திருப்பூர் 21 ஆவது புத்தகத் திருவிழா (Tiruppur 21st Book festival) - M.P.Saminathan (மு. பெ. சாமிநாதன்) தொடக்கி வைத்தார் - https://bookday.in/

திருப்பூர் 21 ஆவது புத்தகத் திருவிழா

திருப்பூர் 21 ஆவது புத்தகத் திருவிழா

பறவைகளை ஈர்க்கும் வேடந்தாங்கல் போல
திருப்பூர் மக்களை ஈர்த்து வரும்
21 ஆவது புத்தகத் திருவிழா

பருவ காலத்தில் பறவைகள் தேடி வரும் வேடந்தாங்கல் சரணாலயம் போல, திருப்பூர் மக்கள், ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் புத்தகத் திருவிழாவிற்கு அணி திரண்டு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு, திருப்பூர் மக்களின் பேராதரவை பெற்ற 21 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஜனவரி 23 அன்று திருப்பூர் காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் உற்சாகத்துடன் தொடங்கியது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும், இந்தத் திருவிழாவை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார்.

மாநில மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் விழா பேருரை ஆற்றினார். முன்னதாக புத்தகத் திருவிழா கண்காட்சி அரங்கங்களை அவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

திருப்பூர்  21 ஆவது புத்தகத் திருவிழா (Tiruppur 21st Book festival) - M.P.Saminathan (மு. பெ. சாமிநாதன்) தொடக்கி வைத்தார் - https://bookday.in/

 

 

ஒவ்வொரு அரங்கத்திலும் புத்தகங்களை பார்த்தபோது, விட்டு விட்டு கடந்து செல்ல முடியவில்லை. எல்லா அரங்கங்களையும் ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் புத்தகங்கள் நம்மை ஈர்க்கின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தொடக்க நிகழ்ச்சியில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் ஆர்.ஈஸ்வரன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில் தொடக்கத்தில் 30, 40 அரங்கங்களுடன் புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்டு, மக்கள் ஆதரவில் இன்று 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க ஆண்டுகளில் 30 லட்சம் 40 லட்சம் என்ற அளவில் புத்தகங்கள் விற்பனையானது. ஆனால் சமீப மூன்றாண்டு காலமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்பனையாகிறது. இதன் மூலம் இந்த திருப்பூர் மாநகரில் புத்தக வாசிப்பு இயக்கம் மக்களிடம் வேரூன்றி இருக்கிறதை அறிய முடிகிறது.

திருப்பூர்  21 ஆவது புத்தகத் திருவிழா (Tiruppur 21st Book festival) - M.P.Saminathan (மு. பெ. சாமிநாதன்) தொடக்கி வைத்தார் - https://bookday.in/

தமிழக அரசு அரசியல் சட்ட புத்தகத்தை மலிவு பதிப்பாக வெளியிட்டால் இளைஞர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் ஏராளமாக வாங்கி படிக்க முடியும். அத்துடன் பள்ளிப் பாடத்திட்டத்திலும் அரசியல் சட்டம் குறித்த விரிவான பாடப்பிரிவை சேர்க்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பெரும் படை உருவாக முடியும் என்று ஈஸ்வரன் வேண்டுகோள் வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் முன்னிலை உரை ஆற்றினார். ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேசும்போது, திருப்பூர் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேயர் தினேஷ்குமார் புத்தகத் திருவிழாவிற்கு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இப்புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விழாவில் பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடக்க விழா பேருரை ஆற்றுகையில், சிறுவர்கள், குழந்தைகள் செல்போன் பார்க்கும் பழக்கத்தில் இருந்து விடுபட புத்தக வாசிப்பை பழக்க வேண்டும் என்று கூறினார்.

திருப்பூர்  21 ஆவது புத்தகத் திருவிழா (Tiruppur 21st Book festival) - M.P.Saminathan (மு. பெ. சாமிநாதன்) தொடக்கி வைத்தார் - https://bookday.in/

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழா பேருரை ஆற்றுகையில், ஆண்டுக்கு ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழா மேம்பட்டு வருகிறது. புத்தக வாசிப்பு பழக்கம் வாழ்க்கையை மேம்படுத்தும். ஆரோக்கியம் குறித்த புத்தகங்களை வாசித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம், பல்வேறு தலைப்பில் உள்ள புத்தகங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டக் கூடியவையாக இருக்கின்றன. ஆரம்பத்தில் சில பதிப்பகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சி தற்போது 60க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்களுடன் 150 அரங்கங்கள் கொண்டு நடத்தப்படுகிறது. பேரறிஞர் அண்ணா புத்தகங்கள் அதிகம் வாசிக்கக் கூடியவராகவும், நூல்களை எழுதக்கூடியவராகவும் இருந்தார். அதேபோல் முத்தமிழ் அறிஞர் கலைஞர், புத்தகங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தார். அவரது நூற்றாண்டில் மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. கோவையில் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சமுதாயத்தில் புத்தக வாசிப்பு பழக்கம் மேம்பட வேண்டும் என்று கூறினார்.

துணை மேயர் ஆர். பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, பின்னால் புக் ட்ரஸ்ட் நிர்வாகிகள் அ.நிசார் அகமது, கே.காமராஜ், புத்தகத் திருவிழா நிர்வாகிகள் அரிமா ஜீவானந்தம், மோகன் கார்த்திக் உள்பட புத்தகத் திருவிழா ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

சென்னை புத்தகத் திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பூரில் நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழாவில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் பல புதிய புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

திருப்பூர்  21 ஆவது புத்தகத் திருவிழா (Tiruppur 21st Book festival) - M.P.Saminathan (மு. பெ. சாமிநாதன்) தொடக்கி வைத்தார் - https://bookday.in/

புத்தக அரங்கங்களில் ஊடாக அரசு நிர்வாகத்தின் சேவை குறித்த விபரங்களும் தனித்தனி அரங்கங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் சிறப்பு அம்சமாக, சிந்து வெளி நாகரிகத்தின் மாதிரி காட்சி வடிவமைப்பு தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தின் தனித்துவ அடையாளமாக திகழும் திமில் உள்ள காளை, சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட நீச்சல் குளத்தின் மாதிரி வடிவம் ஆகியவை நேர்த்தியுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இவை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வந்து தற்படம் (செல்பி) எடுக்க வைக்கிறது.

ஒவ்வொரு நாள் காலையும் மாணவர்களுக்கான தனி அறிவியல் விழிப்புணர்வு நிகழ்வுகளும், மாலை நேரம் மேடை நிகழ்ச்சியாக கலை இலக்கிய கருத்தரங்கங்களும் நடத்தப்படுகின்றன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை புத்தக அரங்கங்களை அனைத்து பார்வையாளர்களும் கண்டு களிக்கலாம். புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக விற்பனை அளவில் அதிகமாகி வருவதை, இந்த ஆண்டு புத்தக விற்பனை புதிய உயரத்தை எட்டி முந்தையாண்டு சாதனையை தாண்டும் என்று புத்தக விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் பண்பாட்டுத் திருவிழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

 

கட்டுரையாளர் : 

– வே. தூயவன்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *