தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

தொடர் 1: அறிவியலாற்றுப்படை – முனைவர் என்.மாதவன்

அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai)

எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட அறிவியலின் பலன்களை அனுதினமும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாளும் உலகை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது.

இந்த தொடரின் தலைப்பைப் பற்றி நிச்சயமாக சில வார்த்தைகள் பகிரவேண்டும். ஆற்றுப்படை என்பது தமிழ் இலக்கிய வகைகளுள் ஒன்று. பண்டைய நாட்களில் அரசர்கள் மற்றும் புரவலர்களிடம் கவிபாடி பரிசு பெற்று திரும்புபவர்கள், எதிரே வரும் கவிஞர்களிடம் அந்த அரசர் மற்றும் புரவலரின் பெயரைக்கூறி அங்கு சென்று பரிசில்பெற வழிகாட்டுவதை ஆற்றுப்படுத்துதல் என்பர்.

தமிழ் இலக்கியத்தில் பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, முருகாற்றுப்படை போன்ற பல்வேறு ஆற்றுப்படை இலக்கியங்களைக் காண இயலும்.

இங்கே அறிவியலுக்கும் ஆற்றுப்படைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கத் தோன்றலாம். உண்மையில் இவ்வாறு புலவர்கள் அரசர்களைக் காட்டி புலவர்களின் வாழ்க்கையில் மேன்மை அடைய உதவுவது போன்று அறிவியலும் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு புதுமைகளைப் பரிசாக அளித்து மேன்மை அடையசெய்து கொண்டிருக்கிறது. அது போலவே மனிதர்களும் அறிவியலை ஆற்றுப்படுத்தி அறிவியலை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் மனிதர்களின் வாழ்வில் மேன்மையை அளித்துவரக்கூடிய அறிவியல் ஆரம்பகாலத்தில் இருந்து எவ்வாறு இருந்தது? எப்படி வளர்ந்தது? இன்றைக்கும் எப்படி பயனுள்ளதாக இருக்கிறது? என்ற அடிப்படையிலேயே இந்த தொடர் அணுகவுள்ளது.

இன்றைக்கு இருப்பது போன்று எல்லாவற்றையும் அறிவியல் கண்கொண்டு பார்க்கக்கூடிய மனிதர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். பலரும் பிறந்தோம் வளர்ந்தோம் என்று வாழ்ந்துவரும் இப்பூவுலகில் மிகச்சிலர் மட்டுமே இயற்கையை கேள்விக்குள்ளாக்கினார். அவ்வாறு கேள்விக்குள்ளாக்கி அந்த இயற்கையை மாற்றவும் முயற்சித்தனர். அவ்வாறு முயற்சித்தது அனைத்திலும் அவர்கள் வெற்றிகண்டார்கள் என்று சொல்ல இயலாது. ஆனால் அதேநேரத்தில் அந்த இயற்கையைப் புரிந்துகொண்டார்கள். அந்த இயற்கையைப் புரிந்துகொண்ட பிறகு ஒன்று அதை மாற்ற இயலும் அல்லது மாற்ற இயலாது என்ற இரண்டு முடிவுக்கு வந்திருக்கின்றனர். அல்லது அப்போதைய வாய்ப்பின் படி மாற்ற இயலாது என்றும் கூறிச் சென்றுள்ளனர். எது எப்படியோ அவர்கள் அனுபவத்தை விட்டுச் சென்றுள்ளனர்.

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

கண்டுபிடிப்பு, கண்டறிதல் என்ற இரண்டு வார்த்தைகளும் ஆங்கிலத்தில் முறையே Invention, Discovery என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் ஒன்றுபோலே தோன்றினாலும் கண்டறிதலுக்கும் கண்டுபிடிப்புக்கும் வித்தியாசம் உண்டு. ஏற்கனவே உள்ள ஒரு பொருளைக் கண்டுடறிவது கண்டறிதல். அதாவது அமெரிக்காவைக் கண்டறிதல், இந்தியாவைக் கண்டறிதல் போன்ற வகையானது. இருக்கக்கூடிய பொருள்களை வைத்து புதிதாக ஒன்றை உருவாக்குவது கண்டறிதல். இதனைக் கண்டுபிடிப்பு என்றும் அழைக்கின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும் ஒருபக்கம் கண்டறிதலும் மற்றொரு பக்கம் கண்டுபிடிப்பும் மனிதவாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கின்றன.

பிரபஞ்சத்தில் பெருவெடிப்பிற்குப் பின்னான நாட்களில் சூரியக்குடும்பம் உருவாகி, அதன் கோள்களில் ஒன்றான பூமி உயிர்க்கோளமாகப் பரிணமித்து என்பன ஏதோ ஓரிருநாட்களில் நடைபெற்றதல்ல. பல லட்ச்க்கணக்கான ஆண்டுகளில் நடைபெற்றவை.

கண்டுபிடிப்புக்கும் கண்டறிதலுக்கும் தொடர்ச்சியாக அறிவியல் பயன்பட்டு வருகிறது. அடிப்படையில் எழுத்து மூலமாகப் பதியப்பட்டுள்ள வரலாறுகளை மட்டுமே நாம் கணக்கில் கொண்டு பார்த்தால் பல உண்மைகள் நமக்கு விளங்கும்.

அறிவியலானது இன்றைக்கு இருப்பது போல் ஓரளவுக்குச் சுதந்திரமாக எல்லாக் கட்டத்திலும் இல்லை. இன்றைக்கும் கூட வளர்ந்த நாடுகளின் கைப்பாவையாகவே அறிவியல் செயல்பட்டு வருவது பல நேரங்களில் நமக்கு புரியும். அறிவியல் பரிணாம வளர்ச்சி அடைந்து எழுந்து போதுமான அங்கீகாரம் பெற்று ஒரு நிறுவனமாக இன்றைக்கு இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியை அது அடைய பல்வேறு தடைகளைத் தகர்த்தெறிய வேண்டியிருந்தது. அறிவியல் சுதந்திரத்தை ஒரு வசதிக்காக இப்படிப் பிரிக்கலாம்.

முதலாவதாக இயற்கையிடமிருந்து அறிவியல் தன்னை விடுவித்துக்கொண்டது. நெருப்பு, சக்கரம் போன்ற மிகவும் இயல்பான கண்டுபிடிப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். இவ்வாறு இயற்கையிடமிருந்து விடுவித்துக் கொண்ட அறிவியலைக் கண்டறிந்து தத்துவமாக்கிய பல தனிநபர்கள் அறிவியல் கோட்பாடுகளை உருவாக்கத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் கூறியதும் எழுதியதும் மாற்ற முடியாதது என்றென்றைக்கும் நிரந்தரமானது என்று பல்லாண்டு காலம் நினைத்து வந்தனர். இப்படி தனிமனிதர்களின் கருத்துக்கு அடிமையாக அறிவியல் இருந்த ஒரு காலகட்டத்தைச் சொல்ல முடியும்.

பிறகு அறிவியல் வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் அறிவியலை தங்களது சொத்தாகப் பாவிக்கத் தொடங்கினர். அறிவியல் அறிவை மற்றவர்களோடு பகிர மறுத்தனர். நிறுவனங்களின் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த நாடுகளின் சொத்தாக அறிவியலைப் பார்த்த காலமும் உண்டு. இது அறிவியல் நிறுவனங்களிடம் அடிமைப்பட்ட காலமாகக் கொள்ளமுடியும். இதனிடையே கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெறும் முறை வந்தது.

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மறுமலர்ச்சி மற்றும் தொழிற்புரட்சிக்குப் பிறகு பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி கண்டறியப்பட்டன. தொழிற்புரட்சியால் உருவான தமது பொருட்களை விற்க ஐரோப்பிய நாடுகளுக்குத் சந்தை தேவையாகியது. இதனால் பல்வேறு கீழைநாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும் அவை அடிமைப்படுத்தி அவற்றைத் தமது பொருட்களை விற்கும் சந்தையாக்கிக்கொண்டன.

இரஷ்யப்புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தமது சுதந்திரப் போராட்டங்களையும் தீவிரப்படுத்தின. இதனால் இவ்வாறான நாடுகள் சுயசார்பான அறிவியலை வளர்க்கத் தொடங்கின. ஒரு வகையில் இந்நாடுகளின் சோஷலிசம் சார்ந்த கொள்கைகள் நல்ல நன்மைகளை அளிக்கத் தொடங்கின.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையோடு அறிமுகப்படுத்தப்பட்ட டங்கல் திட்டம் காப்புரிமைகள் தொடர்பான பல்வேறு புதிய சரத்துகளைக் கொண்டு வந்தன. அதுகாறும் பொருட்களுக்கான தயாரிப்புமுறைக்கு மட்டுமே (Process patent) காப்புரிமை பெறப்பட்டு வந்தது. டங்கல் திட்டத்தின் மூலம் பொருட்களுக்கே காப்புரிமை பெறும்முறை (Product patent) அமலுக்கு வந்தது. இது அறிவியல் தொழில்நுட்பத்திற்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் மாபெரும் சவாலாக அமைந்தது.

இவ்வாறு காலம் மாற மாற ஒவ்வொருகால கட்டத்திலும் ஒவ்வொரு வகையான தடைகளை அறிவியல் சந்தித்தாலும் மனிதகுலத்துக்கு அறிவியல் செய்யும் சேவை என்பது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மனிதர்களின் வாழ்வை அறிவியல் மிகச் சிறந்த வகையில் ஆற்றுப்படுத்திவருகிறது.

அண்மையில் கரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப் படைத்த போது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குள் உலகம் மீண்டது. அவ்வாறு மீண்டதற்குக் காரணம் அறிவியலை யார் எவ்வாறு அடிமைப்படுத்த நினைத்தாலும் அது அனைத்தையும் மீறிக்கொண்டு மனிதகுலத்துக்கு சேவை செய்ய முன்னணிக்கு வருவதும். அதற்கான பணியை பல்வேறு மக்கள் இயக்கங்களும் செய்துவருவது கண்கூடு.

தன்னலமற்ற அறிவியல் பல நாடுகளின் பொருளாதார ஏற்றத்துக்குப் பயன்பட்டுவந்தாலும் பல்வேறு முதலாளிகள் அபரிவிதமான லாபம் சம்பாதிக்கும் நோக்கில் அறிவியல் ஆராய்ச்சிகளை வழிநடத்துவது கண் கூடாகத் தெரிகிறது.

அந்த வகையில் அறிவியல் வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்க்களை பல்வேறு உதாரணங்களோடு பொருத்திப்பார்த்து அறிவியல் மனிதர் அனுபவங்களின் தொகுப்பு எந்த ஒரு தனிநபர் தனிநாட்டிடம் அடிமையாக இருக்க வேண்டிய தேவையில்லை. குறிப்பாக இன்றைக்கு உலகை அடுத்த படியாக ஆட்டிப் படைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு உண்டாக்க இருக்கும் சவால்களை முறியடிக்க உலகளாவிய மனிதாபிமானமும் அறிவியல் பார்வையும் தேவை. அதனைக் கட்டுப்படுத்துவதிலும் உலகளாவிய மனிதநேயக் கொள்கைகள் தேவை.

இது ஒரு புறமிருக்க அறியாமை அறிவியல் விழிப்புணர்வின்மை, மதத்தீவிரவாதம் போன்ற பல்வேறு சமூகக் கேடுகளிலிருந்து தப்பிக்க தனி மனிதர்கள் மட்டும் ஊடாடினாலும் அது சாத்தியம் இல்லை. ஆனால் விழிப்புணர்வு பெற்ற தனிநபர்களைக் கொண்ட அறிவியல் பரப்பும் நிறுவனங்களுக்கான தேவை காலந்தேறும் அதிகரித்துவருகிறது . இதனைப் புரிந்துகொள்ளும் நோக்கில் சிறு சிறு வரலாற்று நிகழ்வுகளைப் பகிர்ந்து புரியவைக்க இத்தொடர் முயல உள்ளது.

கட்டுரையாளர்:

தொடர் 1: அறிவியலாற்றுப்படை (Ariviyalatrupadai): உலகில் வேறு எதையும் விட அறிவியல் மனிதர்களின் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.  N. Madhavan (என். மாதவன்)

முனைவர். என்.மாதவன் (1969) அரசு நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் இவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 34 ஆண்டு கால செயல்பாட்டாளர். சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு உறுப்பினர். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டம், பாடப்புத்தக உருவாக்கத்திலும், அனைவருக்கும் கல்வி இயக்கச் செயல்பாட்டிலும் அவ்வப்போது கருத்தாளராகச் செயல்பட்டு வருகிறார்.. பேரா.கிருஷ்ணகுமார் அவர்களின் குழந்தை மொழியும் ஆசிரியரும் என்ற மொழிபெயர்ப்பு நூல் உட்பட 25 நூல்களை எழுதியுள்ளார்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 6 Comments

6 Comments

  1. Perumalraj

    ஆரம்பமே ஆர்வத்தைத் தூண்டும் விதமாக உள்ளது. வாருங்கள்! வாழ்த்துகள்! வாசிக்க காத்திருக்கிறோம்!

    • Sanjeevi. G

      அருமையான கட்டுரை இது போன்ற அறிவியல் விழிப்புணர்வு கட்டுரைகள் தொடர்ந்து எழுதவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

  2. அறிவியலாற்றுப்படை! எப்படிப் பிடித்தார் இந்தத் தலைப்பை? அடுத்து வரும் கட்டுரைகளை எதிர்பார்க்க வைக்கிற தொடக்கம்.

  3. தேவகி

    தமிழ் இலக்கியத்தின் ஆற்றுப் படைகளின் செல்ல மகளாக அறிவியலாற்றுபடை உள்ளது தலைப்பு அருமை ஐயா 💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *