அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 27: மலர்ந்தும் மலராத | கறுப்பு சாவு (Black Death) | ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம் | Renaissance

அறிவியலாற்றுப்படை – 27: மலர்ந்தும் மலராத – முனைவர் என்.மாதவன்

மலர்ந்தும் மலராத

அறிவியலாற்றுப்படை – 27

 

முனைவர் என்.மாதவன்

கிராமம் ஒன்றில் இணையர் வாழ்ந்து வந்தனர். நாள்தோறும் யாராவது ஒருவருக்காவது தங்களது இல்லத்தில் உணவு அளிப்பர். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சாப்பிடும் முன்னர் இவர்கள் வழிபடும் கடவுளை வழிபட்டுவிட்டுத்தான் உண்ணவேண்டும். ஒரு நாள் வயதான ஒருவர் அவர்கள் இல்லம் தேடிவந்தார். இவர்களும் இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தனர். வழக்கம்போல சாப்பிடும் முன்னர் இவர்கள் தங்களது கடவுள் வழிபாட்டைத் தொடங்கினர். வந்த விருந்தினரும் கவனித்துக்கொண்டு அமைதியாக இருந்தார்.

ஒருகட்டத்தில் அவர்கள் விருந்தினரையும் வழிபடக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ தான் வேற்று வழிபாட்டுமுறையைச் சேர்ந்தவன். ஆதலால் தான் இணைய இயலாது என்றார். இருவரும் எவ்வித இரக்கமுமின்றி அப்படியானால் தங்களுக்கு எங்களால் உணவளிக்க இயலாது என்று கூறித் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். தங்களது வீட்டின் கதவினைத் தாளிட்டுக் கொண்டு தங்களது வழிபாட்டைத் தொடர்ந்தனர். உடனே பெரிய வெளிச்சம் தோன்றியது.

இவர்கள் வழிபடும் கடவுள் தோன்றி ”மாற்றுக்கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் அவனுக்கு நான் தினமும் உணவளித்துக்கொண்டுதான் வருகிறேன். நீங்களோ இன்று அவனுக்கு உணவளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டீர்கள் எனக்கு உங்கள் மேல் வருத்தம்” என்று கூறிவிட்டு மறைந்தாராம். பின்னர் அந்த விருந்தினரைத் தேடி ஓடியதாகவும் அவர் எங்கும் கிடைக்கவில்லை என்று கதை முடியும். பழைய இந்தி இலக்கியத்தில் வரும் கதை இது. சமயப்பொறையை வளர்க்க இதுபோன்ற கதைகள் வரலாறெங்கும் பரவிக்கிடக்கின்றன. நிற்க.

நம்பிக்கைகள் எதுவாக இருப்பினும் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வசிப்பிடம் அனைவருக்கும் பொதுவானது. இவற்றுக்கான ஏற்பாட்டிற்கே பொருளாதாரம் தேவையாக இருக்கிறது. அறிவியலின் பாதையைச் சமைத்தில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில சம்பவங்களைப் பார்த்துவிடுவோம்.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 27: மலர்ந்தும் மலராத | கறுப்பு சாவு (Black Death) | ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம் | Renaissance
கறுப்பு சாவு (Black Death)

அண்மையில் நாம் அனுபவித்து மறைந்தும் மறையாமலும் இருக்கும் கரோனா பெருந்தொற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நாளிலேயே இவ்வளவு ஆட்டம் கண்டோம் என்று சொன்னால் 1346 முதல் 1353 வரை ஐரோப்பிய கண்டத்தை ஒரு கொள்ளை நோய் ஆட்டிப் படைத்தது. ”பாக்டிரியம் யெர்சினா பெஸ்டிஸ்” என்ற கிருமியின் ஆட்டம் அது. மக்கள் அவர்களாக செத்து மடிந்து சமூக தடுப்பாற்றலை உண்டாக்க மீதிமிருந்தோர் தப்பித்தனர். அன்றிருந்த ஐரோப்பிய மக்கள் தொகையில் சுமார் சரிபாதி மக்களை பலிகொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த பெருந்தொற்று கறுப்பு சாவு (Black Death) என்று அழைக்கப்படுகிறது.

இந்த பெருந்தொற்றுக்குப் பின்னான நாட்களில் உழைக்கும் மக்களின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்திருந்தது. உண்மைதானே பெருந்தொற்றுக்காலத்தில் சாதாரண மக்கள் தானே பெரும்பாலும் இறந்திருப்பர். வசதியும் வாய்ப்புமிருப்போர் பாதுகாப்பாக தப்பித்துவிடுவர்தானே. அப்போதும் அவ்வாறே நடந்தது. பெருந்தொற்றில் பெரும்பாலான உழைப்பாளி மக்களும் மடிந்திருந்தனர். பிழைத்திருந்த உழைப்பாளர்களை நில உரிமையாளர்கள் குறைவான உழைப்பூதியத்திற்கே பணிக்கு அழைத்தனர்.

ஏற்கனவே பற்றாக்குறையான வாழ்க்கை, பெருந்தொற்றின் பாதிப்பு. இதனால் விரக்தியில் இருக்கும் பணியாளர்களால் வேறு என்ன செய்ய இயலும். எனவே கூடுதலான உழைப்பூதியத்தைக் கோரினர். நமது திரைப்படங்களில் வருவதுபோன்று பண்ணையாரை எப்படி தனியாகக் கேள்வி கேட்பது? எனவே கூட்டமாகச் சென்று முறையிடத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பேராட்டங்களும் எழுச்சிகளும் ஏற்பட்டதாக வரலாற்றில் பதிவுகள் உள்ளன. சமூக குழப்பங்களும் அசாதாரண சூழலும் வரலாறு நெடுகிலும் தவிர்க்க இயலாதவைகள். ஆனால் அவை அளித்திருக்கும் படிப்பினைகள் கணக்கிலடங்காதவை. ஒருபக்கம் பெருவாரி மக்கள் இறப்பு என்பது கடவுள் நம்பிக்கை, மதநம்பிக்கை போன்றவற்றில் உருவாகும் ஐயங்களை கூடுதலாக்க உதவின.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 27: மலர்ந்தும் மலராத | கறுப்பு சாவு (Black Death) | ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம் | Renaissance
ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம்

இதன் தொடர்ச்சியாக 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் சமூக வரலாறும் அறிவியலின் வரலாறும் புரட்டிப்போடும் சம்பவங்கள் அல நடைபெற்றன. அவற்றில் ஒன்று மறுமலர்ச்சி மற்றொன்று சமய சீர்திருத்த இயக்கம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று உதவிகரமாக அமைந்து அறிவியல் பார்வையை வளர்த்தெடுத்தது. இந்த இரண்டின் வரலாற்றையும் சுருக்கமாகப் பார்த்துவிட்டு வந்துவிடுவோம்.

மறுமலர்ச்சி இத்தாலியை மையமாகக் கொண்டு உருவானாலும் பிற்காலங்களில் ஐரோப்பாக் கண்டம் முழுமைக்கும் பரவியது. இத்தாலியில் இது தொடங்கியமைக்கான காரணமில்லாமல் இல்லை. வரலாற்றுப் பூர்வமாக செழுமையான வரலாற்றுப் பின்புலமும் ஆட்சி அமைப்பும் இங்கு இது தொடங்க உதவின. ஆமாம் ஆதரிப்போர் இருந்தால்தானே கலைகள் வளரும். ஆர்வமிகுதியில் கடும் உழைப்பை ஒருவர் நல்க முன்வரலாம். ஆனால் வயிறு பசிக்குமல்லவா. எனவே ஆயிரம் குற்றம் குறைகள் சொன்னாலும், கலைஞர்களை ஆதரிக்கும் ஆட்சி அமைப்பும் வரலாறெங்கும் தேவையாக இருக்கிறது. சரி மறுமலர்ச்சிக் காலத்தில் என்னதான் நடந்தது.

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai) 27: மலர்ந்தும் மலராத | கறுப்பு சாவு (Black Death) | ஐரோப்பா சமய சீர்திருத்த இயக்கம் | Renaissance

ஒருவகையில் பழைய ரோமானிய, கிரேக்க செவ்விலக்கியங்களை மறுவாசிப்பிற்கும் கொண்டுவந்த முயற்சியே மறுமலர்ச்சி ஆகும். இவ்வாறான வாசிப்பு மனிதகுலம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த மனிதமாண்புகளை அசைபோடவைத்தது. இதன் காரணமாக பல்வேறு புதிய இலக்கிய படைப்புகளும் ஓவியங்களும் தோன்றின. மாக்கியவல்லி என்ற அறிஞர் இளவரசன் என்ற நூலை எழுதினார். அரச அமைப்பு குறித்து பல்வேறு விமரிசன பூர்வமான வினாக்களை எழுப்பிய முதல் நூலாக இது கருதப்படுகிறது. மைக்கேல் ஆஞ்சலோ என்ற ஓவியர் அற்புதமான ஓவியங்களை வரைந்தர். லியோனர்டா டாவின்சி என்ற ஓவியரும் பல கலைப்படைப்புகளைத் தந்தார். தாந்தே என்ற அறிஞர் தெய்வீக இன்பவியல் (Divine comedy) என்ற நூலை எழுதினார்.

இவையெல்லாம் மனிதர்களின் மனங்களின் கிடக்கும் உணர்வுகளுக்கு வடிகால் தருபவையாக அமைந்தன. பாராட்டு என்பது எப்படி அடுத்தடுத்த பணிகளுக்கு ஊக்குவிக்கும். அடுத்த தனிநபர்கள் அந்த பாதையில் பயணிப்பதை உறுதிசெய்யும் என்பவற்றுக்கான மாதிரி செயல்பாடாக மறுமலர்ச்சிக் காலம் விளங்கியது.
சமய நூல்களைத் தாண்டி நூல்களையும் சிந்தனைகளையும் உருவாக்க இயலும். அதன்மூலம் இப்போது இருப்பவை அனைத்தும் அப்படியே இருக்கவேண்டிய தேவையில்லை. மாறுதலுக்குட்படும் போன்ற சிந்தனைகளை மறுமலர்ச்சிக் காலம் உறுதிசெய்தது. மேலும் சில அறிவியல் சிந்தனைகளுக்கும் இக்காலம் உதவியது. அவைகள்தான் என்ன?

படை எடுப்போம்.

கட்டுரையாளர்:

N. Madhavan Books | என். மாதவன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *