தொடர் : 7 அறிவியலாற்றுப்படை
முனைவர் என்.மாதவன்
அறிவின் ஊற்றாய் உழைப்பு
”வான் பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை. களஞ்சியங்களில் சேமித்து வைப்பதுமில்லை”. என்று விவிலியத்தில் ஒரு வாசகம் வரும். வாழ்க்கையில் அடுத்த நாள் பற்றிய கவலையே உணவு, தானியம் , செல்வம் உள்ளிட்ட அனைத்தையும் சேமிப்பதற்கு வழிவகை செய்திருக்கும். நமது மூதாதையர்களும் விவிலியம் என்ற நூல் பின்னாளில் சொன்ன வழியிலேயே எதையும் சேமிக்காமல் இடம் விட்டு இடம் நகரிந்துகொண்டிருந்தார்கள்.
மனிதகுல வரலாற்றில் வேட்டைக்காரர்களாகவும், உணவு சேகரிப்பாளர்களாகவும் இருந்த காலம் வரை அனைவருமே அன்றாடங் காய்ச்சிகள்தான் அன்றாடங்காய்ச்சிகள் கூட இல்லை. அன்றாடம் தேடிகள்தான். ஏற்கனவே மரங்களின் கனிகளை மட்டும் தேடித் தேடிச் சுவைத்தனர். ”மரம் பழத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாருமில்லை” என பின்னாளில் ஒளவையார் சொன்னதுபோல தேடித் தேடிச் சுவைத்துவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தனர். அது போனியாகாத நிலையிலேயே மாமிசத்தை நோக்கி நடையைக் கட்டினர். மொத்தத்தில் உயிர்த்திருத்தலின் குறிக்கோளே உண்ணுதல். இந்நிலையில் அடுத்தவேளை குறித்த கவலை ஏன் இருந்திருக்கப் போகிறது. இந்த இடத்தில் அந்த காலகட்ட காட்டுவாழ்க்கை குறித்து கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.
எந்த வரைமுறையுமில்லாமல் உண்பதையோ நடப்பதையோ இன்றும் கூட பலர் ”காட்டுமிராண்டி போல நடக்கிறான்” என்று சொல்வர். இந்த வரையறைகளை மனிதர்கள் அடைவதற்கு அவர்கள் மூளைபட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதையும் கொஞ்சம் இந்த பகுதியில் பார்ப்போம். விலங்கினங்கள்தான் என்று இல்லை. அனைத்து உயிரினங்களுமே காட்டிலிருந்து நாட்டு வாழ்க்கைக்காகப் பழக்கப்படுத்தப்பட்டவைகள்தான். உதாரணமாக இன்றைக்கு நாம் சாப்பிடும் பழங்கள் போல அதன் முந்தைய வாழைத் தலைமுறைகள் இருந்திருக்காது. உதாரணமாக வாழையை எடுத்துக்கொள்வோம். காட்டுவாழை வகையில் எக்கசக்கமான விதைகள் கூட இருக்குமாம். மனிதர்கள்தான் பல்வேறு வகை கலப்பினங்கள் மூலம் இன்றைக்கு நாம் சுவைத்து உண்ணும் வகையாக்கி உள்ளனர்.
பட்டாணிகளில் கலப்பினங்கள் பற்றிய கிரிகோர் மெண்டல் அவர்களின் ஆராய்ச்சிகள் மிகவும் சுவையானவை. அவர் தனது தேவலாயத்துக்குள்ளேயே அந்த ஆய்வுகளை நடத்தினார். அதற்காக அவருடன் தங்கியிருந்த பாதிரியார்கள் ”தேவாலயம் என்ன உனக்கு அவ்வளவு சாதரணமாகப் போய்விட்டதா. பாருங்கள் எலிகள் எல்லாம் வலை வைக்கின்றன” என்று கூட கடிந்துகொண்டனராம்.
இயற்கைத் தேர்வு, வலியது வாழும் என்று டார்வின் சொன்ன அனைத்தும் உயிரினங்களின் அனைத்துவகைகளுக்குப் பொருந்தும். இருப்பிடம் தேடி மூதாதையர்கள் அலைந்ததைப் போல மற்ற விலங்கினங்களில் சிலவும் அலைந்திருக்கக் கூடும். இதனிடையே கிடைக்குதா தின்னுக் கொழுங்கடான்னு கணக்கு வழக்கில்லாமல் தாவரங்களைத் தின்று கொழுத்தவைகள் சிலவற்றிற்கு அடுத்தவேளைக்கு என எதையும் வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. மேலும் தழைகளை மட்டும் தின்றுவிட்டிருந்தால் கூட சில நாட்களில் அந்த தாவரங்கள் மீண்டும் வளர்ந்துவிட்டிருக்கக்கூடும். தின்னும் வெறியில் தாவரங்கள் முழுமையும் அழியும் நிலையும் ஏற்பட்டன. இதனால் ஆடு போன்ற சில இனங்கள் முற்றாக அழிந்த வரலாறுகள் உண்டு.
எது எப்படியோ நமது மூதாதையர்களின் மூளை இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடும். இதனால் நாம் கொஞ்சம் அடக்கிவாசிப்போம் என்று இருந்திருக்கலாம். இதனிடையே நிரந்தரமாக ஒரு வாழ்விடத்தில் வசிப்போம் என்ற எண்ணம் வந்தபிறகு பூவாவுக்கு என்ன செய்வது என்று எண்ணும்போது விவசாய முறைகள் குறித்து நகர்ந்திருப்பர். அதற்குள் இந்த ஆயுதங்கள் பயன்பாடு குறித்துப் பார்த்துவிடுவோம்.
நாம பயப்படுவோமா? நமக்குப் பயப்படுமா? என்று மூதாதையர்கள் இரண்டுவகையாக உயிரினங்களை வகைப் பிரிக்க மூதாதையர்கள் கற்றனர். இவ்வாறு நமக்குப் பயப்படும் மான்கள், பறவைகள் போன்றவையும் தாமாக வந்து உணவாகியிருக்குமா என்ன? அவற்றைக் கொன்றே தின்னவேண்டியிருந்திருக்கும். இவ்வாறு அவற்றைக் கொன்று தின்ன மறைந்திருந்தவாறு கற்களைக் கொண்டு எறிந்திருப்பர். பின்னர் உடலில் பட்ட கல்லை சமாளித்துவிட்டு ஓடியிருக்கலாம். பின்னர் ஓட்டத்திற்கு காரணமான கால்களைக் குறிபார்த்து அடித்து சாய்த்திருக்கலாம். பின்னர் அருகில் வந்து கொன்று தின்றிருப்பர். அனைத்து உயிரினங்களுமே தின்பதற்கும் வாழ்வதற்குமான போராட்டங்களை ஒவ்வொரு நாளும் நடத்திவருகின்றன. இவ்வாறான வாழ்க்கைப் போராட்டங்களில் அடுத்த நொடி என்பது கூட நிச்சயமில்லாத நிலைதான் ஒவ்வொரு உயிரினத்திற்கும் உள்ளது. இதனிடையே நமது கைகளில் இரேகைகள் உண்டானதை நாம் இன்று ஜோசியம் பார்க்கப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். உண்மையில் மூதாதையர்கள் ஆயுதங்களை கிரிப்பாக பிடித்து ஏவ உதவியவையே இந்த ரேகைகள் தான். எங்கே ஒரு குரங்கை தனது ஒருகையால் மட்டும் ஒரு பொருளைக் கையாளச் சொல்லுங்களேன் பார்ப்போம்.
இன்றைக்கிருப்பது போன்று திட்டமிட்ட உணவுமுறைகள் இல்லாத காலகட்டமாக இருந்தாலும் நமது மூதாதையர்களின் உணவில் ஏராளமான வகைகள் இருந்தன. இதன் மூலம் பல்வேறு வகையான இரசாயனச் சேர்க்கை நடந்தன. இவ்வாறான இராசயனச் சேர்க்கை மூளையின் பல பாகங்களும் வளர்ச்சி பெறவும் புதுப்புது சிந்தனைகளின் தோற்றுவாயகாவும் அமைந்தன. உதாரணமாக கைகளின் பயன்பாடும் மூளையின் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று இணையாக தனது பரிணாமவளர்ச்சியைப் பெற்றன. அதாவது கைகளின் உபயோகம் மூளைக்கு புதிய சிந்தனைகளையும் மூளையின் புதிய சிந்தனைகள் கைகளுக்கு புதிய செயல்பாடுகளையும் கற்றுத் தந்தன. இதனிடையே மற்ற ஐம்பொறிகளும் மூளைக்குத் தகவல்களைக் கடத்தும் பணியைச் செய்துகொண்டேயிருந்தன. இதன் விளைவாக மூளையானது முழுவடிவில் பரிணமித்தது. மூதாதையர்களுக்கு என்ன பிசினஸ் டார்கெட்டா. புதுப்பட ரிலிசா எல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளவும் தாம் உயிர்வாழவுமான பணிகளே நிறைந்திருந்தன. மேலும் இறப்பிற்கான பயமே அவர்களுக்கு இருந்திருக்கப்போவதில்லை. எனென்றால் அவர்களும் யாரையும் நம்பியில்லை. அவர்களை நம்பியும் யாருமில்லை. இந்த வித்தியாசமான சூழலே அனைத்தையும் சோதனை செய்துபார்க்கும் மனநிலைக்கு அவர்களைத் தள்ளியது.
மூதாதையர்களின் வாழ்க்கைப் பரிணாமத்தில் உழைப்பின் பாத்திரம் குறித்து பிரெடரிக் ஏங்கெல்ஸ அவர்களின் நூல் மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம் என்ற நூல் மிகவும் பிரபலமானது. உயிரினங்களின் மனிதக்குரங்குகளின் பரிணாம வளர்ச்சியை அவ்வளவு அழகாக அவர் வரையறை செய்துள்ளார். இதில் மொழியின் பரிணாமம் பற்றி கூட அவர் விவரித்திருப்பது அவரது மேதைமையின் ஊற்று. உற்பத்திக்காரணிகளான நிலம்,உழைப்பு, மூலதனம் மற்றும் தொழில்முனைவோர். இந்த மூன்றில் உழைப்பு என்ற காரணி இல்லாவிட்டால் மற்ற மூன்றாலும் தனிப்பட்ட முறையில் என்ன செய்துவிடமுடியும். அந்த வகையில் மற்ற மூன்று காரணிகளாலும் புறக்கணிக்க இயலாத ஒன்றாக உழைப்பு விளங்குகிறது. இந்த உலகம் அழகாயிருப்பதும் அசிங்கமாவதும் மனிதர்களின் அழகான அசிங்கமான உழைப்பில்தான் அடங்கியுள்ளது. நமது உழைப்பின் மூலம் உலகை அழகாக்குவோம். சரி உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கோமே, கொஞ்சம் இருப்பிடம் பற்றியும் பேச்சு வருகிறது. அந்த உடை பற்றி…. கொஞ்சம் பொறுங்கள் அவ்வளவு சீக்கிரம் மனிதகுலம் நாகரீகமடைந்துவிட்டதா என்ன??
படை எடுப்போம்
கட்டுரையாளர்:
முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார். உறைவிடலாற்றுப்படை
முந்தைய தொடரின் கட்டுரையை வாசிக்க: அறிவியலாற்றுப்படை 5: மூளையின் பரிணாமம் – முனைவர் என்.மாதவன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: அறிவியலாற்றுப்படை - நாகரீகங்களின் தோற்றுவாய்