தத்துவத்தின் தலைமகன் சாக்ரடீஸ் (Socrates)
அறிவியலாற்றுப்படை
பாகம் 17
முனைவர் என்.மாதவன்
புத்தர் அறிவொளி பெற்று பல்வேறு இடங்களுக்கும் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறு சென்றுகொண்டிருக்கும்போது ஒரு பெண்மணி இறந்துபோன தனது குழந்தையைக் கொண்டு வந்து உயிர்ப்பித்துத் தருமாறு கேட்கிறார். கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கும் தாயைப் பார்க்கும் புத்தருக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை. துக்கத்தின் உச்சியிலிருக்கும் தாயை என்ன சொல்லித் தேற்ற இயலும். சரி உயிர்ப்பித்துத் தருகிறேன். அதற்கு கொஞ்சம் கடுகு வேண்டும். அதுவும் இதுவரை இறப்பே ஏற்படாத இல்லத்திலிருந்து கொஞ்சம் கடுகை வாங்கிவாருங்கள் என்று கூறுகிறார்.
புத்தரின் வேண்டுகோளை ஏற்று அந்த தாயும் வீடுவீடாகச் சென்று கடுகு சேகரித்துவரப் புறப்படுகிறார். ஒவ்வொரு வீட்டிலும் கடுகைக் கேட்பதற்கு முன்னர் உங்கள் வீட்டில் யாராவது இதுவரை இறந்திருக்கிறார்களா? என்று கேட்க அவர்களும் தங்கள் பாட்டியோ, தாத்தாவோ அல்லது இன்ன பிற உறவினர்களோ இறந்திருப்பதைப் பகிர்கின்றனர். விரக்தியுடன் வரும் தாய் புத்தர் சொல்லாமலே இறப்பு தவிர்க்க இயலாதது என்ற விவரம் புரிந்து நொந்துகொண்டே சென்றிருக்கலாம்.
குறிப்பாக மனிதர்களுக்கு பிறப்பு என்பதற்கான காரணம் குறிப்பிட்ட காலகட்டத்தில் புரிந்துவிட்டது. ஆனால் இறப்பு என்பதை அவ்வளவு எளிதாகப் புரியவில்லை. இது பற்றியும் பண்டைய கற்பனைக் கதைகள் உண்டு. ஆதிகாலங்களில் மனிதர்கள் காட்டு விலங்குகள் மூலம் கொல்லப்படுவது ஒரு வகை ஆபத்து என்றால் காயங்கள் பட்டு, நோய்வாய்ப்பட்டு இறந்தோரும் உண்டு. குறிப்பாக நாடோடி சமூகத்தில் யாருக்காவது காயம்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ மற்றவர்கள் எவ்வளவு காலம் அவர்களோடு, அங்கேயே தங்கிவிடமுடியும். ஒருகட்டத்தில் அவ்வாறு நகர இயலாதோரை அதே இடத்தில் விட்டுவிட்டு அவர்கள் பிறகு வரட்டும் என்று மற்றவர்கள் நகர்ந்திருப்பர். அவ்வாறு பின் தங்கியோர் இறந்தும் கூட இருக்கலாம். அதுபோலவே மிருகங்களால் தாக்கப்பட்டு மனிதர்கள் இறக்கும்போது இறப்பு பற்றிய புரிதல்கள் வந்துவிட்டிருக்கும்.
இறப்புக்குப் பின்னான வாழ்க்கை குறித்த சிந்தனைகள் பல புவியியல் நிலப் பரப்புகளில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றாற்போல் நிலவியது. பண்டைய எகிப்தில் மன்னர்கள் பாரோ என அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வாழ்நாளுக்கும் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர். இவ்வாறு சக்தியுடன் இருப்போர்க்கு இறப்பா? அவர்கள் இல்லாமல் போவதா? என்ற கேள்விகள் எழுந்தன. இவ்வாறு இறந்தோரை மூலிகை தைலம் போன்றவற்றைத் தடவி பல நாட்கள் வரை பாதுகாத்தனர். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட உடல்கள் மம்மி என்று அழைக்கப்பட்டன. நம்ம வீட்டு டாடியோடு இருக்கும் மம்மியல்ல இது. இதனால் நீண்ட நாட்களுக்கு முக்கியமானவர்களின் உடலைப் பாதுகாத்தனர். குறிப்பாக உடலில் இதயம் போன்ற உறுப்புகளை மட்டும் எடுத்துவிட்டு, உடலிலுள்ள ஈரத்தை மொத்தமாக எடுத்துவிட்டு உடலைப் பாதுகாத்தனர். சுருக்கமாகச் சொன்னால் மனித கருவாடு..
இதனிடையே பிரமீட்கள் போன்ற மிகப்பெரிய கட்டிடங்களைக் கட்டி இறந்த அரசர்களின் உடலை அங்கே அடக்கம் செய்தனர். அதாவது பெரிய சைஸ் சமாதி. இந்த சமாதிக்குள் அவர்கள் பயன்படுத்திய துணி,மணிகள் போன்றவற்றையும் வைத்தனர். இறந்தோர் இரவில் இயங்கி அதனை ஆண்டு அனுபவிப்பர் என்ற நினைப்பாயிருந்திருக்கலாம் என நம்பப்பட்டது. அதாவது சாதாரண மக்கள் இறப்பு இயல்பாகக் கடந்த மக்கள் சக்திவாய்ந்த அரசர்கள் போன்றோரின் இறப்பினை அவ்வாறு கடக்க இயலவில்லை. அல்லது அரசர்களுக்குப் பின்வந்தோர் அவ்வாறு கடக்க விடவில்லை. இறப்புக்குப் பின்னான வாழ்க்கை குறித்த பயமே வாழும் நாட்களை ஒழுக்கமுள்ளதாக மாற்ற உதவியது. அதுகுறித்த கேள்விகளும் தத்துவங்கள் பலவற்றைப் பிறப்பித்தன.
கொஞ்சம் மீண்டும் தத்துவம் பக்கம் வருவோம். யாராவது நமக்குப் புரியாத விஷயங்களைப் பேசும்போது வழக்கமாக என்ன ஒரே தத்துவமா பேசறே என்பார்கள். அந்த அளவுக்கு தத்துவம் என்றாலே சாதாரணமாக யாருக்கும் புரியாதது என்ற எண்ணம் இன்று மட்டுமல்ல,காலம் காலமாகவே இருந்து வருகிறது. பண்டைய எகிப்தில் கடவுளர்கள்தான் மனிதர்களின் மகிழ்ச்சியை நிர்ணயிக்கின்றனர் என்ற கருத்து மிகவும் ஆழமாக இருந்தது. இலியட் மற்றும் ஒடிசி காப்பியத்தைப் படைத்த ஹோமர் போன்றோர் தங்களது படைப்புகளில் இதனை வெளிப்படுத்தினர். இதனை யூடைமேனியா என்று அழைத்தனர். பின்னர் வந்த சாக்ரடீஸ் (Socrates) போன்றோர் இதிலிருந்து சற்று மாறுபடத் தொடங்கினர். மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கம் நல்லொழுக்கத்துடன் வாழ்வதுதான் என்ற இடத்திற்கு வந்தனர்.
இவ்வாறான வாழ்வியல் ஒழுக்கங்களே பின்னர் பல்வேறு இயற்கை நிகழ்வுகளில் ஒழுங்கையும் உற்றுநோக்க உதவியிருக்கும் என்று நம்பலாம்தானே.
உண்மையான அறிவைத் தேடுவதன் மூலம் மனிதர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் எனவும் கிரேக்கர்கள் கருதினர். இதன் வெளிப்பாடாகவே சாக்ரடீஸ் (Socrates) (பொ.ஆ.மு 470-399) முன்வருகிறார். சாக்ரடீஸ் (Socrates) நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல எதனையும் எழுதிவைக்கவில்லை. ஆனால் எதனையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவதில் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். கேள்விக்குள்ளாக்கியே பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறையே அவரது பெயரால் அழைக்கப்படுமளவிற்கு அவர் பெயர் பெற்றார்.
”எனக்குத் தெரிந்ததெல்லாம் எனக்கு ஒன்று தெரியாது என்பதுதான்” என்ற பணிவான மேற்கோள் மூலம் சாக்ரடீஸ் (Socrates) அவர்கள் இன்றுவரை அறியப்படுகிறார். அவருக்கும் அவரது மனைவி சாந்தியோப்பி அவர்களுக்கு பிரமாதமான பொருத்தம். ”திருமணமா தாராளமாகச் செய்துகொள்ளுங்கள். உங்கள் மனைவி நல்லவளாக அமையும் பட்சத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேறுமாதிரி அமைந்துவிட்டால் நீங்கள் தத்துவவாதியாகிவிடுவீர்கள்” என்று அவர் சொன்னதாக நம்பப்படுகிறது.
சாக்ரடீஸ் (Socrates) அவர்கள் மனிதர்களை நான்கு வகையாகப் பிரித்து அவர்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுமாறு அறிவுறுத்தினர். அவையாவன.
தமக்குத் தெரியாது என்றே தெரியாதவர்கள் இவர்கள் முட்டாள்கள் இவர்களை விட்டுவிடுங்கள்.
- தனக்குத் தெரியாது என்று தெரிந்தவர்கள் இவர்கள் எளிமையானவர்கள் இவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்.
- தனக்கும் தெரியும் என்று தெரியாதவர்கள் இவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் எழுப்புங்கள்.
- தனக்குத் தெரியும் என்று தெரிந்தவர்கள் ஞானிகள் இவர்களைப் பின்பற்றுங்கள் என்றார்.
இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தவர். அன்று கிரேக்க நாட்டில் இருந்த பலவற்றையும் கேள்விக்குள்ளாக்கினர். இவற்றில் ஜனநாயகம்,கடவுள் நம்பிக்கை போன்றவைகளும் அடக்கம். இதனால் அன்றிருந்த ஆதிக்கச் சக்திகள் இவரைத் தாக்கத் தொடங்கினர். எதற்கும் சளைக்காமல் இவர் தமது பணியைத் தொடர்ந்தார். ஒருகட்டத்தில் இரண்டு விதமான குற்றங்கள் இவர் மீது சாட்டப்பட்டன. ஒன்று இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார். இரண்டு ஏதீனியக் கடவுளர்கள் மீது பக்தியற்றிருக்கிறார். புதுப்புது கடவுளர்களை அறிமுகப்படுத்துகிறார் என்பவையே அவை இரண்டும்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அன்றைய மெலிடஸ் என்ற கவிஞன் மன்றத்திற்கு அழைக்கப்பட்டார். இவருக்கு எதிரான குற்றத்தை விசாரிக்க ஏதேன்ஸ் நகர குடிமகன்கள் 500 நபர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றினர். வாத பிரதிவாதங்கள் நடந்தன. பார்வையாளர்கள் மாடத்தில் இவரது சீடர்கள் பிளாட்டோவும் அமர்ந்திருந்தார். இறுதியாக இவருக்கும் ஹேம்லோக் என்ற விஷம் அளிக்கப்பட்டு உயிர் துறக்கவேண்டும் என்று தீர்ப்பாகியது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அவரைத் தப்புவிக்க அவரது மாணவர்கள் பலவகைகளிலும் முயற்சித்தனர். அவர் எதையும் ஏற்கவில்லை. தீர்ப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டு விஷத்தை அருந்தி தனது 70 ஆவது வயதில் உயிர்நீத்தார்.
அவர் இறந்தபிறகு அவரது உடலை என்ன செய்யவேண்டும் என்று அவரது மாணவர்கள் கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில்தான் இருப்பதிலேயே ஆச்சரியமானது.” நான் இறந்தபிறகு எனது உடலை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், ஆனால் அதுதான் நான் என்று எண்ணிவிடாதீர்கள்” என்பதுதான் அது.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 17: தத்துவங்களின் தலையெடுப்பு – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.