தொ. பரமசிவன் (Tho.Paramasivan) அறியப்பட வேண்டிய தமிழகம் (Ariyappada Vendiya Thamizhagam) - நூல் அறிமுகம் - தொகுப்பாசிரியர் : முனைவர் க. சுபாஷிணி

அறியப்பட வேண்டிய தமிழகம் – நூல் அறிமுகம்

அறியப்பட வேண்டிய தமிழகம் – நூல் அறிமுகம்

பண்பாட்டு அசைவுகளின் அடையாளம் – பேராசிரியர் தொ. பரமசிவன்

“அறியப்பட வேண்டிய தமிழகம்” எனும் நூலில் தமிழறிஞர்கள் ஏழு பேரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, பேராசிரியர் தொ. ப. வைச் சந்தித்து, பழகி, பேசி அறிந்து கொண்ட நேர்காணல் அனுபவங்களை, உரையாடல்களை அரிய தகவல்களை மிகச் சிறப்பாக வழங்கி உள்ளார்கள்.

இந்த நூலினை நமக்குத் தொகுத்து வழங்கி உள்ளவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர், தமிழறிஞர் முனைவர் கா சுபாஷிணி ஆவார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் நிறைந்துள்ள, மானுடவியல் கூறுகளையும், இயற்கையோடு சேர்ந்த வகையில் அமைந்த மனித வாழ்க்கையும், அலசி ஆராய்ந்து அவற்றை நமக்கு வழங்கியதில் முக்கிய பங்காற்றியவர் பேராசிரியர் தொ. பரமசிவன்.

தமிழர் வாழ்வில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அமைந்துள்ள இயற்கை, தமிழர் உணவு, மிக இயல்பாக மக்கள் அன்றாடம் பயன்படுத்து உப்பு மற்றும் அது சார்ந்த உணர்வுகள் உணவோடு மக்களுக்குக் கலந்து வருகின்ற நம்பிக்கை போன்ற விஷயங்களைத் தமிழர் வாழ்வியலில் அமைந்திருக்க உணவு சார்ந்த விஷயங்களோடு ஒப்பிட்டு கள ஆய்வு செய்த அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது தொ. ப வின் படைப்புக்கள்.

வழிபடும் மக்களுக்கு எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான். பெரிய தெய்வம் சின்ன தெய்வம் என்று எதுவும் கிடையாது. அதுபோன்று கூலி என்ற சொல் தமிழிலிருந்து தான் ஆங்கிலத்திற்குச் சென்றுள்ளது என்று தெரிவிக்கிறார் தொ. ப. கூலி என்ற சொல்லின் வேர்ச்சொல் “கூலம்” கூலம் என்றால் “தானியம்” என்று பொருள்.

செய்யும் வேலைக்கு அன்றன்று தானியங்களைப் பெறுபவர் கூலி ஆவார். இதுவே பிற்காலத்தில் சம்பளம் என்ற சொல் உருவானது. ஏழைத் தொழிலாளர்கள் பெற்றது கூலியாகும். கூலி என்ற சொல் ஏழ்மை நிலையை மட்டுமின்றி சமூக மரியாதை பெறாதவர்கள் என்பதை உணர்த்துகிறதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

உலகமயமாக்கம் என்பது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். இந்தக் கலாச்சார யுத்தத்தை நம் மீது தொடுத்திருப்பது பன்னாட்டு மூலதனம். தான் எந்தெந்த நாடுகளில் எல்லாம் கொள்ளையடிக்கப் போகிறதோ அங்கு முதலில் பண்பாட்டு வன்முறையை ஏவுகிறது பன்னாட்டு மூலதனம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் பேராசிரியர் தொ. ப.

“குளித்தல்” என்ற சொல்லிற்கு நமது உடம்பைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள். சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பம் அடைந்த உடலை “குளிர்வித்தல்” என்பதே அதன் பொருள். குளிர்தல் என்ற சொல்லையே நாம் குளித்தல் என்று தவறாகப் பயன்படுத்துகிறோம். அதுபோன்று “நீராடுதலை” ஒரு கொண்டாட்டமாகக் கருதியவர்கள் தமிழர்கள் என்றும் தொ. ப பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் தேநீர் குடிப்பதற்காகவே தேநீர்க் கடை அருகில் வீடு ஒன்று வாடகைக்குப் பிடித்திருந்தார் என்ற ஆச்சரியமான தகவலும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் பேராசிரியரை 15 பேர் சூழ்ந்து கொண்டு தேநீர் குடித்தபடியே உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்காகவே வீடு வாடகைக்குப் பிடித்திருந்தார்.

பசிப்பிணியை மனித குலத்தின் முதல் எதிரியாக நினைத்துச் செயல்பட்டவர் வள்ளலார் என்று வள்ளலார் குறித்துத் தெரிவித்துள்ளார் பேராசிரியர். பெரியார் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பேராசிரியர் தொ . பரமசிவம். அவர் தனது ஆய்வுக்கு மார்க்சியம் பெரியாரியம், விளிம்பு நிலை கோட்பாடுகளை கையில் எடுத்துக் கொண்டார் என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

நான் திராவிட இயக்கச் சிந்தனையிலிருந்து வந்தாலும் இடதுசாரி சார்பு உடையவன் தான் என்றும் பேராசிரியர் தொ . பரமசிவன் தெரிவித்துள்ளார் . சாதியை ஒதுக்கி விட்டு நிகழ்த்தப்படும் தமிழ்ச் சமூகத்தின் மீதான ஆய்வுகள் முழுமை அடையாது. இதைச் சரியாகக் கணித்தவர் பெரியார் தான். அவர் கடவுளை விடச் சாதியைத்தான் முழுமையாக எதிர்த்தார் என்பதையும் அருமையாகப் பதிவிட்டுள்ளார்கள்.

அதுபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பதே பெண்களின் உணர்வது தான். சிறுதெய்வ, குலதெய்வ வழிபாடுகளில் பெண்களே முன்னிலை பெறுகின்றார்கள். உலகில் எந்த மதமானாலும் பெண் தெய்வம் இன்றி ஒரு மதமும் நிற்காது, வாழாது என்ற தகவலையும் தொ. ப. மூலம் அறிந்து பதிவிட்டுள்ளார்கள். இன்றைய சமூக மாற்றத்தால் பண்பாட்டுக் கூறுகள் பெருமளவில் சிதைந்து வருவதையும் தொ. ப. குறிப்பிடத் தவறவில்லை.

மக்கள் வாழ்விடப் பகுதிகளில் அகழாய்வு செய்தால்தான் நகர நாகரீகம் பற்றியும் தொழிற்கூடங்களையும் வணிகம் தொடர்பான அகழாய்வு சான்றுகளையும் கண்டெடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிவித்தார் பேராசிரியர் தொ.பரமசிவன்.

பேராசிரியர் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம் …

நூலின் தகவல்கள் : 

நூல் : அறியப்பட வேண்டிய தமிழகம்
விலை: ₹80
ஆசிரியர் : தொ. பரமசிவன்
தொகுப்பாசிரியர் : முனைவர் க. சுபாஷிணி
வெளியீடு : 2021 – தமிழ் மரபு அறக்கட்டளை
கிடைக்குமிடம்: https://www.commonfolks.in/books/d/ariyappada-vendiya-tamizhagam

தொடர்பு கொள்க : வாட்சப் எண் : +91-7550174762

நூல் அறிமுகம் எழுதியவர் : 

MJ. பிரபாகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *