ஆயிஷா நடராசனின் “அறிவியலின் குழந்தைகள்” – நூல் அறிமுகம்
கற்றல் என்பது இயல்பான உரையாடலை ஊக்குவிப்பது. கற்றல் என்பது ஏன்? எப்படி? எதற்காக? என்ற கேள்வி கேள்வி கேட்கும் மனப்பாங்கை உருவாக்குவது. இவை இரண்டும் இயல்பாக கூட்டணி சேர்ந்தால் என்ன நடக்கும்? மூடநம்பிக்கையை போக்கும். அறிவியல் மனப்பான்மையை மேலும் மேலும் விஸ்தரிக்கும்.
பேயாடுவதன் காரணம் என்ன?
சாமி ஆடுவது எதனால்?
மது போதையில் ஆட்டம் காணுவது எதனால்?
மூடநம்பிக்கைகளுக்கு பின்னால் உள்ள மோசடிகளில் ஒழிந்து கொண்டிருக்கும் பணம்.
மூட நம்பிக்கையால் நரபலி தரவும், இலாப வேட்டைக்காக திணிக்கப்படும் பாடங்கள் வழியாக தனியார் பள்ளிகளில் பஸ்பம் ஆகும் குழந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? இவற்றை பெரியவர்கள் எப்படி புரிந்து கொள்வது? பிள்ளைகளுக்கு புரியவைக்க முடியுமா? முடியும் என்பதற்கு முன் உதாரணம் ஆயிஷா நடராசன் அவர்களின் இந்தக் கதை சிறந்த உதாரணம்.
காசிம், ஜோசப், சாய் பல்லவி மூவரும் அரசுப் பள்ளி மாணவர்கள். காசிம் ஜோசப் இணைபிரியா நண்பர்கள். சொற்களை வேட்டையாடி, சொற்களில் விளையாடி மகிழ்வதில் சிறந்தவர்கள். அந்த சிறுவர்கள் ஓடி ஓடி சொல் வேட்டையாடும் போது நாமும் அவர்களோடு சேர்ந்து அந்த சொற்களை ஆட்டையை போட்டு விடுகிறோம். அவர்கள் சொல் விளையாட்டில் அவர்களுக்கு எத்தனை வகையான சொற்கள் சொந்தம் ஆகிறது என்று நினைத்துப் பார்த்தால் பிரம்மிப்பூட்டும். எளிய சொற்கள். கடினமான சொற்கள், பொருள் தேடி புரிந்து கொள்ள வேண்டிய சொற்கள், யாரும் கண்டு கொள்ளாத சொற்கள், கொஞ்சம் நாட்களில் வழக்கொழிந்து போய்விடும் சொற்கள், இப்படியான சொற்களை விளையாட்டாக வேட்டையாடுகிறார்கள். ஆவணப்படுத்துகிறார்கள். பாட நூலில் அல்ல. சமையல் கட்டு முதல் சுடுகாடு வரை சுருட்டிக் கொள்ள ஏராளமான சொற்கள் உள்ளது. இந்த சொற்கள் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களளும் கூட அறியாத சொற்கள். இப்படியான சுதந்திரமான கற்றல் சொல்லாமல் கொள்ளாமல் நடைபெற்றுவருகிறது அரசுப் பள்ளிகளில்.
சொல் விளையாட்டு உரையாடல் எவ்வளவு முக்கியம் என்பதை கூறும் பாத்திரப் படைப்பு ஜோ என்னும் ஜோசப் மற்றும் காசிம். கோடிக் கணக்கில் சொற்கள் மனதில் குவிந்து கிடந்தாலும் கேள்வி கேட்கும் மனத்தை வளர்த்து எடுத்துக் கொள்வது முக்கியம் என்பதை சொல்லும் பாத்திரம் சாய் பல்லவி. இவை இரண்டும் இணையும் புள்ளியியல் ஏற்கனவே தெரிந்த விடைகளை கேள்விகள் மூலம் தேடுதல் எப்படி ஒரு கட்டத்தில் சுவையற்றதாக மாறிவிடுகிறது என்பதையும் ஆயிஷா நடராசனின் இந்தக் கதை சுவைபட கூறுகிறது. தெரியாத விடைகளுக்கான கேள்விகள். கேள்விகள் புதிது. விடைகள் புதிது எப்படி இருக்கும் அறிவுத் தேடல் என்பதை சுவைபட கூறும் கதை இது.
மூடநம்பிக்கைகள் எப்படி உருவாகிறது? முற்காலத்தில் எவ்வாறு அவை கருக் கொண்டது என்பதையும் கதைகள் வழியாக சித்திரமாக மாணவர்களிடையே கதைகள் வழியாக தீட்டி விட முடியும் என்பதற்கான கதை இது.
காசிமின் உயிர் நண்பன் ஜோசப் நரபலி சாமியார் கையில் அகப்பட்டு விடுகிறார். நண்பர்கள் இருவரும் சொல் விளையாட்டிற்கு செல்லும் போது சுடு காட்டின் கேட்டை லாவகமாக தாண்டிச் செல்கிறார்கள். போய் பயம் தொற்றிக் கொண்ட பிறகு அதே கேட் தாண்ட முடியாததாக விஸ்வரூபம் எடுக்கிறது. உயர் நண்பனை காப்பாற்றி விட வேண்டும் என்ற தைரியம் வந்த போது மீண்டும் அந்த கேட் சிறிதாக விடுகிறது. ஒரே கேட் தான். மனநிலைக்கு தக்கவாறு மனம் எப்படி அதனை அணுகுகிறது என்பதையும் இந்தக் கதை சொல்லாமல் சொல்கிறது. “அரண்டுபோய் நிற்பவனுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழம் பெரும் சொற்றொடருக்கு நவீன சாட்சி, ஜடாமுடி சாமியாரின் பலூன்கள். அதனை அறிவியல் மனப்பாங்கு வழியாக கண்டு படித்து தன் நண்பன் ஜோசப்பை மீட்டெடுக்கும் காசிம் மற்றும் சாய் பல்லவி. இவ்வளவு பெரிய விசயத்தை எடுத்துச் சொல்ல, பதை பதைக்கும் மனத்தோடு கதையை வாசித்து, புரிந்து கொள்ளும் நம்முள் வந்து சம்மணம் இட்டு அமர்ந்து கொள்ளும் அறிவியல் ஆசிரியர் முருகானந்தம், துளிர் வானவில் மன்ற பயிற்றுனர்கள் பாக்கியம் டீச்சர், சராளா மேடம் ஆகியோர். இத்தகைய கதைகள் பலரின் கவனம் பெற வேண்டும். இது போன்ற கதைகள் ஏராளமாக படைக்கப்பாக்கம் பெற வேண்டும்.
எழுதியவர் :
நா.மணி
ஈரோடு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


சிறப்பான நூல் அறிமுக கட்டுரை. நூலைப் படிக்க ஆவலைத் தூண்டும் நல்ல அறிமுகம். சிறப்பு.