அரியவகை அபத்தங்கள்
அறிவியல் முன்னேற்றங்களாலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களாலும் மனித இனம் எங்கோ சென்றுகொண்டு இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கையில், போலிச் செய்தியின் பரவலுக்கு அதே அறிவியல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் நடக்கிறது. செல்பேசியிலும் இணையத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வந்த பிறகு எதனையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இணையத்தில் இருப்பதெல்லாம் உண்மையும் அல்ல. சிலர் வாட்ஸப்பில் வந்தால் உண்மையாகத்தான் இருக்கும் என்று அதன் உண்மைத்தன்மையை உறுதியாகத் தெரிந்துகொள்ளாமல் பகிர்வதுடன், அப்படி பகிரப்படும் தகவல் உண்மை என்று வாதிடவும் செய்கின்றனர்.
இந்த வகையில் நம் முன்னோர்கள் எவ்வளவோ மேல். ஏனென்றால் அவர்களிடத்தில் தேடலும், கூர்நோக்கு திறன்களும் இன்றைய தலைமுறையினரைவிட அதிகமாவே இருந்தது. சரி, சராசரி மனிதர்கள்தான் தங்கள் அறியாமையால் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் இன்றைய ஊடகங்களும் அப்படித்தான் இருக்கின்றன. எந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவினாலும் அதன் உண்மைத்தன்மை என்னவென்று அறியாமலேயே செய்திகளையும் வெளியிடுகின்றனர். ஊடகத்தில் வெளியாகும் செய்திகள் அனைத்துமே உண்மைதான் எனும் நிலை எப்போது மாறிவிட்டது. இந்த “அரியவகை அபத்தங்கள்” என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வந்த வனவிலங்குகள் குறித்து வெளியான சில தவறான தகவல்களைப் பார்ப்போம்.
அரியவகை ஆந்தை
இந்த அரியவகை என்று ஆரம்பித்தாலே, முதலில் எனக்கு ஞாபகத்திற்கு வருவது கூகைதான். இது வெண்ணிறத்தில் இருக்கும் ஒரு வகையான இரவாடி பறவை. ஆந்தை குடும்பத்தைச் சார்ந்தவை. இதனை ஆங்கிலத்தில் பர்ண் அவுள் (Barn Owl) என்று அழைப்பர். இது அண்டார்டிகா தவிர மற்ற எல்லா கண்டங்களிலும் பரவலாகக் காணக்கூடிய பறவை.

இதை நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பார்க்க முடியும். இவை எலிகளை விரும்பி உண்ணுவதால் இதனை விவசாயிகளின் நண்பன் என்றும் அழைப்பர். இவை கோவில் கோபுரங்கள் மற்றும் உயர்ந்த கட்டடங்களின் பொந்துகளில் வாழும். இவை இரவாடி பறவை என்பதாலே பகலில் அரிதாகவே தென்படும். பகலில் தென்பட்டால் காக்கைகள் இதனை விரட்டும். அப்படி விரட்டும் பொது அடிபட்டு மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் செய்திகளை நாம் கண்டு இருப்போம். செய்திகளில் இதனை அரியவகை ஆந்தை, ஆஸ்திரேலியா, ஆந்தை, ஆப்பிரிக்க ஆந்தை என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். நாம் இதனை காண விட்டால் அது எப்படி அரியவகை ஆகும்? இது மட்டுமா? ‘அரிய வகைகள்’ இன்னும் இருக்கின்றன…
குஞ்சுகளுக்கு பால் கொடுக்கும் அபூர்வ மரகதப் பறவை
“மரகதப் பறவை என்பது பறவை இனத்தில் மிகவும் அபூர்வமான பறவை, அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இது குஞ்சு பொறித்து குஞ்சுகளுக்கு பால் கொடுக்கும் இனம் என்றும், பிறகு இது நமது தமிழ்நாடு அரசின் அடையாளப் பறவையாகும்” என்ற வசங்களுடன் கூடிய ஒரு காணொளியானது சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இது அபூர்வ பறவையோ அல்லது தமிழ்நாடு அரசின் அடையாளப் பறவையான பறவையோ அல்ல. பின்பு இந்தப் பறவை நிஜமாலுமே பால் கொடுக்கும்? சரி இனி உண்மை என்ன என்று பார்ப்போம்!
இது கல்கவுதாரி என்று அழைக்கப்படும் பறவை இனமாகும்! இதனை ஆங்கிலத்தில், சாண்டுகிரௌஸ் (Sandgrouse) என்று அழைக்கப்படுகின்றது. இது வறண்ட நிலங்களிலும், புல்வெளிகளிலும், தரிசு நிலங்களிலும் வாழக்கூடிய பறவையாகும். தமிழ்நாட்டில் இரண்டு வகையான கல்கவுதாரிகள் தென்ப்படுகின்றன. ஒன்று கல்கவுதாரி (ஆங்கிலத்தில் செஸ்ட்நட்-பெல்லீடு சாண்டுகிரௌஸ் Chestnut-bellied Sandgrouse) என்றும், மற்றோன்று வர்ண்க் கல்கவுதாரி (ஆங்கிலத்தில் பெயிண்டடு சாண்டுகிரௌஸ் Painted Sandgrouse) என்றும் அழைக்கப்பட்டுகிறது.

இந்தப் பறவையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது வறண்ட நிலப்பரப்பில் வாழ்வதால், வெப்பம் அதிகமாக இருக்கும் வேளைகளில், இதன் குஞ்சுகளுக்கு தண்ணீர் வழங்க, ஆண் பறவையானது நீண்ட தூரம் பயணித்து, அதன் சிறப்பு வாய்ந்த வயிற்று பகுதியில் இருக்கும் சிறகுகளால் தண்ணீரை உரிந்து வந்து தன் குஞ்சுகளுக்கு வழங்கும். ஆங்கிலத்தில் இந்த நடத்தைக்குப் பெயர் பெல்லி சோக்கிங் பிஹேவியர் (belly soaking behaviour). இப்படி ஒரு சிறப்பு அம்சம் இந்தப் பறவைக்கு இருப்பினும், இன்னும் ஆபூர்வமான பாலூட்டும் பறவை என்ற போலிச் செய்தி சமூக வலைத்தளங்களில் வளம் வந்துகொண்டுதான் இருக்கிறது…
அறியவகை புல்புல் தாரா
“திருக்கழுக்குன்றத்தில் அரிய வகையை சேர்ந்த புல்புல் தாரா பறவைக்காக வீட்டிலிருந்து வெளியேறிய குடும்பத்தினர்” என்ற தலைப்புடன் பிரபலமான தமிழ் நாளிதழில் வந்த செய்தி இது! முதலில் புல்புல் தாரா என்பது பறவை இனம் தானா? சரி உண்மை என்ன என்று பார்ப்போம்…

இந்த செய்தியில் உள்ள பறவையின் புகைப்படத்தைப் பார்க்கும்பொழுது, அவர்கள் குறிப்பிடுவது செம்மீசைச் சின்னான் (ஆங்கிலத்தில் ரெட்-விஸ்கர்டு புல்புல் ) என்று தெரியவருகிறது. தமிழ்நாட்டில் எட்டு வகையான சின்னான்கள் உள்ளன. சின்னான் என்பது பரவலாக காணப்படும் பறவையாகும். ஆனால் ஏன் இவர்கள் அரியவகை புல்புல் தாரா என்று குறிப்பிடவேண்டும்? செய்தியாளர் அரியவகை இசைக் கருவியான புல்புல் தரங்கை புல்புல் என்று அழைக்கப்படும் சின்னனோடு தொடர்பு ஏற்படுத்திவிட்டார். 1950 முதல் 1970 வரை பாலிவுட் சினிமாக்களில் பிரபலமாக இருந்த புல்புல் தரங், இசைத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களாலும், சாப்ட்வேர் தொழில்நுட்பங்களின் வருகையாலும் அரிதாகிவிட்டது! ஆனால் சின்னான் இன்னும் அரிதாகவில்லை, பரவலாகக் காணப்படுகின்றது! இன்னும் சொல்லப் போனால் சின்னான் என்று சொன்னால்கூட பலருக்கும் அது நினைவுக்கே வருவதில்லை! சாவக்கர் புல்புல் என்றால்தான் நினைவுக்கு வருகின்றது…
வயது முதிர்ந்த பறவைக்கு உணவளிக்கும் இளம் பறவை
“முதுமையால் இரைதேடி பறக்கமுடிவில்லை. முதியோர் இல்லமும் இல்லை. ஒரு சிறிய பறவை அதற்கு உணவு ஊட்டும் அழகு அருமை. உறவை இதுபோல் யாரும் சித்தரிக்க முடியாது. படம் எடுத்தவற்கு ஓரு சல்யூட்” என்ற வசனத்துடன் சமூக வலைத்தளத்தில் வளம் வரும் காணொளியை எல்லாரும் கண்டு இருப்போம். அந்த காணொளியில் வருவது வயது முதிர்ந்த பறவையா? அதற்க்கு உணவு கொடுப்பது சிறிய பறவையா? என்பதை காண்போம்…
அந்த காணொளியில் வருவது, பெரிய பறவை வயதான பறவை அல்ல. பெரியதாய் தோற்றமளிக்கும் பறவை குயிலின் குஞ்சு. பொதுவாக பறவைகளில் குக்குலிடே (Cuculidae) குடும்பத்தைச் சார்ந்த குயில்கள் மாதிரியான பறவைகளுக்குக் கூடு கட்டும் மற்றும் குழந்தை வளர்க்கும் (parental care) திறன்கள் இல்லாததால், அவை அடுத்த பறவையின் கூட்டில் முட்டையிடும். அவை பெரும் பாலும் அதன் முட்டையின் நிறத்தோடு ஒத்துப்போகும் பறவையின் கூட்டில்தான் முட்டையிடும். அந்தக் குஞ்சு முட்டையிலிருந்து வெளி வந்தவுடன், அது பிற முட்டைகளைக் கூட்டிற்கு வெளியே தள்ளி, உடைத்துவிடும். அந்த குயில் குஞ்சை தன்னுடைய குஞ்சு என்று எண்ணி உணவளித்தே களைத்து விடும் இந்த சிறிய பறவை (foster parent). இதற்க்கு ஆங்கிலத்தில் ‘ப்ரூட் பரசிட்டிஸம்’ (Brood Parasitism) என அழைக்கப்படுகிறது. பறவைகளின் மத்தியில் காணப்படும் அடைகாக்கும் ஒட்டுண்ணித்தனம் தான் இது! இதை நாம் சிறுவயதிலே, குயில் காக்கா வின் கூட்டில் மூட்டையிடும் என கேட்டிருப்போம். ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு வாட்சாப்பில் வந்தால் உண்மைதான் என்று நம்பி இன்னும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலே பறவைகள் குறித்து பகிரப்படும் அபத்தங்களைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளேன். ஆனால் அரிய வகை அபத்தங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த எல்லாவற்றிலும் போலிச் செய்திகளாகப் பரவிக்கொண்டே இருக்கின்றன.
சரி இதற்கு தீர்வு தான் என்ன?
இந்த டிஜிட்டல் யுகத்தில் இதற்கு தீர்வு என்று கேப்பது, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல இருக்கிறது. ஏனென்றால், இந்தக் காலத்தில் எல்லோரும் திறன்பேசியை (ஸ்மார்ட் போன்) வைத்துள்ளோம். ஏதேனும் தகவல் தங்களுக்கு புகைப்படம் மூலமாக வந்தால், தங்களுடைய அலைபேசியை எடுத்து, கூகுள் லென்ஸ் (Google lens) என்னும் செயலி மூலமாக எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு நம்மால் சரிதானா என்று உறுதி படுத்திக்கொள்ள முடியும்.

அவ்வாறு உறுதி படுத்திக் கொள்வது கடினமாக இருந்தால், முகப்புத்தம் (Facebook) போன்ற தளங்களில் எண்ணெற்ற குழுக்கள் இருக்கின்றன. அதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் தகவலுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு குழுவில் பதிவிட்டு, உறுதிப் படுத்திக்கொள்ளலாம். அதற்கு முன்பு அந்தக் குழு துறை சார்ந்த அறிவுள்ளவர்கள் இயங்கும் குழுதானா, இல்லை அதுவும் ஓர் ‘அரியவை அபத்தங்களை’ பகிரும் குழுவா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
எழுதியவர் :
– பிரசாத் செல்வராஜ்
கோவையில் வசித்து வரும் சுயாதீன ஆராய்ச்சியாளர். நீர் வாழ் பறவைகளை ஆராய்ச்சி செய்து வருகிறார். இவர் மயிலாடுதுறை AVC கல்லூரியில் வன உயிரியலில் ஒரு முதுகலைப் பட்டமும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊடகவியலில் ஒரு முதுகளைப்பட்டமும் பெற்றுள்ளார்! பறவைகள் நோக்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான கட்டுரை. வாழ்த்துகள் பிரசாத். இனியாவது அபத்த பேர்வழிகள் திருந்தட்டும்.
இன்னும் இன்னும் நிறைய… அபத்தங்கள் உண்டு… அவற்றையும் கட்டுரையாளர் தோலுரிக்க வேண்டும்… சிறப்பான கட்டுரை!