அறிவின் வெளிச்சம்
அறிவியலாற்றுப்படை – 28
முனைவர் என்.மாதவன்
ஒரு முறை புத்தரின் விஹாரையில் அவரது மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தார். தனக்கு ஒரு தண்ணீர் வேண்டுமென்று கேட்டார். அருகிலிருந்த மாணவர் உடனடியாக குவளையொன்றில் தண்ணீர் கொண்டுவந்துகொடுத்தார். ஆனால் அவர் தண்ணீர் எடுத்த பானையில் நீர் சிறிதளவே இருக்கவே முழுக்குவளையிலும் தண்ணீர் கொண்டுவரவில்லை. இதனைப் பார்த்த புத்தருக்கு ஒரு யோசனை தோன்றியது.
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து அந்த குவளையில் என்ன உள்ளது என தமது காதில் கூறும்படிப் பணித்தார். மாணவர்களும் அவ்வாறே செய்தனர். வகுப்பு நிறைவடைந்தது. மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் அவர் எதிர்பார்த்த விடை எது? என தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தனர். கடைசியாக புத்தரே தெரிவித்தார். நீங்கள் அனைவருமே சரியான பதிலையே கூறினீர்கள். பாதிகுவளையில் தண்ணீர் உள்ளது, பாதிகுவளையில் காற்று உள்ளது என அனைவருமே சரியான பதிலையே கூறினீர்கள் என்று புத்தர்கூறிமுடித்தார்.
இவ்வாறே அறிவியல் எல்லா காலகட்டங்களிலும் இருப்பவற்றில் சரியானதை மட்டும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவருகிறது. அவ்வாறான சரியான கருத்தே மக்கள் ஏற்பினைப் பெற்று வளர்கிறது. அவ்வாறே ஒவ்வொரு காலகட்டங்களில் நடைபெற்று வருகிறது. இது தொடர்ச்சியாக முன்னோக்கிய பயணத்தையே மேற்கொண்டது என்று சொல்லிவிடமுடியாது. சமயங்களில் பின்னோக்கிப் பயணித்தது,நிலையாக நின்றது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அடுத்தடுத்து வந்தோர் யாரும் முதலிலிருந்து தொடங்கவேண்டிய தேவை ஏற்படவில்லை. ஏற்கனவே அடுத்தோர் சமைத்த பாதைகளிலேயே பயணித்தனர். அந்த வகையில் உலகின் அனைத்து சிந்தனையாளர்களும் தாம் வாழும் உலகை மேலும் அழகாக விட்டுவிட்டுச் செல்லவே விரும்பி செயல்கள் புரிந்தனர்.
மறுமலர்ச்சி காலமும், சமய சீர்திருத்த காலமும் பல்வேறு ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அறிவியலுக்கு அளித்தது. எதனையும் புதிய கோணத்தில் வித்தியாசமாக செய்ய முனைந்தது. குறிப்பாக கட்டிடக்கலை நன்கு வளர்ச்சி பெற்றது. பல்வேறு அழகழகான தேவாலயங்கள் கட்டப்பட்டன. கட்டிடக்கலையோடு தொடர்புடைய கணிதம், அறிவியல், பொறியியல் போன்றவற்றின் அடிப்படைகளும் மலர்ந்தன என்பது கூடுதல் செய்தி. ஓவியர்கள் ரபேல், மைக்கேல் ஆஞ்சலோ, லியோனர்டா டாவின்ஸி போன்றோர் உலகப்புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்தனர். குறிப்பாக அறிஞர்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடத் தொடங்கினர்.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இது போன்றே வளர்ந்திருக்கலாம். வரலாற்றில் பிரபலமாக பேசப்பட்டு கவனம் பெற்றவற்றை மட்டுமே பகிர்கிறோம்.
சமய சீர்திருத்த இயக்கமும், பைபிள் நூல் மொழியாக்கமும் மதநிறுவனங்களைத் தாண்டி பலரையும் யோசிக்கவைத்தது. இதன் விளைவாக மத நிறுவனங்களிலும் நடைபெற்ற பல உண்மைக்கு புறம்பான நிகழ்வுகளைக் கேள்விக்குள்ளாக்கினார்கள். குறிப்பாக 14 ஆம் நூற்றாண்டில் ஜான் வைக்ளிஃப் , ஜான் ஹஸ், கால்வின் போன்றோர்களால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்த நடைமுறை தொடர்ந்து பல்வேறு ஆரோக்கியமான மாற்றங்களை கிறிஸ்தவ மதத்தில் உண்டாக்கியது.
குறிப்பாக கத்தோலிக்கத் திருச்சபைகளில் வழக்கிலிருந்த பாவ மன்னிப்புச்சீட்டு என்ற நடைமுறையும் கேள்விக்குள்ளானது. அதாவது பாவங்கள் செய்யும் மக்கள் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி சீட்டுகளை வாங்கினால் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதே அந்த நடைமுறை. ஏற்கனவே இருந்த பல கேள்விகளோடு இந்த் கேள்விகளும் இணைந்துகொள்ளவே இது பெரும் விமரிசனத்துக்குள்ளாகியது. இந்த நடைமுறையை எதிர்த்தவர்கள் தங்களுக்கான புதிய நடைமுறைகளோடு புதிய திருச்சபையினை உண்டாக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களை பிராட்டஸ்டெண்டுகள் (கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் – Protestant Reformation) என அழைத்துக்கொள்ளத்தொடங்கினர்.

கிறிஸ்தவ சமயம் இரண்டாகப் பிரிந்தது. குறிப்பாக மார்டின் லூதர் என்பவர் இதில் பெரும்பங்களிப்பு செய்தார். இவரது 95 கொள்கைகள் என்ற நூல் ஆழமான கருத்துக்களை முன்வைத்தது. இதனை உள்வாங்கிக்கொண்ட கத்தோலிக்கத் திருச்சபை சமய சீர்திருத்த மறுப்பியக்கம் என்ற ஒன்றை உருவாக்கி தன்னை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள முனைந்தது. இவை அனைத்தும் மாற்றத்திற்கான வாய்ப்புகளைக் கொடுத்தது. இவ்வாறான எண்ணவோட்ட மாற்றம் வரலாற்றை அழகுபடுத்தியது என்பது எவ்வளவு முற்போக்கான மாற்றம்.
எந்த கொள்கைகள் எவ்வளவு உயரியதாக எதுவாக இருப்பினும் நடைமுறைபடுத்துபவர்கள் மக்கள் எனும்போது அவர்களிடைமுள்ள விருப்பு வெறுப்புகளே முடிவுகளை நோக்கி நகர்த்தும் என்பது காலம் காலமாக இருந்துவரும் நடைமுறை. ஆனால் அதே நேரம் இவ்வாறான மத நிறுவனங்களில் பணியேற்ற பாதிரியார்கள் பலரும் வாசிப்பிலும் ஆராய்ச்சிகளிலும் கவனம் செலுத்தினர். பின்னாளில் வரப்போகும் கிரிகோர் மெண்டல் போன்றோர் இதற்கு உதாரணம். கிறிஸ்தவ சமயம் என்பதல்ல, இந்தியாவிலும் வராகமிகிரர், ஆர்யபட்டா போன்றோர்களையும் குறிப்பிடமுடியும். ஆக மனிதர்களில் யாருக்கெல்லாம் வயிற்றுப்பாட்டுப் பிரச்சனைகள் தீர்ந்ததோ அவர்களால் மட்டுமே அடுத்த நிலையை நோக்கியதான உயர்ந்த சிந்தனைக்குச் செல்ல முடிந்தது. அவ்வாறான சிந்தனைகளில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதே நேரம் கருத்துக்களைப் பகிர்வது தொகுப்பது, ஆவணப்படுத்துவது போன்றவற்றில் அனைத்து மத நிறுவனங்களும் செய்துள்ள பங்களிப்புகள் குறைத்துமதிப்பிடமுடியாது.
அறிவியலாற்றுப்படையில் கொஞ்சம் பிரபஞ்ச வரலாறு, மனித குல வரலாறு, மொழியின் வரலாறு, எழுத்தின் வரலாறு, மையின் வரலாறு, அச்சு இயந்திரத்தின் வரவு என பல்வேறு அம்சங்களைப் பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கண்டுபிடிப்புகளிலும் மனிதர்கள் தான் அதனை சாதித்தார்கள் என்பது மனித குலத்தின் பெருமைக்குச் சான்று. ஆனால் சாதித்த மனிதர்கள் சந்தித்த வேதனைகள், எள்ளல், ஏச்சு என்பவை காலத்திற்கும் மறையாத வடுக்களாக உள்ளன.
மத நூல்கள் இருப்பவை அனைத்துமே உண்மை என கண்மூடித்தனமான நம்பியவர்கள் ஒருபுறம். அதில் அவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் நடைமுறையில் பாருங்கள் இப்படி நடக்கின்றது என்று கூறியோரின் கருத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் ஏற்பு பெற்றிடவில்லை. அவ்வாறு ஏற்பு பெறாமலேயே வாழ்நாள் துயரை அடைந்து மடிந்தோர் ஏராளம். அவர்களது எண்ணங்களும், கோட்பாடுகளும், கனவுகளும் இல்லாமல் அறிவியல் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்துவிடவில்லை. பூமி உருண்டையா தட்டையா என்ற விவாதம் பெரும் பேசு பொருளானது. அவ்வாறே அறிவியல் கண்டுபிடிப்புகளான கண்ணாடி, லென்ஸ், திசைகாட்டும் கருவி, கப்பல் போன்றவைகளும் பரந்துவிரிந்த உலகை அறிமுகப்படுத்தின. அவற்றை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து பார்க்கவிருக்கிறோம்.
படை எடுப்போம்
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.