யார் பிழை – ச.ரதிகா

யார் பிழை – ச.ரதிகா

தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் தற்கொலை தற்சமயத்தில் அதிகரித்து வருகின்றன. அதற்கு மன அழுத்தம் ,தாங்க இயலாத மன வேதனை, விரக்தி, ஆதரவற்ற தனிமை, கையறு நிலை என எண்ணிலடங்கா காரணங்கள் இருக்கலாம். தற்கொலை செய்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும் என்றும் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்றும் இரு அணிகளாகப் பிரிந்து அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வாதம் பிரதிவாதம் நிகழ்த்தலாம். தற்கொலை செய்தவர்கள் நமக்கு நெருக்கமானவர்கள் என்றால் வாழ்நாள் வலியும் அறிமுகமானவர்களாக இருப்பின் பழக்கத்திற்கு ஏற்ப இழப்பின் சோகத்தையும் அறிமுகம் அற்றவர்கள் எனில் காரணங்கள் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஏற்ப இரங்கலாகவோ, வருத்தமாகவோ, சிறு கண்ணீர்த்துளியாகவோ, ஆவேசமாகவோ நமது உணர்வுகளை உரக்கச் சொல்லியோ மௌனப் புலம்பலாகவோ வெளிப்படுத்தி கடந்தும் கடக்க இயலாமல் தவித்தும் அதிலேயே மூழ்கியும் வெளியேறியும் துயரத்தை துறந்தோ தகர்த்தோ செல்கிறோம். தற்கொலைகளில் நமக்கு அதிக அளவில் அதிர்ச்சி அளிக்கக் கூடியது பதின் பருவத்தினரின் மரணமே.

மரணம் அனைத்திலிருந்தும் நிரந்தர விடுதலையே. ஆனால் இவர்கள் தன்னிலிருந்தே விடுதலை பெறத் துடிக்கிறார்கள். இவர்களின் விடுதலைக்கு தார்மீகப் பொறுப்பு பெற்றோர்களே. என்ன வேண்டுமென்றாலும் வாழ்வில் நடைபெற்றிருக்கலாம் எது நடந்தாலும் நான் எவ்வாறு இருந்தாலும் என் பெற்றோர்கள் எனக்குத் துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கையை கொடுக்காததே முழுமுதல் காரணம். உலகில் மூலை முடுக்குகளில் வாழ்ந்த வாழும் சாதித்த தன்னம்பிக்கை மிகுந்த மனிதர்களை தேடி தேடிகுழந்தைகளுக்குச் சொல்லும் பெற்றோர்கள் அவர்களை ஒருபோதும் உதாரணமாக சொல்வதே கிடையாது. ஏனெனில் இங்கு சாதனை என்பது தேர்வில் முதல் மதிப்பெண் கலைநிகழ்வுகளில் முதலிடம் விளையாட்டில் முதலிடம் என மனித மூளைக்குள் ஆளப் புதைந்துள்ளது. குழந்தைகள் தெருவில் பசியோடு இருக்கும் ஆதரவற்ற மனிதருக்கு ஏதாவது உண்ணக் கொடுப்பது உதவி செய்யச் சொல்வது கேட்பாரின்றி சுற்றித் திரியும் தெரு நாயை வளர்க்க வீட்டிற்கு தூக்கிக் கொண்டு வருவது உடன் பழகும் நண்பர்களுக்கும் முன்பின் முகமறியா யாரோ ஒருவருக்கு ஏதேனும் சிறு உபகாரம் செய்வது என எண்ணற்ற சாதனைகளை அவர்கள் சாதாரணமாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான் பட்ட துன்பத்தை வாழ்வில் என் குழந்தைகள் அனுபவிக்க கூடாது என போராடும் ஒவ்வொரு பெற்றோரும் சாதனையாளர்களே.

parenting tips for parents: குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அறியாமல் செய்யும் தவறு இதுமட்டும்தான்.. இதை தவிர்த்தால் உங்கள் குழந்தையும் ஓவர் ...

பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளை அந்த பொறுப்பில் இருந்து பராமரிக்கும் எண்ணற்ற மனிதர்கள் சாதனையாளர்களே. இச்சமுதாயத்தில் உறவுகள் ஏதுமின்றி யாருமற்ற நிலையில் ஒரு குழந்தை வளர்வதும் வாழ்வதும் வாழ்நாள் சாதனையே. இதுபோன்ற செயல்களால் தான் குடும்பமும் சமுதாயமும் இன்னும் உயிர்ப்போடு திகழ்கிறது. மனிதத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தராமல் ஒரு வேலையை அவர்களின் கனவாக லட்சியமாக சிறுவயதிலேயே உருஏற்றுவது அர்த்தமற்றது. பொருளாதார ரீதியாக முன்னேற வேலை அவசியத் தேவையே. சம்பளம் இல்லாமல் எவரும் எவ்வேலையும் செய்வதில்லை செய்ய விரும்புவதும் இல்லை. இறுதியில் அனைத்தும் பணத்தில் வந்து முடிகிறது.ஆக பணத்தை துரத்தும் வேலை தான் வாழ்நாள் லட்சியமா.இங்கு வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சியமாக இருக்கிறது. தேர்வு ,காதல், குடும்பம், அவமானம், புறக்கணிப்பு என தற்கொலைக்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் வாழ நினைப்பதும் வாழ முயற்சிப்பதும் வாழ்வதற்கும் ஒரு சிறு நம்பிக்கை கூட இப்பரந்த உலகில் அவர்களுக்கு இல்லை என்பது தற்கொலையை விட கொடுமையானது. குழந்தைகளுக்காகத் தான் வாழ்கிறோம் என்று சொல்லிச் சொல்லி குழந்தைகளுடன் வாழ்வதே இல்லை. சமுதாயத்தோடு இணைந்து வாழும் மனித குலத்திற்கு தேவை சமுதாயத்திற்கு உதவும் சமுதாயத்தை மாற்றும் சமுதாயத்தை புதுப்பிக்கவும் அடுத்தகட்ட உயர்வுக்கு வளர்ச்சிக்கு அதை எடுத்துச் செல்லும் குழந்தைகளே. அதை முதலில் பெற்றோர்கள் உணரவேண்டும்.

குழந்தைகளுக்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்தால் மட்டும் போதாது சரியான பாதையில் அவர்களை வழிநடத்தவும் வேண்டும். குழந்தைகள் குடும்பத்திற்கு மட்டுமே உரியவர்கள் அல்ல இச்சமுதாயத்திற்கும் உரியவர்கள். இச்சமுதாயத்தை மாற்ற நாம் மிகப்பெரிய தியாகங்களை எல்லாம் செய்ய வேண்டியதில்லை நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளை மிகச் சரியாக நாம் வளர்த்தால் மட்டுமே போதும். அதைவிட ஆகச் சிறந்த சமூக சேவை வேறொன்றுமில்லை. சமுதாயத்திற்கான நமது இந்த சிறு பங்களிப்பை நாம் அனைவரும் மனம் உவந்து செய்ய வேண்டும் செயல்படுத்த வேண்டும்.

எழுதியவர் ச.ரதிகா

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *