70 ஆயிரம் அடிச்சொற்கள்….. 700 கோடிக்கும் மேற்பட்ட சொல்வளம்…… – பேரா.தெய்வ சுந்தரம்தமிழின் ”அடியும் முடியும்” ! 

கடந்த வாரம் ‘தினமணியில்’ வெளிவந்த தலையங்கம் ஒன்றில் உயர்நிலைக் கல்விக்கு ஆங்கிலமே தேவை என்று கூறப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு குறிப்பிட்ட ஆசிரியர் வந்ததற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது என்பது உண்மை. அதுமட்டுமல்ல… மொழிபற்றிய அந்தக் குறிப்பிட்ட ஆசிரியரின் அறியாமையையே அத்தலையங்கம் வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழின் தொன்மை, வரலாற்றில் அதன் தொடர்ச்சி ஆகியவைபற்றி யார்க்கும் எந்தவித ஐயமும் இருக்கமுடியாது. எனவே அதுபற்றி புதிதாக எதையும் கூறுவதற்கு இந்தப் பதிவை நான் இடவில்லை!

எனது நோக்கம்… தமிழ்மொழி அமைப்பின் அடிவேர்கள், அந்த அடிவேர்களிலிருந்து வளர்ந்து செழித்துநிற்கிற இன்றைய தமிழின் மொழி அமைப்புச் சிறப்புகள் ஆகியவைபற்றிச் சில கருத்துகளைப் பதிவதே ஆகும்! தமிழின் ”அடியும் முடியும்” பற்றிப் பதிவதே ஆகும்!

தமிழ்ச்சொற்களின் அடிவேர் … ஆணிவேர்பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்தச் சென்ற பேரறிஞர் தேவநேயப் பாவாணர், அவர் வழிவந்த மடலேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர்கள் அருளி, இறைக்குருவனார், முனைவர் இராமகி ஐயா, முனைவர் அரசேந்திரன் உட்பட தமிழறிஞர்கள் பலர் தமிழ்ச்சொற்களின் அடிவேர்களைப்பற்றிய ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் பல உண்மைகளை முன்வைத்துள்ளனர். தமிழ் – ஜப்பானிய மொழிகளுக்கிடையிலான உறவுகள்பற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் மிகத் தெளிவான ஆய்வுகளை முன்வைத்துள்ளார். உலகமொழிகள், திராவிடமொழிகள் என்ற நூல்கள்வழியே பேராசிரியர் அகத்தியலிங்கனார் அவர்கள் உலகமொழிகளில் தமிழின் சிறப்பு என்ன என்பதுபற்றித் தெளிவுபடுத்தியுள்ளார். வேர்ச்சொல் ஆய்வியல் ( Etymology) என்ற இந்தத்துறையில் மேற்குறிப்பிட்டவர்கள் உட்பட மேலும் அறிஞர்கள் பலர் குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்மொழியின் ”அடியைக்” கண்டறிந்து … அந்த ”அடியிலிருந்து” எவ்வாறு தமிழ்மொழியின் இன்றைய சொற்கள் கிளைத்து வந்துள்ளன என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இது ஒருபுறம்!

மறுபுறம் தமிழின் … தமிழ்ச்சொற்களின் ”முடி ( வளர்ச்சியின் எல்லையிறுதி ) ” பற்றிய ஆய்வு. ஒவ்வொரு தமிழ் அடிச்சொல்லும் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு… எவ்வாறு பல்வேறு சொற்களாக மாறி அமைகின்றன … ஒரு பெயர்ச்சொல் பல்வேறு விகுதிகளை ஏற்று… எத்தனை வடிவங்களில் பயன்படுகின்றன என்பதையும் ஒரு வினை அடிச்சொல் பல்வேறு விகுதிகளை ஏற்று எத்தனை வடிவங்களில் உருவாகி அமைகின்றன என்பதுபற்றியும் மிகத் தெளிவான ஆய்வை முன்வைத்தவர் முதல் தமிழ்மொழியியல் பேரறிஞர் தொல்காப்பியனார் அவர்கள்! ஒரு சொல் பல்வேறு வடிவங்களில் உருவாகி அமைவதற்கான விதிகளை… கணித அடிப்படையில் முன்வைத்தவர் அவரே. அந்த ஆய்வுக்கு அடிப்படையாக அன்று அவருக்குக் கிடைத்த தரவுகள் — இலக்கியத் தரவுகளை மட்டுமல்லாமல், வட்டார வழக்குகளையும் உள்ளடக்கிய தரவாக அமைந்துள்ளது வியத்தலுக்கு உரியதாகும். தனிச்சொற்கள், தொகைச்சொற்கள், இலக்கணத் திரிபு ஏற்ற சொற்கள் அனைத்தையும் பற்றிய தெளிவான கருத்துகளையும் மொழியியல் விதிகளையும் அவர் தனது ஆய்வில் முன்வைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து உரையாசிரியர்கள், இலக்கணநூலார் பலர் தொடர்ந்து அந்த ஆய்வுகளை அவரவர் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி வளர்த்துவந்துள்ளனர்.

இன்று … தமிழ் அமைப்பின் சிறப்புகளை … அதன் ”முடியை” எட்டித் தொடுவதற்கு இன்றைய மொழியியலும் கணினிமொழியியலும் மிகவும் பயன்படுகின்றன. அதற்கான வசதிகள், வாய்ப்புகள் இன்று வளர்ந்து, பெருகியுள்ளன.

1903, 1915 -ஆகிய ஆண்டுகளில் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் உருவாக்கிய ஈர்ப்புக்கொள்கைபற்றிய( Theory of Gravitation) கோட்பாட்டை நிறுவுவதற்குத் தேவையான ஒன்று – சூரிய கிரகணம் ஒன்று- 1919-இல்தான் ஏற்பட்டது. அந்தக் கிரகணத்தின்போதுதான் ஒளிவிலகல்பற்றிய ஐன்ஸ்டீன் கோட்பாடு – சார்புக் கோட்பாடு ( Theory of Relativity) – உறுதியானது. சர் ஆர்தர் எடிங்டன், டைசன் போன்றோர் அதற்கு உதவினர். எந்தவொரு அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பிற்கும் அதற்கான தேவையும், அதை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பும் வசதியும் அடிப்படை. இதுபற்றி மிக விரிவான ஆய்வுகளை அறிவியல் அறிஞர்கள் ஜே டி பர்னால், ஜோசப் நீடாம் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

திராவிட மொழிகளில் தொன்மையான தமிழ் மொழி ! - You Turn

பிற அறிவியல் துறைபோன்றே … மொழி ஆய்விலும் புதுப் புது கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு அவற்றிற்கான தேவைகளும் வாய்ப்புகளும் நிலவவேண்டும். உலகளாவிய அரசியல் பொருளாதார அமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் மொழியியல் ஆய்வுகளுக்கான தேவைகளை உருவாக்கின. அதன் பயனே இன்றைய மொழியியல் துறையின் வளர்ச்சி.

கடந்த 100 ஆண்டுகளுக்குமேலான தனது வரலாற்றில் மொழியியல் … ஒரு மொழி கடந்து உலகமொழிகளை அனைத்தையும் ஆய்வுசெய்வதற்கான வாய்ப்புகளைப் பெற்று … இன்று வளர்ந்தோங்கி நிற்கிறது. பல்வேறு கோட்பாடுகளையும் ஆய்வுமுறைகளையும் முன்வைத்துள்ளது! இதன் தொடர்ச்சியே இன்றைய கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியாகும். இன்றைய உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது… மனிதமொழிகளின் பயன்பாட்டை விரிவாக்க வேண்டிய தேவைகளை முன்வைத்துள்ளது. அதேவேளையில் அதற்கான வசதிகளையும் … வாய்ப்புகளையும் .. தொழில்நுட்ப வளர்ச்சியையும் உருவாக்கி அளித்துள்ளது. மனித உயிர் அல்லாத கணினியே மனிதர்களைப்போன்று பேசவும் எழுதவும், கருத்துப்புலப்படுத்தவும், மொழிபெயர்க்கவும் செய்கிறது! இதன் பயனாக.. மக்களிடையே மொழித்தடைகள் தகர்த்து எறியப்பட்டுவருகின்றன! ஒரு மொழி தெரிந்தாலே ஒருவர் கணினி உதவியுடன் பிற மொழிகள் பேசுவோருடன் இன்று கருத்தாடலை மேற்கொள்ளலாம். தொழில்களில் ஈடுபடலாம்!

மேற்கூறிய சூழல்… இன்று மொழிபற்றிய தெளிவான கோட்பாடுகளை உருவாக்கி முன்வைக்கும் தேவையை உருவாக்கியுள்ளன. ஒரு மொழியின் ”முடியைக்” கண்டறியும் முயற்சிகளுக்கு வசதிகளை அளிக்கின்றன. உருவாக்கப்படுகிற மொழியியல் கோட்பாடுகளை … ஐன்ஸ்டீனுக்கு உதவிய ஆர்தர் எடிங்க்டன், டைசன் போன்று … கணினிமொழியியல் துறையினர் கணினி உதவியுடன் நிறுவி வருகின்றனர். கோடியே கோடி மொழித் தரவுகளை முறையாகப் பெறவும், அவற்றை முறையாக வகைப்படுத்தி, மேலும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தவும் இத்துறை இன்று உதவுகிறது. இத்துறையின் பயன்பாட்டை இன்று குக்கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் உட்பட அனைவரும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் மொழிக் கருவிகள்மூலம் தெரிந்துள்ளனர்.

மொழி ஆய்வுக்கான இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆய்வுச் சூழலில் … தமிழின் ”முடியை” எட்டித் தொடுவதற்குப் பல்வேறு அறிஞர்கள் இன்று தமிழகத்திலும் உலகின் பிற பகுதிகளிலும் முயன்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகம், அமிர்தா பல்கலைக்கழகம், தமிழ் இணையக் கல்விக்கழகம் உட்பட பல்வேறு கல்வி, ஆய்வு நிறுவனங்களும் பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி(அண்ணா பல்கலைக்கழகம்), எல். ஷோபா ( எம் ஐ டி. சென்னை) ஏ.ஜி. இராமகிருஷ்ணன் ( இந்திய அறிவியல் ஆய்வுநிறுவனம், பெங்களூர்) , நாகராசன்( எஸ் எஸ் என் பொறியியல் கல்லூரி) , , இராமமூர்த்தி ( மைசூர்) வாசு இரங்கநாதன் ( அமெரிக்கா), இராஜேந்திரன்( அமிர்தா பல்கலைக்கழகம், கோவை), மதன் கார்க்கி ( சென்னை) வேல்முருகன் சுப்பிரமணியன்( அமெரிக்கா) ஜேம்ஸ் ( தமிழ் இணையக் கல்விக்கழகம்) சண்முகம், பிரபாகரன் ( கூகுள், சி டி எஸ், பெங்களூர்)அகிலன் ( செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம்) அருள்மொழி, திருமதி பரமேஸ்வரி ( நடுவண் பல்கலைக்கழகம், ஹைதராபாத்) காமாட்சி ( அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) , தனலட்சுமி ( அரசு கல்லூரி, செங்கற்பட்டு) மஞ்சுபாஷினி ( மதன் கார்க்கி நிறுவனம்) உட்பட மேலும் பலரும் (பட்டியல் மேலும் விரியும்) இத்துறையில் வியக்கத்தக்க ஆய்வுகளை முன்வைத்துவருகின்றனர்.

இவர்களின் முயற்சிகளில் ஒரு சிறு பங்காக .. எங்கள் குழுவினரும் ( எட்டு ஆய்வாளர்களை – 4 மொழியியல் துறையினர், 4 கணினியியல் துறையினர் – உள்ளடக்கிய என் டி எஸ் லிங்க்சாப்ட் சொலூஷன்ஸ் ) இத்துறையில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த பத்தாண்டு ஆய்வில் தற்போது தமிழ்ச்சொற்களின் ”முடியைத்” தொடுவதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை உருவாக்கியுள்ளனர். தமிழுக்குச் சொல்வளம் உண்டு என்பதை நிறுவும்வகையில் ஒரு சொல் , குறிப்பிட்ட இலக்கண விதிகளுக்கு உட்பட்டு , எத்தனை வடிவங்களை – திரிபு ஏற்ற வடிவங்களை – உருவாக்கும் திறமை பெற்றுள்ளன என்பதை ஓரளவு கண்டறிந்துள்ளனர். ஒரு பெயர்ச்சொல் பல இலட்சம் திரிபு ஏற்ற வடிவங்களை உருவாக்குகின்றன. ஒரு வினைச்சொல்லானது பல கோடி திரிபு ஏற்ற வடிவங்களை உருவாக்குகின்றன. இந்த உருவாக்கத்திற்குக் குறிப்பிட்ட சில விதிகளே அடிப்படை என்பதையும் நிறுவிவருகின்றனர். 70 ஆயிரம் அடிச்சொற்களைக்கொண்டு… 700 கோடிக்கும் மேற்பட்ட சொற்கள் தமிழில் உருவாக்கப்படுகின்றன. இது வெறும் ஆய்வுக் கருத்தாக மட்டுமல்ல! நடைமுறையில் உருவாக்கிக்காட்டுகிற கணினிநிரல்களையும் உருவாக்கியுள்ளார்கள். எந்தவொரு தமிழ்ச்சொல்லையும் விதிகளுக்கு உட்பட்டு, கணினியால் பிரித்தறிய இயலும். எந்த ஒரு அடிச்சொல்லில் இருந்தும் அதனது இலட்சக்கணக்கான திரிபு ஏற்ற சொற்களை விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கமுடியும்.

இவற்றையெல்லாம் இங்கு நான் எழுதுவதற்குக் காரணம்…. தமிழ்மொழிக்குச் சொல்வளம் கிடையாது…உயர்நிலைக் கல்விக்கு உதவாது என்று ”நினைத்துக்கொண்டிருக்கிற” தினமணியாருக்கு உணர்த்தவே! எங்களது இந்த ஆய்வுமுடிவுகளின் பயன்பாடாக… பலவகைத் தமிழ்மென்பொருள்கள் இனித் தொடர்ந்து தமிழ் உலகிற்கு வந்துசேரும்! உலக அளவில் உருவாக்கப்படுகிற மொழியியல், கணினிமொழியியல் துறைகளின் அறிவும் தமிழ்மொழியின் அமைப்பு … இலக்கண அறிவும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு இவை அமைந்துவருகின்றன! தமிழ் உலகம் உறுதியாக எங்கள் முயற்சிகளை வரவேற்கும் என்று நம்புகிறோம்!

-பேரா.தெய்வ சுந்தரம்