கொரோனா காலத்திலும் கலை இலக்கியமா? -அ. குமரேசன்
“இருண்ட காலத்திலும்
பாட்டு ஒலிக்குமா?
ஆம், பாட்டு ஒலிக்கும்
இருட்டைப் பற்றி,”
என்ற உலகப் புகழ்பெற்ற கவிதையை எழுதிய ஜெர்மானிய நாடகவியலாளர் பெர்ட்டோல்ட் பிரெக்ட் இன்று வருவாரானால் இப்படி எழுதியிருப்பார்:
“பெருந்தொற்றுப் பேரிடர்க் காலத்திலும்
பாட்டு ஒலிக்குமா?
ஆம், பாட்டு ஒலிக்கும்
பெருந்தொற்றுப் பேரிடர் பற்றி.”
கொரோனாக்கிருமியை வீழ்த்துவதற்கான உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் காலத்தில் கலை இலக்கியமும் அதில் இணைகிறது. கலை இலக்கியம் ஒரு ஆயுதமாகக் கிருமியுடன் மோதாது – அதற்கு அறிவியல் உலகத்தின் மருந்துதான் வர வேண்டும். ஆனால், போர்க்கள வீரர்களுக்குப் புத்துறுதியையும் பொதுமக்களுக்கு மனத்திடத்தையும் ஊட்டுகிற பணி ஒன்று இருக்கிறதே – அந்தப் பணியைக் கலை இலக்கியமன்றி வேறு எதனால் நிறைவேற்ற முடியும்?
கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று நம்புகிறவர்கள் கூட, அவரவர் நம்புகிற கடவுளுக்கான பாடல்களைத் தாங்களே நேரடியாகப் பாடுகிறார்கள் அல்லது வானொலி/தொலைக்காட்சி/கைப்பேசிப் பதிவுகளை இயக்கிப் பாட வைக்கிறார்கள். பாடல் வரிகளும் இசைக் கருவிகளின் பின்னணியும் அவர்களுடைய உணர்வுக்குத் துணையாகின்றன. மறு ஒளிபரப்புச் செய்யப்படும் ‘இராமாயணம்’ மனதைப் பக்தியில் ஆழ்த்தி ஆவேச உணர்வுகளை மடை மாற்றக்கூடும்.

தனியார் தொலைக்காட்சிகளும் தங்களிடமிருந்த பழைய புராணக் கதைத் தொடர்களை எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கின்றன. நடப்பு “சமூகக்கதை” தொடர்களுக்கான ஒளிப்பதிவுகள் சாத்தியமில்லை என்பதால் இளவயது சித்திகளும் மற்றவர்களும் வரத் தொடங்கிவிட்டார்கள். மக்கள் அவற்றைப் பார்க்க மறுக்கவில்லை – காரணம் அவர்களுக்குக் கலை தேவைப்படுகிறது.
அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட இணையவழி வணிக நிறுவனங்கள், முதலில் ஒரு மாதத்திற்கு இலவசம், அப்புறம் கட்டணம் என்ற அடிப்படையில் திரைப்படங்களைத் தருகின்றன. திரையரங்கிற்கு வந்து ஓரிரு மாதங்களேயான படங்கள் கூட வருகின்றன. ஊரடங்கால் வீட்டோடு முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்கள் தேவையான படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறார்கள். அதில் இருப்பது வெறும் நேரப்போக்கு நோக்கம் மட்டுமல்ல. கலையின் வழியாக மனதில் விசையேற்றிக் கொள்கிற தேவையும்தான்.
குழந்தைகளுக்காக யூ டியூப் நிறுவனம் ஓட்போட்ஸ், டாம் அன் ஜெர்ரி, அலிபாபா, பீம் போன்ற பல உயிர்ப்போவியக் கதைகளையும், அவற்றின் தமிழாக்கங்களையும், திருக்குறள் கதைகளையும், ஸ்பைடர்மேன் போன்ற சாகசக் கதைகளையும் தனியாகக் கட்டணமின்றி வழங்குகிறது. குழந்தைகளோடு அமர்ந்து பெரியவர்களும் அவற்றை ரசித்துப் பார்க்கிறார்கள்!
இதிலெல்லாம் இடையிடையே விளம்பரங்கள் வருகின்றன. அப்படி விளம்பரங்கள் இல்லாமல் படம் பார்ககக் கூடுதல் கட்டணம்!
அரசியல் முதல் உளவியல் வரையில் வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு அணுகுகிறவர்களைப் பொறுத்தவரையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, கலை இலக்கியத்தின் வழியாக மாற்றுச் சிந்தனைகளைக் கொண்டுசெல்கிறார்கள். மனுஷ்யபுத்திரன், ஏகாதசி, நீலா உள்ளிட்டோரின் புதிய புதிய கவிதையாக்கங்கள் கொரோனா போராட்டக் கால வேதனைகளையும், இதிலே கூட மதவெறி நஞ்சு கலக்கப்படும் அநீதிகளையும் பேசுகின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள் போன்றோரின் அவலத்தை மனமுருக எடுத்துக்காட்டுகின்றன. அந்த அவலத்துக்கான அரசியல்/சமூகக் காரணங்களைச் சாடுகின்றன. கவிஞர் இந்திரன் தேர்ந்தெடுத்துத் தருகிற படைப்புகளை கவிஞர் நா.வே. அருள் தனது முகநூல் பக்கத்தில் ‘கொரோனா கவிதைகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாகப் பதிவேற்றி வருகிறார்.
அத்தகைய கவிதை வெளிப்பாடுகளைப் பார்த்த ஒரு நண்பர், “இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் இபபடிக் கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்களே, அதனால் என்ன பயன்,” என்று கேட்டார்.
“அருமையான சொல்லாடல்களோடும் கவித்துவக் கற்பனைவளத்தோடும் வருகிற கவிதைகளில் உங்கள் அடிமன இழையோட்டங்கள் பிரதிபலிப்பதை உங்களால் உணர முடியும். அது நாம் தனிமைப்பட்டுவிடவில்லை என்று தெம்பூட்டும். அடுத்து, கொரோனாவுக்குப் பின்னரும் கூட, வாழ்க்கையின் எந்தவொரு சவாலிலும் தொலைந்துபோய் விடாமல், நல்ல ரசனையோடும் நுட்பமான புரிதல்களோடும் கையாள்வதற்குக் கற்றுக்கொடுக்கும்,” என்று நான் அவரிடம் சொன்னேன்.
கேஸ்ட்லெஸ் கேஸ்டில் குழுவின் பாடலாசிரியரும் பாடகருமான அறிவு எழுதிப் பாடிய புதிய அதிரடி வேகப்பாட்டு கொரோனா திரைக்குப் பின்னால் மறைந்துகொண்டு மானுடத்தின் மீது எச்சில் உமிழ்கின்ற மதவாதத்தையும் சாதியத்தையும் யூ டியூப் சந்தியில் நிறுத்துகிறது. அது போல பலரும் தங்கள் சொந்த முயற்சியில் பாடல் எழுதி, எளிய இசைக்கருவிகளின் துணையோடு கொரோனா விழிப்புணர்வுக் கருத்துகளைப் முகநூல், வாட்ஸ்அப், டெலிகிராம், ட்விட்டர் தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். சில நிமிடக் குறும்படங்களும் மொபைல் கேமராவிலேயே நேர்த்தியான ஒளிப்பதிவோடும் தொகுப்போடும் வந்து பேசுகின்றன.
இவையன்றி, சமூக ஊடகங்களில்தான் எத்தனையெத்தனை ‘மீம்ஸ்’ பதிவுகள்! கற்பனைத் திறனுக்கும் பகடிக் கலைக்குமான இணையத்தள வடிவமாக உருவெடுத்த மீம்ஸ் இன்று பலரும் புகுந்துவிளையாடும் களமாகியுள்ளது. மீம்ஸ் தயாரிப்புக்கென்றே குழுக்கள் இயங்குகின்றன. அரசியல்/சமூக நையாண்டிகளின் தொடர்ச்சியாக இன்றைய ஊரடங்கு, சமூக விலகல் சார்ந்த அரசு நடவடிக்கைகளின் போதாமையை, பிரதமர்/முதலமைச்சர் அறிவிப்புகளின் விமர்சனத்திற்குரிய சங்கதிகளை, விடாமல் தொடர்கிற மூடநம்பிக்கைகளை சிரிப்பாய்ச் சிரிக்க வைக்கிறார்கள். கொரோனா கிருமிக்கு மதநாமம் சூட்டப்பட்டதை வெச்சு செய்கிறார்கள். அவர்களது தயாரிப்புகளுக்குத் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகள் – குறிப்பாக வைகைப் புயல் வடிவேலு நடித்த படங்களின் காட்சிகளும் வசனங்களும் – கைகொடுக்கின்றன.

இவையொரு பக்கமிருக்க, தற்போதைய கட்டாய வீட்டிருப்புக் காலத்தில் பலர், தங்கள் புத்தக அலமாரிகளைக் கலைக்கத் தொடங்கிவிட்டார்கள். எப்போதோ வாங்கி வைத்த நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளைத் தேடியெடுத்துப் படிக்கிறார்கள். படித்த படைப்புகளின் சாறு பற்றிக் குடும்பத்தாரோடு பேசுகிறார்கள். சமூக ஊடகங்களில் புத்தக அறிமுகமாகப் பகிர்கிறார்கள்.
அச்சுப் புத்தகமாக வைத்துக்கொள்ளாதவர்களுக்குப் பல படைப்புகள் இணைய வழியில் கிடைக்கின்றன. படைப்போர் தங்கள் எழுத்துகளைப் பரிமாறுவதற்கும், படிப்போர் அவற்றை விருந்தாகப் புசிப்பதற்கும் கிண்டில் தளம் மேசை நாற்காலி போட்டுத் தருகிறது. புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து படிக்கவென்றே வந்த இ-புக் புழக்கம் பரவலாகி வருகிறது. பதிப்பகங்களும் இந்தத் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றன.
என்னதான் மிரட்டினாலும் எவ்வளவு அச்சுறுத்தினாலும் இந்த மண்ணில் படிந்த சாதி ஆணவக் கறையை, மனங்களில் ஆக்கிரமிக்கத் துண்டு போடும் மதவாத அரசியலை, மாதர்தமை இழிவு செய்யும் மடமையை, ஏழைகளை ஏழைகளாகவே நலிந்திருக்க வைக்கும் கார்ப்பரேட் சூறையாடல்களை அத்தனை எளிதில் அப்புறப்படுத்திவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு, அந்தக் கொரோனா சோர்ந்து ஓய்ந்துவிடும். அதற்குப் பின் வரும் கதைகளில் சினிமாக்களில் நாடகங்களில் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் விளைவித்த துயரங்கள் மையப்பொருளாகும். “அட கொரோனாவுக்குப் பொறந்தவனே” என்பது போன்ற நகைச்சுவை வசனங்கள் சமூக இறுக்கத்தைத் தளர்த்தும்.
இத்தகைய பெருந்தொற்றுப் பேரிடர்கள் உலகத்தைத் தாக்கியபோதெல்லாம் அந்த நாட்களின் படப்பிடிப்புகளாய் உலகில் சிறப்பான இலக்கியப் படைப்புகள் வந்திருக்கின்றன. அடுத்த சந்திப்பில் அதைப் பார்ப்போம், சரியா?
ஒரு பருந்துப் பார்வையில் அருமையான அலசல். இத்தனை விவரங்களையும் தவறாமல் பார்த்து வருகிற சமூக அக்கறை புலப்படுகிறது. சம்பந்தப்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்பைப் பாராட்டுகிற, பரிசீலிக்கிற பண்பு தெரிகிறது. புத்தக தினம் என்று புக் டே வைக் கொண்டாடிப் பயனளித்து வரும் புத்தகம் பேசுது பாரதி புத்தகாலயமும் பாராட்டுக்குரியது.