அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 26: சிலர் மட்டும் பெருமைக்குரிய சமமானவர்கள் - புனித நூல்கள் | அச்சு இயந்திரம் வரலாறு | கண்டுபிடித்தவர்

அறிவியலாற்றுப்படை – 26: சிலர் மட்டும் பெருமைக்குரிய சமமானவர்கள் – முனைவர் என்.மாதவன்

சிலர் மட்டும் பெருமைக்குரிய சமமானவர்கள்

அறிவியலாற்றுப்படை 26

 

முனைவர் என்.மாதவன்

புத்தரின் சீடர் ஒருவர் ஒரு நாள் தனக்கு புதிதாக வேட்டி ஒன்று வேண்டுமென்று அணுகுகிறார். புத்தர் எப்போதுமே ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் பல கேள்விகளைக் கேட்பார். அவர் அந்த சீடரைப் பார்த்து ஏன் உனக்கு புதிய வேட்டி வேண்டும்?, பழைய வேட்டி என்னவானது என்று கேட்டார். பழைய வேட்டி நைந்துபோய்விட்டது என்று சீடர் பதிலளிக்கிறார். சரி அந்த நைந்த வேட்டி என்னவானது என்கிறார் புத்தர். புத்தரின் நோக்கத்தை நன்கு புரிந்துகொண்ட சீடர் அடுத்தடுத்து கேள்விகள் இல்லாமலேயே பதிலளிக்கிறார்.

எனது பழைய வேட்டி நைந்ததால் அதனை திரையாக்கிவிட்டேன். ஏற்கனவே திரையாகப் பயன்பட்ட துணியை சமையலறையில் பயன்படும் பிடிதுணியாக்கிவிட்டேன். ஏற்கனவே இருந்த பிடிதுணியை அறைக்குள் வரும்போது மிதித்து ஒத்தும் துணியாக்கிவிட்டேன். ஏற்கனவே பயன்பட்டு வந்த மிதித்து ஒத்தும் துணியை துவைத்து காயவைத்து விளக்குக்குப் பயன்படும் துணி திரிகளாக்கிவிட்டேன் என்கிறார். சரி புதிய வேட்டியைப் பெற்றுக்கொள் என்று புத்தர் அனுமதியளிக்கிறார்.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 26: சிலர் மட்டும் பெருமைக்குரிய சமமானவர்கள் - புனித நூல்கள் | அச்சு இயந்திரம் வரலாறு | கண்டுபிடித்தவர்

நிலைத்தகு சூழல் பேணும் நண்பர்களில் பலரும் பகிரும் நிகழ்வு இது. அந்த அளவுக்கு புத்தர் தனது விஹாரையில் அனைவருக்கும் பொருட்களின் அதிகபட்ச பயன்பாட்டை உறுதி செய்யும் பயிற்சி அளித்து வந்தார். அவரது விஹாரையில் குளிக்க, கால் கைகள் கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீர், குடிக்கப் பயன்படுத்தவேண்டிய தண்ணீர் என்ற வேறுபாடெல்லாம் கடைபிடிக்கப்பட்டது. அந்த ஒழுங்கைக் கொண்டுவர அவர் பட்ட பாடு எல்லாம் அவர் தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள பல நூல்களிலும் உள்ளன.

நிற்க இங்கு ஏன் இந்த விளக்கம். மனிதவாழ்வை ஒழுங்குக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான பணியல்ல. மேலும் பெருங்கூட்டாமான மக்கள் தொகையில் அதனைக் கொண்டுவர சிறு சிறு முன்மாதிரிகள் தேவை. இவ்வாறான முன்மாதிரிகளைக் கடைபிடிக்கும் மனிதர்கள் மூலமாகவே சமூக ஒழுங்கு மேம்படும். இவ்வாறான சமூக ஒழுங்கினை உண்டாக்கும் இடங்களாக துவக்க கால மதத் தலைவர்களும் அவர்களது சீடர்களும் வாழ்ந்தனர். பல நேர்வுகளில் அரசர்களுக்கும் இவ்வாறான ஏற்பாடுகளோடு நல்ல உறவினை வைத்துக்கொண்டு ஒழுங்கிற்கான பணியை ஒப்படைத்துவிட்டனர். அதிகாரத்துக்கும் மதங்களுக்கும் இவ்வாறு தொடங்கிய தொடர்பு பின்னாளில் இரண்டு பெரிய நிறுவனங்களாக இவ்விரண்டும் செயல்படத் தொடங்கிவிட்டன. துவக்க கால மதங்களாக இருந்தவற்றில் இப்படியான நேரடித் தொடர்பு இல்லாவிடினும் பொது ஆண்டுக்குப் பின்பகுதியில் எழுத்துப் பூர்வமான வரலாறுகள் பதியப்பட்டதால் அவை மேலும் துல்லியமான கவனத்திற்கு வருகின்றன.

அடடா அச்சு இயந்திரத்தையும் மையையும் அம்போ என்று விட்டுவிட்டோமே. இல்லை இல்லை நாம் தொடர்புடன்தான் இருக்கிறோம். விஷயத்திற்கு வருவோம். அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு நூல்கள் அச்சாக்கம் பெற்று பலரையும் அடைய வழிவகுத்தது. அவ்வாறு அடைந்ததால் என்ன விளைவு ஏற்பட்டது என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஒரு பணியை எளிமையாக்க வேண்டுமானால் எவ்வளவு கடினமான பணியாயினும் அதனை ஒரு சோம்பேறியிடம் ஒப்படையுங்கள். அந்த நபர் அதற்கான எளிமையான வழியைக் கண்டுபிடித்துவார்கள் என்பார்கள். அதுபோலவே ஒரு கண்டுபிடிப்பை காலம் காலமாக பயன்படுத்துவோர் அவ்வாறே தமது பழக்கத்தின் காரணமாக எளிமையானது என நினைத்து தொடர்ந்து பணிபுரிவார்கள். ஆனால் செயலூக்கமும் வேகமும் வாய்ந்தவர்கள் அப்பணியில் அமரும்போது அப்பணியை எளிமையானதாக மாற்ற வழியைக் கண்டுபிடித்துவார்கள். அவ்வாறே சமூக ஒழுங்குகளும் வாழ்க்கையை எளிதாக்க துவக்க காலங்களில் பயன்பட்டன.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 26: சிலர் மட்டும் பெருமைக்குரிய சமமானவர்கள் - புனித நூல்கள் | அச்சு இயந்திரம் வரலாறு | கண்டுபிடித்தவர்

இயல்பாகவே உண்மை பேசுதல், நேர்மையாக நடத்தல், அடுத்தவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறுதல், இரக்கம் கொள்ளுதல், பகிர்ந்து உண்ணுதல் போன்ற பல்வேறு இயல்பான மனித நடவடிக்கைகளும் மனிதர்கள் கூட்டாகச் செயல்படும்போது எளிமையானதாகவும் அடுத்தோரிடமிருந்து அதற்கான பாராட்டுகளை உறுதி செய்வதாகவும் அமைந்தது. இன்றும் கூட பல்வேறு மதம் தொடர்புடைய விழாக்களில் இதன் கூறுகள் வெளிப்படுவதைக் காண இயலும். ஆனால் இந்த ஏற்பாட்டை உறுதி செய்யும் அமைப்புகள் நிறுவனங்களாக மாறிய போது அந்த நிறுவனங்களை நடத்துவதற்கான பொருளாதார உதவியும் அதனைத் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கான ஜனநாயக அமைப்பு முறையையும் கோரியது. துவக்கக் காலங்களில் இவ்வாறான அமைப்புகள் ஜனநாயகமாக பரிணமித்தாலும் காலப்போக்கில் எல்லோரும் சமமானவர்களே சிலர் மட்டும் பெருமைக்குரிய சமம்மானவர்கள் என்ற தொனி துவங்கியது.

மொழி, எழுத்துக்கள், அச்சாக்கம், காகிதம் போன்றவை அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் போலத் தோன்றினாலும் மனிதகுல வரலாற்றின் பன்னெடுங்கால வளர்ச்சிகள். ஒவ்வொன்றும் கூட்டாகவும், தனியாகவும் தங்களை மேம்படுத்திக் கொண்டன. நேரடியாக அறிவியலுக்கும் இதற்கும் தொடர்பில்லாதது போலத் தோன்றினாலும் அறிவியலும் அப்போது வாழ்ந்த மக்களின் அறிவியல் பார்வையுமே இதனை உறுதி செய்தன.

அறிவியலின் பாதையில் தடங்கல்களின்றி அது என்றுமே பயணித்ததில்லை. அவ்வாறு தடங்கலை உண்டாக்கியதில் மதங்கள் பெரும்பங்கு வகித்தன. மதங்கள் அவ்வாறு தடையை ஏற்படுத்தியமைக்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. அறிவியல் எதனையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க வலியுறுத்தியது அல்லது கேள்வி கேட்டதனால் வளர்ச்சி பெற்றது. அந்த கேள்வியை அது அறிவியல் விஷயத்தில் மட்டும் அது கேள்விகளை எழுப்பிக் கொண்டு மனித வாழ்க்கையை வசதிப்படுத்திக் கொண்டிருக்க இயலாது அல்லவா? இந்த கேள்வி கேட்கும் கலாச்சாரம் அன்று நிறுவனமாகியிருந்த கிறிஸ்தவ் மடங்களிலும் எதிரொலித்தன.

குறிப்பாக புனித நூல்கள் அதிக அளவில் கிடைக்காத போது மதகுருமார்கள் சொல்லியதையே மக்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அச்சு இயந்திரத்தின் வரவு மத நூல்கள் பலருக்கும் கிடைப்பதை உறுதி செய்தது. அதே நேரம் இந்த நூல்களை வாசிப்போர் நூல்களில் கூறப்பட்டிருப்பதற்கும் நடைமுறையில் நடப்பவற்றிற்கும் இடையே உள்ள வேற்றுமைகளை கண்டறியத் தொடங்கினர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். இவ்வாறு உருவான ஒரு இயக்கம்தான் மதச் சீர்திருத்த இயக்கம். அதனையும் அதன் தாக்கங்களையும் அடுத்தடுத்து பார்ப்போம்.

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

N. Madhavan Books | என். மாதவன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *