பெங்களூருவில் நடைபெற்ற 5வது பசுமை இலக்கியத் திருவிழா பற்றிய கட்டுரை - சுசித்தா (Susiddha) | 5th Green Literature Festival | www.bookday.in

பசுமை இலக்கியத் திருவிழா – சுசித்தா 

பசுமை இலக்கியத் திருவிழா

– சுசித்தா 

இன்றைக்கு இந்தியாவின் சிலிகன் வேலி என்று அழைக்கப்பட்டு வருகிற அன்றைய தோட்ட நகரமான (Garden City) பெங்களூருவில் நவம்பர் 29 ஆம் தேதி ஐந்தாவது பசுமை இலக்கியத் திருவிழா (Green Literature Festival – GLF) வெகு விமர்சையாக பசுமையான சூழல் நிறைந்த செஞ்சுரி கிளப்பில் நடைபெற்றது. இந்தியாவிலேயே பசுமை இலக்கியத்துக்கென்று விழா எடுக்கும் ஒரே நகரம் பெங்களூருவாகத்தான் இருக்கும்..

சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தின் துடிப்பானக் கொண்டாட்டமாகவும், செயல்பாட்டிற்கான சக்திவாய்ந்த அழைப்பாகவும் இது இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு WWF இந்தியா, ATREE , அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் போன்ற பல முக்கிய அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும் பல்வேறு வகைகளில் ஆதரவளித்தன. காலநிலை மாற்றம் குறித்து  உலகம் முழுவதும் கலந்துரையாடல்களும், அதை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால்  புத்தகங்கள் மற்றும்  சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் காலநிலை மாற்றம், பாதுகாப்பு, நிலைத்தன்மை (sustainability) பற்றிய உரையாடலை பரவலாக்கும் வகையில் கடந்த ஐந்தாண்டுகளாக இந்நிகழ்வு நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் நெருக்கடிகள் பற்றிய ஆழமான விஷயங்களிலிருந்து பசுமை கண்டுபிடிப்புகளின் வாக்குறுதி வரை பல விஷயங்களை உள்ளடக்கிய இந்த ஒரு நாள் விழா 100 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து, மாறுபட்ட, ஆழ்ஞானம் கொண்ட நிகழ்ச்சிகளை வழங்கியது. இந்த ஆண்டு நிகழ்வானது சுற்றுச்சூழல் / பசுமை இலக்கியத்தை பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டு வருவதில் ஒரு முக்கிய படியாகும்.

பெங்களூரு வணிக இலக்கியத் திருவிழாவை (Bengaluru Business Literature Festival – பெங்களூருவில் நடைபெறும் இன்னொரு தனித்துவமான இலக்கியத் திருவிழா) ஆரம்பித்தவர் எழுத்தாளரும், Sustainability Next என்கிற இணைய இதழின் ஆசிரியருமான பெனடிக்ட் பரமானந்த். இவர் தலைமையிலான நிறுவனர்கள், இலக்கியம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நாம் வசிக்கும் கிரகத்துடனான நமது உறவைப் புரிந்துகொள்ளவும் நேர்மறையான காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும்  இந்த நிகழ்வை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் நடைபெற்ற 5வது பசுமை இலக்கியத் திருவிழா பற்றிய கட்டுரை - சுசித்தா (Susiddha) | 5th Green Literature Festival | www.bookday.in

கவிதையும் வணிகமும்:

இவ்விழாவின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு சில புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினர். அதில் ஒன்று `Green Poetry Open House’ என்பதாகும். அதாவது, திறந்த வெளியில் சுற்றுச்சூழல் குறித்த கவிதையரங்கு ஆகும்.

எழுத்தாளர், கவிஞர் மற்றும் இயற்கை புகைப்படக் கலைஞர் பிரியங்கா சச்சேட்டியால் (Priyanka Sacheti) வடிவமைக்கப்பட்ட இந்த நெருக்கமான, திறந்தவெளி அமைப்பு, கலையின் மொழி இயற்கையின் குரலை எவ்வாறு சந்திக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.  கவிஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் கற்பனாசக்தியை ஒன்றிணைப்பதை இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டிருந்தது. கவிதையானது எவ்வாறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் உத்வேகத்தின் ஆழமான ஆதாரமாக இருக்க முடியும் என்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது. உணர்ச்சி மற்றும் படைப்பு வெளிப்பாடுகள் காலநிலை கதையின் முக்கிய கூறுகள் என்ற நம்பிக்கையை இந்தப் புதிய முயற்சி  அடிக்கோடிட்டுக் காட்டியது.

பசுமை வணிக இலக்கிய விழா

கார்ப்பொரேட் நடவடிக்கைகள் மற்றும் வளங்குன்றா நீடித்தத்தன்மை பொருளாதாரத்தின் (sustainable economics) முக்கிய பங்கை அங்கீகரித்து, GLF அர்ப்பணிப்புடன் கூடிய பசுமை வணிக இலக்கிய விழாப் பிரிவையும் அறிமுகப்படுத்தியது.

இந்த அமர்வானது இன்றைய வளங்குன்றா தன்மையின் பொருத்தம், பசுமை மாற்றத்தை நேர்மறையாக பாதிக்கக்கூடிய புதிய பொருள்களின் பங்கு மற்றும் இதில் வணிக இலக்கியம் எப்படி பொருந்தும் என்பதையும் கண்டறிய முயன்றது. சந்தோஷ் ஜெயராம் மற்றும் ராஜீவ் பெஷாவரியா போன்ற நிலைத்தன்மை சிந்தனையாளர்களுடன் (sustainability thought leaders), பசுமையான பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க, material scienceல் நிபுணத்துவம் பெற்ற முன்னோடி விஞ்ஞானி பாபு பத்மநாபனும் இணைந்து கொண்டார்.

இயற்கை வளங்களைப் பேணுதல் குறித்த முக்கிய விவாதங்கள்

இந்த இலக்கிய விழாவின் பலம் என்னவெனில், முக்கியமான தேசியச் சுற்றுச்சூழல் சவால்களை படைப்பு மற்றும் கல்வி உலகங்களுடன் இணைக்கும் திறனாகும். குறிப்பாக மூன்று முக்கிய அமர்வுகள் அவற்றில் காணப்படும் அவசரம் மற்றும் தாக்கத்திற்காக தனித்து நின்றன. அவை:

1. நிக்கோபார் தீவு நெருக்கடி: 

இந்த இலக்கியத் திருவிழாவில் மிகவும் செறிவான அமர்வுகளில் ஒன்று, பங்கஜ் சேக்சாரியாவின்  (Pankaj Sekhsaria) ஐலேண்ட் ஆன் எட்ஜ் – தி கிரேட் நிக்கோபார் கிரைசிஸ். என்கிற நூல் வெளியீடும் நிக்கோபார் தீவு எதிர் கொண்டிருக்கும் பிரச்சனை பற்றி கல்வியாளரும் எழுத்தாளருமான சேக்சாரியாவின் உரையுமாகும், சுற்றுச்சூழல் ரீதியில் மிகவும்  பலவீனமாக இருக்கும் கிரேட் நிக்கோபார் தீவை மேலும் அழிவுக்குக் கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசால் சுமார் ரூ92,000 கோடி அளவுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக அபாயங்களை விவரித்து ஆதாரத்துடனும், புள்ளிவிவரங்களுடனும் பேசினார்.

முன்மொழியப்பட்டிருக்கும் இத்திட்டமானது தொழில்நுட்ப ரீதியாக நிலையற்ற பகுதியில் வளர்ச்சியை தீவிரமாக்குவதாக இருக்கிறது. மீளமுடியாத சுற்றுச்சூழல் அழிவு – குறிப்பாக தீவின் தனித்துவமான பல்லுயிர் (biodiversity) மற்றும் காடுகள் – தீவை தாயகமாகக் கொண்ட இரண்டு பழங்குடி சமூகங்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை சிதைப்பது வரையிலான கவலைகளை இந்தக் கலந்துரையாடலும், பிரசண்டேஷனும் எடுத்துக்காட்டியது. நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படும் வகையில் வளர்ச்சியின் பெயரில் செய்யப்படும் செலவை இந்த அமர்வு தெளிவாக நினைவூட்டியதோடு நிக்கோபார் தீவுக்கு ஏற்படவிருக்கும் அபாயம் குறித்து ஓர் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

2. இயற்கைப் பேணலும் கேலிச்சித்திரங்களும் 

புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டும் தி கிரீன் ஹ்யூமர் தொடரின் ஆசிரியருமான ரோஹன் சக்ரவர்த்தி, இயற்கை வளத்தைப் பேணுவதற்கு ஓர் இலகுவான ஆனால் சமமான தாக்கத்தை ஏற்படுத்தும் கண்ணோட்டத்தைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.. “கார்ட்டூன்களும் இயற்கைப் பேணல் சம்பந்தமான கருத்துப் பரிமாற்றமும்” என்ற தனது அமர்வில், ஓர் எளிய கார்ட்டூன் எவ்வாறு  கன்னத்தில் அறையும்படியான அல்லது சிரிப்பை வரவழைப்பதாக இருக்கிறது என்பதையும் அதை எப்படி பொது ஈடுபாட்டிற்கும், கொள்கை செல்வாக்கிற்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாற்ற முடியும் என்பதையும் உதாரணங்கள் மூலமாக சக்ரவர்த்தி வலியுறுத்தினார்.

3. பசுமையான பெங்களூருவை மீண்டும் கற்பனை செய்தல்

பெங்களூருவைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கு “பசுமையான பெங்களூருவை மீண்டும் கற்பனை செய்தல்” என்ற அமர்வு அவர்களை சில தசாப்தங்களுக்கு முன்பிருந்த பெங்களூருவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும்.   பிரபல குழந்தை எழுத்தாளர் ரூபா பை, அறிவியல் பத்திரிகையாளர் தீபா பத்மநாபன் ஆகியோர் இடம்பெற்ற அமர்வை இயற்கை ஆர்வலர் ரம்யா கௌஷிக் நெறியாளுகை செய்தார். இந்த அமர்வானது `கார்டன் சிட்டி’ என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு நகர்ப்புற நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதற்கான நடைமுறை வழிகளை ஆராய்ந்தது.

உரையாடலானது பொதுவான விழிப்புணர்வைத் தாண்டி நகர்ந்தது, மாற்றம்  தொடங்குவது கழிவு மேலாண்மையிலா, அல்லது பூர்வீக உயிரினங்களின் மறுமலர்ச்சியிலா? என்பதை விவாதித்தது. Becoming Bangalore – Stories That Shaped A Home Town நூலின் ஆசிரியரான ரூபா பையும் தீபா பத்மநாபனும் இந்த மாற்றத்தில் குடிமக்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் முக்கியமான, பன்முகப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினர். ‘பசுமையான பெங்களூரு’ என்கிற நிலைமையை மீண்டும் அடைவதற்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்பதை இந்த அமர்வு வலியுறுத்தியது.

சுற்றுச்சூழல் இலக்கியத்தைச் சிறப்பித்தல்

இந்த ஒரு நாள் நிகழ்வின் இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட `GLF Green Honour Book Awards 2025’ இருந்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் இத்துறை சார்ந்த நிபுணர்களின் உதவியுடன் தீவிரமாக கலந்தாலோசித்து, தெரிவு செய்யப்பட்ட   தனித்துவமான இந்த விருது, மூன்று முக்கிய பிரிவுகளில் இந்தியாவிலிருந்து வெளிவரும் சிறந்த சுற்றுச்சூழல் எழுத்துக்களைக் கெளரவிக்கும் வகையில் இருந்தது.:

குழந்தைகள் பிரிவு: இயற்கை உலகத்துடன் இணைவதற்கும் அதைப் பற்றி அக்கறை கொள்வதற்கும் இளம் மனங்களைத் தூண்டும் வகையில் எழுதி வெளிவந்த நூலை அங்கீகரித்தல்.

இப்பிரிவில் விருது பெற்ற நூல்: Birds On the Brain by Uma Krishnaswami & Chetan Sharma

  பெங்களூருவில் நடைபெற்ற 5வது பசுமை இலக்கியத் திருவிழா பற்றிய கட்டுரை - சுசித்தா (Susiddha) | 5th Green Literature Festival | www.bookday.in

புனைவு / அல்புனைவு பிரிவு: ஈடுபாட்டுடன் கூடிய கதைகள் மற்றும் காத்திரமான ஆராய்ச்சி மூலம் சிக்கலான சுற்றுச்சூழல் கருப்பொருள்களைக் கையாளும் படைப்புகளை முன்னிலைப்படுத்துதல்.

இப்பிரிவில் விருது பெற்ற நூல்: Governing Forests by Arpitha Kodiveri

பெங்களூருவில் நடைபெற்ற 5வது பசுமை இலக்கியத் திருவிழா பற்றிய கட்டுரை - சுசித்தா (Susiddha) | 5th Green Literature Festival | www.bookday.in

பசுமை வணிகம்: நிலையான நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாதாரம் மற்றும் பெரு நிறுவனங்களை அதன் பொறுப்புகள் குறித்து கவனம் செலுத்த வலியுறுத்தும் நூல்களை அங்கீகரித்தல்.

இப்பிரிவில் விருது பெற்ற நூல்: Climate Capitalism: Winning the Global Race to Zero Emissions and Solving the Crisis of Our Age by Akshat Rathi

பெங்களூருவில் நடைபெற்ற 5வது பசுமை இலக்கியத் திருவிழா பற்றிய கட்டுரை - சுசித்தா (Susiddha) | 5th Green Literature Festival | www.bookday.in

இந்த அங்கீகாரம் சுற்றுச்சூழல் இலக்கிய விழாவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதாக இருந்தது. இந்த அமர்வுக்கு Back to Bharat: In Search of a Sustainable Future என்ற நூலின் ஆசிரியர் நாகராஜ பிரகாசம் தலைமை தாங்கினார், இதில் வெற்றியாளர்களை முன்னிலைப்படுத்தியது மட்டுமல்லாமல், கடுமையான மதிப்பீட்டு செயல்முறையில் விலைமதிப்பற்ற “நடுவர்களின் ஆழ்ஞானத்தை”யும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் இருந்தது.

நாம் வாழும் கிரகத்தைப் புரிந்துகொள்வதற்கும், சீரழிந்தப் பகுதிகளைச் சரிசெய்வதற்கும், எழுத்து மூலம் நேர்மறையான காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் தங்கள் திறமைகளை அர்ப்பணிக்கும் இளம் எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிப்பதற்காக, பசுமை இலக்கிய விழாவான GLF ல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஐந்தாவது பசுமை இலக்கிய விழா வெறும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கூட்டமாக மட்டுமல்லாமல் காலநிலை கல்வியறிவு மற்றும் செயல்பாட்டை இயக்குவதற்கு ஒரு துடிப்பான, தேவையான சக்தியாக எவ்வாறு இருக்க முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த, தனித்துவமான தளமாக இருந்தது.

உரையாடல்கள், புத்தக வெளியீடுகள், குழந்தைகளுக்கான நிகழ்வுகள், பட்டறைகள் ஆகியவை இந்த இலக்கியத் திருவிழா ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கத்தை அதாவது, இலக்கியத்தின் பல வடிவங்கள் மூலமாக நாம் வாழும் பூமி மீதான அன்பு, அக்கறை மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை ஊக்குவிக்க முடியும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.

************************

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *