வெளியே மங்கலான ஓவியமொன்று உருவாகிக் கொண்டிருந்தது. வெளிர் மஞ்சள் தீட்டிய வானம் மெல்ல மெல்ல தன் நிர்வாண உடலை வெற்றிடத்திற்குள் உள்வாங்கிக் கொண்டது. வெட்கத்தைப் பூசுகிற இளஞ்சிவப்புச் சூரியன் மறையத் துவங்குகிற அதேவேளை கோடிக்கணக்கான நட்சத்திரக் கண்களின் குறுகுறுப்புப் பார்வையோடு வானம் மெல்ல முதலிரவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.

அன்றைக்கு இரவு இன்னும் கூடுதலான கருமை நிறத்தை அப்பியதுபோல ஊர் மங்கி தேய்ந்து கொண்டிருந்தது. பிறைநிலா வெளிச்சம் வாசல் முகப்பில் நுழையும் முன்பே காவலாளி நியான் விளக்குகளை எரியவிட்டுக் கொண்டிருந்தான். அது மெல்ல கரைந்து கொண்டிருக்கிற பிரதி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை. அந்த இரவு முற்றிலும் வெறுமையை சுமந்து கொண்டிருந்தது. அன்றாட இரவின் ஒட்டுமொத்த சலிப்பையும் முகத்தில் சுமந்து கொண்டு திரிவதைப்போல காவலாளி வாயிலை அடைத்தபடி நடந்து கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக ஒரே வேலையை செய்வதென சாவியிடப்பட்ட பொம்மையைப்போல நடக்கிற அவனது தோரணை யாவரையும் எளிதில் ஈர்த்துவிடக் கூடியதாக இருக்கும்.

நிசப்தம் அப்பிப் போன அந்த இரவில் வாசலுக்கு வெளியே வாகனங்கள் அலங்கோலமாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் ஏதேதோ அவசர கதியில் வந்தவை போல ஏதோவொரு சாயலில் ஆம்புலன்ஸின் முகஜாடையொத்தபடி சோபையாக நின்று கொண்டிருந்தன. வாகன முடுக்கில் நெடுநெடுவென வளர்ந்திருந்த புங்கை மரத்தின் கிளை இடுக்குகளின் வழியே காய்ந்து கொண்டிருக்கிற வெளிர் நிலா அந்த அரசு மருத்துவமனையின் பலகைக்கு மெல்ல உயிரூட்டிக் கொண்டிருந்தது.

பரபரபற்றிருக்கும் அகால நீண்ட சாலையின் விளிம்பில் நின்றிருந்தது அந்த காயல் அரசு மருத்துவமனை. வாசலின் நுழைவுவாயிலில் கவிழ்ந்தபடியிருக்கும் பொன்விழா வளைவு அது வாழ்ந்த வாழ்வை சொல்லுபவையாக இருக்கும். தடித்த பக்கச் சுவர்களின் தோள்கள் வெடித்து உடல் உப்பிப்போய் அங்கங்கே உடல் நலிவுற்று சுண்ணாம்பு உரிபட்டு பார்ப்பதற்கு அவை தேம்பித்தேம்பி அழுவதைப்போல் இருந்தது.

வாழ்வின் எல்லைகளற்று ஓடித்திரியும் மனிதக் கால்கள் நோய்மையின் பொருட்டு மறுவாழ்வைத் தேடிப் பிரவேசிக்கும் இடமாக மருத்துவமனை விளங்கியதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிறப்பும் இறப்பும் இயல்பென மக்களின் காலங் கடந்த நம்பிக்கையெல்லாம் உடைந்து மலட்டுப்பையில் ஊசிக்குழாய் வழியே பிள்ளையை ஜனிக்க வைக்கவும், இறப்பின் ஏக்கப் பெருமூச்சுடன் வருகிற உயிர்களுக்கு மறுபிறவு அளிப்பதுமாகிய வாழ்வின் கடைசியொரு நூலிழையைப் பிடித்தபடி வருகிற அத்தனை ஆயிரம் மக்களின் சோக மனங்களை கண்விழித்தபடி படித்திருக்கிறது இந்த நுழைவு வாயில். இன்று ஏனோ ஆள் அரவமற்று நிற்கிறது.

எந்த முகத்திலும் ஈர்ப்பில்லை, பிடிமானமில்லை, உயிர்ப்பில்லை, தங்களால் சிரிக்க முடியும் என்பதையே அவர்கள் மறந்துவிட்டிருந்து பல நாட்களாகி இருந்தன. ஏனைய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் துவண்டுபோய் மெல்ல அடியெடுத்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்களின் நகர்வு வீட்டிற்கு மறுபடியும் செல்ல வேண்டாம் என்பதான தோரணையில் இருந்தது. மணி எட்டை கடந்துவிட்டதாக தேவாலைய மணியோசை கேட்கத் துவங்கியிருந்தது. தேவன் உங்களை இரட்சிப்பாராக! என்கிற ஒலிப்பெருக்கி வசனம் எவரையும் அங்கு ஈர்த்ததாகத் தெரியவில்லை.

சுத்தமாக கழுவிவிட்டதைப்போல் மருத்துவமனை வளாகம் பேச்சு மூச்சற்றுக் கிடந்தது. புதுவிதக் காய்ச்சல் பரவிவிட்ட அபாயத்தின் முன்னறிவிப்பில் உடல் அசதி, வலியென்று தங்களின் சலிப்பான நோய்குறிகளுடன் இப்போதெல்லாம் எவரும் வருவதில்லை என்பதன் சாட்சியமாக நிசப்தமே அங்கு நிலவியது. ஒட்டுமொத்த இருளும் மருத்துவமனையின் துயரத்தை பீடித்திராதவாறு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கிற நியான் விளக்குகள் ஆரஞ்சு வண்ண நிறத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மனிதனுக்கு சவால் விடும்படியான நுண்கிருமிகளெல்லாம் சுதந்திரமாக நியான் விளக்குகளைச் சுற்றியலைந்தபடி சிலந்தியின் நூலிழை நடனத்தை ஒய்யாரமாக ஆடிக் களித்துக் கொண்டிருந்தன.

தூரத்தில் அங்குமிங்குமாக ஊழியர்களின் வாகனங்களும் அதனையொட்டியபடி துக்கத்தோடு கதைபேசிக் கொண்டபடி நிற்கிற நோயாளிகளின் உறவினர்களும் நிறைந்த பகுதியாக அந்த மருத்துவமனை வளாகம் காட்சியளித்துக் கொண்டிருந்தது. நேரம் மெல்ல மெல்ல தூக்கத்தை தழுவிக் கொள்ள துடித்துக் கொண்டிருந்தது. மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு அவரவர் கூடுகளுக்கு திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். வளாகத்தின் வாகை மரமொன்றில் ஏற்கனவே கூடடைந்துவிட்ட மஞ்சள் மைனா ஒன்று தன் குஞ்சுகளோடு குதூகளித்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. ஒருவருக்கும் தவமிருந்து பெற்ற பிள்ளையைப் பார்க்கப் போகின்ற ஏக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏதோவொரு ஏக்கப் பெருமூச்செரியும் கனத்த மௌனத்தோடு அவர்கள் தளர்ந்துபோய் நகர்ந்து கொண்டிருந்தார்கள். மருத்துவமனைக்கு உள்ளே நுழைவதைவிடவும் வீட்டிற்கு கிளம்புவது அவர்களுக்கு ஏனோ சலிப்பூட்டுவதாயிருந்தது.

செவிலியர் அமலா தன் ஆடைகளை வெங்காயத் தோலுரிப்பதைப்போல ஒவ்வொன்றாக அவிழ்கத் துவங்கியிருந்தாள். கிட்டத்தட்ட அவள் எகிப்தின் பல்லாயிரம் ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட களைப்போடு வந்து நிற்பதைப்போல இருந்தது. கவச உடையில் வெளித்தெரியும் ஜோடிக் கண்களைத்தவிர அவள் அமலா என்று சட்டென்று சொல்லிவிடும்படியான அவளது குரலில் இருந்து ஈனமான வர்த்தைகள் சோபையற்று நழுவிக் கொண்டு வெளியே வந்து விழுந்தது. ஆறுமணி நேர களைப்பின் உச்சத்தில் மிஞ்சிய எச்சிலால் தாகத்தை தீர்த்தும் தீராத தண்ணீரின் வேட்கையை அவளது வலதுகை கட்டைவிரலை நீட்டி வாயின் அருகே கொண்டுபோய் உணர்த்த வேண்டியிருந்தது.

அமலாவின் அவக்கோலத்தை சட்டென்று புரிந்து கொண்டவளைப்போல அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டியபடி வேணி அடுத்த இரவுப் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். சக மனித குலமே சகிப்புத்தன்மை இழந்து நிராதாரவாக விட்டுவிட்ட காய்ச்சல் நோயாளிகளையெல்லாம் தான் ஒன்றும் இயேசுபிரானைப்போல வேதனைகளை ஆற்றிவிட்டு அவர்களை ஓரிரவிலேயே இரட்சித்துவிட முடியுமென்றெல்லாம் அவள் நினைத்துக் கொள்ளவில்லை. அவளும் ஒரு சாமானிய மனுஷிதான் என்பதை ஏனோ சமூகம் மறந்துவிட்டதை நினைத்தபடி சலிப்போடு அங்கு நின்று கொண்டிருந்தாள்.

அமலாவிற்கு எப்படி ஒரே ஆண்பிள்ளையோ, வேணிக்கும் ஒரே ஒரு ஏழுமாத பால்குடி மறவாத பெண் பிள்ளை. நோயாளிகளின் அவஸ்தையான பெருவலிகளைக் கவனிக்கும் பொருட்டு எப்போதேனும் தான் அசட்டையாக இருக்கிற சமயத்தில் நுண்கிருமிகள் நுழைந்து தன்னுள் தொற்றிக் கொள்ளுமோ என்கிற அச்சம் இருவருக்குள்ளுமே நிறைந்திருந்தது. உல்லாடைகளைத் தாண்டி அடுக்குகளாக வேயப்பட்ட கவச உடைகளைத் தரித்திருக்கிற சமயத்தில் வேணியின் பால் தங்கிய மார்பு கனத்து விக்குகிற சமயத்தில் மூத்திர அடக்குதலைவிட அவளுக்கு அது கொடியதாக இருக்கும். பணிமுடியும் தருவாயில் கழிவறையில் அடக்கி வைக்கப்பட்ட சிறுநீரைக் கழிக்கும் சமயத்தில் மார்பில் கட்டிய பாலை கரைத்து வெளியேற்றும் வேணியின் நினைவுகளெல்லாம் வெறுமனே கம்பை நினைத்து சப்பியபடி இருக்கிற மகளை நினைத்தபடி ஏங்கிக் கொண்டிருக்கும்.

பணி முடிந்து வீட்டு முற்றத்தில் நுழையுமுன்னே கட்டித் தழுவிக் கொள்ள ஓடோடி வருகிற மகனை ஆரத்தழுவிக் கொள்ள எண்ணுகிற அமலாவின் மனமோ ஒருமுறை காய்ச்சல் கிருமியை நினைத்து குளியலறை செல்லுவதாக போக்கு காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிடும். மகளை வாரியெடுத்து மடியில் கிடத்தி மார்புக் காம்பை வாயில் திணிக்கிற பொழுதெல்லாம் வேணிக்கு கழிவறையின் பால் பீய்ச்சியெடுத்த நினைவுகள் எழும்பி கவலைகள் அவளை வாட்டியெடுக்கும். அகோரப் பசி கொண்ட காய்ச்சல் கிருமிகளைப் பற்றிய அச்சத்தோடு அவள் மீண்டும் மார்பைக் கனக்க விட்டபடி பிள்ளைக்காக பசுவின் காம்புகளைத் தேடியலைவாள். அமலாவும் வேணியும் தன்னிலை இழந்து வாழ்வின் நினைவோட்டத்தில் தேங்கி நிற்கின்ற சமயத்தில்தான் தேவாலய மணியேசை எட்டாவது மணியை எழுப்பிக் கொண்டிருந்தது.

“என்ன வேணி ஒரு வாட்டமா இருக்கே?” அமைதியை விலக்கிக் கொண்டு பேசத் துவங்கினாள் அமலா. தன் கவலையெல்லாம் மறந்து அந்தச் சமயத்திலும்கூட சகமனிதரை நேசித்துவிடக்கூடிய ஆன்மாவை அமலா இன்னமும் இழந்துவிடாமலிருப்பது ஆச்சரியமான விசயமாகவே தோன்றியது.

“இல்ல. நேத்தே மாஸ்க், கவுனெல்லாம் காலியாவப் போகுதுன்னு லெட்டர் கொடுத்தாச்சு. நைட் சிப்டுக்கு வந்திரும்னு சொல்லிருக்காங்க, அதான்..” என்று வர்த்தைகளை இழுத்து நீட்டியபடி வேணி உணர்வற்று பதிலளித்துக் கொண்டிருந்தாள். அவள் இன்னும் சுயஉலகிலிருந்து மீண்டு வராதவளாய் தன் குழந்தையின் நினைவுகளுக்குள் மூழ்கியபடி குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

“அச்சச்சோ! அப்போ நைட் சிப்டுக்கு கவுன் வரலைன்னா??? ”

“….”

“அப்போ நீ, எப்படி போய் டியூட்டி பாப்ப?” என்ற அமலாவின் குரலில் வார்த்தைகளெல்லாம் உடைந்து காற்றில் சிதறி அது அர்த்தமற்றதாய் எங்கோ கரைந்து ஒதுங்கியது. இருவருக்கும் அதுவொரு அவஸ்தையான தருணமாக இருந்தது. அமலாவின் கவச உடைகள்தான் இறுதி இருப்பு என்கிற பதட்டம் அந்த அறையைச் சூழந்து கொண்டது. வெளியே படர்ந்திருந்த இருள் மெல்ல அறையினுள் நிரம்பிக் கொண்டிருந்தது. தற்சமயம் கவசங்கள் வரவில்லையானால் வேணியால் பாதுகாப்பின்றி நிராதாரவாக இரவுப் பணிக்குச் செல்ல முடியாது. அதேசமயம் தற்சமயம் கவச உடை அணிந்திருக்கிறவள் என்கிறவளின் பொருட்டு அமலாவால் இப்போது கவசத்தைக் கழற்றிவிட்டு பணியைவிட்டு வெளியே செல்லவும் முடியாது.

Image

ஓவியம் எஸ்.குமார் 

வேணி நெற்றியைச் சுருக்கிக் கொண்டு மங்கிய பார்வையோடு அமலாவைப் பார்த்தாள். ஆறுமணி நேரமாக இறுகிப்போன கவச உடையில் அவள் மார்ச்சுவரியில் பார்சல் செய்யப்படுகிற பிணத்தை நினைவுபடுத்துபவளாக உயிரற்று நின்று கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட அவ்விருவரின் நிலைமையை ஒருவொருக்கொருவர் உணர்ந்தே இருந்தனர். அமலாவிற்கு சுருக்கென்று அடிவயிற்றில் ஏதோ ஊறுவது போலிருந்தது. அப்போதுதான் கவச உடைகளைக் கழற்றிக் கொள்ளாமலே தண்ணீர் அருந்திய அறிகுறிகளின் தீவிரத்தை அவள் மெல்ல உணரத் துவங்கியிருந்தாள்.

அமலா தொடையை இடுக்கிக் கொண்டாள். கவசத்தின் உடை இறுக்கமாகி உடல் முழுவதிலும் புகைமூட்டம் போல் புலுங்கிக் கொண்டிருந்தது. மூச்சுத்திணறலுடன் அடிவயிறு இன்னும் இறுக்கிப்பிடிக்கத் துவங்கவே அவள் கட்டுப்பாடின்றி தவிக்கத் துவங்கினாள். இன்னும் ஒரு வார்த்தை பேசினால் சிறுநீர் கழித்துவிடுவோமோ என்கிற பிரம்மை அவளுக்குள் தகித்துக் கொண்டிருந்தது. அவளது சிறுநீர் அழுகையாக கண்களில் வடிந்து கொண்டிருந்தது.

இரவு இன்னும்கூட நிசப்தமாகிக் கொண்டே இருந்தது. நியான் விளக்குகளைத்தவிர வளாகத்தை கண்விழித்துப் பார்த்துக் கொள்வதற்கான நபர்கள் யாருமற்ற காய்ச்சல் வளாக முற்றம் முழுவதும் வெற்றிடமாகியிருந்தது. நடப்பது எதுவும் தனக்கு தெரியாது என்பதாக தூரத்தில் நாய்கள் இன்பத்தின் திளைப்பில் புணர்ந்து கொண்டிருந்தன. காய்ச்சல் பிரிவின் மாலைப் பணியாளர்களும் இரவுப் பணியாளர்களும் மட்டும் தனித்திருந்த அறைகளில் இதுவரை அவர்கள் வாழ்வில் சந்தித்திராத இருளின் பயத்தையும், அமைதியின் கொடூர பாவத்தையும் ஒவ்வொருக்கொருவர் முகத்திலுமே இனம் கண்டு கொண்டிருந்தனர்.

“அக்கா, நீங்க எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க? போயி, டிரெஸ்ஸ மாத்திட்டு வாங்க” என்று சன்னமான குரலில் பேச்சுக் கொடுத்தாள் வேணி. இருண்ட மலைக் குகையினுள் சிக்கிக்கொண்டு எங்கோ தொலைதூரத்தில் காப்பாற்ற வருகிற மனிதனின் மெல்லிய குரல் கசிந்து காதோரம் வருவதைப்போல் இருந்தது அமலாவிற்கு. என்ன? என்பதாக மறுபடியும் ஒருமுறை புரியாதவளைப்போல் கேட்டுக் கொண்டாள். அவளது அசட்டையான தேம்பிய குரலில் இருந்து நீ சொல்வது உண்மையாகவா? என்று உறுதிப்படுத்திக் கொள்வதைப் போலவும் அல்லது அது எப்படி முடியும்? என்பதான சந்தேகக் குரலாகவும் அவளது வார்த்தைகள் உருகி உருகி மெல்ல அந்த அறையின் எஞ்சிய காற்றுடன் கரைந்து கொண்டிருந்தது. அந்த அறையின் புலுக்கமான இறுக்கத்தில் இருவருக்கும் இன்னும் கூடுதலாக மூச்சு திணறுவதைப் போலிருந்தது.

“ஆமாக்கா. அதான் எட்டு மணிக்கு வந்திரும்னு சொல்லிருக்காங்கல்ல. நீங்க எவ்வளவு நேரம் இப்படியே நிப்பீங்க. போய் மாத்தீட்டு வாங்க” என்று உறுதியாக வேணி சொல்வதாகத் தெரியாவிட்டாலும்கூட அமலாவின் காதுகள் அவள் நிச்சயமாய்தான் சொல்வதாகவும் அப்படி ஏதேனும் கவசம் வரவில்லையானாலும்கூட சமாளித்துக் கொள்ளலாம் என்றோ அல்லது சிறுநீர் ஆடையில் கசிந்துவிடுவதைக்காட்டிலும் அது தன்னை எந்தவிதத்திலேயும் கஷ்டப்படுத்திவிடப் போவதில்லை என்றோ அவள் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தாள். அமலா சட்டென்று தன் ஆடைகளைக் களைத்தபடி நொடிப்பொழுதில் கழிவறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள். அவள் கண்ணீர் வடித்தாளா அல்லது சிறுநீரைக் கழித்தாளா என்பதை அவளது ஆடைகளும் கழிவறைகளுமே ஒருவேளை அறிந்திருக்கக்கூடும்.

“மேடம்! பர்சல் வந்திருக்கு. வாசலுக்கு வந்து வாங்கிக்கோங்க” என்ற வார்டின் தொலைபேசி எண்ணிற்கு அழைப்புமணி வந்த சமயம் அவளுக்கு தேவாலய மணியோசைவிட இதமானதொரு தருணமாகத் தோன்றியது. அவள் துள்ளியெழுந்தாள். அமலாவின் கழிவறைக் கதவுகளை அவள் கொஞ்சமும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

“அக்கா! அக்கா! கதவத் தெறங்க, பார்சல் வந்துருச்சு, சீக்கிரமா வெளிய வாங்க” என்ற அவளது குரலில் தெளிந்த உற்சாகம் அந்த அறை முழுவதும் மீண்டும் உயிர்ப்பைக் கொண்டு வருவதைப்போல அறையின் விளக்குகள்கூட இன்னும் பிரகாசமாய் எரிவதாய் தோன்றியது. பேச்சுக்குரல், சிறுநீர் கழிப்பதை நிறுத்தியதோ இல்லையோ கண்ணீரை ஒருவழியாக நிறுத்தியது என்றே அமலாவிற்கும் பட்டது. தண்ணீரால் எவ்வளவு கழுவியும் தனித்துத் தெரிகிற முகத்தினது கண்ணீரின் வடுகளை வேணியும் அறியாதவளில்லை. ஆடையில் கசிந்தபடி நெடியேறிய அறையின் சுவாசத்தை அவளும் உணராதவலில்லை. அனுபவம் எல்லாருக்கும் பொதுவானதுதானே என்பதாகவே வேணியின் முகபாவனை இருந்தது.

கவிந்துபோன இரவும் மங்கிய நியான் வெளிச்சமும் மயான அமைதியும் கூடிய பொழுதில் அப்பெட்டிகள் சவப்பெட்டியை யாவருக்கும் நினைவுறுத்துவதாய் இருந்திருக்கக் கூடாது என்றாலும்கூட எல்லோரின் மனதிலும் அவ்வாறே பட்டது. அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு சலிப்பு தட்டுப்பட்டு மறைந்தது. காய்ச்சல் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களென சூழந்துவிட்ட அந்த கணப்பொழுதில் அமலாவும் வேணியும் ஆசையோடு பெட்டியை பிரிக்கத் துவங்கியிருந்தனர். அனைவரின் முகத்திலும் எல்லா சிரமத்தையும் மீறிய சிறு உணர்ச்சி, ஒரு உயிர்ப்பு, உதட்டில் மெல்லிய சிரிப்பு தோன்றியிருந்தது. அமலா, செல்லமாக வேணியை இடித்துக் கொண்டாள்.

பெட்டிக்குள்ளே அடுக்கடுக்காக கவச உடைகள் நிரம்பி வழிந்தன. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த துயரங்களிலிருந்தும் தன்னை மீட்டுவிடப்போகிற தீர்க்கமான ஒரு தரிசணத்திற்கு அவர்கள் காத்திருப்பதைப்போன்று அப்போது தோன்றியது. அமலா மெல்ல ஒரு உடையை கையிலெடுத்துப் பார்த்தாள். அது ஏனோ அவள் அணிந்து கழற்றிய கவசத்தைக் காட்டிலும் விந்தையானதொரு முறையில் இருந்தது. அவள் புரியாதவளாய் முன்னும் பின்னும் திருப்பித் திருப்பி அதனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேணி அதிர்ந்தவளாய் “அக்கா…” என்று குரலெடுத்துவிட்டு பின் வாயை இறுக பொத்திக் கொண்டாள். அவளின் முக ஓவியத்தில் கண்கள், நாசித்துவாரம், உதடுகெல்லாம் மிக அழகாக வரைக்கப்பட்டு பின் யாரோ ஒருவரால் ஒவ்வொன்றாக அவசர அவசரமாக அலங்கோலமாக அழிக்கப்படுவதைப்போல வேணியின் உயிர்ப்பான முகம் சுய வடிவத்தை இழந்து கொண்டிருந்தது

“அக்கா!!! இது, காய்ச்சல்ல செத்துப் போனவங்கள பொதைக்குறதுக்கு பார்சல் பண்ணுற கவசமாச்சே!” என்று சட்டென்று சொல்லிவிட்டு திரும்பி அமலா அக்காவை பாவமாகிய முகத்தோடு பார்த்தாள் வேணி. ஏற்கனவே தான் பேசவேண்டிய மொழியை இழந்துவிட்ட நிலையில் உடல்மொழியை வெளிப்படுத்தியவாறு குலுங்கி குலுங்கி அமலா அழத்துவங்கியிருந்தாள். இருவருமே தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஏதாவதொரு உயிர்கவசம் வேண்டி அங்கு எல்லோருக்கும் முன்னிலையில் நிர்வாணத்தோடு நிற்பதைப் போலிருந்தது.

தூரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் புணர்ந்து கொண்டிருந்த நாய்க்கூட்டங்களில் ஈனமுணங்களிலிருந்து வேறுபட்டதானதொரு  ‘லொக்’ ‘லொக்’ கென்ற இருமல் சத்தம் தொலைவிலிருந்து காற்றிலே கரைந்து வருவதை எல்லாராலும் கேட்க முடிந்தது. அந்த மங்கிய நியான் வெளிச்சத்தில் நுழைவு வாயிலையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிற அமலாவிற்கும் வேணிக்கும் நுழைவு வாயில் இன்னும்கூட தேம்பித் தேம்பி அழுவதைப்போலிருந்தது.

———————————————————————————————————————

2 thoughts on “கவசம் – சிறுகதை: டாக்டர் இடங்கர் பாவலன்”
  1. மருத்துவர்கள் கொரோனா காலத்தில் சந்திக்கும் முக்கியமான பிரச்னையை எழுதியிருக்கிறார்.வாழ்த்துக்கள்.

  2. மருத்துவ நண்பர்களின் தற்போதைய துயரத்தை சொல்லி இருக்கிறீர்கள்.நலம்.

    இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *