arivusuriyan-annal-ambedkar-book-review-by-dr-a-palamozhibalan

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” – முனைவர். அ. பழமொழிபாலன்

 

 

 

திருக்குறள் உலகப் பொதுமறைக்கான உச்சம். ஒட்டுமொத்த உலக மக்களுக்கான வாழ்வியலை நெறிப்படுத்துவதற்காக திருவள்ளுவர் பிழிந்து கொடுத்த சாறு. எப்படி அடி கரும்பின் சாறு இனிப்பின் சுவையை இன்னும் மிகைப்படுத்துகிறதோ அதேபோன்றுதான் திருக்குறள் தமிழின் பெருமையை மேலும் மேலும் இனிப்பாக்குகிறது.

திருக்குறளை பேரின்பத்தின் பெருவெளியான ஆதி பகவனில் ஆரம்பித்து, கூடி முயங்கிப் பெறும் சிற்றின்பத்தின் பெரு நிகழ்வான காமத்தில் முடித்திருப்பார் திருவள்ளுவர்.

பொன், பொருள், புகழ், பெண் என அனைத்தும் கிடைத்தாலும், மானுடம் அமைதியில் நிலை கொள்ளவும், நிம்மதிப் பெருமூச்சில் ஆயாசப்படவும், பேரானந்த அமுத மழையில் நனைந்து விடவும் ஆசைப்பட்டு கொண்டே இருக்கிறது. அதற்கான நெறிமுறைகளை ஒரு குழந்தைக்கு ஊட்டப்படும் தாய்ப்பால் போல் மானுடத்திற்கு ஊட்டி செல்கிறார் திருவள்ளுவர்.

மொழிக்கான புரிதல் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, ஒரு ஆடு அதற்கான மொழியில் அளவளாவிக் கொள்கிறது. பறவைகள் அதற்கான மொழியில் பேசி கொஞ்சி குலாவுன்றன. மழை அதற்கான மொழியில் பூமியின் மேனியில் உயிர் ஜீவனை உசிப்பி விட்டுப் போகிறது.

சில தருணங்களில் எப்படி ஒரு பூனைக்கும் நமக்குமான அல்லது ஒரு நாய்க்கும் நமக்குமான அல்லது ஒரு கிளிக்கும் நமக்குமான புரிதல் ஒரு ஸ்பரிசத்தை ஏற்படுத்திவிடுகிறதோ, அப்படித்தான் வண்டு அதற்கான மொழியில் பூவின் வீணையை தொட்டு மீட்டுகிறது. அது மீட்டுகின்ற போது ஏற்படக்கூடிய உச்சகட்ட உணர்வில் பூ கொட்டுகின்ற தேனை உறிஞ்சி குடித்து விட்டு வண்டு போதையில் தள்ளாடுகிறது.

மொழியும் இதேபோன்றுதான் ஒவ்வொரு உயிரினங்களுக்குள்ளும் அவைகளுக்கு புரிகின்ற மொழியில் அளவலாவுகிறபோது ஒரு பேரின்ப நிகழ்வை ஏற்படுத்துகிறது.

ஒரு கவிதை நமக்குள் ஏற்படுத்தும் மயக்கத்தை போன்றும், ஒரு பாடல் நமக்குள் ஏற்படுத்தும் போதையை போன்றும் மொழி பல்வேறு கோணங்களில் உயிர்களின் உணர்வுகளுக்குள் மழையைப் போன்று தழுவிக் கொண்டும், மன்மத ரசத்தை போன்று மயக்கத்தை ஏற்படுத்திவிட்டும் போகிறது.

எழுத்துக்கூட அப்படித்தான். எழுத்து நடை அவரவர்களுக்கான மொழிகளில் எழுதப்படுகிற போது மேற்சொன்ன உணர்வுகளை உசிப்பி விட்டுதான் போகிறது.

தனக்கு பேசத் தெரிந்த மொழியில் எந்த ஒரு எழுத்தாளன் எழுதுகிறானோ அந்த எழுத்து ஏற்படுத்தும் உணர்வுகளை மொழிபெயர்க்கப்படும் எழுத்துக்கள் உருவாக்குவதில்லை. ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான புரிதலை எப்படி ஒரு மாற்றாந்தாயால் உருவாக்கி விட முடியாதோ அப்படித்தான் எழுத்தாளனுக்கு உரிய மொழியில் எழுதப்படும் எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை மொழி பெயர்க்கப்படும் எழுத்துக்கள் உருவாக்கி விடுவதில்லை.

ஆனால் திருக்குறள் அப்படி அல்ல. மொழிபெயர்க்கப் படுகிறபோது தாய்மொழிக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தை மொழி பெயர்க்கப்படும் மொழிகளுக்குள்ளும் ஏற்படுத்துகிறது என்பதுதான் திருக்குறளின் சிறப்பு. ஆதலால்தான் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று ஒட்டுமொத்த உலகமும் திருக்குறளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது.

கம்பன் ராமாயணம் எழுதியதை போன்று, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதியதே போன்று, கண்ணதாசன் வனவாசம் எழுதியதை போன்று, வாலி அவதாரப் புருஷன் எழுதியதை போன்று, வைரமுத்து கவிராஜன் கதை எழுதியதை போன்று இவைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை வில்லியம் வேர்ட்ஸ்வர்த்தின் மொழிபெயர்க்கப்படும் கவிதைகள் நமக்குள் ஏற்படுத்தி விடுவதில்லை.

கம்பரை போன்று இளங்கோவை போன்று கண்ணதாசனை போன்று வைரமுத்துவை போன்று வாலியைப் போன்று கவிஞர் தமிழ்அமுதன் “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” என்கிற தலைப்பில் எழுதிய கவிதைகள் அம்பேத்கரின் வாழ்வியலை புதுக்கவிதை வடிவில் தமிழாற்றுப்படுத்துகிறது. அண்ணல் அம்பேத்கரை பற்றி அறியாத தமிழர்கள் “அறிவுச் சூரியன் அண்ணல் அம்பேத்கர்” என்கிற இவருடைய நூலை படிக்கிற போது அது அம்பேத்கரைபற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடிவதோடு, இவரின் எழுத்து நடை வெவ்வேறு விதமான உணர்வுகளையும், கிளர்ச்சிகளையும் ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

அழகழகாய் மலர்கள் மலர்ந்து கிடக்கின்றன. ஆனால் மல்லி மாதிரி சில மலர்களில் மட்டும் கண்கள் நிலைகுத்தி நிற்கிறது. எவ்வளவோ மலர்கள் விதவிதமான வாசனை கொடுத்தாலும் மல்லியையும் தாண்டி செண்பகப் பூவின் அலாதியான வாசத்தில் மனசு பரிபூரணமாகி லயித்துக் கிடக்கிறது. சில நூல்களைப் படிக்கிறபோது அது மாதிரியான லயிப்பில் கண்களும் புலன்களும் நிலை குத்தி நின்று விடுகின்றன.

கவிஞரும் தமிழ் நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான தமிழ்அமுதன் அவர்களின் ”அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” என்கின்ற நூலை படிக்கிற போது மேற்சொன்ன லயிப்பில் கண்களும் புலன்களும் நிலை குத்தி நின்று விடுகின்றன.

பிள்ளை பருவத்தின் தாய்ப்பால் வாசம் மாதிரி மேற்கண்ட நூல் புலன்களினூடே ஒருவகையான பேரானந்த நுகர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.

“அறிவு சூரியன் அண்ணல் அம்பேத்கர்” என்கின்ற நூலை படிக்கிற போது அலைகளினூடே அசைந்தாடி செல்லுகின்ற கப்பல், நங்கூரத்திற்கு கட்டுப்பட்டு நிற்பது போன்று, புலன்களினூடே சலனப்பட்ட மனம் ஒட்டுமொத்தமாக ஒரு புள்ளியில் நிலை குத்தி நின்று விடுகிறது.

கவிஞர் தமிழ்அமுதனின் ஒட்டுமொத்த கவி ஆளுமையும் இந்நூலில் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரகாசித்துக் கொண்டே இருக்கின்றன.

ஆங்காங்கே அதிகாலையை அழகூட்டும் அழகுச் சூரியனையும், சித்திரையில் சுட்டெரிக்கும் உச்சி வெயிலின் உக்கிரத்தையும், மலைகளையும், நதிகளையும் அழகூட்டும் மாலை நேர சூரியனையும் வார்த்தைகளுக்குள் வசப்படுத்தி ஒரு அழகான புரிந்தாக்க உணர்வை லாவகமாக கையாண்டு இருக்கிறார் கவிஞர்.

தனி நபர் போற்றுதலை தவிர்த்து பார்க்கிற போது, இந்த நூலின் கவித்திறன் கண்டங்கள் தாண்டி பேசப்படுகின்ற நூலாக அமைந்திருக்கின்றது. வாருங்கள் நூலின் வாயில் கதவை திறந்து, முத்துக்கள் பதித்த முத்தாய்ப்பான ஓரிரு கவிதைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சர்க்கரை பிடிக்காத எறும்பு இருக்க முடியுமா? அல்லது மழையை விரும்பாத மலர்கள்தான் இருக்கின்றனவா? புதுக்கவிதையின் வடிவம் என்பது அப்படித்தான் இருக்கிறது. அது மரபு என்னும் கட்டமைப்பிற்குள் கட்டுண்டு கிடந்தவர்களையும் தன்வயப்படுத்தியது. மரபுக் கவிதை எழுதியவர்களையும் தன் எளிய வடிவத்தின் மூலம் வசப்படுத்தியது. மரபுக் கவிதை எழுதியவர்களும் தமிழுக்கு புதுக்கவிதை எனும் புத்தாடை கட்டி அழகு பார்த்தார்கள். அந்த புதுக்கவிதையின் வடிவத்தைதான் கையில் எடுத்து இருக்கிறார் கவிஞர் தமிழ் அமுதன்.

அந்த எளிய வடிவத்தின் மூலம் மானுடம் அறியாதவர்களுக்கு சம்மட்டி தயாரித்திருக்கிறார். இவர் தனக்கு வசப்பட்ட மொழியாக்கம் குறித்து இப்படித்தான் கூறுகிறார். வரலாறு விரும்பியவர்களுக்கு கவிதை பிடிக்காது. கவிதை விரும்பிகளுக்கு வரலாறு பிடிக்காது என்று ஒரு கருத்து உண்டு. இந்த இரு பிரிவினருக்கும் பிடிக்கும் வண்ணம் அம்பேத்கரின் வரலாற்று கவிதையை எழுதி இருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார்.

நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். சாணி அள்ளி போட்டுவிட்டு, தோட்டம் கூட்டிவிட்டு, அந்த சாணியை கொட்டும் குப்பை தொட்டிக்கு பக்கத்திலேயே அமர்ந்து, ஆண்டச்சிகள் சோறு போட, தேக்கு இலையில் சோத்தை வாங்கி அதிலேயே சாம்பார் ஊற்றி, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு பொழுது சாய்கிற வரைக்கும் அவர்களுக்கு வேலை செய்துவிட்டு, பொழுது போனவுடன் வீட்டுக்கு திரும்புகிற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அப்பாக்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.

பசி ஆறுவதே பெரும் பாடாக இருந்த அன்றைய காலகட்டம் இந்த சமூகம் அவர்களை அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. தொடக்கூடாது. அவர்களது வீதிகளில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது என்றெல்லாம் எழுதப்படாத சட்டங்கள் வீதிகளில் விதைக்கப்பட்டு கிடந்தன. இந்த எழுதப்படாத சட்டங்கள் மேல்தட்டு மக்களின் நெருஞ்சி மூலையில் பாசிகளாய் படிந்து கிடந்தது.

நம் கண்ணீர்
ஆதிக்க சாதியை
அரிக்காதா?

வெப்ப கொழுந்துகள்
ஆணிவேரை
எரிக்காதா?

இப்படியாக அவர்களின் ஆதங்கத்தை கவிதை வரிகளில் ஒட்டுமொத்தமாக இறக்கி வைக்கிறார் கவிஞர் தமிழஅமுதன்.

காலங்கள் உருண்டோடிக் கொண்டே இருக்கின்றன. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகத்தின் மிகப்பெரிய இயக்கமே கைபேசிக்குள் அடங்கிப்போனது. ஆனால் இன்னும் ஊர்களும், சேரிகளும் பிரிந்தேதான் கிடக்கின்றன. 18 வயது வரை எல்லோரிடமும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, மாமன், மச்சான் என்று பழகி கொண்டிருந்த இளம் பருவத்தினரின் வேர்களின் மீது விஷ மருந்துகள் ஊற்றப்படுகின்றன. அவை மெல்ல மெல்ல வளர்ந்து தன் ரத்த நாளங்களில் விஷத்தை ஏற்றிக் கொள்கின்றன. மாற்றம் ஒன்றுதான் மாறாத ஒன்று என்கிறார்களே, ஏன் எவ்வளவோ மாற்றங்கள் வந்த போதும் இந்த இயற்கை, சாதியத்தில் மட்டும் மாற்றங்கள் நிகழ்த்த மறுக்கிறது. அதுதான் சூட்சமமாக யாருக்கும் விளங்காத ஒன்றாகவே இருந்து விடுகிறது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மாட்டை அவுத்துக்கொண்டு மேய்த்து விட்டு வருகிறார். அவர் மாட்டை தொடுவதனால் மாடு தீட்டாவது இல்லை. அவர் புல்லு அறுத்து மாட்டுக்கு போடுகிறார். அவர் தொடுவதனால் புல் தீட்டாவதில்லை. சொம்பில் பால் கறக்கிறார். பால் தீட்டாவதில்லை. அந்த பால் கரந்த சொம்பை அம்மணி தொட்டு வாங்கினால் மட்டும் சொம்பு தீட்டாகி விடுகிறது. பாலும் தீட்டு ஆகிவிடுகிறது. பால் சொம்பை திண்ணையில் ஒரு ஓரமாய் வைத்துவிட்டு போ என்கிறாள் அம்மணி. இவர்களின் செயலில் என்ன அர்த்தம் இருக்கிறது. அர்த்தம் இல்லாத கேவலமான எண்ணம் அவர்களின் மனதிற்குள் புரையோடிக் கிடக்கிறது

கவிஞர் தமிழமுதன் இந்த நிகழ்வை இப்படித்தான் சித்தரிக்கிறார்

வேர்வையில் விளைந்த
சோறு இனிக்கும்

கண்ணீர் விட்டு வளர்த்த
கரும்பு இனிக்கும்

ஆனால்

எங்கள் கைப்பட்டால்
அதெப்படி
ஆணுக்கும் தீட்டு வரும்

ஒன்றை முழுமையாக உள்வாங்குகின்ற போதுதான் அது நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தப்படுத்தும். அண்ணல் அம்பேத்கரை முழுமையாக உள் வாங்குகிறார் கவிஞர் தமிழ்அமுதன்க்ஷ ஆதலால்தான் இவரின் தெளிந்த சிந்தனை இறுதிவரை தெளிவாகவே பயணம் செய்கிறது. இந்த நூல் முழுவதும் அவர் சலனம் இல்லாமல் பயணம் செய்கிறார். அது சிந்தையை சிதறிவிடாமல் பக்கத்து வயலுக்கு மடை மாறாமல், இந்த நூல் நம்மை ஒரு யோக நிலைக்கு இழுத்துச் செல்கிறது

சாதியைப் பற்றி ஒரு கருத்து பதிவேடுகிறார் கவிஞர் தமிழ்அமுதன். சாதி என்பது ஒரு போதை. அது குடிக்காரனை விட மிகவும் மோசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் ஏற்படுத்திவிடுகிறது. அது மானிட வாழ்வுக்கு ஆரோக்கியமாக இருந்து விடுவதில்லை. அது இழப்புகளையோ, அல்லது வாழ்நாள் பகைமையையோ மானிடர்கள் இடையே ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது.

சாதி …

வெள்ளை காக்கைகளின்
எச்சத்தில்
விளைந்தது

பூமியில் முளைத்த
தப்பு விதை!

அதன் சல்லி வேர்
எப்படி
ஊர் சுவரை
உடைத்தது!

மதுவை மறுத்தவர்கள்

எப்படி
சாதி சாராயத்தை
சம்மதித்தார்கள்

சுருட்டில் இருந்து விழுந்த
பொறி
தேசத்தை சுட்டது எப்படி?

அடுக்கடுக்கான ஆதங்கங்களை கொட்டி தீர்க்கிறார் கவிஞர். சமூகம் சார்ந்து அவருடைய குமுரல்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. இந்த சாதி நெருப்பை அணைக்கவே முடியாதா? இந்த சாதிய முடிச்சுகளை அவிழ்த்து விட முடியாதா? ஒட்டுமொத்த உணர்வுகளால் எழுதப்படுகின்ற போது அது நெருப்பை விட வலிமையானதாகவும், ஈட்டியை விட கூர்மையானதவாகவும் அமைந்துவிடுகிறது.

அம்பேத்கர் கூறுகிறார்

சாதிதான் சமூகம் என்றால்
வீசும் காற்றில்
விஷம் பரவட்டும்

உண்மைதான் சாதியை அழிக்க முடியவில்லை. அண்ணல் கூறியது போன்று வீசும் காற்றில் விஷம் பரவுகிறது. அதுதான் கொரோனா என்கின்ற கொடிய விஷம். ஆமாம் இது காற்று வழியாக பரவுகிறது. அண்ணல் அம்பேத்கர் கூறியது போன்று வீசும் காட்டில் விஷம் பரவுகிறது. இது எங்கே எப்படி யாரை என்ன செய்யும் என்று அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளால் கூட கணிக்க முடியவில்லை. அம்பேத்கரின் வாய்மை உண்மையானதை எத்தனை பேர் உணர்வார்கள்.

ஆளுமையில் உள்ளவர்கள் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டிற்கு செல்லுகையில் தொட்டு விடாதே, வீட்டிற்கு உள்ளே வந்து விடாதே, என்று புறக்கணிப்பதும், புறம் தள்ளுவதுமாக செயல்படுகிறார்கள். இவர்களின் செயல்பாட்டை தமிழ்அமுதன் மிக நேர்த்தியாக பதிவு செய்கிறார்

அந்தக் காலத்தில்
தாழ்த்தப்பட்ட மக்களை
தண்டிக்காதே!

தீண்டாமையை
தீயிலிடு!

கதர்கள்
மாநாடு போட்டன!

மதப் புலிகள்
மான் வேடமா போடுவது?

இதில் யாருமே விதிவிலக்கல்ல மனிதர்கள் எல்லோருமே மதவாதியாகவும், இனவாதியாகவும், சாதியவாதியாகவும்தான் இருக்கிறார்கள்.

அம்பேத்கரின் உணர்வுகளை கவியாக்கம் செய்கிறார் கவிஞர் தமிழ்அமுதன். அவர் தேங்கி கிடக்கும் நதிகளில் குப்பைகளை அகற்றினார். கோபுரங்கள் மீது படிந்திருக்கும் தூசுகளை தட்டினார். ஒடுக்கப்பட்டவர்களின் தன்மான உணர்வுகளை தட்டி எழுப்பினார்.


தாழ்ந்த மனிதனே!
உறக்கத்தை
உதறு!

உணவு, உடை, உறையுள்
சமமாய் வழங்கச்
சண்டை போடு!

உன் உரிமையைச்
சுரண்டுபவனுக்குச்
சூடு போடு!

இல்லையேல்
நீ
போய் சேரு
சுடுகாடு!

என்ற அண்ணன் அம்பேத்கரின் அக்னி வார்த்தைகளை அப்படியே தமிழாக்கம் செய்கிறார் கவிஞர் தமிழ்அமுதன்.

உயிரினங்களில் விலங்குகளும் சரி, பறவை இனங்களும் சரி, தனக்குள்ளே எந்த ஒரு உயிரினங்களும் அடித்துக் கொள்வதில்லை. உணவு சங்கிலி என்ற பெயரில் ஒரு விலங்கு இன்னொரு விலங்கை அடித்து உண்பது, அந்த விலங்கு வேறொரு விலங்கை அடித்து உண்பது, ஆனால் மானுடம் மட்டும்தான் இவன் உயர்ந்தவன் அவன் தாழ்ந்தவன் ஒருவர் இன்னொருவரை தொட்டால் தீட்டு போன்ற பல்வேறு பிரிவினைகளோடு வாழ்ந்து களிக்கிறார்கள். இந்த பிரிவினைகளை வேற்று கிரகத்து ஆளுமைகள் மனிதனிடம் வந்து திணிக்கவில்லை. மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டான். இந்த பிரிவினைகளும் அடக்குமுறைகளும் காலம் காலமாக அதிகரித்துக் கொண்டே போகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. இந்த வேற்றுமைகளை கவிஞர் தமிழ்அமுதன் நேரடியாகவே சாடுகிறார்.

அரிஜனங்களென்ன
அடிமைகளா?

உயர் ஜாதி இந்துக்கலென்ன
உற்சவமூர்த்திகளா?

என்ன கேள்வி கேட்டாலும் நடைமுறை என்பது அப்படியேத்தான் உள்ளது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றத்திற்கு உள்ளாகிறதே தவிர ஒன்றுமில்லை என்று ஆவதில்லை.

கவிஞர் தமிழ்அமுதன் கையாண்டு இருக்கக்கூடிய எழுத்து வடிவம் மூளைக்குள் சென்று முரசடிக்கின்றது. அம்பேத்கர் சட்ட மாமேதையாக இருந்த போதிலும் அவர் பட்ட துயரங்களையும், மனிதர்கள் அவரை இழிவுபடுத்திய சம்பவங்களையும் கவிஞர் தமிழ் அமுதனின் கவிதைகள் கண்களுக்குள் நீர்க்கசிய வைக்கின்றன. இவரின் இந்த கவிதை நூல் கண்டங்கள் தாண்டியும் பேசப்படும்.

தமிழகத்தில் ராஜா அண்ணாமலை புரத்தில் அண்ணல் அம்பேத்கருக்கு அரசு மணிமண்டபம் கட்டியிருக்கிறது. ஆனால் தனியோரு மனிதனாக “அறிவுச்சூரியன் அண்ணல் அம்பேத்கர்” என்ற நூல் எழுதியதன் மூலம் கவிஞர் தமிழ்அமுதன் அம்பேத்கருக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்.

வாழ்த்துகள்
இன்னும் வளரட்டும் அவரின் தமிழ்!

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *