சூரிய ஒளியில் பறக்கும் விமானம்
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” எனும் திரைப்பட பாடல் வரிகளுக்கு இணங்க, மனித இனமானது பல நூற்றாண்டு காலம் வானத்தில் பறக்க வேண்டும் எனும் தனது ஆசையை நிறைவேற்ற தொடர்ந்து செயலாற்றி வந்தது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரைட் சகோதரர்களின் முயற்சியால் மனித இனம் வானத்தை முத்தமிட்டது. அதைத்தொடர்ந்து வந்த, ஒரு நூற்றாண்டு காலத்திற்குள் நிலவு வரை மனித இனம் தன் கால்களை பதித்து விட்டது.
ஒருவர் மட்டுமே பயணிக்கக் கூடிய, ஒலியை விட வேகமாக செல்லும் போர் விமானங்கள்(super sonic jets)முதல் 500 பேர் பயணிக்கும் பயணிகள் விமானம் வரை, தற்காலத்தில் விமான போக்குவரத்து தவிர்க்க முடியாத ஒரு துறையாக வளர்ந்து நிற்கிறது. உலகின் எந்த மூலையில் இருக்கும் தேசத்தின் மக்களையும் மற்றும் சரக்குகளையும், சில மணி நேரங்களில் உலகின் மற்றொரு மூலைக்கு கொண்டு சேர்த்து விட முடியும். இத்தகைய சிறப்புமிக்க விமான போக்குவரத்து துறையில், பல்வேறு மாற்றங்கள் ஆண்டுதோறும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், என்னதான் பசுமை எரிசக்தியை கொண்டு இயங்கக்கூடிய வகையிலான மின்சார கார்கள், சோலார் கார்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பிரபலமாக தொடங்கி இருந்தாலும், விமான போக்குவரத்து துறையில் இன்றளவும் ஜெட் எரிபொருள் என அறியப்படும் மண்ணெண்ணெய் அடிப்படையிலான புதைப்படிம எரிபொருள் கலவைதான் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கிலும், பசுமை எரிசக்தியை கொண்டு இயங்கும் வகையிலுமான சோலார் விமானம் ஒன்றை வடிவமைத்து உலகம் முழுவதும் 43 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வரை அதில் பயணம் செய்து சாதித்துக் காட்டி இருக்கிறது சுவிட்சர்லாந்து குழு.
சோலார் தொழில்நுட்பம்
மனிதன் நாகரிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலைகளிலும் பல்வேறு வகையில் சூரிய ஒளியை பயன்படுத்தி இருக்கிறான். குறிப்பாக, முந்தைய கிரேக்க நாகரீகத்தில் மக்கள் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியை குவித்து நெருப்பை ஏற்படுத்தியதை அறிந்து கொள்ள முடிகிறது.
முந்தைய சீன நாகரிகங்களில் கூட இந்த பயன்பாடு இருந்ததும் வரலாற்று ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது.
இருந்த போதிலும், நவீன சோலார் மின்சார உற்பத்தி தொழில்நுட்பமானது 1800 களின் இறுதியில் தான் கண்டுணறப்பட்டது.
1905 ஆம் ஆண்டு ஒளிமின் விளைவை விலக்கியதற்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வந்த ஆண்டுகளில், ஒளி மின் தகடுகள் தயாரிக்கப்பட்டன.
அடிப்படையில், சூரிய ஒளியிலிருந்து வரும் வெப்பத்தின் மூலம் ஒளிமின் தகட்டில் உள்ள எலக்ட்ரான்கள் பயணிக்க தொடங்கும். எலக்ட்ரான்கள் நகரும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறிய,சிறிய ஒளி மின்தகடுகளை இணைப்பதன் மூலம், நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் அதிகப்படியான மின்னழுத்தத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த அடிப்படையில் தான் விண்வெளியில் பயன்படுத்தப்பட்டு வரும், விண்கலன்கள் கூட இயங்குகின்றன. தற்காலத்தில் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களிலும் ஒளிமின் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, கைக்கடிகாரங்கள் கால்குலேட்டர்கள் போன்றவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சோலார் விமானம்
இந்த சூரிய மின்சக்தி விமானத்திற்கான திட்டமானது ஸ்விட்சர்லாந்து நாட்டின் தொழிலதிபரும், பொறியாளருமான ஆண்ட்ரோ போஸ்பெர்க் மற்றும் அதே நாட்டை சேர்ந்த மனநிலை நிபுணர் மற்றும் வெப்ப பலூன் நிபுணருமான பெட்ரான்ட் பிக்கார்ட் ஆகிய இருவரால் முன்மொழியப்பட்டது. இந்த விமானத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை இவர்கள் 2003 ஆம் ஆண்டு தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து, அடுத்து வந்த சில ஆண்டுகளில் செயல் திட்டங்கள் முறைப்படி வகுக்கப்பட்டு, 2009 ஆம் ஆண்டு 50 பொறியாளர்களின் ஒத்துழைப்போடு 100க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் 80ற்கும் ஏற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்களின் கண்காணிப்பு என வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது சோலார் இம்பல்ஸ்(solar impulse)விமானம்.
அதைத் தொடர்ந்து, பல வருடங்கள் இந்த விமானம் பறக்க விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஒரு நபர் அமரும் படி வடிவமைக்கப்பட்டிருந்த இந்த விமானத்தின் சோதனைகள் 2011-12 ஆண்டுகளில் நடத்தப்பட்டது. அப்போதைய காலகட்டங்களில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா தேசங்களின் மீது இந்த விமானம் பறந்தது.
2013 ஆம் ஆண்டு இந்த விமானத்தின் இரண்டாவது வடிவமான சோலார் இம்பல்ஸ்-2 வடிவமைக்கப்பட்டது. இந்த விமானம்தான் உலகம் முழுவதையும் சுற்றி வந்தது.
43000 கிலோமீட்டர்
சோலார் இம்பில்ஸ் இரண்டாவது விமானமானது உலகம் முழுவதும் பரந்து சூரிய எரிசக்தி உள்ளடக்கிய பசுமை எரிசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளுக்கும் இந்த விமானம் பறந்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் வாரணாசி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த விமானம் தரை இறங்கி இருக்கிறது. பல மாதங்கள் வானத்தில் பறந்து இந்த விமானம் இறுதியாக 43 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணத்தை நிறைவு செய்தது.
இந்த பயணத்தின் போது உலகமெங்கிலும் இருக்கக்கூடிய நாடுகளுக்கு சென்று பசுமை எரிசக்தி குறித்து செயல்முறை விழிப்புணர்வை செய்து காட்டியது இந்த சோலார் இம்பல்ஸ்.
தற்போது, இந்த விமான மாதிரியானது அமெரிக்க ஸ்பெயின் கூட்டு தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு இந்த விமானத்தின் அடிப்படையில் ஆய்வுகள் நடந்து முடிந்த பிறகு, இந்த விமானமானது விரைவில் ஸ்விட்சர்லாந்து நாட்டு தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும்.
வடிவமைப்பு
உலகளாவிய அளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய பயணிகள் விமானம் போயிங் 747 ஆகும். இந்த விமானத்தில் 500 பேர் வரை அமர்ந்து பயணம் செய்ய முடியும். இந்த விமானத்தின் இறக்கைகளை விடவும் சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடிய சோலார் இம்பெல்ஸ் விமானங்களின் இறக்கை நீளமானதாக இருக்கும். கேட்பதற்கு சற்றே ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், சுமார் 17000 சிறிய சிறிய சோலார் செல்களை ஒருங்கமைத்து இதுபோல ஒரு விமானத்தை கட்டமைப்பதற்கு அதிகப்படியான இடம் தேவைப்படும். விமானத்தின் எடையை அதிகரித்து விட முடியாது. அந்த காரணத்திற்காகவே இறக்கைகளின் நீளம் அதிகரிக்கப்பட்டு அதில் அதிகப்படியான சோலார் செல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்த விமானத்தின் எடை சுமார் 2300 கிலோகிராம்கள் வரை இருக்கும். இந்த விமானத்தில் ஒரு நபர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்பதால், அதிகபட்சமாக பறக்கும் போது இந்த விமானத்தின் எடை 2500 கிலோவுக்கு அதிகமாக இருக்க வாய்ப்பில்லை.
சிக்கல்கள்
இந்த விமானத்தின் இறக்கைகளின் நீளம் அதிகமாக இருப்பதன் காரணமாக, காற்று மிக வேகமாக வீசும் போது இந்த விமானத்தை கையாளுவது மிகவும் சிக்கலாக போய்விடும்.
மேலும், வர்த்தக ரீதியாக இந்த விமானத்தை பயன்படுத்துவது முற்று முழுதாக வாய்ப்பில்லாத ஒரு விஷயம். தற்போது வரை விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே இந்த விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பல மில்லியன் டாலர்கள் வரையில் இந்த விமானத்தின் தயாரிப்பு மற்றும் மேம்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு விமானத்தை லாபகரமாக மற்றும் வர்த்தக ரீதியாக தயாரித்து வெளியிடுவது மிகவும் கடினம் தான்.
ஆனாலும் கூட, வருங்காலத்தில் பறக்கும் கார்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படி பறக்கும் கார்கள் தயாரிக்கப்படும் பட்சத்தில், இந்த விமானத்தை மாதிரி அடிப்படையாகக் கொண்டு ஒரு பறக்கும் காரை வடிவமைத்து விட முடியும். மேலும், அந்தப் பறக்கும் காரானது சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டால் மிகவும் சிறப்பாகவும் இருக்கும். இந்தத் திட்டம் சரியாக அமையும் பட்சத்தில் வரும் காலத்தில் எந்தவித எரிபொருள் தேவையும் இன்றி நம்மால் பல நூறு கிலோமீட்டர் வானத்தில் பயணம் செய்ய முடியும். நிச்சயமாக அத்தகைய ஒரு வடிவமைப்பு வருங்காலத்தில் வருவதற்கு கூடுமானவரை வாய்ப்புகள் இருக்கின்றன.
இப்போதுதான் இந்த சிந்தனை விதைக்கப்பட்டிருக்கிறது.விரைவில் துளிர்விட்டு வானமெங்கும் சூரிய ஒளியில் இயங்கும் வான்கலங்கள் நிறைந்திருக்கும்..
கட்டுரையாளர்:
ஶ்ரீ காளீஸ்வரர் செ
இளங்கலை இயற்பியல் மாணவர்
தெ.தி.இந்து கல்லூரி.
நாகர்கோவில் – 02
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.