எழுத்தாளர் கு. அழகிரிசாமி எழுதிய (Ku. Alagirisami) "அன்பளிப்பு" (Anpalipu) என்னும் சிறுகதை - Short Story - https://bookday.in/

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு” – சிறுகதை

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு” – சிறுகதை

அன்பையும் பொதுவில் வைப்போம்!

( எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’ என்னும் சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)

பூரணமானவை என நாம் நம்பும், நம் செயல்கள் மீது இலக்கியம் ஐயம் கொள்கிறது. அதன் போதாமைகளைச் சுட்டிக் காட்டுகிறது.கைக்கெட்டாத தூரத்தில் காணும் காட்சியை, கண்ணருகில் கொண்டு வந்து காட்டுவதுபோல் இலக்கியம் ஒன்றைத் துலக்கமாகக் காட்டுகிறது.நம் பண்புகளை மேம்படுத்துகிறது. நல் இலக்கியத்தின் பண்பும் அதுவாகும்.

குழந்தைகளை விரும்பாத மனிதர்கள் உலகில் இருக்கிறார்களா என்ன? குழந்தைகளைக் கண்டால் நாமும் குழந்தையாகி அவர்களுடன் விளையாடவும் பழகவும்
நினைக்கிறோம். ஆனால்,அந்தச் செயல் நியாயமானதல்ல; அது வெறும் வெற்றுப் பாசாங்கு. பெரியவர்கள் குழந்தைகளிடம் காட்டும் பொய்யான பாசாங்கை ஒருபோதும் குழந்தைகள் பெரியவர்களிடம் காட்டுவதில்லை என்பதையும்,மகத்தான அந்தக் குழந்தைகளுக்கு உண்மையில் பெரியவர்கள் கொடுக்க வேண்டிய அன்பளிப்பு என்ன என்பதையும் பேசும் சிறுகதையே ‘அன்பளிப்பு’.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய இந்தக் கதை எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குப் பிடித்த சிறுகதையாக இருக்கக் கூடும். அதனால்தான் கி.ராஜநாராயணன் தொகுத்த ‘கு.அழகிரிசாமி கதைகள் ‘ தொகுப்பில்  முதல் கதையாக இதனை வைத்திருக்கிறார்.

பெரியவர்கள் ஒரு குழந்தையிடம் “குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி,குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்துகொள்கிறார்கள். பெரியவர்களது அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் நடிப்பும் கலந்திருக்கின்றன.ஆனால்,சூதுவாத றியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை ; அவர்களுடைய அன்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள்” இதை உணர்ந்தே இக்கதையில் வரும் கதைசொல்லி குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் நண்பர்களாகவே நடத்துகிறார். பிருந்தா,தேவகி,சித்ரா,சுந்தரராஜன், சாரங்கன் ஆகியோரிடம் நண்பர்களாகவே பழகுகிறார்.குழந்தைகள் அவரின் வீட்டிற்கு வந்து உரிமையுடன் பழகுகின்றனர்.தூக்கத்தில் இருந்தாலும் அவரைக் கிள்ளி எழுப்புகிறார்கள் ; அவரது அறையைக் கலைத்துப் போடுகிறார்கள்.

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்..! கதை சொல்லிகளின் கதை பாகம் 18 பார்ட் -2 | Life history of Ku.azhagirisamy Part 2 - Vikatan

அதையெல்லாம் அவர் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார். அவர்கள் படிப்பதற்குப் புத்தகங்களைக் கொண்டு வந்து தருகிறார்.அவற்றைப் பெறுவதில் அவர்களுக்குள் போட்டி நடக்கிறது. அவர் ஒவ்வொரு முறையும் புத்தகங்களைத் தரும்போது ‘என் பிரியமுள்ள சித்ராவுக்கு அன்பளிப்பு, பிரியமுள்ள சுந்தரராஜனுக்கு அன்பளிப்பு என்றே எழுதிக் கொடுக்கிறார். அவர்கள் இருவரும் முதலில் இருந்தே அவரிடம் பழகுவதால் அப்படிச் செய்கிறார்.வேறு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை.சித்ராவும் சுந்தரராஜனும் சீக்கிரம் படித்துவிட்டு மற்றவர்களிடம் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்பது அவரின் நிபந்தனையாகும்.

” குழந்தைகளுடன் இம்மாதிரி விளையாடுவதும் இம்மாதிரிப் பழகுவதும் அவரின் அம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.ஐம்பது வயதுத் தாயாருக்குத் தன் மகனை மனைவி, மக்களுடன் குடித்தனம் செய்யும் தகப்பனாகப் பார்க்கப் பிடிக்குமே தவிர, குழந்தைகளுடன் குழந்தையாக விளையாடிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் இருப்பதைக் காணப் பிடிக்குமா?”

ஒருமுறை பிருந்தாவுக்குக் காய்ச்சல் வந்துவிடுகிறது.மற்ற குழந்தைகளிடம் ‘பிருந்தாவின் உடம்பு எப்படி இருக்கிறது?’ எனத் தினம்தினம் விசாரிக்கிறார்.பிருந்தாவைப் போய் பார்த்துவிட்டு வரலாமென்றால் அவளின் பெற்றோர்கள் அறிமுகமானவர்களில்லை.அதனால் வீட்டுக்குப் போகச் சங்கடப்படுகிறார். ஒரு நாள் பிருந்தா வீட்டின் வேலைக்காரரைச் சந்திக்கிறார்.அவர், “காய்ச்சல் இன்னும் சரியாகவில்லை.எதுவும் சாப்பிடமாட்டேன்
என்கிறாள்.தூக்கத்தில் ‘மாமா புத்தகம் ‘ என்று உங்கள் பெயரைச் சொல்லியே புலம்புகிறாள்”என்கிறார்.

பதைபதைப்புடன் கிளம்பி பிருந்தாவின் வீட்டிற்குச் செல்கிறார்.அவரைப் பார்த்ததும் பிருந்தா உற்சாகமடைகிறாள். “எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” என்கிறாள் பிருந்தாவின் தாய். பிருந்தாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறார்.மறுநாளும் அவ்வாறே செய்கிறார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாரங்கன் ‘எங்கள் வீட்டுக்கும் வாருங்கள் ” என்று கையைப் பிடித்து இழுக்கிறான்.”பிருந்தாவுக்குக் காய்ச்சல்.அதனால்,அவள் வீட்டிற்குச் சென்றேன்.சாரங்கா! இன்னொரு நாளைக்கு வருகிறேன். கையை விடு எனக்கு ஆபீசுக்கு நேரமாகிவிட்டது” என்கிறார்.”எப்போது எங்கள் வீட்டுக்கு வருவீர்கள்”என நச்சரிக்கும் சாரங்கனை சமாதானப்படுத்த ‘அடுத்த ஞாயிற்றுக்கிழமை ‘ எனச் சொல்லி வைக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வரவேண்டும் என்று வீட்டுக்கு வரும்போதெல்லாம் சாரங்கன் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறான். பிருந்தாவுக்குக் காய்ச்சல் சரியாகிவிடுகிறது.சனிக்கிழமை எல்லோரும் அவரின் வீட்டில் கூடுகிறார்கள்.புதுவருடம் பிறந்து மூன்று நாள்கள் ஆகியிருந்த நிலையில்,முன்பே சொன்னபடி வழக்கம்போல் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் ‘அன்பளிப்பு’ என எழுதி டைரிகளைப் பரிசளிக்கிறார்.மற்ற குழந்தைகள் டைரி வேண்டுமென்று கேட்கவில்லை.

குழந்தைகள் போன பிறகு சாரங்கன் மட்டும் அங்கு இருக்கிறான். “மாமா, நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வருவீர்களா? நாளைக்குத்தான்
ஞாயிற்றுக்கிழமை” என்கிறான்.

அவரிடமிருந்த வால்ட் விட்மனின் கவிதைத் தொகுதியை எடுத்து “இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா? எனக் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கிறான்.”சாரங்கா! உனக்குப் புரியாது.சொன்னால் கேள் ” என்று புத்தகத்தை வாங்கி வைக்கிறார்.

“சாரங்கனின் முகம் ஏமாற்றத்தினால் வெளிறிப் போய் விட்டது. வறண்ட பார்வையோடு என்னைப் பார்த்தான்.இரண்டு நிமிட நேரத்துக்குப் பிறகு திடீரென்று அழுகைக் குரல் கேட்டது.அழுதது சாரங்கன்தான்”.

அவர் அருகில் சென்றதும் அழுகையை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறான்.அவனது முகம் இரத்தம் போலச் சிவந்திருக்கிறது. அவர் அவனை எட்டிப் பிடிப்பதற்குள் ஒரே ஓட்டமாக ஓடி விடுகிறான். சாரங்கன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது கதைசொல்லிக்குப் புரியாத புதிராகவே
இருக்கிறது. அன்று மாலை மற்ற குழந்தைகள் அவரைப் பார்க்க வருகின்றனர். சாரங்கன் மட்டும் வரவில்லை.

எழுத்தாளர் கு. அழகிரிசாமி எழுதிய (Ku. Alagirisami) "அன்பளிப்பு" (Anpalipu) என்னும் சிறுகதை - Short Story - https://bookday.in/

இரவில் சாரங்கனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார் கதைசொல்லி. “ஏன் அழுதான்? நான் அவனை ஒன்றும் சொல்லவில்லையே! எல்லாக்
குழந்தைகளையும் போலவே அவனையும் என் கண்ணுக்குக் கண்ணாக வைத்துக் கொண்டிருக்கிறேன்.புத்தகத்தைத் திருப்பி வாங்கிக் கொண்டதற்காக இப்படி அழுதிருக்க முடியாது.நான் திரும்ப வாங்கிக் கொண்ட காரியம், விம்மிவிம்மி அழத்தக்க மன வேதனையைத் தர நியாயமில்லை! சாரங்கா! எதற்காக அழுதாய்? எதற்காக அழுதாயடா?” அன்று ஞாயிற்றுக்கிழமை. பிருந்தா மட்டும் வருகிறாள்.மற்றவர்கள் சினிமாவுக்குப் போய்விட்டதாகக் கூறுகிறாள்.சாரங்கனைப் பற்றித் தெரியாது என்கிறாள். அப்போது சாரங்கன் அங்கு வந்து நிற்கிறான்.

“ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டுக்கு வருவதாகச் சொன்னீர்களே, வாருங்கள் மாமா” என்று கெஞ்சுகிறான். வருவதாக ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்.இப்படித் தொந்திரவு செய்வான் என்று நினைக்கவில்லை. தனக்கு வேலையிருப்பதால் வர முடியாது என்று சொல்லிச் சமாளிக்கிறார்.

“சாரங்கன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான்.பெருமூச்சு விட்டுக்கொண்டு, வர மாட்டீர்களா? என்று தடுமாறும் குரலில் கேட்டான்.”

அழுதுவிடப் போகிறான் என்று பயந்து வா வீட்டுக்குப் போகலாம் என்று சொல்கிறார்.அறிமுகம் இல்லாத வீட்டில் ஒரு காரணமும் இல்லாமல் போவதை நினைத்து அவர் சங்கடப்படுகிறார். சாரங்கனோ சந்தோசமாக “வாருங்கள் வாருங்கள் ” என வீட்டிற்குள் அழைத்து நாற்காலியில் உட்கார வைக்கிறான்.”அறையின் சூழ்நிலையைக் கொண்டே சாரங்கனின் பெற்றோர்கள் ஏழைகள் என்பதை எளிதில் தீர்மானிக்க முடிந்தது”.

சாரங்கன் ஒரு தட்டில் உப்புமாவும் ஒரு தம்ளரில் காபியும் கொண்டு வந்து அவரைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். கையை எடுத்துத் தட்டில் வைக்கிறான். அவருக்கோ அது தர்மசங்கடத்தைத் தருகிறது.” சிறு பையன் பேச்சைக் கேட்டு விருந்தாட வந்த என்னைப் பற்றி அவனுடைய பெற்றோர்கள் என்ன நினைப்பார்களோ என்ற பயம் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த வண்ணமாக இருந்தது.”

ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்ததும் சாரங்கன் மேசையைத் திறந்து பேனாவை எடுக்கிறான். தன் கால்சட்டைப் பையில் கையை விட்டு எதையோ எடுத்து மேசை மேல் வைக்கிறான்.அது ஒரு டைரி.அவர் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் அன்பளிப்பாகக் கொடுத்ததைப் போன்ற ஒரு டைரி. பேனாவை என் கையில் கொடுத்து ‘எழுதுங்கள்’ என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”என்ன எழுத?” என்று கேட்டேன்.

‘என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு ‘ என்று எழுதுங்கள். கதை இத்துடன் முடிகிறது.இப்போது நமக்குச் சாரங்கன் முன்பு ஏன் அழுதான் என்பதற்கான காரணம் தெரியவருகிறது.சாரங்கனுடைய செயல்களின் பொருளும் நமக்குப் புரிந்து விடுகிறது. நமக்குமட்டுமா? கதைசொல்லிக்கும்தான்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அவருடைய இரண்டாம் வகுப்பு டீச்சர் ஆதிலெட்சுமி மேல் கொள்ளைப் பிரியம்.”அம்மாவின் சேலை வாசம் போல, பாட்டியின் உடம்பு வாசம் போல,என் பிரியமான டீச்சரின் வாசம்கூட என் மூச்சிலே இருந்தது”. அவ்வளவு பிரியமான ஆசிரியர் தெலுங்கு பேசுபவராக
இருந்து,தெலுங்குப் பிள்ளைகளிடமும் பெற்றோர்களிடமும் தெலுங்கில் பேசுகிறார்.அந்த நொடியில் மனம் கசந்து அழுகிறார்.”எதுக்குடா அழறே
இப்போ” என டீச்சர் கேட்டதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஒரு சின்ன இடைவெளியைக்கூட குழந்தை மனம் தாங்குவதில்லை.ஒரு ஆசிரியர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற நிலையை விட்டு எப்போதும் விலகக் கூடாது என்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். குழந்தைகள் அன்புகாட்டலில் சம உரிமையைக் கோருகின்றனர், விரும்புகின்றனர்.

சாரங்கனும் அதைத்தான் விரும்புகிறான். எழுத்தாளர் கு.அழகிரிசாமி தனது ‘குமாரபுரம் ஸ்டேசன்’ சிறுகதையில் “வாத்தியாரு அப்படி.அந்த மாதிரி ஒரு தகப்பன் கூடப் புள்ளைக மேலே பிரியமா இருக்க மாட்டார்” என்றொரு வரி வரும்.தகப்பனோ,ஆசிரியரோ,வேறு எவரோ குழந்தைகளிடம் பழகும் எவரும் குழந்தைகளிடம் தவறியும் பாரபட்சமாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.இதுவே நாம் குழந்தைகளுக்குத் தரும் உயர்வான ‘அன்பளிப்பு’ என்பதை இக்கதை உணர்த்துகிறது.
மணி மீனாட்சிசுந்தரம், மதுரை.

உதவிய நூல்கள் :

1. கு. அழகிரிசாமி கதைகள்- கு.அழகிரிசாமி (தொகுப்பாசிரியர்
கி.ராஜநாராயணன்), சாகித்ய அகாதமி, புது தில்லி.

2. கனவு ஆசிரியர் (தொகுப்பாசிரியர் – க.துளசிதாசன்), புக்ஸ் பார் சில்ட்ரன், பாரதி புத்தகாலயம், சென்னை – 600018.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு:

மணி மீனாட்சி சுந்தரம்
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நவீன கவிதை குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. இ நாகேந்திரன்

    குழந்தைகள் உளவியல் சிந்தனையில் அன்பளிப்பு மிகவும் அழகான அதே சமயம் சிந்திக்க வேண்டிய கதை . உங்கள் பார்வை ரசனையாக உள்ளது. வாழ்த்துகள் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *