உழவே தலை.. – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

உழவே தலை.. – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை. (குறள் 1031)

உலகின் மூலைகளுக்கெல்லாம் சென்று குறள் புகழ்பாடும் இந்திய பிரதமர் திருநரேந்திரமோடி பாவம் இந்த குறளை படித்திருக்க வாய்ப்பில்லை. உலகத்து தொழில்களுக்கெல்லாம் முன்னோடியாக உழவே உலகம் தழைக்க காரணமாகும், என்பதே இக்குறளின் பொருளாகும். விவசாயம் இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். அந்த முதுகெலும்பை அடித்து உடைக்கும் மோசமான படுபாதக மூன்று சட்டங்களை சமீபத்தில் மோடி அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

Modi's Farm Bills a game changer for Indian farmers | Op-eds – Gulf News

சட்டங்கள் என்ன?

1)அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் 2020
2)விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 3)விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020

முதல் சட்டமான அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டத்தின் மூலம் இதுவரை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் நீடித்து வந்த தானியங்கள், பருப்புவகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவை அந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் இப்பொருட்களை யார் வேண்டுமானாலும் வரம்பு இல்லாமல் பதுக்கி வைக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இரண்டாவது விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் திருத்தத்தின்படி இந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த மூலைக்கு வேண்டுமானாலும் மாநில அரசுகளின் எல்லையோ கட்டுப்பாடோ இன்றி விளைபொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நேரடியாக இந்தியாவில் எந்த ஒரு மூலையிலும் எவ்வளவு வேண்டுமானாலும் விளைபொருளை கட்டுப்பாடின்றி கொள்முதல் செய்யலாம்.

மூன்றாவதாக விலை உத்தரவாத ஒப்பந்தப்படி ஒரு விவசாயியிடம் எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியும் முன்னதாக ஒப்பந்தம் போட்டு, விலையை நிர்ணயித்து குறிப்பிட்ட விளைபொருளை விளைவித்து பெறலாம் என்று வழிவகைகள் செய்துள்ளது. இந்த மூன்று சட்டங்களின் வாயிலாகவும் விவசாயி, விவசாய வளர்ச்சி, விலை பொருளுக்கான விலை நிர்ணயம், நெகிழ்வுத்தன்மை உள்ள விற்பனை முறை ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது.

IN PICS: Intense Farmers' Protest Against Controversial Farm Bills Engulfs  India

உண்மை நிலவரம் :

முதலாவதாக இந்த மூன்று சட்டங்களும் வெவ்வேறல்ல ; ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவை முழுமையாக கார்ப்பரேட் நலன்களை தூக்கிப் பிடிக்கின்றனவே அன்றி விவசாய நலனையல்ல. இந்தியாவில் 80-85% விவசாயிகள் குறு,சிறு விவசாயிகள் ஆவர். அதாவது 5 ஏக்கருக்கும் குறைவாக நிலங்களில் விவசாயம் செய்யக் கூடியவர்கள். இப்படி இருக்க இவர்கள் கூறும் “ஒரே நாடு! ஒரே சந்தை!!” என்ற திட்டம் நாடுமுழுவதும் உணவுத் துறையில் கடை விரித்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளுக்கான வசதியே அன்றி விவசாயிகளுக்கானதல்ல.. சிறு,குறு விவசாயிகள் தங்கள் வட்டாரத்தை விட்டு கூட தாண்ட முடியாத நிலையில் எவ்வாறு மாநிலங்கள் கடந்து வியாபாரம் செய்ய முடியும். அதற்கான வண்டி கூலி,ஆள் கூலி ஆகியவை விளைபொருளின் இன்றைய மதிப்போடு ஒப்பிட்டால் கோமணமாவது மிஞ்சுமா?? மாநிலப் பட்டியலில் உள்ள விவசாயத்தின் ஏற்றுமதி,இறக்குமதி, கொள்முதல், வியாபாரம், வர்த்தகம், அது சார்ந்த வரி வருவாய் போன்றவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்த சட்டம் முழுவதுமாக மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிப்பதாகவும் மாநில வரி வருவாய் மற்றும் பொருளாதாரத்தை சீர் குழைப்பதாகவும் அமைந்துள்ளது. இதைத்தான் ஏற்கனவே 2006 இல் இதே பிஜேபி அரசு பீகாரில் அமல்படுத்தி இன்று பீகாரின் வேளாண்துறை முற்றிலுமாக பாலைவன காட்சி அழிப்பதை கண்டுகொண்டிருக்கிறோம்.

ஒப்பந்தம் என்ற அடிப்படையில் விளைவிப்பதற்கு முன்னரே முன்தொகை கொடுப்பது என்பது எதையும் முன் கணிக்க முடியாத வேளாண்துறையில் சாத்தியமா? மழை, புயல்,வெயில் என்று பருவநிலையின் தன்மை தொடர்ந்து புவி வெப்பமயமாதல் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் விளை பொருளை விளைவிக்க முடியாவிட்டால் விவசாயிகள் அந்த இழப்பை ஈடு கட்ட முடியுமா? அல்லது ஒப்பந்தப்படி விளைச்சல் ஏற்படவில்லை அல்லது சேதம் ஏற்பட்டுள்ளது என்றால் தனியார் முதலாளி சொல்வதுதான் விலையாக மாற்றப்படும். இதற்கான கடந்தகால உதாரணம்தான் பெப்சி கம்பெனி 8 விவசாயிகள் தங்கள் கம்பெனி காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கை விளைவித்தார்கள் என்று நீதிமன்றத்தில் பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. ஒரு அன்னிய நாட்டு முதலாளி நம் சொந்த நாட்டு மண்ணில் நாம் விளைவிப்பதை எதிர்த்து வழக்கு தொடரும் அளவுக்குத்தான் இந்திய நாட்டின் வேளாண் துறை பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பின்னர் அகில இந்திய கிசான் சபா மற்றும் பல நூறு விவசாய மற்றும் தொழிலாளர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. ஏற்கனவே இந்தியா முழுவதும் கரும்பு கொள்முதல் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தனியார் நிறுவனங்களின் கடன் பாக்கி தொகை 1380 கோடிக்குமேல் இருக்க ஒப்பந்தப்படி பணம் தராமல் விவசாயிகளை தனியார் கம்பெனி ஏமாற்றும் போது சாமானிய விவசாயிகள் நீதிமன்றம் சென்று நீதி பெறும் நிலை தற்போது நிலவுகிறதா?
குறிப்பாக இதன்மூலம் தனியார் நிறுவனங்களே ஒழுங்குமுறை கூடங்களை அமைத்து கொள்முதல் செய்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால் வேளாண்துறையில் அரசுக்கு இருக்கும் பொறுப்பிலிருந்து முழுவதுமாக அரசு விலகுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஓரளவு நன்றாக உள்ள 268 ஒழுங்குமுறை கூடங்கள், 108 கிராம சேமிப்புக் கிடங்குகள், 108 தர பிரிப்பு மையங்கள் ஆகியவற்றை இழுத்து மூடுவதற்கும் வழிவகை செய்துள்ளது. மூன்றாவதாக நேரடியாக நாட்டின் பெரும்பான்மை ஏழைகளை பாதிக்கும் வகையிலான சட்டமான அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தினால் அத்தியாவசிய பொருட்களை இனி யார் வேண்டுமானாலும் பதுக்கி வைத்து செயற்கை தட்டுப்பாடை உருவாக்கி குறிப்பிட்ட நேரத்தில் தான் சொல்லும் விலைக்கு அப்பொருளை சந்தைக்கு கொண்டு வரும் நிலை உருவாகும். குறிப்பாக நாடு முழுவதும் அம்பானி, அதானி, டாட்டா குழுமங்கள் போன்ற பெரு முதலாளிகள் இதை செய்வதற்கு இலகுவான அதிகாரப்பூர்வ சட்ட உரிமை வழங்கியுள்ளது நடுவணரசு. இதற்கான உதாரணம்தான் சமீபத்தில் வெங்காயம் கிலோ 250 க்கு மேல் விற்பனையானது.

