கோபாலகிருஷ்ணன்களும்
தடித்த நோட்ஸ்களும்
– மணி மீனாட்சிசுந்தரம்
(எழுத்தாளர் செம்பை முருகானந்தம் எழுதிய ‘ போன்சாய் நிழல்கள் ‘ சிறுகதையை முன்வைத்து)
இலக்கியம் தனது எண்ணிலடங்கா வரிகளில் மனித வாழ்வைத் தக்க வைத்தபடிக் காத்திருக்கிறது. அதில் இழப்பின் வலிகளும், நம்பிக்கையின் உற்சாகமும், நாளைய வாழ்வுக்கான வழிகளும் வாசகனைக் கண்சிமிட்டாமல் பார்த்தபடி இருக்கின்றன.
பள்ளிக்கல்வி நடத்தும் பொதுத்தேர்வுகளில், ஒவ்வொரு வினாத்தாளின் மேலும் தவிராமல் இடம்பெறும் வரி ‘விடைகள் மாணவரின் சொந்த நடையில் இருக்க வேண்டும் ‘ என்பதாகும்.
இந்த வரி, ஒரு சடங்குபோல வழக்கமாக இடம்பெறும் ஒன்றுதானா? இன்றைய பள்ளிகள் இதைப் பொருட்படுத்துகின்றனவா? மதிப்பீட்டு முறையில் இவ்வரிகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ன? ஆசிரியர்கள் தம் பயிற்சி முறையில் இதைச் செயல்படுத்தி வருகிறார்களா?
மாணவர்கள் இதைப் பின்பற்ற பள்ளிகளில் களமிருக்கிறதா? என்ற விவாதங்களின் மையப்புள்ளியாக அமைந்த சிறுகதையே எழுத்தாளர் செம்பை முருகானந்தத்தின்
‘போன்சாய் நிழல்கள்’.
கோபாலகிருஷ்ணன் என்னும் மாணவன் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறான்.
சில நாள்களாக மனச்சிதைவுக்கு ஆட்பட்டவன்போல் அவன் நடந்துகொள்கிறான். / எங்கம்மாவ தோச பெரட்டியால அடிச்சேன். எங்கப்பா எனக்குச் சோறூட்ட வருவாரு.அவர கன்னத்துல நெறைய தடவ அறைஞ்சேன். அங்க வீட்டுக்குள்ளேயே ஒன்பாத், டூபாத்தெல்லாம் போனேன்/
பெற்றோர் அவனை உளவியல் மருத்துவரிடம் அழைத்து வருகிறார்கள்.
மருத்துவர் அவனது பிரச்சனைக்கான காரணத்தைக் கண்டறிய அவனிடம் உரையாடுகிறார். மெல்ல மெல்ல அவனது நிலைமைக்கான காரணம் துலக்கம் பெறுகிறது.
கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு ஒரே பையன்.அப்பா சிறிய அச்சகம் ஒன்றை நடத்துகிறார்.அப்பாவும் அம்மாவும் அன்பு காட்டுவதில் எந்தக் குறையும் வைப்பதில்லை. ஐந்தாம் வகுப்புவரை வீட்டுக்கு அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் படிப்பு.தொடர்ந்து பள்ளிக்குப் பணம் கட்ட முடியாததால் ஆறாம் வகுப்பில் அவனை அப்பா அரசுப் பள்ளிக்கு மாற்றுகிறார்.
கோபாலகிருஷ்ணனின் அப்பா எட்டாம் வகுப்பு வரையில் படித்திருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் நல்ல பயிற்சி உடையவர்.அவர், தான் படித்த கதைகளை மகனுக்குச் சொல்லி, அவனைத் திரும்ப சொல்லச் செய்வார்.கோபாலகிருஷ்ணனுக்கும் அதில் ஆர்வம்.ஆனால், அப்பா சொன்ன கதையை அப்படியே சொல்லாமல் தனது சொந்த நடையில் கதையைத் திரும்பக் கூறுவான்.அப்பா அவனைப் பாராட்டி உற்சாகப் படுத்துவார். இதே பழக்கம் பாடங்களைப் படிப்பதிலும் அவனுக்குத் தொற்றிவிடுகிறது. ஆசிரியர் நடத்தும் பாடங்களைப் புரிந்துகொண்டு சொந்த நடையில் எழுதுகிறான். பள்ளியும் அவனது பழக்கத்தை தட்டிக்கொடுத்து வரவேற்கிறது.
/ நான் எய்த் படிக்கிறப்போ ஜி.பி.எம்ன்னு எங்க தமிழ்சாரு. அவரு, ஒருநா சொன்னாரு…” டேய் மனப்பாடம் பண்ணுறதுக்கும் புரிஞ்சுக்கிறதுக்கும் பெரிய வேறுபாடு இல்ல. நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னாலே அது மனப்பாடமாகியிருச்சுன்னு அர்த்தம்.
ஆனா நீங்க மனப்பாடம் பண்ணினாலும் அது புரிஞ்சுகிட்டதா அர்த்தமில்ல. அதே மாதிரி புரிஞ்சுகிட்டா ஒங்க வார்த்தையிலே எப்படி வேணாலும் எழுதலாம். மனப்பாடம் பண்ணினா ஒரு வார்த்தை மறந்தாலும் பிரேக்டௌன்னான வண்டி மாதிரி அம்புட்டுத்தான்”னாரு./
இப்படித்தான் கோபாலகிருஷ்ணனுக்கு எதையும் சொந்தமாக எழுதும் பழக்கம் வளர்கிறது. கோபாலகிருஷ்ணன் நன்றாகப் படிக்கிறான்; மிக நன்றாகப் படிக்கிறான். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஸ்டேட் செகண்ட் ரேங்க்.அவனுடைய அம்மா சந்தோசத்தில் அழுதுகொண்டே இருக்கிறார். அப்பாவுக்கும் அவ்வளவு ஆனந்தம்.பள்ளியும் ஊரும் அவனைக் கொண்டாடுகிறது.
அப்போதுதான் அவனது பிரச்சனை ஆரம்பமாகிறது. தமிழ்நாட்டின் பெரிய பள்ளிகள் அவனைச் சேர்த்துக்கொள்ள விரும்பி அழைக்கின்றன. அவனுக்கோ அவனது அப்பாவுக்கோ இதில் விருப்பமில்லை. தொடர்ந்து படிக்கிற அரசுப் பள்ளியிலேயே படிக்க விரும்புகிறான். அம்மா, உறவினர்கள் கட்டாயத்தால் ஒரு பெரிய நகரத்தின் ஒரு பெரிய பள்ளியில் சேர்க்கப்படுகிறான் கோபாலகிருஷ்ணன்.
/ ம்..அங்க… அங்கதான் என் லட்சியம், எங்கனவு, என் அறிவு, எந்திறமை, எம் விளையாட்டு எல்லாம் எல்லாம் எல்லாமே செதஞ்சு கொழஞ்சு போனது./
வீட்டை விட்டுப் பிரிந்த சோகத்தை விட, கோபாலகிருஷ்ணனுக்குப் பெரிய பிரச்சனையாக இருந்தது பள்ளியின் நடைமுறையே. பள்ளியின் முதல்நாளில் மாணவர்களிடமும் பெற்றோரிடமும் புதிய பள்ளியின் முதல்வர் இப்படிப் பேசுகிறார்,/” எல்லா ஸ்டூடன்ஸ்சும் கவனமா கேளுங்க. நீங்களெல்லாம் வெளியில எப்படிப் படிச்சுட்டு வந்திருந்தாலும் சரி. இங்க எம்.ஆர்.பி.எஸ்க்குன்னு சில மெத்தடாலஜி வச்சுருக்கோம்.அதத்தான் நீங்க ஃபாலோ பண்ணணும். பேரன்சும் கோ- ஆப்ரேட் பண்ணுங்க. ஒங்க பசங்களுக்கும் சொல்லுங்க” என்கிறார்.
பள்ளியில் ஆசிரியர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பட்ட நோட்ஸைப் பின்பற்றக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
பெயருக்கு மட்டுமே பாடத்தை நடத்துகிறார்கள். / பரியலன்னு ஏதாவது டௌட் கேட்டா ‘ இப்ப என்ன புரிஞ்சு வானத்த வில்லா வளைக்கப்போறியா, நோட்ஸ் இருக்குல்ல அதப்படி.. மனப்பாடம் பண்ணு அது போதும்’/ என்கிறார்கள்.
/ மேத்ஸ்ல டௌட் கேட்டாக்கூட ‘ இதெல்லாம் சொல்லிப் புரியவக்க முடியாது. ஒருமுறைக்கு நாலு முறையா கணக்கப் போட்டுப்பாரு. அப்பதான் வரும்’ பாங்க. எனக்கு ஏதோ தனித்தீவுல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருந்துச்சு/
வகுப்பில் நடக்கும் தேர்வுகளில் கோபாலகிருஷ்ணன் தன் சொந்த நடையில் விடை எழுதியதற்காக ஆசிரியர்களால் மாணவர்கள் முன்னிலையில் விமர்சிக்கப்படுகிறான்.
/ ஒம் மேதாவித் தனத்தையெல்லாம் மூட்டை கட்டிட்டு, நோட்ஸ்ல என்ன எழுதியிருக்கோ அத வார்த்தை பிசகாம வாக்கியம் மாறாம எழுது.ஒஞ்சொந்த நடை, நொந்த நடை எல்லாம் இங்க யாரும் கேட்கல” /என்கிறார்கள் ஆசிரியர்கள்.
/ எந்தக் காரணங்களுக்காக நகராட்சி ஸ்கூல்ல எல்லா டீச்சரும் என்னைப் பாராட்டினாங்களோ, அதே காரணங்களுக்காக நான் இங்கே அவமானப்படுத்தப் பட்டேன். இப்படித்தான் பிளஸ் ஒன் கழிஞ்சது. அப்பவே முடிவுக்கு வந்துவிட்டேன். எங்கம்மா கனவு, எங்கப்பா நம்பிக்கை எதையும் என்னால காப்பாத்த முடியாதுன்னு./
/ ‘ எப்பப் பார்த்தாலும் படி, படி, மனப்பாடம் பண்ணு.ஒப்பி, டெஸ்ட் எழுதுன்னு டார்ச் பண்ணும்’/ படிப்பு முறையுடன் கோபாலகிருஷ்ணனால் ஒன்ற முடியவில்லை.
கோபாலகிருஷ்ணன் நினைத்ததுபோல் அவனது மேல் நிலைக்கல்வி அமையவில்லை. ஏதோ தேர்வெழுதினான். பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே இரண்டாம் பிடித்த மாணவனான கோபாலகிருஷ்ணன் திட்டமிட்டு தான் தோற்கடிக்கப்பட்டாத எண்ணினான்.யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்காத நிலைக்கு ஆளாகிறான். தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். இப்படித்தான் அவனது மனச்சிதைவு ஆரம்பமாகியது.
மனநல மருத்துவர் அவனது பிரச்சனைகள் அனைத்தும் அன்போடு காதுகொடுத்துக் கேட்கிறார். கோபாலகிருஷ்ணன் வாய்விட்டு அழுகிறான்.மருத்துவர் அவனை அழ அனுமதிக்கிறார்.
/ “நல்லாவே அழுதுட்ட, இப்ப ஒம்மனசுல வேறெதுவும் இல்லயே, எல்லாத்தையும் சொல்லிட்டியா?…”/
/ “ம்..சொல்லிட்டேன்…/
/” இப்ப ஒம்மனசு எப்படியிருக்கு”/
/ ” பழைய மாதிரி ரொம்ப இயல்பா இருக்கு”/
தேர்வு முடிவு வந்ததுகூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் எதிர் பார்தததைவிடக் கொஞ்சம் அதிகமாகவே மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான். ஆனாலும் அது தனக்கு ஏற்ற மதிப்பெண் இல்லை என நினைத்து வருந்துகிறான். மருத்துவர் அவனைத் தேற்றுகிறார். வருடம் போனதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் கூடுதல் மதிப்பெண் பெற பொதுத்தேர்வு ( improvement exam நடைமுறையில் இருந்த காலம் என நினைக்கிறேன்) எழுத ஆலோசனை வழங்குகிறார். கோபாலகிருஷ்ணன் மனநல மருத்துவருக்குப் படிக்கும் விருப்பத்தைக் கூறுவதுடன் கதை நிறைவுக்கு வருகிறது.
பாடங்களுக்கு நோட்ஸ் பயன்படுத்துவதென்பது இன்று எல்லா பள்ளிகளிலும் பொது வழக்கமாக மாறிப் போய்விட்டது. அந்தப் பொது வழக்கத்தைக் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனை முன்வைத்து இச்சிறுகதை கேள்விகளை எழுப்புகிறது. அப்பயிற்சி முறை குறித்த ஒரு மதிப்பீட்டை, ஒரு மாணவனின் வாழ்வை முன்னிறுத்தி விவாதிக்கிறது இச்சிறுகதை. கற்பித்தல் முறையை விவாதிப்பதென்பது, மாணவர்களின் எதிர்காலம் பற்றி விவாதிப்பதே ஆகும்.கற்பித்தல் முறை குறித்த தொடர்ச்சியான விவாதங்களை முன்னெடுக்கும் ஒரு சமூகமே வளரும் சமூகம் என்பதையும் நாம் உணர வேண்டும்.
உதவிய நூல் :
————————–
புதிய தமிழ்ச் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் : முகிலை இராசபாண்டியன், சாகித்திய அகாதமி வெளியீடு.
கட்டுரை ஆசிரியர் குறிப்பு :
மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் அருமையான சிறுகதை. இன்றைக்கு மிகவும் பொருத்தமான மாணவர்கள் உளவியல் சார்ந்த தேவையான பதிவு ஐயா. உங்கள் சிறுகதை தேர்வு மிகவும் சிறப்பு. வாழ்த்துகள் ஐயா.