குமரி முனையை அலங்கரிக்கும் திருவள்ளுவர்
அன்றைய தினம்,உலகமே ஈராயிரமாவது ஆண்டை(2000) இன்முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தது. குமரிமுனையிலோ, ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த வடிவமாம், வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த கற்சிலையை, அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.
25 வருடங்கள் கடந்து,திருவள்ளுவர் சிலை வரும் புத்தாண்டில்(2025) வெள்ளி விழா கொண்டாடுகிறது.
அதற்கான, ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளி விழா நிகழ்வில், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார். மற்றும் மூன்று நாட்களுக்கு வள்ளுவரின் புகழ் போற்றும் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.
தமிழர்தம், வரலாற்றை உலகெங்கிலும் தூக்கிப்பிடிக்கும் ஆகச் சிறந்த படைப்பாம் “திருக்குறளை” எம் தமிழுக்கு பரிசளித்தவர் தான் திருவள்ளுவர்.
திருவள்ளுவர், கிருத்து பிறப்புக்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருக்கலாம்! என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழக அரசும் திருவள்ளுவர் ஆண்டை,அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் அனைத்திலும் பயன்படுத்துகிறது. மேலும், ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
திருக்குறளானது 1330 வெண்பாக்களை உடையது. ஈற்றடி மூன்று சீரும், ஏனைய அடிகள் நான்கு சீரும் கொண்டதாய் அமைக்கப்படுவதே வெண்பா.
திருக்குறளானது, குரளடி வெண்பா என வரையறுக்கப்படுகிறது. ஒவ்வொரு திருக்குறளிலும், முதலாவது அடியில் நான்கு சீரும், இரண்டாவது அடியில் மூன்று சீரும் இடம் பெற்று இருக்கின்றன.
“அகர முதல எழுத்தெல்லாம்-ஆதி பகவன் முதற்றே உலகு” என திருக்குறளுக்கு முக உரை எழுதும் வள்ளுவப் பெருந்தகை. அறத்துப்பால்,பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என முப்பாலாய் திருக்குறளை படைத்திருக்கிறார்.
குடும்ப வாழ்க்கை, போர்கள்,ஆட்சி,நிர்வாகம், ஆளுமை திறன், கல்வி, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், குருவை போற்றுதல், உயிர்களை சமமாய் மதித்தல்! என திருக்குறளில் அதிகப்படியான நன்னெறி கருத்துக்கள் இடம் பெற்றிருக்கிறது என அறிஞர்கள் பலரும் பாராட்டி தீர்க்கிறார்கள்.
விவிலியத்துக்கு அடுத்தபடியாக, அதிகப்படியான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எனும் சிறப்பும் திருக்குறளுக்கு உண்டு.
மணக்குடவர் உரை,பரிமேலழகர் உரை, சாலமன் பாப்பையா உரை, கலைஞர் கருணாநிதி உரை என திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் எண்ணிக்கையே, ஆயிரக்கணக்கில் இருக்கும்.
ஒவ்வொருவரின், பார்வையிலும் தித்திக்கும் தீந்தமிழின் திரவிய கடலாய் மிளிர்கிறது ‘திருக்குறள்”. இத்தகைய சிறப்புமிக்க, திருக்குறளை படைத்திட்ட திருவள்ளுவரை போற்றும் வகையில், குமரிமுனையிலே சிலை அமைக்க, தமிழக அரசு 1975 ஆம் ஆண்டு திட்டமிட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக திரு.கலைஞர் கருணாநிதி அவர்கள் இருந்தார்.
அதற்கான திட்ட வரையறை வகுக்கப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது.
1979 ஆம் ஆண்டு, முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் முன்னிலையில்,அப்போதைய இந்திய பிரதம மந்திரி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் அவர்கள் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டினார்.
அடுத்த 10 ஆண்டுகாலம் திருவள்ளுவர் சிலையின் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. அதற்குப் பின்பு, 1989 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையின் கட்டுமான பணிகள் தீவிர படுத்தப்பட்டன.
சிலை வடிவமைப்புக்கான முழுவதுமான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை போல தாமிரத்தில் வடிவமைத்தால், சிலையின் ஆயுள் காலம் குறைந்து விடும் என்பதால் கற்சிலையாக வடிக்க திட்டமிடப்பட்டது.
இதற்கு பின்னால் இருக்கும், அறிவியல் காரணம் மிகவும் எளிமையானது. அதாவது நாளடைவில், தாமிரமானது ஆக்ஸிஜடன் வினைபுரிந்து தாமிர ஆக்சைடாக மாறுகிறது. இதன் காரணமாக, சிலையில் அரிப்புகள்(corrosion) ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே, தாமிரத்தில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திர தேவி சிலை நாளடைவில் பச்சை நிறத்திற்கு மாறி இருப்பதை கவனிக்க முடியும்.
அதற்காக, கல்லில் சிலை அமைப்பது ஒன்றும் அவ்வளவு எளிமையான செயல் கிடையாது. கணபதி ஸ்தபதி அவர்களின் தலைமையில்,300க்கும் மேற்பட்ட தேர்ந்த சிலை வடிக்கும் நிபுணர்களால், பணி தொடங்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக திருவள்ளுவரின் திருவுருவம் வடித்தெடுக்கப்பட்டது.
நடராஜர் சிலையை போல, திருவள்ளுவர் சிலைக்கும் இடுப்பு பகுதி வளைவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையில், கற்சிலைகள் இடுப்பு பகுதி விளைவாக வடிவமைப்பது மிக,மிக கடினமான மற்றும் நுணுக்கமான செயல்பாடு.
சிறிய தவறுகள் ஏற்பட்டால் கூட, ஒட்டுமொத்த கட்டமைப்பின் சிதைந்து விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மரத்தைக் கொண்டு மாதிரிகளை செய்து, அவற்றை பரிசோதித்து பின்பு ஸ்திரத்தன்மைக்கான ஆய்வுகளை செய்து, இறுதியாக எதிர்பார்த்தபடியே வள்ளுவ பெருந்தகையின் சிலை வடிவமைக்கப்பட்டது.
38 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது, 95 அடி உயரத்தில் வள்ளுவரின் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
38 அடி என்பது திருக்குறளின், முதல் 38 அதிகாரங்களை எடுத்துரைக்கிறது. வள்ளுவப் பெருந்தகை படைத்த, திருக்குறளின் முதல் 38 அதிகாரங்கள் அறத்துப்பால் என அறியப்படுகிறது.
மீதமுள்ள 95 அதிகாரங்கள் முறையே பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. அறத்துப்பால் மீது நின்று, பொருட்பாலும், காமத்துப்பாலும் உருவமாய் அமைய குமரி முனையிலே காட்சி தருகிறார் திருவள்ளுவர்.
திருவள்ளுவர் சிலையின் கைகளில் மூன்று விரல்கள் வானத்தை நோக்கி இருப்பது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மூன்று விரல்களும், அறம்-பொருள்-இன்பம் எனும் திருக்குறளின் ஆணிவேரான கருத்துக்களை எடுத்துரைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சிலையின் எடை மட்டும் 7,900 டன்கள் என மதிப்பிடப்படுகிறது. இதற்கு தேவையான, கருங்கல் பாறைகள் கன்னியாகுமரி மாவட்டம், தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிகபட்சம், எட்டு டன் எடை வரையிலான கருங்கற்களை கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த அளவிற்கு அதிகமான எடை கொண்ட கருங்கற்கள் இதற்கு முன்பு, தென் அமெரிக்காவில் மாயன் நாகரீகத்தின் கட்டுமானங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
இன்றும் கூட பலரும், திருவள்ளுவர் சிலையானது ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் திருவள்ளுவர் சிலை, மிகப்பெரிய வெவ்வேறு அளவிலான கருங்கல்பாறைகளை இணைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இத்தனை சிறப்புகள் மிக்க வள்ளுவர் சிலையை திறப்பதற்கு, ஈராயிரம் ஆவது ஆண்டின் முதலாவது தினமாம், ஜனவரி ஒன்றை தேர்ந்தெடுத்தது தமிழக அரசு.
அதன்படி, 01/01/2000 ஆவது ஆண்டு தமிழக முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களால் வள்ளுவப் பெருந்தகையின் சிலை திறந்து வைக்கப்பட்டது.
உத்திரவிடப்பட்ட ஆண்டிலிருந்து திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு, 25 ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
தற்பொழுது, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் விதமாக கண்ணாடி இழை பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தற்பொழுதைக்கு இந்திய அளவில் 25 வது மிகப்பெரிய சிலை ஆகவும், அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் நான்காவது மிகப் பெரிய சிலையாகவும் திகழ்கிறது! குமரிமுனையில் இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.
சிலையின் பராமரிப்பிற்காக, அவ்வப்போது ரசாயன பூச்சும், சிலையின் மீது படியும் உப்பு துகள்களை நீக்குவதற்கு காகித கூழ் பூச்சும் பயன்படுத்தப்படுகிறது.
கற்சிலைகளின் மீது படிந்திருக்கும் உப்பு படிகங்களை, காகித கூழ் முற்று முழுதாக உறிஞ்சி விடும் என்பதால் சிறந்த மற்றும் எளிமையான தீர்வாக அமைகிறது.
சிலை திறக்கப்பட்டதிலிருந்து தற்பொழுது வரை, மூன்று தடவை காகித கூழ் பூச்சு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்திய பெருங்கடல் சுனாமி, 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஓகி புயல் மற்றும் அவ்வப்போது ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் இயற்கை பேரிடர்களை சந்தித்த போதும், திருவள்ளுவர் சிலை இன்னும் வலுவாக இருக்கிறது. இது சிலையின் வலுவான தன்மைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பார்க்கும் போது கூட, குறிப்பிட்ட சில தருணங்களில் திருவள்ளுவர் சிலையை காண வாய்ப்பு இருப்பதாக அறிந்து கொள்ள முடிகிறது.
திருவள்ளுவர் சிலையானது,இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வள்ளுவரின் பெருமையை பறைசாற்றும் வகையில், குமரிமுனையை அலங்கரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
திருக்குறளின் சிந்தனைகளை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உலக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியை திருவள்ளுவர் சிலை சிறப்புறச் செய்யும்.
கட்டுரையாளர்:
ஸ்ரீ காளீஸ்வரர் செ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.