Cow Protection Spells Big Bull Problems For The Indian Farmer | HuffPost  India

வர்க்கப் பார்வையில்…

இந்தியா ஒரு நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நாடு. இவையிரண்டும் சமரசம் செய்துகொண்டு சுரண்டலை மேற்கொள்ளும் ஒரு துணைக் கண்டம். இன்று நிலபிரபுத்துவம் குறைந்து அரை நிலப்பிரபுத்துவம் நிலவினாலும் மீதமுள்ள நிலப்பிரபுத்துவ பாத்திரத்தை முதலாளித்துவம் பெரும் நிலங்களை தன்வசப்படுத்தி வகித்துக் கொண்டிருக்கிறது. இந்திய விவசாயம் உலகின் இரண்டாவது பெரிய வேளாண் மையம் ஆகும். மொத்த உள்நாட்டு வேலைவாய்ப்பில் 65% வேளாண்துறை சார்ந்ததே.. 10 வகையான விவசாய முறைகளை இது உள்ளடக்கியது. 2010-11 வேளாண் துறை கணக்கெடுப்பு படி குறு விவசாயிகள் என்போர் 11/4 ஏக்கர் முதல் 2 1/2 ஏக்கர் வரை உள்ளோர் என்றும் சிறு விவசாயிகள் என்பவர் 2 1/2 ஏக்கர் முதல் 5 ஏக்கர் உள்ளோர் என்றும் மேலும் நடுத்தர விவசாயிகள் என்போர் 10 முதல் 25 ஏக்கர் உள்ளவர் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். இம்மூன்று பிரிவுகளிலும் சேர்த்து அகில இந்திய விழுக்காடு 95 ஆகும். தமிழகத்திலோ 98 விழுக்காடு இந்த பிரிவை சேர்ந்தவர் ஆவர்.

இங்கு விவசாய கட்டமைப்பு விவசாயக் கூலிகள், விவசாயிகள், குத்தகை விவசாயிகள், நிலவுடைமையாளர்கள், நிலப்பிரபுக்கள், வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள், இயந்திர வாடகையாளர்கள், பணக்கார கிராமப்புற விவசாய கூட்டுறவு சக்திகள், சிறு நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் முதலாளிகள், நுகர்வோர் என பெரும் மரமாக விரிந்துக் கிடக்கிறது. குறிப்பாக பெரிய முதலாளித்துவ விவசாயி, நிலப்பிரபுக்கள், ஒப்பந்ததாரர்கள், பெரு வணிக விவசாயிகளான பணக்கார சக்திகளின் கூட்டானது தொடர்ந்து சிறு-குறு விவசாயிகளை ஏய்த்து அவர்களை கூலிகளாக மற்றும் குத்தகைதாரர்களாக மாற்றும் போக்கும் அதிகரித்துள்ளது. அதில் கந்து வட்டி கடன் முக்கிய பங்காற்றுகிறது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். இவர்களில் 99 சதமானவர்கள் ஏழை நடுத்தர விவசாயிகள். இன்னும் பலர் நகரங்களை நோக்கி தினக்கூலிகளாக, வேறு துறைகளை நாடி அடிமட்ட தொழிலாளர்களாக சென்றுவிட்டனர். குறிப்பாக விவசாயத்தின் பாதுகாவலாக இருக்கும் கூட்டுறவு வங்கிகள், மானியங்கள், அரசு சலுகைகள், கிராமசபை பொறுப்புக்கள் ஆகியவற்றை கிராமப்புற விவசாய பணக்கார கூட்டுசக்திகள் கைப்பற்றிக்கொண்டு குறைந்தபட்ச சலுகை மற்றும் உதவிகளை கூட ஏழை விவசாயிகளிடமிருந்து தட்டிப் பறிக்கும் செயலை செய்து வருகின்றனர்.

இதை சாதிய கண்ணோட்டத்தில் உற்று நோக்கினோமானால் பாதிக்கப்படும் விவசாயிகளில் பெரும்பான்மையாக தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளாக உள்ளனர். இந்தியாவின் நிலப் பிரபுத்துவ கட்டமைப்பும்,சாதிய கட்டமைப்பும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை ஆகும். அந்த இரு சக்திகளை கொண்டு முதலாளித்துவம் சுரண்டல்தாரராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் செய்கின்றது. இந்த சுரண்டல் படிநிலை உள்ளார்ந்து மேலிருந்து கீழாக ஒன்றை ஒன்று சுரண்டி கொளுப்பதாகவே உள்ளது. அதில் சிக்கி அரைபடுபவர்கள் ஏழைஎளிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர். குறிப்பாக அகாலிதளம் கட்சியின் அர்சிம்ரத்கவுர் தன்னுடைய அமைச்சர் பதவியை விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராக தூக்கி எறிந்தார் என்பதை வரவேற்கும் அதே சமயத்தில் பஞ்சாபில் நிலவும் வர்க்க முரண்பாட்டை நாம் உற்றுநோக்க வேண்டும் . பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிலப்பிரபுத்துவ கட்டமைப்பு விஷ விருட்சமாய் தன்னை நிலை நிறுத்தி உள்ளது. குறிப்பாக அகாலித் தளத்தின் தலைவர்கள் பலரும் பெரு நிலப்பிரபுக்கள் ஆவர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை கையில் வைத்துக்கொண்டு ஏழை விவசாயிகளை அடிமைகளாக அவர்களின் உழைப்பை சுரண்ட கூடிய நபர்களாக உள்ளனர். இந்த சட்டங்களின் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகள் வேளாண்துறையில் அசுர வேகத்தில் ஓங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இவர்கள் விவசாய ஆதரவு போராட்டங்கள் என்ற பெயரில் தங்கள் நலனுக்காகவும் வீதிக்கு வந்துள்ளனர்.

காரல் மார்க்ஸ் குறிப்பிடுவதுபோல் “முதலாளித்துவம் முதன்முதலில் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி தோன்றும்போது, அதனை வீழ்த்த நிலப்பிரபுத்துவமானது அதுவரை அவர்கள் அடிமையாக வைத்திருந்த விவசாய கூலிகள் ஏனைய வெகுஜன தொழிலாளர்களை விவசாய நல கோரிக்கைகள் என்ற பெயரில் திரட்டிய போதும் நிலப்பிரபுத்துவத்தின் நயவஞ்சக முகத்தை அந்த விவசாயிகள், தொழிலாளர்கள் கண்டுகொண்டனர். அதைத்தான் இந்தியாவின் நிலபிரபுத்துவமும் தனக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம் ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளுக்குள் ஒளிந்து கொள்கிறது. அதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு நம் கோரிக்கைகளை வகுக்க வேண்டும். கார்ப்பரேட் நல திட்டங்களை எதிர்க்கும் இதே தருணத்தில், இந்திய கிராமப்புறங்களில் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும். மேல்குறிப்பிட்ட பத்திகளில் உள்ளவாறு இந்த விவசாய விரோத சட்டங்களானது 95% ஏழை விவசாயிகளை ஒட்டுமொத்தமாக ஓட்டாண்டிகளாக மாற்றுவது மட்டுமல்லாது நாட்டின் ஏழை குடிமகன்களின் தட்டில் உள்ள சாப்பாட்டை நேரடியாக திருடும் சட்டம் என்பதை உரக்க உரைக்க வேண்டும். எனவே நாம் உறுதியான, சமரசமற்ற, நடைமுறை சாத்தியமுள்ள, தெளிவான கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். நம்முடைய நேச சக்திகள் யார் என்பதை அடையாளம் கண்டு கூட்டமைப்பை உருவாக்கி போராட வேண்டும்.

விவசாயக் கூலிகள், விவசாயிகள், குத்தகை விவசாயிகள், இதர வேளாண் கூலிகள், கிராமப்புற சிறு,குறு நில உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வெகுஜன வர்க்கத்தினரையும் ஒன்றிணைத்து ஒட்டுமொத்த சாமானியர்களுக்குமான கோரிக்கைகளாக இவற்றை முன்மொழிய வேண்டும். கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்டுகள் தலைமையிலான நிலசீர்திருத்தம் போல அந்தந்த பிராந்தியங்களின் தன்மைக்கேற்ப நாடு முழுமைக்கும் நிலச்சீர்திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போதைய கார்ப்பரேட் நலன் சார்ந்த திட்டங்களை மக்கள் முன் அம்பலப்படுத்தி தெபாகோ எழுச்சி, தெலுங்கானா எழுச்சி போன்ற வீரம் செறிந்த போராட்டங்களின் அனுபவங்களைக் கொண்டு நடைமுறை சாத்தியம் உள்ள போராட்டங்களை ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்.

சுபாஷ்
மாவட்ட தலைவர்
இந்திய மாணவர் சங்கம் தென்சென்னை

Show 1 Comment

1 Comment

  1. Nisanth

    வாழ்த்துக்கள் 💯🤝

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *