நூல் அறிமுகம்: அற்ப விஷயம் – ச.சுப்பாராவ் தமிழிலில் பத்தி எழுத்துகள் என்று யாரேனும் ஆய்வு செய்தால் அவர்களால் தவிர்க்க முடியாத பெயர்கள் மூன்று. ஒன்று கல்கி. இரண்டு சுஜாதா. மூன்று இரா.முருகன். மூவரிடமும் புதிய விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமும், தான் அறிந்தவற்றை வாசகனுக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற ஆவலும், அதை அறிமுகம் செய்யும் போது கேலியும், கிண்டலும், வேடிக்கையுமாகவும், அதே சமயம் சில விஷயங்களை மிகவும் பொறுப்புணர்வோடும் எழுதும்  தன்மையும் சேர்ந்து காணப்படுவதும் எனக்கு வியப்பாக இருக்கும். ஆனால் வியப்படைய ஒன்றுமில்லை. நல்ல பத்தி எழுத்தாளருக்கான அடிப்படைத் தகுதிகள் இவைதாம்.  இந்த மூவரும் அவற்றில் ஓவர் குவாலிஃபைட் !

நண்பர் இரா.முருகனின் அற்ப விஷயம் கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். மிகவும் கடினமான, கனமான, பாட புத்தகம் போல் கவனமாகப் படிக்க வேண்டிய ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்த சிரமம் தெரியாமல் இருக்க ஊடு வாசிப்பாக நான் எடுத்துக் கொள்ளும் சுவாரஸ்ய எழுத்தாளர்களில் முக்கியமானவர் இரா.முருகன்.  இவர் புத்தகம் நான் படிக்கும் அந்த மற்ற புத்தகத்தின் வாசிப்பின் களைப்பை நீக்கி, அதையும் உற்சாகமாகப் படிக்க வைத்துவிடும்.  அப்படித்தான் இன்றும் அற்ப விஷயத்தை எடுத்தேன். 93 பக்க புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.

குங்குமம் இதழில் 2008ல் வந்த கட்டுரைகள். 30 அற்ப விஷயங்கள் பற்றி. ஆனால் அவை அற்ப விஷயங்கள் அல்ல. .நம்மை யோசிக்க வைப்பவை. லேசாய் புன்னகைக்க வைப்பவை.  மனம் விட்டு சத்தமாய் சிரிக்க வைப்பவை. 

ரீ மிக்ஸ் பாடல்கள் பற்றிய கட்டுரை அதன் துவக்கம் எங்கே என்பதைச் சொல்கிறது. இந்த நூற்றாண்டின் இசையமைப்பாளர்களின் கணினி இசை பற்றி, சினிமா பாடல் வரிகள் பற்றி, அவற்றில் கணினியின் தாக்கம் பற்றிச் சொல்கிறது. இலக்கியத்தில் ரீமிக்ஸ் வந்தது பற்றி கவலை தெரிவித்து முடிகிறது.

இன்றைய டவுசர் பாண்டிகளைப் பற்றிய அரையர் தேசம் என்ற கட்டுரை அற்புதம்.. அற்புதம்… இன்னுமே டவுசர் என்பது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போடப்படும் உடை என்ற கருத்துள்ள என் போன்றோருக்கு ரொம்பவும் பிடித்துப் போகும் கட்டுரை. சபாக்களில் துன்பம் நேர்கையில் பாட்டு வடிவமாகக் கூட பாரதிதாசன் இன்னும் வராதது, திருமண வரவேற்பை வீடியோ எடுப்பவர்கள் அதை ஏன் லைவ் ரிலேயாக மண்டபத்துக் குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள்? என்ற சந்தேகம், என்றெல்லாம் வேறு வேறு விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள் இருக்கும் இந்தத் தொகுப்பு  மிக முக்கியமான விஷயங்களையும் மிக சுருக்கமாக, ஆனால் மிக அக்கறையோடு, ஆழமாகப் பேசுகிறது.

இந்தித் திணிப்பு பற்றிய கட்டுரை… தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்றில் ஒரு இந்தி தினசரி தினமும் வாங்கப்படும்  கொடுமை.. வங்கி மேலாளரின் விசிட்டிங் கார்ட் இந்தியில் அடிக்கப்பட்டிருப்பது, அதற்கு இரா.முருகனின் கிண்டலான கமெண்ட் –  இதனால் என்ன பயன் என்று இரா.முருகன் கேட்க, வங்கி மேலாளர் தன் நாக்கை நீட்டிக் காட்டுகிறார். சும்மா சொல்லக் கூடாது. சுத்தமாக இருந்தது அவரது நாக்கு !!! 

2008 உலக நிதிச் சிக்கல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்கு, அவற்றின் சேவை, வங்கிப் பணியாளர்களிடம் நமக்கு உள்ள எதிர்பார்ப்பு பற்றிய கட்டுரையும் அருமை..அதே போன்றதுதான் நரகல் பணியாளர்கள் என்ற கட்டுரை… மிக ஆழமான கட்டுரை. நாம் முக்கியமான வேலையில் இருக்கும் போது நம்மை கிரடிட் கார்ட் வாங்கச் சொல்லி வேண்டும் பெண்கள், டிராஃபிக்கில் நிற்கும் வாகனங்களுக்கு இடையே ஓடி ஓடி பெரிய எழுத்து ஆங்கிலப் புத்தகம் விற்பவர்கள், வீடு வீடாக வடகம், வற்றல், ஊறுகாள் சோப் விற்பவர்கள்,  நெடுஞ்சாலையில் மோட்டலுக்காக அட்டையை ஏந்தி நிற்பவர், நூறு ரூபாய் சத்திய சோதனை உங்களுக்காக ஐம்பது ரூபாய்க்கு என்று நான்கு மாடி ஏறி வந்து கதவைத் தட்டி விற்கப் பார்க்கும் முதியவர் என்று  வயிற்றுப் பிழைப்பிற்காகப் பாடுபட்டு, நம் போன்றோரிடம் திட்டு வாங்கும் உதிரித் தொழிலாளர்களைப் பற்றிப் பேசும் கட்டுரை கடைசியில் மனிதக் கழிவை தலைமுறை தலைமுறையாக தலையில் சுமக்கும் தொழிலாளர்களைப் பற்றிப் பேசுகிறது.  அவர்கள் மலத்தை தலையில் சுமந்தால் போதாது என்று அவர்கள் வாயில் மலத்தை திணித்து தின்ன வைத்த திண்ணியம் சம்பவம் பற்றியும் பேசுகிறது.

ஒரு நல்ல எழுத்தாளன் அற்பவிஷயங்கள் பற்றி எழுத உட்கார்ந்தாலும்,  அவனது எழுத்து இந்த சமூகம் பற்றித் தான் எழுதும், பேசும், அது மாற வேண்டும் என்பது பற்றி நினைக்கும் என்பதற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு ஒரு நல்ல உதாரணம்.

இரா.முருகனுக்கு என் அன்பும், வாழ்த்தும்

———————————————————————————————————-

அற்ப விஷயம்

இரா.முருகன்

கிண்டில் பதிப்பு 

பக்கம் 93  விலை ரூ70