தத்துவங்களின் தலையெடுப்பு (The Evolution Of Philosophies)
அறிவியலாற்றுப்படை
பாகம் 17
முனைவர் என்.மாதவன்
மனிதர்களின் பரிணாமத்தில் உணவு, உடை, உறையுள், பேச்சு, மொழி, ஆட்சி என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வளர்ச்சியடைந்ததைப் பார்த்தோம். ஆட்சி என்பதை இன்றிருப்பதைப் போல் உடனடியாக புரிந்துகொள்ள இயலாது. பொது ஆண்டுக்கு முன்பான காலங்களில் ஆட்சியாளர்கள் என்போர் சிறுசிறு இடங்களை நிர்வகிப்போர்களாகவே இருந்தனர். அவ்வாறான ஆட்சியாளர்கள் அந்தந்த பகுதி மக்களை ஆட்சி செய்தனர். ஆட்சி செய்வது என்றால் சும்மா நடந்துவிடுமா என்ன? இரத கஜ, துரக பதாதிகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதாங்க, (தேர்,யானை, குதிரை மற்றும் காலாட்படைகள்ங்க) இவ்வாறான வசதிகளுடன் மக்களை ஆட்சி செய்ய, நிர்வகிக்க, அவர்களுக்குத் தேவையான பொருளை வரிவசூல் மூலமாகப் பெற்றனர். வரி என்றால் நிலங்களில் விளையும் தானியங்கள்தான் பெருமளவில் இருந்தன. இவ்வாறான வரிகள் மூலம் பெறப்பட்ட வருவாயினை தொடர்ந்து தொய்வில்லாமல் நடத்தவும், பெருக்கவும் நிர்வாகத்தினை மேற்கொள்ள பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களே முதற்கட்ட அரசின் ஊழியர்களாயினர். (உலகின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்சில மாற்றங்களும் இவை அமலாயின).
இவ்வாறாக வசூலாகும் வரிகளில் உண்டு கொழுத்துக்கொண்டு எவ்வளவு நேரம் சும்மாயிருப்பது எனவே அன்றைய ஆட்சியாளர்கள் பல்வேறு கேளிக்கைகளிலும் ஆழ்ந்தனர். இவ்வாறு அவர்கள் கேளிக்கைகளில் ஆழ்ந்திருந்தபோது தங்களது ஆட்சிக்கும் எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடக்கூடாது என்ற வகையில் தங்களுக்கு மெய்க்காப்பாளர்களையும் நியமித்துக்கொண்டனர். மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் செயல்பாட்டை மேற்பார்வை செய்யும் பணிகளை பெரும்பாலும் ஆட்சியாளர்கள் தனக்கு நம்பகமான நபர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் தங்களது எண்ணம்போல் வரிவசூல் செய்து கொடுஞ்செயல்களும் புரிந்தனர். இவ்வாறான நேரங்களில் சிறு சிறு அளவில் மக்கள் புரட்சி ஏற்பட்டதை பழைய திரைப்படங்களில் பார்த்து இரசிக்கலாம்.
இவ்வாறான ஆட்சி முறைகளிலும் அவ்வப்போது ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. தனிப்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்த காலம் மாறி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபுக்கள் ஆட்சிகளில் பங்கேற்கும் ஆட்சி முறைகளும் பரிணமிக்கத் தொடங்கின. பின்னர் படிப்படியாக இன்று நடைமுறையிலுள்ள மக்களாட்சி முறைகள் பரிணமித்தன. இன்றும் உலகில் மன்னராட்சியின் மிச்ச சொச்சங்கள் உடைய நாடுகளும் உள்ளன. மக்களாட்சியே மன்னர்கள் ஆட்சி போல் நடைபெறும் முறைமைகளும் இல்லாமல் இல்லை.
இவ்வாறான ஆட்சி முறைகளில் முதற்கட்ட ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர பல்வேறு அறிஞர்களின் தலையீடுகளும் அவர்கள் உருவாக்கிய தத்துவங்களும் தேவையாகின. ஆட்சி முறைகளுக்கும் தத்துவங்களுக்கும் நேரடியான தொடர்புண்டு. அதுபோலவே ஆட்சிமுறைகளுக்கும் வாணிகத்திற்கும் தொடர்புண்டு. அதுபோலவே வாணிகத்திற்கும் கண்டுபிடிப்புகளுக்குமான தொடர்புகளும் இல்லாமல் இல்லை. அந்த வகையில் மனிதர்களின் அனுபவங்களே தொகுப்பாகி,பின்னர் அறிவியலாக பிற்காலத்தில் வளர்ச்சியடையத் தொடங்கின. இதற்கு தொடக்க காலங்களில் சில அறிஞர்களின் தத்துவங்களே உதவிகரமாக இருந்தன. அந்த வகையில் சில தத்துவ அறிஞர்களைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொரு வேளையும் பசியாறவேண்டும். பசியாறவேண்டும் என்றால் உணவு தேவை. அவ்வாறான உணவுக்கான தேவை தானியங்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தி மூலமாகத்தான் சாத்தியமாகின. உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தையும் மனிதர்கள் அவ்வப்போதே பயன்படுத்திவிட இயலாது. எனவே பதப்படுத்தி தேவையாகும் காலங்களில் பயன்படுத்தினர். அடுத்தவர்களுக்கு விற்பனை செய்தனர். அதே போல் தமக்குத் தேவையாகும் அனைத்துப் பொருட்களையும் மனிதர்கள் அவரவர்களே உற்பத்தி செய்துகொள்ளவும் இயலாது. அவ்வாறு உற்பத்தி செய்துகொள்ள இயலாத நிலையை மனிதர்கள் ஒவ்வொருவரையும் அடுத்தவர்களை சார்ந்தவர்களாக்குகிறது. அவ்வாறு சார்ந்திருத்தல் என்பது சமூக நல்லிணக்கத்தினை உண்டாக்கும் கருவியாக பார்க்கப்படவேண்டும். ஆனால் நடைமுறை வேறாக உருவாகி வருகிறது.
இந்த இடத்தில் பொருட்களின் உற்பத்தி என்பது முக்கியமான நான்கு காரணிகளைச் சார்ந்ததாக இருக்கிறது. நிலம், உழைப்பு, முதல், நிறுவனம். இதில் நிறுவனங்களை அமைப்போரே முதலையும் நிலத்தையும் உடையோராக விளங்கிவருகின்றனர். உழைப்பு என்ற காரணியானது மற்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதற்கான கூலி மட்டும் பெற்றுக்கொண்டு மற்ற காரணிகளிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. இவ்வாறான போக்குகளிலும் தொடர்ச்சியாக மனிதர்களின் அனுபவங்களே தொகுக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளில் பொருளாதாரம் சார்ந்த புரிதலை ஏற்படுத்தின
பொருளாதாரம் போலவே சமயம், தர்க்கவியல், மருத்துவம்,இருப்பியல்வாதம், கல்வி, அறிவியல் போன்ற துறைகளிலும் மறுமலர்ச்சிகள் ஏற்பட்டன. பொருளாதாரமும் அறிவியலும் மக்களின் பசியோடு தொடர்புடையது என்ற புரிதலில் இவை இரண்டைப் பற்றி கூடுதலாக இனிவரும் பகுதிகளில் பார்ப்போம். இதனிடையே இப்படி விளக்கமான துறைகளுக்கும் தத்துவங்கள் உடனடியாக வந்துவிடவில்லை. அதற்கு பல்துறை வல்லுநர்கள், தத்துவ அறிஞர்கள் பங்களிப்பு செய்தனர். அவர்களில் சில முக்கியமான அறிஞர்களைப் பற்றிக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
உலகெங்கிலும் பல்வேறு காலகட்டங்களிலும் பல தத்துவ அறிஞர்கள் பிறந்திருந்தாலும் நமது வசதிக்காக அறிமுகமான சிலரைப் பற்றியும் அவரது பங்களிப்புகளையும் பார்த்துவிடுவோம். கிரேக்க மண்ணில் மக்களாட்சி மலரத் தொடங்கிய காலம். இன்றுபோல மக்கள் அனைவரும் வாக்களித்து சட்டமன்றம், பாராளுமன்றம் போன்ற அமைப்புகளாக இல்லாமல் மக்களின் பங்கேற்புடன் பலர் சேர்ந்து ஆட்சியை நடத்தும் காலமாக அது விளங்கியது. இன்னும் சுருக்கமாகச் சொல்லப்போனால் மக்களாட்சிதான் ஆனால் மன்னர்கள்தான் ஆள்வார்கள். இதுபோன்ற மக்களாட்சியை சாக்ரடீஸ் வெகுவாக கேள்விக்குள்ளாக்கினார். மக்களாட்சி பற்றிய சரியான புரிதலில்லாமல் அனைவரும் வாக்களித்து ஆட்சியமைப்பு உருவானால் அது பணம் படைத்தோர்க்கான ஆட்சியாகவே அமையும் என்று வாதாடினார். மேலும் கவர்சிகரமானவர்களையே மக்கள் விரும்புவார்கள் எனவும் வாதாடினார். அதற்கு அவர் சொன்ன உதாரணம் ஒன்று மிகவும் பிரபலமானது. ஒரு மருத்துவர் மற்றும் இனிப்புக் கடைக்காரர் இருவரும் தேர்தலில் நின்றால் அனைவருக்கும் இனிப்பை வாரிவழங்கும் இனிப்புக் கடைகாரரைத்தானே மக்கள் தேர்ந்தெடுப்பர் என்றும் பரிகசித்தார்.
தமது வாழ்நாள் முழுவதும் இவர் சும்மாயிருக்கவில்லை. தெருவெங்கும் அனலைந்து திரிந்து தென்படும் இளைஞர்களுக்கெல்லாம் அறிவூட்டினார். எதையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கவும் தூண்டினார். அதே நேரம் தனது கருத்துகளாக அவர் எதையும் எழுதிவைக்கவில்லை. எழுதி வைப்பது என்பதற்கும் அவர் எதிரானவராக இருந்தார்.அவரது கருத்துக்களாக நமக்குக் கிடைத்திருப்பவை எல்லாம் அவரது சீடரான பிளாட்டோ அவர்கள் தொகுத்துவைத்த கருத்துக்கள்தான். இவரைப் பற்றி அடுத்த பகுதியில் இன்னும் கொஞ்சம் பார்ப்போம்.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 16: எழுத்துக்களின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மனிதச் செயல்பாடுகளிலிருந்து தலைதூக்கிய தத்துவங்கள் பற்றிய அறிவியல் புரிதல் ஓர் அடிப்படையான தேவை. அப்போதுதான் மனிதச் செயல்பாடுகளை தலைதூக்க விடாமல் முடக்கிய தத்துவங்களைப் பற்றியும் புரிந்துகொண்டு விடுபட முடியும். உலகத்தை விளக்குவதோடு நிற்காமல் மாற்றியமைக்க வழிகாட்டிய தத்துவம் தலைதூக்கியது பற்றிய ஞானமும் பிறக்கும். சிறப்பான கட்டுரை.
Pingback: தத்துவத்தின் தலைமகன் சாக்ரடீஸ் (Socrates)