டம் இது போன்ற நிகழ்வுகளுக்கான கடிதம். பள்ளியில். மதிய உணவு இடைவேளையில் அதனை எழுதுவதுண்டு. நமது வாழ்க்கைதான் பெரும்பாலும் திறந்த புத்தகமாயிற்றே. அதனால் எனது நடவடிக்கைகள் பலவும் அனைவரும் பார்க்கும் வண்ணமே இருக்கும் ஒரு முறை எனது தலைமைஆசிரியர் ஒருவர் வந்து பார்த்தார். நான் எழுதியிருந்த அஞ்சலட்டைகளில் ஒன்றை எடுத்து ’என்னப்பா நீயே போய் படிச்சுக் காட்டுவியா?” என்று கேட்டார். அவர் கேட்டதிலும் தப்பில்லை. சிறிய அஞ்சலட்டையில் உலக விஷயங்களையும் நுணுகி நுணுகி எழுதும்போது அப்படித்தான் புரியாதது போல இருக்கும். நான் புன்னகைத்துக் கடப்பேன். அன்றிலிருந்து இன்று வரை எனது கையெழுத்து எனக்கே புரியாதாகத்தான் உள்ளது. உண்மையில் விஷயம் தெரிந்த இருவருக்கிடையே நடைபெறும் கடிதப் போக்குவரத்து எவ்வளவு சிக்கலான கையெழுத்தாக இருந்தாலும் புரியும்தானே.
மொழிகளில் எழுத்துக்களின் பிறப்புக்கும் இது பொருந்தும். கடந்த பாகத்தில் எழுதி வைப்பதற்கான தேவை ஏன் வந்தது என்று விவாதித்தோம். அவ்வாறு எழுதிவைப்பதற்குத் தேவையான எழுத்துக்கள் எவ்வாறு பிறந்தன என்றும் பார்த்துவிட்டு அடுத்து நகர்வோம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலனவற்றிற்கு எழுத்துக்கள் காணப்படுகின்றன. பல மொழிகள் பேசப்படுவது ஒன்றாகவும் வேறு மொழியின் எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுதப்படுவதாகவும் உள்ளது. எது எப்படியோ எந்த ஒரு மொழிக்கும் வரிவடிவம் அவ்வளவு சீக்கிரம் கிடைத்துவிடவில்லை. அதற்கும் நாம் கொஞ்சம் மெசபடோமியா நாகரீகம் நோக்கித்தான் பயணிக்கவேண்டியுள்ளது.
ஏற்கனவே சித்திரமாக செய்திகளைக் குறிக்கும் வழக்கம் உலகில் இருந்ததைப் பார்த்தோம். முறைப்படியிலான வரலாறு நமக்கு கி,மு.2700 வாக்கில் எகிப்தில் ஹிரோகிளிஃப்கிங்க்ஸ் என்ற எழுத்துவகை இருந்ததாக தெரியவருகிறது. இதற்கு அடுத்தபடியாக கியூனிஃபார்ம் லோகோகிராம் என்ற வகையிலான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. அதாவது இன்றைக்கு நாம் எழுதுவதுபோல் எழுத்தைக் கூட்டியெல்லாம் இதனை வாசிக்கவேண்டாம். ஒரு சொல்லே சித்திரவடிவிலான எழுத்தாக இருக்கும். குறிப்பாக பசு என்று குறிக்கவேண்டும் என்று சொன்னால் பசு போலவே அதனைக் குறிக்கும் லோகோகிராம் இருக்கும். அக்காலங்களில் அவர்களின் நகர்வு விவசாயம் தொடர்புடைய பகுதிகளிலேயே இருந்ததால், இப்படியான எழுத்துமுறைகள் அதனையொட்டியே அமைந்திருந்தன. இப்படியே படிப்படியாக பேசப்படுபவற்றில் இருக்கும் ஒலியினை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்களை உருவாக்கி அவற்றைச் சேர்த்து எழுதும் பின்னர் வாசிக்கும் முறைகள் உருவாகின.
இதனை இன்னும் விரிவாகப் பார்ப்போமானால் ஒரு செய்தியானது என்பது எவ்வளவு நபர்களைச் சென்றடையவேண்டும் என்ற நோக்கிலேயே எழுத்துக்களின் பரிணாமம் அடையத் தொடங்கியிருக்கும்.. குறிப்பாக ஒரே வகையிலான வாழ்க்கைமுறையைக் கொண்ட ஒரே தட்பவெப்ப நிலையில், பூகோள அமைப்பில் வாழ்ந்த மக்கள் இனக்குழுக்களிடையே பரிமாற்றம் செய்யப்பட சில வகையிலான சித்திர எழுத்துக்களே போதுமானதாக இருந்தன. பல நேரங்களில் சொற்களோ, எழுத்துக்களோ இல்லாமல் கூட தகவல் தொடர்புகள் நடைபெற்றன. காடுகளில் வசித்தபோது கொடிய விலங்கு ஒன்று வருகிறது. கையில் கிடைத்த இறந்த மிருகங்களின் கொம்புகளை ஊதியோ, எக்காளமிட்டோ, பறையை இசைத்தோ அதனை ஓட்டுகின்றபோது அடுத்த பகுதியில் இருப்போர் இந்த அபாயத்தை உணர்ந்து எச்சரிக்கையாகிவிடுவர். இதனை ஒட்டியே மக்கள் கூடவேண்டும் என்று சொன்னால் தேவாலயங்களில் மணி அடிப்பது. பள்ளிகளில் பிரிவுநேரம் கடப்பதை தெரிவிக்க மணி அடிப்பது போன்றவை இன்றும் நடைபெற்றுவருகின்றன.
ஆனால் அதே நேரம் ஒரு செய்தியைச் சொல்லவேண்டும் ஆனால் அதனை யார் வாசித்தாலும் நாம் சொல்லவிரும்பும் அதே பொருளில் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்ற நிலை வந்தபோது எழுத்துக்களின் தரம் கூடத் தொடங்கியது. நமது தமிழ்மொழியின் எழுத்துக்கள் வளர்ச்சி குறித்த அட்டவணையைப் பாருங்கள். நூற்றாண்டுகள் தோறும் எவ்வாறு மாற்றம் அடைந்துவந்திருக்கிறது என்பது விளங்கும். அதே நேரம் ஒரு எழுத்தின் அடுத்தடுத்த வடிவம், முந்தைய வடிவத்தைவிட எளிதானதாகவும் அடுத்த எழுத்தை நோக்கி விரல்களை எளிதில் நகர்த்துவதாகவும் இருக்கும். இது எழுதும்போது ஏற்படும் களைப்பைக் குறைக்கவும் எழுத்துக்களின் அழகினைக் கூட்டுவதாகவும் அமையும். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் 1921 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பின்னர் எளிமையாகவும் விசைப்பலகைகள் போன்றவற்றிற்கு உதவுவதாகவும் ஆ,ஐ,ஒ,ஓ போன்ற ஒசையுடைய எழுத்துக்களை லா, லை,லெ,லோ போல எழுதும் சீர்திருத்தங்கள் 1978-79 முதல் நடைமுறைக்கு வந்தன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் எழுதும் முறைகளில் ஆகச் சிறந்த சிக்கன முறைகளைக் கடைபிடிக்கத் தொடங்கினர். அதிலும் மொழியியலாளர்கள் இவ்வாறான அனுபவங்களைத் தொகுத்து அதனை நடைமுறையாக்கினர். தமிழில் மேலே நாம் பகிர்ந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் எங்களைப் போன்றோர் காலத்தில் வந்ததால் எங்களுக்குத் தெரிகிறது. ஆனால் பன்னெடுங்காலமாகவே பல்வேறு மொழிகளிலும் இவ்வாறான சீர்திருத்தங்களும் செம்மைகளும் உண்டாயின.
இன்றைக்கு உலகின் எந்த மொழியினை எடுத்துக்கொண்டாலும் அந்த மொழிக்கான அகர வரிசைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோலவே உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் போன்றவைகளும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாக வைத்து எந்தவித ஒலியையும் நம்மால் எழுத முடிகிறது.
இதில் ஆங்கில மொழி சிக்கனத்துக்குப் பெயர் போனது. 21 உயிர் எழுத்துக்களையும் 5 மெய் எழுத்துக்களையும் மட்டுமே உடையதாக உள்ளது. இதனோடு உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளின் வார்த்தைகளையும் தனதாக்கிக் கொண்டு மேன்மேலும் உயிர்ப்போடு இருக்கிறது. ஆனால் ஒரு குறை எல்லா நேரங்களிலும் அவை எழுதப்படுவது போன்றே உச்சரிக்க இயலாது. உதாரணமாக Nature, ஐ நேட்சுரே எனவும் Ration ஐ ரேட்டியன் என்றும் சொல்லக் கூடாது நேச்சர், ரேஷன் என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ் போன்ற இந்திய மொழிகளில் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கையும் சற்று அதிகம்தான். ஆனால் அருமையான ஒலிப்புக்கேற்ற மொழியாக இவை விளங்குகின்றன. அதுவும் இந்தி போன்ற மொழிகளில் க,ச,ட,த,ப போன்றவை நான்கு வகைகள் உண்டு. இவ்வாறு எழுத்துக்கள் கூடுதாலாக இருக்கும் மொழிகளில் உச்சரிப்பு இன்னும் நளினமாக இருக்கும். தமிழில் இப்படியெல்லாம் கிடையாது என்றாலும் “ழ்” கர ஒசையுடன் உயர்தனிச்செம்மொழியாக விளங்குகிறது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று சொன்னால் எழுத்துக்கான வரிவடிவங்கள் கைகளை அடுத்தடுத்த எழுத்துக்களை நோக்கி நகர்த்தி வேகமாக எழுதவும், ஒரே அளவிலும் எழுதப்பட உகந்ததாக பரிணாமம் அடைந்துள்ளன. குறிப்பாக ஆங்கில எழுத்துக்களை எழுதும்போது 5 வகையான s களை பராமரிக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் கூறுவோம். அது size, shape, slant, smooth, and space. அதாவது ஒரே வடிவிலும், சாய்ந்து அடுத்த எழுத்தோடு இணைவதாகவும்,ஒரே அளவிலானதாகவும், மென்மையாக எழுதப்படுவதாகவும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு எழுத மாணவர்களை பயிற்றுவிப்பர். இவ்வாறு பயிற்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத நேரிட்டால் விரைவாக எழுதி முடிக்க இயலும்.
இதற்கு மேல் அறிவியலாற்றுப்படையில் மொழி வரலாற்றுக்கு இடம் கிடையாது. ஆனால் எழுத்து பரிணாமம் அறிவியல் பூர்வமானதாகவும் முன்பைவிட எளிதானதாக அடுத்துவருவது இருக்கிறது என்பதை விளக்கவே இவ்வளவு விரிவான விளக்கம். அறிவியல் பூர்வமாக நடைபெற்றதால்தான் காலத்தை விஞ்சி நிற்கிறது என்பதைப் பகிரவே இவ்வளவு விரிவாக பகிரவேண்டியதாயிற்று.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 15: எழுத்தின் பிறப்பு – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: அறிவியலாற்றுப்படை: தத்துவங்களின் தலையெடுப்பு