விண்வெளியில் வாழ்ந்த நீர்க் கரடி - ஏற்காடு இளங்கோ (Yercaud Elango) நீர்க் கரடி (Hardy water bears) - (Johann  August Ephrain Goeze) - https://bookday.in/

விண்வெளியில் வாழ்ந்த நீர்க் கரடி – ஏற்காடு இளங்கோ

  விண்வெளியில் வாழ்ந்த நீர்க் கரடி


                                                                                                               – ஏற்காடு இளங்கோ


    பூமியில் ஒரு மிகப்பெரிய உயிரினப் பேரிழிவு ஏற்பட்டு அனைத்து உயிரினங்கள் முற்றிலும் அழிந்தாலும்,  ஒரு உயிரினம் மட்டும் உயிர் பிழைத்து வாழும் திறன் கொண்டது. அது கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய உயிரினம். ஆனால் நுண்ணோக்கியின் உதவியுடன் மிக எளிதாகக் காணலாம். இதன் பெயர் டார்டிகிரேடு (Tardigrade) என்பதாகும். ஒரு டார்டிகிரேட்டை நெருப்பால் எரிக்க முடியாது. அதிக அழுத்தத்தால் நசுக்க முடியாது. உறைபனி மற்றும் கதிர்வீச்சால் கூட கொல்ல முடியாது.


கண்டுபிடிப்பு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர் ஜோகன் ஆகஸ்ட் எஃப்ரைம் கோயஸ் (Johann  August Ephrain Goeze) என்பவர் 1773 ஆம் ஆண்டில் இந்த உயிரினத்தை முதன் முதலாகக் கண்டுபிடித்தார். அது நுண்ணோக்கியின் மூலம் பார்க்கும்போது ஒரு சிறிய விசித்திரமான விலங்காகத் தெரிந்தது.   இதன் உருவ அமைப்பு ஒரு கரடி போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது.

Johann August Ephraim Goeze - Wikipedia


      இது நீரில் வாழக்கூடிய ஒரு உயிரினம். ஆகவே அவர் க்ளீனர் வாஸர்பர் (Kleiner Wasserbar) எனப் பெயரிட்டார். ஜெர்மன் மொழியில் சிறிய நீர்க் கரடி (Little Water Bear) என்பது இதற்குப் பொருள். இதன் அழகான உடல் அமைப்பு எனக்கு சிறிய கரடி போலவே தெரிந்தது. ஆகவே நான்  அதை சிறிய நீர்க் கரடி என்று அழைத்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


    தற்போது ஜெர்மனியர்கள் பெரும்பாலும் அவற்றை சிறிய கரடி விலங்கு என்று அழைக்கிறார்கள். நீர்க் கரடி என்ற பெயர் அவை நடக்கும் விதத்தில் இருந்து வந்தது. இது ஒரு கரடியின் நடையை நினைவூட்டுகிறது. 1776 ஆம் ஆண்டில் லாசாரோ ஸ்பாலன்சானி (Lazzaro Spellanzani) என்ற இத்தாலி நாட்டு விலங்கியல் அறிஞர் இந்த விலங்கை ஆய்வு செய்தார்.


    இதன் விசித்திரமான நடையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இந்த விலங்கு மெதுவாக ஆடி அசைந்து வருவதைக் கண்டார். இதன் நடையை அங்கீகரிக்கும் வகையில் டார்டிகிரேடா என்று பெயர் சூட்டினார். இதற்கு மெதுவாக நடப்பவர் (Slow Walker) என்று அர்த்தம். இது மெதுநடையன் (Slow Steeper), நீர்க் கரடி (Water Bear) மற்றும் பாசி பன்றிக்குட்டி (Moss Piglet) என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது. பாசிகள் மீதும் இவை வாழ்வதால் தான் பாசி பன்றிக்குட்டிகள் என்கின்றனர்.


உடல் அமைப்பு


    இது 0.1 முதல் 0.5 மில்லிமீட்டர் நீளம் கொண்டது. இருப்பினும் மிகப்பெரிய இனங்கள் 1.3 மில்லிமீட்டர் வரை வளர்ச்சி அடையலாம். இது உடல் குட்டையாகவும், குண்டாகவும், தடித்த தோலால் மூடப்பட்டிருக்கும். நன்கு வளர்ந்த தலைப்பகுதி மற்றும் நான்கு இணைந்த பிரிவுகளைக் கொண்ட உடலைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஜோடி குறுகிய, தடிமனான கால்கள் உள்ளன. அதாவது இவற்றிற்கு 8 கால்கள் இருக்கின்றன.


    ஒவ்வொரு காலிலும் 4 முதல் 8 நகங்கள் உள்ளன. சில இனங்களில் நகங்கள் ஒட்டும் பட்டைகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் சிறிய உடலில் முதுகெலும்பு மற்றும் எலும்புகள் கிடையாது. அதற்கு பதிலாக ஹிமோலிம்ப் எனப்படும் திரவம் நிறைந்த பகுதி இருக்கிறது. இதன் மூளைக்கும் உடலுக்கும் இடையில் சமிக்ஞைகளை அனுப்பும் ஒரு வயிற்று நரம்பு மண்டலம் உள்ளது.


    இதற்குச் சுவாசத்திற்கான சிறப்பு உறுப்புகள் எதுவும் இல்லை. இதன் உடலின் சில பகுதிகளில் ஹீமோகோயல் எனப்படும் இரத்த உடல் குழி காணப்படுகிறது. இது இரத்தத்தையும், ஆக்ஸிஜனையும் கொண்டு செல்லும் திரவத்தால் நிரப்பப்பட்டுள்ளது. உடல் குழி சுமார் 1000 செல்களால் ஆனது. இந்த விலங்கின் தோலடி வழியாக ஆக்ஸிஜன் பரவி உடல் குழியில் உள்ள செயல்களில் சேமிக்கப்படுகிறது. இந்த இரத்தக் குழி மூலம் சுவாசம் நடைபெறுகிறது.


     இதன் தலையில் இரண்டு கண் புள்ளிகள் உள்ளன. ஒரு ஜோடி வெற்று ஆன்டெனா போன்ற கிளாவேக்கள் இருக்கின்றன. அவை வேதியியல் ஏற்பிகளாகச் செயல்படுகின்றன. இந்த 8 கால்கள் கொண்ட நுண்ணிய விலங்கு மிகவும் அழகாக நடக்கின்றன. இவை ஒவ்வொரு காலையும் முன்னும் பின்னுமாக அடியெடுத்து வைக்கின்றன. இவை நடக்கும் போது கால்கள் சறுக்குவதை நகங்கள் தடுத்து நிறுத்த உதவுகின்றன. மேலும் அவை பிடிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


   இதன் வாய் சிறப்பாக அமைந்துள்ளது. இது புக்கோ ஃபரிஞ்சீயல் கருவி என்று அழைக்கப்படுகிறது. இது தாவரங்கள் மற்றும் பிற நுண்ணுயிர்களிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச அனுமதிக்கிறது. உணவுக் குழாய் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை செல்கிறது. வாயில் ஒரு ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன. இவை செரிமான திரவத்தைச் சுரக்கின்றன. குரல்வளை தசைகள் இரையிலிருந்து திரவங்களைக் குடலுக்குள் செலுத்துகின்றன.


   இது தன் உடம்பில் உள்ள நீரைப் பயன்படுத்தி உடலைச் சுருக்கவும், விரிவடையவும் செய்து கொள்கிறது. இது பாலியல் ரீதியாகவோ அல்லது பாலினமற்ற இனப்பெருக்கம் (சுய கருத்தரித்தல்) மூலமாகவோ இனப்பெருக்கம் செய்கிறது. இனத்தைப் பொறுத்து சுமார் 30 முட்டைகள் வரை இடுகின்றன. நிலப்பரப்பில் வாழக்கூடிய நீர்க்கரடியின் முட்டைகள் வறட்சியைத் தாங்கும் ஓடுகளைக் கொண்டுள்ளன. முட்டைகள் 14 நாட்களுக்குள் குஞ்சு பொரிக்கின்றன.


வாழிடம்


    இவை உலகளவில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றன. மலை உச்சி, ஆழ்கடல், வெப்பமண்டல மழைக்காடுகள், எரிமலை மற்றும் பனிக்கட்டியால் மூடப்பட்ட அண்டார்டிகா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை லைக்கன்கள், லிவர்வார்ட்கள் மற்றும் பாசிகள் போன்ற ஈரமான தாவரங்கள் மீதும் வாழ்கின்றன. மண், மணல் மற்றும் இலைக் குப்பைகளிலும் இவை வாழ்வதைக் காணலாம்.


    நன்னீர், வெப்ப நீரூற்றுகள், கடற்பாசியின் அடிப்பகுதி, கடல்  முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் மீதும் வாழ்கின்றன. மிக உயரமான மலைப்பகுதி முதல் ஆழமான கடல் பகுதி வரை இவை வாழ்கின்றன. அதாவது இவை வாழாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மண்ணில் ஒரு சதுர மீட்டருக்கு 3,00,000 வரை காணப்படுகின்றன. பாசிகளில் இவை ஒரு சதுர மீட்டருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான அளவில் இருக்கலாம்.


உறக்க நிலை


     ஒரு நீர்வாழ் விலங்கு ஆக்ஸிஜனை எடுத்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்ற அவற்றின் உடலைச் சுற்றி ஒரு நீர் படலம் தேவைப்படுகிறது. அது வாழும் பாசி அல்லது குளம் வறண்டு போகும்போது தங்கள் கால்களை உள்ளே இழுத்து ஒரு வறண்ட நிலைக்குச் செல்கிறது. இதில் உடல் வறண்டு உயிரற்ற பந்து போல் சுருண்டு விடும். இது துன் (Tun) எனப்படும் வறண்ட நிலையாகும். அப்போது தங்கள் வளர்சிதை மாற்றத்தை நிறுத்தி நீண்ட உறக்க நிலைக்குச் (Cryptobiosis) சென்று விடும்.


   அந்த சமயத்தில் எந்த வளர்ச்சி மாற்றமும் நடக்காது. இந்த நிலையில் அவை உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் இருக்க முடியும். தண்ணீர் கிடைத்தவுடன் அதன் செல்கள் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பும். துன் நிலையில் சுமார் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும். சுமார் 30 ஆண்டுகளாக கடும் குளிரில் உறைந்து போன நீர்க் கரடிகளை ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருடன் மீட்டுள்ளனர். அதன் பிறகு அவை முட்டையிட்டு புதிய நீர்க் கரடிகளை உருவாக்கின என்பது ஆச்சரியமான தகவல்.

Hardy water bears survive bullet impacts—up to a point | Science | AAAS


புத்துயிர் பெறுதல்


      கடந்த 20 ஆண்டுகளாக நீர்க் கரடிகளின் மீது பல்வேறு ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்டன. 8 நாட்கள் வெற்றிடத்தில் வைக்கப்பட்ட நீர்க் கரடிகள், அறை வெப்ப நிலையில் ஹீலியம் வாயுவில் 3 நாட்கள் மாற்றப்பட்டன. பின்னர் பல மணி நேரம் மைனஸ் 273 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைத்தனர். அவை சாதாரண வெப்ப நிலைக்குக் கொண்டு வரப்பட்ட போது மீண்டும் உயிர் பெற்றன. மேலும் மைனஸ் 190 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், திரவக் காற்றில் 21 மாதங்கள் வைக்கப்பட்டன. இவற்றில் 60 சதவீத நீர்க்கரடிகள் மீண்டும் புத்துயிர் பெற்றன.


    நீர்க் கரடி கடும் குளிரைத் தாங்கி உயிர் வாழ்வதைப் போலவே 150 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்கிறது. கடலின்  ஆழமான பகுதியில் 40,000 கிலோ பாஸ்கல் அழுத்தங்களையும் தாங்கிக்
கொள்கிறது. அதிவேக துப்பாக்கியில் வினாடிக்கு 3000 அடி வேகத்தில் ஏற்படும் தாக்கங்களையும், சுமார் 1.14 ஜிகாபாஸ்கல் வரையிலான தற்காலிக அதிர்ச்சி அழுத்தங்களையும் தாங்கிக் கொள்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை, வெற்றிடம் அயனியாக்கும் கதிர்வீச்சு மற்றும் உயர் அழுத்தம் ஆகியவற்றையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழ்கிறது.


விண்வெளி வாழ்க்கை


     நீர்க் கரடியை விண்வெளிக்குக் கொண்டு சென்று ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ரஷ்யாவின் ஆளில்லாத விண்கலமான போடான் (FOTON -M3) 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று விண்வெளிக்கு ஏவப்பட்டது. அந்த விண்கலத்தில் நீர்க் கரடிகளும் அனுப்பப்பட்டன. விண்வெளியின் எடையற்ற தன்மை, வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சுக்கு இவை உள்ளாக்கப்பட்டன. 12 நாட்களுக்குப் பிறகு விண்கலம் பூமி திரும்பியது. நீர்க் கரடிகளுக்கு மறு நீரேற்றம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள் அவை மீண்டும் உயிர் பெற்றன.

What is a tardigrade?


    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2011 ஆம் ஆண்டில் நீர்க் கரடிகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை நுண் ஈர்ப்பு மற்றும் அண்ட கதிர்வீச்சைத் தாங்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டின. 2017 ஆம் ஆண்டில் சூப்பர் நோவா வெடிப்புகள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் போன்ற பரிசோதனையிலும் இவை மீள்தன்மை கொண்டவை என்பதை நிரூபித்தன.


    ஏப்ரல் 2019 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய விண்கலம் ஆயிரக்கணக்கான நீர்க் கரடி பயணிகளை ஏற்றிக்கொண்டு நிலாவிற்குப் பயணம் செய்தது. அது நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த நேரத்தில் இந்த உயிரினங்கள் பிழைத்திருக்க முடியுமா என்று சந்தேகம் ஏற்பட்டது.


    இதற்கான ஒரு பரிசோதனையை வானவியல் நிபுணர்கள் அலெஜாண்ட்ரா டிராஸ்பாஸ் மற்றும் மார்க் புர்செல் ஆகியோர் செய்தனர். அவர்கள் நீர்க் கரடிகளை துப்பாக்கிகளில் ஏற்றி மணல் மூட்டைகளில் சுட்டனர். அவை சேகரிக்கப்பட்டு, நீர் வழங்கிய போது அவை மீண்டும் உயிர் பெற்றன. அதாவது ஒரு வினாடிக்கு கிட்டத்தட்ட 1000 மீட்டர் வேகத்தில் நேருக்கு நேர் மோதுவதை அவர்களால் தாங்க முடிகிறது. ஆகவே நிலவில் மோதிய விண்கலத்தில் இருந்த நீர்க் கரடிகள் அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுகிறது.


வான் கரடி


    நீர்க் கரடிகள் விண்வெளியின் கடினமான வெற்றிடத்தையும், அதிகமான கதிர்வீச்சையும் தாங்குகின்றன. 2020 ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வகை நீர்க் கரடியைக் கண்டுபிடித்தனர். அவை தீவிர அளவு புற ஊதாக் கதிர்வீச்சைத் தாங்கும் திறன் கொண்டவை. அவை ஒளியின் குறுகிய அலை நீளங்களை உறிஞ்சி நீண்டவற்றை வெளியிடுகின்றன. இந்தச் செயல்பாடு அவற்றின் செல்களைக் கதிர்வீச்சு சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன.

    அணு உலைக் கழிவிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தில் இருந்தும் நீர்க் கரடிகள் தங்களை காத்துக் கொள்ளும். மனிதனின் மீது 10 அலகு கதிரியக்கம் பட்டாலே இறந்து விடுவான். ஆனால் நீர்க் கரடி 5000 அலகு கதிரியக்கத்தைத் தாங்கி உயிர் வாழும். விண்வெளிக்குச் சென்று பூமிக்கு வந்த பிறகும் நீர்க் கரடி சாகவில்லை. ஆகவே இது வான் கரடி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நீர்க் கரடியின் மரபணுவில் டி சூப் (D SUP) எனப்படும் ஒரு புரோட்டின் உள்ளது. புற ஊதாக் கதிர், எக்ஸ் கதிர், காமா கதிர் மற்றும் அணுக் கதிர்வீச்சு ஆகியவற்றிலிருந்து இந்தப் புரோட்டின் நீர்க் கரடியைப் பாதுகாக்கிறது. 

கட்டுரையாளர் : 

  – ஏற்காடு இளங்கோ

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *