அழிவில்லா எழுத்து ஆளுமை – ச.ரதிகா

எழுத்துலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தும் மறவாமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒருவரின் மனதில் ஆட்ட நாயகனாகவே என்றும் நிலைத்திருப்பார்கள்.ஆனால் இதில் கலக்காமல் கலக்க விடாமல் காலத்தையும் கடந்து அப்பாற்பட்டு தனித்து தனித்துவத்தோடு நின்று நிற்கும் எழுத்து ஜெயகாந்தனுடையது. அறுபதுகளில் அவர் எழுதியவை இக்காலத்திற்கும் இனிவரும் காலத்திற்கும் பொருந்தாமல் வேடிக்கையாக இருக்கும் என்கிறார்கள் சிலர். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகாது என்றோ உருவாக கூடாது என்றோ எதுவும் இல்லை. அவரது எழுத்து பழைமை அடைந்தது என்றால் சமூகம் புதுமை அடைந்து விட்டது என்பதே பொருள். அந்த புதுமையைதான் அவர் அன்று புரட்சியாக்கினார்.

இருந்தும் அவரது எழுத்தை வேடிக்கையாக்கும் அளவிற்கு ஒரு மேம்பட்ட அறிவார்ந்த சமுதாயம் உருமாறுமா என்பது ஒரு கேள்விக்குறி? அப்படி என்ன அவர் எழுதிவிட்டார் என்றால்,விடையில்லா முடிவில்லா வினாவாக ஆண்கள் மனதில் ஆழமாக வேரூன்றிய ஒன்று பெண்களை புரிந்து கொள்வதும் அவர்கள் நினைப்பதை அறியாமல் தவிப்பதும். ஏன் பெண்களே உணர்ந்தும் உணராத சொல்லத் தெரியாத சொல்லிப் புரிய வைக்க இயலாத நுட்பமான ஆத்ம உணர்வுகளை அழுத்தமாக அவரது எழுத்து பிரதிபலிப்பது தான் என்றைக்கும் மாறாத மாற்ற விரும்பாத மாற்றவே முடியாத வியப்பின் உண்மை. பெண்ணுரிமை பற்றி இதுவரை என்னற்றோர் பேசியும் எழுதியும் நடைமுறைப்படுத்தியும் வாழ்ந்தனர் இனிமேலும் வாழ்வார்கள். பெண்ணியம் என்பது ஆண்களுக்கு சமமாகவோ எதிராகவோ வாழ்வது அல்ல அது பெண்ணின் உயர்ந்த உணர்வுகள் சார்ந்தது.அப்படிதான் ஜெயகாந்தன் கதாநாயகிகள் திகழ்வார்கள்.

jayakandhan's oru manidhan, oru veedu, oru ulagam novel |திரைப்படமாகிறது  ஜெயகாந்தனின் நாவல்!- Dinamani

அப்படித் திகழ்ந்தால் கதையில் போராட்டமும் கதை எழுதியவருக்கு விமர்சனமும் எதிர்ப்பும் கண்டனமும் கிடைத்தது.நடைமுறையில் ஒரு பெண் அவ்வாறு வாழ்ந்தால் அவளோடு வாழ தகுதியற்றவர்கள் அவளைத் தனிமைப்படுத்துவார்கள். அவளை ஏற்று கொள்ள இயலாமல் உன்னதமாக்குவார்கள் அல்லது மனநோயாளியாக்குவார்கள். அப்படிபட்ட பெண்ணை புரிந்து கொண்டு அவளோடு இணைந்து ஆண் வாழும் காலம் என்று வருகிறதோ அன்றுதான் ஜெயகாந்தனின் எழுத்து பழையதாகும். அவரது அக்னிப் பிரவேசம் சிறுகதையும் அதை தொடர்ந்து சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலும்  அன்று புரட்சியாக இருந்து இன்று ஒன்றுமில்லாத நிகழ்வுகளாக மாறியிருக்கலாம். ஆனால் உணர்வுகள்???? பாலியல் வன்கொடுமையை அனுபவித்த பெண்களுக்கான நீதி நிகழ்த்திய ஆண்களுக்கு தண்டனை கிடைப்பதோடு கடமை முடிந்தது என்று நாம் ஒதுங்குவது போன்று அல்ல.

அதற்குப் பிறகு அப்பெண்ணின் நிலை குடும்பத்தாருக்கே சில நேரங்களில் புதிர். நமக்கோ இது போல் மற்றொரு சம்பவம் மற்றொரு தண்டனை என கடந்து போகும் செய்தி. பாதிக்கப்பட்ட பெண் மட்டுமே நாம் கூறுவது போல் இதெல்லாம் ஒன்றுமில்லை எனத் தெளிந்து புரிந்து உணர்ந்து சமுதாயத்தை நோக்கி வரும்போது அவளின் பார்வையில் ஆண் என்பவன் யாராக என்னவாக இருக்க முடியும்? அவள் அறியாமலே அவளுக்குள் ஏற்படும் பயம் அவநம்பிக்கை, பாதுகாப்பின்மை, விரக்தி, மன உளச்சல் என அனைத்தையும் போட்டு குழப்பி தெளிவாக்கி நம்பிக்கையை மீட்டெடுக்கும் எழுத்து அவருடையது. தேர்ந்த மனநல மருத்துவரால் கூட கண்டறிய இயலாத மிக மெல்லிய அந்தராத்மா புனிதங்களை வக்கிரங்களை இவரது எழுத்து ஓங்கிச் சொல்கிறது. நமது உணர்வுகளில் ஏற்படும் மாற்றமே மனதில் மாறி எண்ணங்களை மாற்றி செயலில் வெளிப்பட்டு மனிதமாகும். அக்காலம் வரும்வரை ஜெயகாந்தனின் எழுத்தை உணர்ந்து கொண்டவர்களால் வியப்பிலிருந்து மீள இயலாது. மீண்டு வரவும் முடியாது.