தேர்தலில் வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்ட பெண்!
– அ. குமரேசன்
பாகுபாடுகளற்ற பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான, குறிப்பாகப் பெண்களின் தேர்தல் வாக்குரிமைக்கான போராட்டப் பாதையில் ஒரு விளக்காக நிற்கும் பெயர் சூசன் பி அந்தோனி (Susan B. Anthony).
குடிமக்கள் அனைவரும் சுதந்திரமாக எல்லாவித உரிமைகளோடும் வாழும் நாடு என்ற ஒரு தோற்றம் அமெரிக்காவைப் பற்றி உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 1776ஆம் ஆண்டிலேயே விடுதலை பெற்ற அமெரிக்காவில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உறுதியாகிடவில்லை. குறிப்பாகக் கறுப்பு இன மக்கள் இழிவான பாகுபாடுகளை அனுபவிக்கும் கேவலம் தொடர்ந்தது – அதற்கு முடிவுகட்டும் எழுச்சியும் படர்ந்தது. அதே போல, இன வேறுபாடில்லாமல், பெண்களுக்குத் தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டதாகவே இருந்தது. அந்த உரிமையைக் கோரும் இயக்கங்கள் நடந்துவந்தன.

1872ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் குடியரசின் தலைவர் தேர்தல் (அதாங்க அதிபர் தேர்தல்) நடைபெறுகிறது. நியூயார்க் நகரின் ரோச்செஸ்டர் பகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்குள் நுழைகிறார் ஒரு பெண் – சூசன் பி அந்தோனி (Susan B. Anthony). தனது வாக்கைப் பதிவு செய்கிறார் – எல்லோரும் திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருக்க, “14ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாட்டின் குடிமக்களில் ஒருவராக எனக்கு வாக்குரிமை உண்டு” என்று அறிவித்துவிட்டு வெளியேறுகிறார். அடுத்த சில நாட்களில் வீட்டில் இருக்கிறபோது கைது செய்யப்பட்டு, விசாரணைக் கைதியாகக் காவலில் வைக்கப்படுகிறார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிக்க எழுந்தபோது அனுமதி மறுக்கும் நீதிபதி, நடுவர்களைப் (ஜூரிகள்) பார்த்து, அவர்களுக்குள் விவாதம் எதுவும் இல்லாமலே சூசனைக் குற்றவாளியாக அறிவிக்க ஆணையிடுகிறார். அவர்களும் அப்படியே செய்கிறார்கள். சட்டத்தை மீறியதற்காக 100 டாலர் தண்டம் விதிக்கப்படுகிறது. அந்தத் தொகையைச் செலுத்த மறுக்கும் சூசன், “உங்களின் அநீதியான தண்டத்தொகையில் ஒரு டாலர் கூட நான் கட்ட மாட்டேன்,” என்கிறார்.
அவரை சிறைக்கு அனுப்புவதா வேண்டாமா என்று விவாதிக்கப்படுகிறது. அரசுத் தரப்பிலிருந்து, சிறையில் அடைத்தால் தியாகியாகப் புகழ் பெற்றுவிடுவார் என்று கூறப்படுகிறது. அவர் வீடு திரும்புகிறார்.
இங்கே ஒரு சுவையான தகவல் – சட்டவிரோதமாக அவர் யாருககு வாக்களித்தாரோ அவர்தான் – யுலிசிஸ் எஸ். கிராண்ட் – தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்! நேரடியாகப் பெண்களின் வாக்குரிமைக்காக வாதாடியவர் அல்ல என்றாலும், கறுப்பினத்தவர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருந்தவர் அவர்.
இந்த நிகழ்வுகள் அமெரிக்கா முழுவதும், பெண்களின் வாக்குரிமைக்கான நாடு தழுவிய இயக்கங்கள் பேரலைகளாக எழுவதற்கு இட்டுச்சென்றன. அந்த இயக்கங்களின் வெற்றியாக, 1920ஆம் ஆண்டில், 19ஆவது சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் உட்ரோ வில்சன். அடுத்து வந்த தேர்தலிலேயே பெண்கள் வாக்களிக்கத் தொடங்கினார்கள்.
“ஆண்கள், அவர்களின் உரிமைகள். அதற்குக் கூடுதலாக எதுவுமில்லை. பெண்கள், அவர்களின் உரிமைகள், அதற்குக் குறைவாக எதுவுமில்லை,” என்று கம்பீரமாக முழங்கிய சூசன், இந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் போனது. 1906ஆம் ஆண்டில் அவர் தமது 86ஆவது வயதில் காலமாகிவிட்டார்.

“கொடுங்கோன்மைக்குப் பணிய மறுப்பதே கடவுளுக்குப் பணிவது” என்ற அவருடைய முழக்கம் அந்நாட்டு மக்களிடையே பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவரது இந்தப் போராட்டத்திலும், பெண்களின் இதர உரிமைகளுக்காகவும் களமிறங்கியவர் எலிசபெத் கேடீ ஸ்டான்டன். இருவருமாக இணைந்து தேசிய பெண்கள் வாக்குரிமை சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அனைத்து மாநிலங்களில் தீவிரமான பரப்புரை இயக்கங்களை மேற்கொண்டார்கள்.
வாக்குரிமை மட்டுமல்லாமல், அடிமை முறை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட இயக்கங்களையும் சூசன் முன்னெடுத்தார். சம உரிமைகளுக்காக வாதாடிய ‘தி ரெவல்யூசன்’ என்ற செய்திப் பத்திரிகையையும் அவர் இன்னொருவரோடு இணைந்து நடத்திவந்தார். வாக்குரிமை இயக்கத்தின் வரலாற்றையும் முன்னேற்றத்தையும் பதிவு செய்த “தி ஹிஸ்டரி ஆஃப் விமன் சர்ஃபேஜ்” என்ற புத்தகத்தையும் மற்றொரு செயல்பாட்டாளரோடு இணைந்து எழுதினார்.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டவரின் முகத்தை, பிற்காலத்தில் அமெரிக்க அரசு ஒரு டாலர் நாணயத்தில் பொறித்துத் தன் மரியாதையை வெளிப்படுத்தியது. 1979, 1981, 1999 ஆகிய ஆண்டுகளில் அந்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. அந்த நாட்டின் ரொக்கப் பணத்தில் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்ட பெண் சூசன்தான். வரலாற்றில் பங்களித்த, தேசிய புகழுக்குரிய மகளிர் மண்டபத்தில் அவருடைய படமும் வாழ்க்கைக் குறிப்பும் சேர்க்கப்பட்டன.
இங்கே இன்னொன்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். பெண்களின் வாக்குரிமை 1920இல் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், அது வெள்ளை இனப் பெண்களுக்கு மட்டுமே இருந்து வந்தது. மாநிலத்திற்கு மாநிலம் பொதுவாகக் கறுப்பின மக்களுக்கு எதிராக இருந்து வந்த சட்டங்கள், கறுப்பினப் பெண்களுக்கு எதிரான விதிகள் காரணமாக வாக்குரிமை உறுதிப்படாமல் இருந்தது.
தொடர்ச்சியான போராட்டங்கள், அடக்குமுறைகள், அதற்கெல்லாம் அசராத முன்னெடுப்புகளின் விளைவாக 1965ஆம் ஆண்டில்தான் (ஆம் இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்புதான்) கறுப்பினப் பெண்களுக்கான வாக்குரிமை சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது அரசுத் தலைவராக இருந்த லிண்டன் ஜான்சன் அதற்கான ஆணையில் கையெழுத்திட்டார்.
கூடுதலாக நாம் தெரிந்துகொள்ள – உலகில் பெண்களின் வாக்குரிமையை அங்கீகரித்த முதல் நாடு நியூஜிலாந்து. பல்வேறு இயக்கங்களைத் தொடர்ந்து 1883ஆம் ஆண்டில் அந்த உரிமை அங்கே நிலைநாட்டப்பட்டது.
உலகிற்கே புத்தொளி பாய்ச்சிய நவம்பர் புரட்சிக்குப் பிறகு, உடனடியாக ரஷ்யாவில் பெண்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்தியா 1947இல் விடுதலை அடைந்த பின், டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சபை உருவாக்கிய அரசமைப்பு சாசனம் 1950இல் நிறைவேற்றப்பட்டு நாடு குடியரசானபோது, தொடக்கத்திலிருந்தே பாலின வேறுபாடின்றி, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என ஊன்றப்பட்டது. (அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியின்போது மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடந்தன என்றாலும் அவற்றில் பெண்கள் வாக்களிக்க முடியாது. ஆண்களுக்கே கூட, சொத்துடைமை, சமூக நிலை, கல்வி நிலை போன்ற அடிப்படைகளில் ஒரு பகுதியினருக்குத்தான் வாக்குரிமை இருந்தது.)
மகளிர் உரிமைகளுக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் சமூக மாற்றங்களுக்காகவும் களம் காண்போர் அனைவருக்கும் சூசன் பி அந்தோனி (Susan B. Anthony) பிறந்தநாள் (பிப்ரவரி 15) வாழ்த்துகள்..
தேர்தலில் வாக்களித்ததற்காகக் கைது செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர் சூசன் பி அந்தோனி (Susan B. Anthony)
கட்டுரையாளர்:

அ.குமரேசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

