அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 19: ஆசிரியரை (சாக்ரடீஸ் -Socrates) அணி செய்த மாணவர் பிளேட்டோ (Plato) | History Of Philosophies in Tamil

அறிவியலாற்றுப்படை 19: ஆசிரியரை அணி செய்த மாணவர் – முனைவர் என்.மாதவன்

ஆசிரியரை அணி செய்த மாணவர்

அறிவியலாற்றுப்படை

பாகம் 19

 

முனைவர் என்.மாதவன்

அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு பலரும் பல விடையை அளிக்கலாம். ஆனால் பலராலும் பாராட்டப்படும் ஒரு விடை ஒன்று உள்ளது. அறிவியல் என்பது கேள்விகளுக்கு விடையளிப்பதல்ல மாறாக வரும் விடைகளை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குவது என்பதுதான் அது. பெரும்பாலும் பள்ளிகளில் வகுப்பறைகளில் தெரிந்த விஷயங்களைச் சொல்லித்தரும் ஆசிரியர்களைவிட மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆசிரியர்களையே பெரிதும் மாணவர்கள் விரும்புவர்.

அதுபோலவே ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள மேடைகளில் மெய்சிலிர்க்கப் பேசுவது ஒருவகையில் எளிது. ஆனால் அதே நேரம் எதிரிலிருப்போர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டு, கூட்டத்தினரினிடையே கலந்துரையாடி நிகழ்வை நகர்த்துவது மிகவும் சவாலானது. இப்படி கேள்விகள் மூலம் உரையாடல்களை நகர்த்துவதை சாக்ரடீஸ் முறை என்று கூட கூறுவதுண்டு.

அறிவியலாற்றுப்படை அறிவியலின் திசைவழியைத் தீர்மானித்ததில் இயற்கையின் பங்களிப்பைப் பேசியது. பிறகு சில இடங்களில் அறிவியலுக்கும் ஒழுங்குக்குமுள்ள தொடர்பைப் பேசியது. ஆம், அறிவியலுக்கும் ஒழுங்குக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்புண்டு. அல்லது ஒழுங்குதான் அறிவியலின் பிறப்பிடம். இவ்வாறான ஒழுங்குகளை உற்றுநோக்குபவர்கள் பலநேரம் ஒப்புமைப்படுத்தி பல்வேறு தத்துவங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அவ்வாறான தத்துவங்களே, கோட்பாடுகளே அறிவியலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்கின்றன. இயற்கை ஒழுங்குகள் எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் காணப்பட்டாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்தோரில் சிலரே அதனை உற்றுநோக்கித் தொகுத்துள்ளனர். அவர்களின் முதன்மையானவர்களாக எழுத்துபூர்வமான வரலாறுகள் கிடைத்துள்ளது என்ற அடிப்படையில் மூன்று கிரேக்க தத்துவ அறிஞர்கள் மிகவும் முக்கியமானவர்களாக கருத்தப்படுகின்றனர். அவர்களில் முதலாமவர் சாக்ரடீசைப் பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த பகுதியில் பிளாட்டோ (பொ.ஆ.மு 427 முதல் 347 வரை) அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

பொதுவாக ஆசிரியரை மாணவர்கள் மிஞ்சவே செய்வர். அதுதான் சரியும் கூட. சாக்ரடீசின் மாணவராயிருந்த பிளாட்டோவும் அப்படியே மிஞ்சினார். அவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

சாக்ரடீஸ் & பிளாட்டோ (Socrates and Plato) | அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 19: ஆசிரியரை (சாக்ரடீஸ் -Socrates) அணி செய்த மாணவர் பிளேட்டோ (Plato) | History Of Philosophies in Tamil
சாக்ரடீஸ் & பிளாட்டோ

பிளாட்டோ கிரேக்க நாட்டின் வசதியான குடும்பம் ஒன்றில் பிறந்தவர். தனது இளையவயதில் சுமார் 20 வயதில் சாக்ரடீசுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சாக்ரடீஸ் அவர்களுக்கு எதிராக வழக்கு நடந்தபோது அந்த மண்டபத்தில் பிளாட்டோ அவர்களும் இருந்தார். அவருடைய மரணம் இவர் மனதில் அச்சம் ஏற்படுத்தியதால் சிறிது காலம் ஏதேன்சை விட்டு வெளியேறியிருந்தார். அவ்வாறு பல நாடுகளுக்கும் சென்றார்.

பின்னர் சிராக்யுஸ் நாட்டை அடைந்திருக்கிறார். அந்த நாட்டின் மன்னராக இருந்த டயனிசியஸ் என்பவருடன் சில காலம் வாழ்ந்திருக்கிறார். அந்த மன்னரும் இவரிடம் தத்துவம் பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பதாகக் காட்டிக்கொண்டு சில காலம் தள்ளினார். ஒருகட்டத்திற்குப் பிறகு பிளாட்டோ அவருடன் கருத்துவேறுபாடு கொண்டார். மன்னரோடு கருத்துவேறுபாடா ? யாரங்கே இவரை அடிமை சந்தையில் விற்றுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டார்.

அவ்வளவுதான் அடிமைசந்தைக்கு கொண்டு செல்லப்பட்ட பிளாட்டோவை யார் வாங்குவார்கள். அதுவும் தத்துவவாதி என்று முத்திரை வேறு குத்தி விற்கமுயன்றார்கள் போலுள்ளது. அந்த பக்கமாக வந்த பிதாகரஸ் அல்லது சைரானிக் தத்துவவாதிகளின் சீடர் ஒருவர் இவரது மேதைமையை உணர்ந்தோராயிருந்திருக்கின்றனர்.( கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பல்லவா. ஆனால் தெரிந்தவர்களாக செல்லும் இடங்களில் அமையவேண்டுமே) அவர்களில் ஒருவர் இவருக்கான தொகையை செலுத்தி வாங்கிவிட்டார். மேலும் பிளாட்டோவை அடிமை முறையிலிருந்து விடுவித்துவிட்டார். இவ்வாறாக சில குறிப்புகள் கிடைக்கின்றன.

விடுதலையான பின்னர் அவர் ஏதேன்சுக்குத் திரும்பி தனது தத்துவவிளக்கப் பணிகளைத் தொடர்ந்தார். குறிப்பாக அகாடமி என்ற சொல்லை கல்வி நிறுவனத்திற்கு முதன்முதலாகப் பயன்படுத்தியவர். பிளாட்டோ அவர்களே. தனது ஆசிரியர் சாக்ரடீஸ் விட்ட இடத்திலிருந்து தமது பணியைத் தொடர்ந்தது தத்துவவியலுக்கும், அதன் மூலம் கணிதம் மற்றும் வடிவியல் அறிவியலுக்குமான பங்களிப்பாக அமைந்தது. சாக்ரடீஸ் அன்றைய இளைஞர்களைக் கேள்விகளைக் கேட்கப் பயிற்றுவித்தார். இளைஞர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்க பதிலளிக்க அடுத்தடுத்த கேள்விகள் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் சாக்ரடீஸ் அவை எவற்றையும் பதிந்துவைக்கவில்லை. பிளாட்டோ அவ்வாறான உரையாடல்களில் பலவற்றையும் எழுத்தில்வடித்து தனது மாணவர்களுக்குக் கற்பித்தார். இங்கேதான் இவரது மாணவர் அரிஸ்டாட்டில் அவர்களும் உருவானார் மேலும் அவரது மாணவர்கள் கேட்ட கேள்விகளும் அவரது அறிவை விரிவு செய்தது. அறிவியலின் அடிப்படையே கேள்வி கேட்பதுதானே.

குறிப்பாக அரசியலுக்கும் அறிவியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை இன்று நாம் நன்கறிவோம். ஆனால் இந்த உண்மை அறிந்தோ அறியாமலோ அரசியலை அறிவியல் பூர்வமாக மாற்ற பிளாட்டோ முனைந்தார். இதன் வெளிப்பாடுதான் அவரது குடியரசு என்ற நூலாக வெளியானது. குடியரசு நூலானது உலகின் பல்வேறு மொழிகளிலும் இன்றும் மொழிபெயர்க்கப்பட்டுவருகிறது. அந்த அளவிற்கு ஆட்சி நடத்தும் முறைமை பற்றி அது விவாதிக்கிறது. இந்நூலின் பெரும்பகுதி உரையாடல்களாகவே நகர்வதும், உரையாடல்களில் பங்கேற்போர் அனைவருக்கும் சமமான இடத்தை அளித்திருப்பதும் பிளாட்டோவின் தனிச்சிறப்பாகும்.

இது ஒருபக்கம் என்றால் நேரடியாக அறிவியலுக்கான பங்களிப்பையும் அவர் செய்யத் தவறவில்லை. கணிதம் மற்றும் வடிவியலில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். பிற்காலங்களில் வானவியலுக்கு இது எவ்வளவு உதவிகரமாக இருந்தது என்பதை விரைவில் மதிப்பிடுவோம்.. அவரது அகாடமியின் வாயிலில் வடிவியல் பற்றிய புரிதல் இல்லாதோர் இங்கு நுழையவேண்டாம் என்று எழுதிவைத்திருந்தாராம். இது கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் அவரது வாழ்வியல் நெறியில் வடிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவங்கள் புரியும். இவரது சில கருத்தோட்டங்களைப் பகிர்ந்து இந்த பகுதியை நிறைவு செய்வோம்.

தொடக்கமே ஒருவேலையின் மிக முக்கியமான பகுதியாக உள்ளது.

வறுமை என்பது செல்வத்தின் குறைவால் வருவதல்ல மாறாக ஆசைகளின் பெருக்கத்தால் வருவது.

ஆசை,உணர்ச்சி, மகிழ்ச்சி ஆகிய மூன்று முக்கிய அடிப்படைகளிலிருந்தே மனிதனின் நடத்தை பண்படுகிறது.

எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்க்லாத்தைத் தீர்மானிக்கும்.
குழந்தைகளுக்கு சரியானவற்றை விரும்பச் சொல்லிக்கொடுப்பதே கல்வியாகும்.

எந்த ஒரு மனிதன் கல்வியை புறக்கணிக்கிறானோ அவன் வாழ்நாளின் இறுதி வரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளியாகவே இருப்பான்.

அறிஞர்கள் மேற்கோள்களைப் பொருத்தவரை அவர்கள் பகிராதவற்றையும் பகிரும் உலகம். எது எப்படியிருப்பினும் பிளாட்டோ அவர்களின் மேதைமை அரிஸ்டாட்டில் போன்ற அறிஞரை உருவாக்கியது நிருபிக்கப்பட்ட வரலாறு. அடுத்து அரிஸ்டாட்டில் பக்கம் திரும்புவோம்.

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

N. Madhavan Books | என். மாதவன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்

முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 16: எழுத்துக்களின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *