அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 24: காகிதத்தின் கதை | The Story and History of Paper | காகிதம் உருவான வரலாறு | முனைவர். என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை 24: காகிதத்தின் கதை – முனைவர் என்.மாதவன்

காகிதத்தின் கதை

அறிவியலாற்றுப்படை – 24

 

முனைவர் என்.மாதவன்

முதலில் ஒரு சம்பவம். சர்க்கரை அரிதான பொருளாக இருந்த காலம் அது. உணவகம் ஒன்றில் இலவசமாக சட்னியுடன் சர்க்கரையையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவரத் தொடங்கினர். அதாவது நெய் ரோஸ்ட் சாப்பிடுவோர்க்கு மட்டும் கூடுதலாக சர்க்கரையையும் வழங்கத் தொடங்கினர். வாடிக்கையாளர்களும் நிறைய வரத் தொடங்கினர். உணவக நிர்வாகத்திற்கு கட்டுப்படியாகவில்லை. தோசை விற்பனையால் வரும் லாபத்தைவிட சர்க்கரை செலவு கட்டுக்கு மிஞ்சி செல்லத் தொடங்கியது. சர்க்கரை இலவசம் இல்லை என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தனர். வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து தகராறு சொல்லத் தொடங்கினர்.

ஒரு வழியாக ஒரு பலகையில் ”இனிமேல் தோசைக்கு சர்க்கரை கிடையாது” என்று எழுதி வாசலில் வைத்துவிட்டனர். ஒருவழியாக சர்க்கரைப் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் ஒரு நாள் வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். முதலாவதாக தோசை கொடுக்கச் சொன்னார். சாப்பிட்டு முடிந்த பின்னர் இரண்டாவதாக இன்னொரு தோசை சொன்னார். இரண்டாவது தோசையை பணியாளர் கொடுத்தார். ”இந்த தோசைக்கு சர்க்கரை கொடு” என்றார். பணியாளரோ ”வாசலில் அறிவிப்பைப் பார்க்கவில்லையா ”என்றார். ”பார்த்துவிட்டுத்தான் கேட்கிறேன். மேல் தோசைக்குத் தானே கிடையாது இது கீழ் தோசைதானே சர்க்கரை கொடு” என்றார். அன்றைக்கு என்று பார்த்து பணியாளர் இனி மேல் தோசைக்கு சர்க்கரை கிடையாது என்று ”இனி” என்ற வார்த்தைக்கும் ”மேல்” என்ற வார்த்தைக்கும் இடைவெளி விட்டுவிட்டிருந்தார்.

சரி அறிவியலாறுப்படைக்கு வருவோம். இப்படி எழுதிவைக்கும்போதே ஆயிரம் புரிதல் பிரச்சனை வருகிறதென்றால் எழுதி வைக்காமல் இருந்த சமூகம் எத்தனை சவால்களைச் சந்தித்திருக்கும். இதனால்தான் சட்டபூர்வமான விஷயங்களை எழுதிவைத்துக்கொள்ளும் வழக்கம் வந்தது. ஒரே இடத்தில் எழுதிவைப்பதோடு செய்திகள் தொலைவிலுள்ளோர்க்கும் கடத்தப்படவேண்டும் என்று சொன்னால் அதற்காக மலிவான, அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கும் காகிதம் போன்ற எழுதுபொருட்களுக்கான தேவை ஏற்பட்டது.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 24: காகிதத்தின் கதை | The Story and History of Paper | காகிதம் உருவான வரலாறு | முனைவர். என்.மாதவன்

ஏற்கனவே நாம் பார்த்தது போல பல்வேறு தாவரங்களின் நார்களிலிருந்தும், விலங்குகளின் தோல்களிலிருந்தும் உருவான காகிதம் போன்ற கண்டுபிடிப்புகள் இதற்கு உதவினாலும் அவைகளால் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்து நிற்க இயலவில்லை. இன்றைக்கு நாம் பரவலாக பயன்படுத்தும் காகிதம் சீனாவின் கொடை என்று சொல்லப்படுகிறது.

அது 2 ஆம் நூற்றாண்டு. சீனாவை ஹான் பேரரசின் ஒரு பகுதி. ஹி என்ற அரசர் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அப்பேரரசின் கிழக்குப் பகுதி நிர்வாகத்தில் நிதித்துறை அலுவலகத்தில் ஒருவர் பணியாற்றிவந்தார். நிதித்துறை நிர்வாகத்தில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்தாலும் பொழுதுபோக்காக சில உருப்படியான செயல்களைச் செய்துகொண்டிருந்தார். அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ஹி அரசருக்கும் இவர் நெருக்கமானவராக இருந்ததால் இவர் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாகத் திரிந்துகொண்டிருந்தார்.

அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் விசிட் அடித்துக்கொண்டிருந்தார். இதனால் இவரால் பல்வேறு மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்தி காகிதத்தினை தயாரிக்கும் எண்ணம் வந்திருக்கிறது. அவர்தான் இன்றைக்கு நாம் பரவலாகப் பயன்படுத்தும் காகிதத்தைக் கண்டறிந்தவராக நம்பப்படுகிறது. அப்போதெல்லாம் காகிதம் போன்ற எழுதுபொருட்கள் லெனின் மற்றும் பட்டு நூலில்?? தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அரசர்கள் பட்டு நூலில் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் லிகிதங்கள் ( கடிதங்கள்) எழுதிக்கொண்டிருந்தனர். அவர்கள் எங்கே எழுதியிருக்கப்போகிறார்கள். ? யாரோ எழுதியதில் கையொப்பமோ கைநாட்டோ வைத்திருக்கலாம். அவரது விஷயத்திற்கு வருவோம்.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 24: காகிதத்தின் கதை | The Story and History of Paper | காகிதம் உருவான வரலாறு | முனைவர். என்.மாதவன்

ஆனால் பாருங்கள் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் அடுத்த வந்த அரசருக்கு இவரைப் பிடிக்கவில்லை. அல்லது இவரது எல்லைதாண்டிய பயங்கரவாதம் அங்கிருந்தோர்க்கு கடுப்பேற்றியிருக்கவேண்டும். அரசரிடம் கண்டபடி போட்டுக்கொடுத்திருப்பார்கள் போலும். ஏதோ ஒரு குற்ற வழக்கிற்காக இவர் நீதிமன்றத்தின் முன் நேர் நிறுத்தப்பட்டார். மரணதண்டனைதான் கிடைக்கும் என்று நினைத்தாரோ தெரியவில்லை. அவரே விஷமறிந்து உயிர்நீத்தார். யார் கண்டது அவர் கண்டுபிடித்த காகிதத்திலேயே அவருக்கான அஞ்சலி செய்திகள் குவிந்திருக்கலாம். அவரது பெயர் காய் லுன் (Cai Lun) ( பொ.ஆ. 50-121)

இவ்வாறு சீனாவில் கண்டறியப்பட்ட காகிதம் பல நூற்றாண்டு காலம் சீனாவிற்குள்ளாகவே அடங்கியிருந்தது அல்லது அடைத்துவைக்கப்பட்டிருந்தது. கத்தரிக்காய் காய்த்தால் சந்தைக்கு வந்துதானே ஆகவேண்டும். ஆம் சந்தை எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியது. இன்றைக்கிருப்பது போலவே அந்நாட்களிலும் வியாபாரிகள் படுகில்லாடிகள். அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை உள்ளூரில் விற்றால் யார் வாங்குவார்கள். அடுத்த ஊர், அடுத்த எல்லை என தாவித் தாவிப் பயணிப்போராய் வியாபாரிகள் இருந்தனர்.

அன்றைய நாட்களிலிருந்த அரசர்களும்,? அவர்களுக்கிருந்த ஆலோசகர்களும் புத்திசாலிகள் எனவே இவ்வாறு நாட்டைத் தாண்டும் பொருட்களுக்கு வரி விதிக்கத் தொடங்கினர். வியாபாரிகளுக்கு என்ன குறை. அவ்வாறு அவர்கள் செலுத்தும் வரிகளையும் சேர்த்து பொருட்களின் விலையாக்கினர். இவ்வாறு சீனாவிலிருந்து நிலம் வழியாக மத்திய ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளை சீனாவின் வியாபாரிகளும், அது போலவே அந்த நாடுகளை சேர்ந்த வியாபாரிகள் சீனா உள்ளிட்ட கீழை நாடுகளையும் அடைந்து வியாபாரத்தைப் பெருக்கிக்கொண்டிருந்தனர்.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 24: காகிதத்தின் கதை | The Story and History of Paper | காகிதம் உருவான வரலாறு | முனைவர். என்.மாதவன்

இவ்வாறாக சென்றோரை என்ன மெட்டல் டிடக்டர் வைத்தா சோதித்திருக்கப் போகின்றனர். அவரவர் வசதிக்கு வரியை சுங்கச்சாவடியில் செலுத்தி சென்று வந்துகொண்டிருந்தனர். நாடுகளின் உடை, உணவு, கலை, அறிவியல் உள்ளிட்ட விழுமியங்களையும் கடத்திக்கொண்டிருந்தனர்.இந்த சாலையின் மூலமாக பட்டும் சென்றதாலோ அல்லது சீனாவின் பட்டை அடைய இந்த சாலைகள் உதவியதாலோ இந்த வழி பட்டுவழி (Silk Route) என்று அழைக்கப்பட்டுவிட்டது.

அது சரி காகிதத்தின் கதையைப் பறக்கவிட்டுவிட்டோமே. இதுவும் காகிதத்தின் கதையின் ஒரு பகுதிதான்.இவ்வாறான வியாபாரத்தின் ஒரு பகுதியாக சீனாவின் காகிதம் பல்வேறு பகுதிகளை அடையத் தொடங்கியது. ஒரு பொருளை முதன்முறையாக கண்டுபிடிப்பதுதான் கடினம். ஆனால் கண்டுபிடித்துவிட்டால் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது எளிதுதானே. அவ்வாறான சீர்திருத்தங்களை தொழிற்புரட்சி கொண்டுவந்தது. பிறகென்ன காகிதம் உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. காகிதம் செய்யத் தூண்டிய புரட்சிகளை அடுத்தடுத்து பார்ப்போம்.

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

N. Madhavan Books | என். மாதவன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *