அச்சு இயந்திரத்தின் வரவு
அறிவியலாற்றுப்படை – 25
முனைவர் என்.மாதவன்
இருதய நோய் நிபுணர் ஒருவரது இருசக்கர வாகனம் பழுதானது. அந்த மருத்துவர் மிகவும் எளிமையானவர் எனவே அவரே இருசக்கரவாகனம் பழுது நீக்கும் கடையை அடைந்தார். மெக்கானிக்கும் அந்த வாகனத்தின் கார்புரேட்டரைக் கழற்றி சீர் செய்து கொடுத்தார். உரிய கட்டணத்தைக் கொடுத்துவிட்டு மருத்துவர் புறப்பட்டார். இந்த நேரம் மெக்கானிக் ”நாம் இருவரும் ஏறக்குறைய ஒரே வகையான பணியைத்தான் செய்கிறோம். ஆனால் உங்களுக்குக் கிடைக்கும் வருவாயும் செல்வாக்கும் எம் போன்றோர்க்கு கிடைப்பதில்லையே” என்றார்.
மெல்லிய புன்னகையை உதிர்த்த மருத்துவர் ”இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன்” என்றார்.
உடனே வாகன மெக்கானிக், ”வண்டியின் இதயம் போன்றது கார்புரேட்டர் அதனை நான் சீர் செய்கிறேன். நீங்கள் மனிதர்களின் இதயத்தை சீர் செய்கிறீர்கள்” அதனால்தான் சொன்னேன் என்றார்
”சரியான ஒப்பீடுதான் ஆனால் இதையும் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் இதயத்தைப் பிளக்கிறீர்கள். ஆனால் நாங்கள் மனிதர்கள் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அவர்களது இதயங்களை சீர் செய்கிறோம்” என்று சொல்ல்விட்டு நகர்ந்தார்.
மெக்கானிக்கும் வேற்றுமையைப் புரிந்துகொண்டிருப்பார்.
கல்வெட்டுகள் போன்றவற்றில் எழுத்துக்களை வடிக்கப்பட்டபோது ஒரே இடத்தில் நிலையான தகவல்களைப் பறைசாற்றிக்கொண்டிருந்தன. இதற்கு மாற்றாக ஓலைச்சுவடிகள்,பாப்பிரஸ் வகை புற்களில் எழுதப்பட்டபோது பரவலாக வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் வாய்ப்பினைப் பெற்றன. ஆனால் அதே நேரம் அதனை வைத்திருப்போரால் மட்டுமே தகவல்களை அறிய முடிந்தது. அவர்களுடன் இருந்த மாணவர்கள் பயனடைய முடிந்தது. அதே நேரம் காகிதத்தின் கண்டுபிடிப்பு பலரிடமும் அறிவுச் செல்வம் பரவ உதவியது.

அடுத்த கட்டமாக மையின் கண்டுபிடிப்பு குறித்தும் கொஞ்சம் பகிர்ந்துவிடுவோம். மையின் பொல்லாப்புக்கு ஆளாகவேண்டாம். விளக்குக் கரிதான் துவக்க கால மையின் மூதாதையர். வேறு என்ன நடந்திருக்கும் இரவின் இருளைப் போக்க விளக்குகள் உதயிருக்கும். சில நாட்களுக்குப் பின்னர் அதனை சுத்தம் செய்யத் தொட்டபோது கையின் புகைக்கரி படிந்திருக்கும், அதனைத் துடைக்க பக்கத்திலிருந்த சுவர் பயன்பட்டிருக்கும். சுவரில் துடைத்த இடம் பட்டை பட்டையாய் தழும்புகளைத் தாங்கியிருந்திருக்கும். ஆஹா இது நல்லாயிருக்கே குறிப்புகளை இப்படி பதிவோம் என அப்போது துவங்கிய பரம்பரை தொழிலாய் இன்றும் பொதுகழிப்பிடங்கள் பலன் பெற்றுவருகின்றன.
உண்மையில் கரிக்கும் மைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இவ்வாறான புகைக்கரியை பல்வேறு எண்ணெய்களுடன் கலந்து மையாகப் பயன்படுத்தினர். வழக்கம்போல துவக்க கால நாகரீகப் பகுதிகளான எகிப்தில் இதற்கான பதிவுகள் காணப்படுகின்றன.காகிதத்தின் கண்டுபிடிப்பு நடைபெற்ற சீனாவிலும் மையின் கண்டுபிடிப்பு குறித்த வரலாறுகள் காணப்படுகிறது.
மையின் கண்டுபிடிப்பு எழுத்துக்களையும் ஓவியங்களையும் முறைப்படுத்தி காகிதங்களில் பதிய உதவியது. மரங்களின் உதவியோடு பல்வேறு உருவங்களை வடிவமைத்துவிட்டு அந்த உருவங்களை மையில் அழுத்தி அச்சிடும் வழக்கம் உண்டானது. அதுபோல எழுத்துக்களுக்கும் அச்சுக்களை உண்டாக்கும் வழக்கமும் உண்டாகியது. ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் சரியாக அச்சிடவேண்டுமென்றால் ஒவ்வொரு வடிவம் அல்லது எழுத்தில் இடவல மாற்ற வடிவங்களில் எழுத்துக்களும் ஓவியங்களும் உருவாக்கப்படவேண்டும். இதற்காக அவர்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமிருக்காது. உதாரணமாக சிங்கத்தின் வால் வலப்பக்கமாக பதியவேண்டுமென்றால் அது இடப்பக்கமாக அச்சில் வரவேண்டும். அண்மைக் காலம்வரை இயங்கிய எழுத்துக் கோர்த்து அச்சடிக்கும் அச்சகங்களுக்குச் சென்றோர்க்கு இந்த அனுபவம் அதிகம் வாய்த்திருக்கும்.
கடிதம் எழுதவும், கணக்கு வழக்கு பார்க்கவும் பயன்பட்ட எழுத்து, மதம் தொடர்பான கருத்துக்களையும் பதிவு செய்யத் தவறவில்லை. வாய்வழியாகவே மதம் தொடர்புடைய கருத்துக்கள் பரவி வந்த நிலையில் அவைகளும் பதிவு பெறத் தொடங்கின. இவ்வாறான பதிவுகளைப் பராமரிப்போரின் பொறுப்புணர்வு மற்றும் எண்ணவோட்டத்துக்கு ஏற்ப இவைகளின் பராமரிப்பும் விளங்கியது. பெரும்பாலும் இதற்கான பணியாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியமும் இவற்றைப் பாதுகாத்து அடுத்து வருவோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பைக் கூட்டியிருக்கும். இதனாலேயே புவியியல் ரீதியான வேறுபாடுகள் இருப்பினும் பல்வேறு மதம் தொடர்புடைய நூல்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
மனிதர்கள் அனைவரும் ஒன்று போலவே இருப்பினும் அனுபவங்களும் அவர்கள் நடவடிக்கைகளுமே அவர்களை வேற்றுமைப்படுத்துகின்றன.இவ்வாறான ஆரோக்கியமான நடத்தைகளுக்கு அறிவு பங்களிப்பு செய்கிறது. அறிவைப் பெறுவதில் அனுபவப் பகிர்வுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. எனவேதான் எழுத்துக்களின் மூலம் அனுபவங்களைப் பெற மனிதர்கள் விழைந்தனர். அனுபவங்கள் எழுத்தில் வடிக்கப்படும்போது மட்டுமே அடுத்தவர்களும் அதனைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் பெருகின.

இந்தியா போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருந்த அறிவுச் செல்வங்களைப் பெறவே யுவான் சுவாங், பாஹியான் போன்ற பயணிகள் நடந்தே படை எடுத்துள்ளனர். மன்னர்களின் படையெடுப்புக்கு இணையாக இவர்களது பயணங்களையும் வரலாறு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சாலைவசதிகள்,வாகன வசதிகள் இல்லாத போதும் கோவேறு கழுதைகள் மூலம் ஒற்றையடிப்பாதைகள் வழியாகவே பல்வேறு ஓலைச் சுவடிகளை இவர்கள் கொண்டுசென்றதாக வரலாறு பதிவு செய்துள்ளது. அந்த அளவுக்கு பதிவு செய்யப்பட்ட அறிவு முக்கியத்துவம் பெற்றதாகிறது.
“வாசித்தல் முழுமனிதனாக்குகிறது,மாநாடுகள் தயார்நிலை உள்ளவனாக்குகிறது. ஆனால் அனுபவங்களைப் பதியும் திறனோ மிகச்சிறந்த மனிதனாக்குகிறது”. என்று ஒரு பொன்மொழி உண்டு. அந்த அளவுக்கு எழுத்தில் பதிவு செய்வது முக்கியத்துவமானதாகிறது. இதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. ஒருவர் நடந்துகொண்ட முறையையோ அல்லது பேசியதையோ அவரோ, அடுத்தவரோ பகிரும்போது ஏற்ற இறக்கங்களுடனோ பகிரப்படும் வாய்ப்புள்ளது. (இன்றைய வீடியோ உலகில் இது மாறுதலுக்குரியது). ஆனால் எழுத்தில் வடிக்கப்பட்டது படைப்பாளனே நினைத்தாலும் அடுத்த பதிப்பு வரும்வரை மாற்ற இயலாது.
இதனால்தான் எழுத்தாளர்கள் சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். பொறுப்புணர்வு மிக்க எழுத்தாளர்கள் அதிகம் படைக்கத் தயங்குவதும் இதனால்தான்.
1444 ல் யொகான் குட்டன்பெர்க் (Johann Gutenberg) என்பவர் முதல் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தார். அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நூல்களின் நூற்றுக்கணக்கான பிரதிகள் மனிதர்களை நெருங்க உதவியது. அவ்வாறு நூல்களைப் பெற்றோரில் பலரும் எழுத்தறிவற்றவர்களாக இருந்ததால் அவற்றைப் பூஜிக்கவே செய்தனர். எழுத்தறிவு பெற்றோர் அதிலுள்ள கருத்துக்களை உள்வாங்கத் தொடங்கினர். அவ்வாறான உள்வாங்குதல் என்ன செய்தது என்று அடுத்தடுத்துப் பார்ப்போம்.
படை எடுப்போம்.
கட்டுரையாளர்:

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

