இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் 2014ல் மும்பையின் ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் மருத்தவ மனையின் துவக்க விழாவில், மருத்துவ அறிவியலில் இந்தியா அப்போதே பல சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறது எனக் கூறி, நாம் வணங்கும் யானை முகங் கொண்ட பிள்ளையார் மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தி அப்போதே பிளாஸ்டிக் சர்ஜரி சாதனை செய்துள்ளது எனப் பெருமையாகப் பேசி இருக்கிறார். இது உலகெங்கிலும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. புராணத்தில் கூறியதை எப்படி அறிவியல் உண்மையாகக் கூறலாம் எனக் கேள்வி கேட்டனர்
இதைப் போன்று மனித உடலில் சிங்க முகம் (நரசிம்ம அவதாரம்), பன்றி முகம் (வராக அவதாரம்) காளையின் தலை (ரிஷபம்), பெண் முகங் கொண்ட காமதேனு, பறவையின் இறக்கை ஒட்டிய மனிதன் (ஜடாயுவு), சிங்கத்தின் உடலில் மனிதத் தலை (எகிப்தின் ஸ்ஃபிங்க்ஸ்) என இந்திய மற்றும் பிற நாடுகளின் புராணங்களில் ஏகப்பட்ட உருவங்கள் இருக்கின்றனவே அவைகள் எல்லாம் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்யப்பட்டவையா என்ற கேள்வியும் எழும்பத் துவங்கினர்..
முதலில் யானைத் தலையை மனித உடலோடு ஒட்ட முடியுமா?
முடியாது. மனிதக் கழுத்து உருளையானது அதன் சுற்றளவு 48 செ.மீ.ஆனால் சிறிய யானைக் குட்டியின் கழுத்தின் அளவின் சுற்றளவு 120 செ.மீ. எனவே தலையைப் பொறுத்த முடியாது. யானையின் தோல் தடிமனானது. அதன் நிறமும் மனித நிறத்தை விட மாறுபட்டது.
மனிதனில் பிளாஸ்டிக் சர்ஜெரி சிகிச்சை என்பது உடலமைப்பு, நோய்த் தொற்று, எதிர்ப்புச் சக்தி, ரத்த வகைகள், திசு ஏற்பு முதலியன சம்பந்தப்பட்டவை. இதற்காக பல சோதனைகள் செய்ய வேண்டியதிருக்கிறது. மனிதர்களுக்கிடையே உறுப்பு மாற்ற சிகிச்சைக்கே இவை எல்லாம் ஒத்திருக்க வேண்டும். இரண்டு மனிதர்களுக்கிடையே உறுப்புகள் ஏற்பு என்பதே மிகச் சிக்கலாக இன்னும் இருக்கிறது. யானைக்கும் மனிதனுக்கும் இடையில் அனைத்திலும் பெருத்த வேறுபாடு உள்ளது. இப்படி இருக்கையில் யானையின் தலையை ஒட்ட வைக்க முடியுமா? யானைத் தலையை மனித உடலோடு ஒட்டும் போது மனித உடல் அதை நிராகரித்து விடும்.
பிளாஸ்டிக் சர்ஜரி என்பது “plastikos,” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததாகும். பாதிக்கப்பட்ட, இழந்த தோல், திசுக்களை புனரமைப்பு செய்வது (Reconstructive Surgery). இதன் முக்கிய பயன் என்பது மீண்டும் இழந்த பாதிக்கப்பட்ட திசுக்களை,தோல் பகுதியை மீண்டும் தக்க வைப்பது; செயல்பட வைப்பதாகும். பிறவிக் குறைபாடுகள் ( ஜவ்வுடன் கூடிய விரல்கள், பிளவுபட்ட உதடு அல்லது அன்னம்), தீக் காயங்கள், மார்பகப் புற்று நோய், பெரிய அளவிலான வெட்டுக் காயங்களால் ஏற்பட்ட உடல் பகுதிகள் ஆகியனவற்றைப் புனரமைக்க உதவுகிறது.மேலும் அழகை மேம்படுத்தும் சிகிச்சைக்கும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உடலமைப்பு, உடலுறுப்புகள் மேம்படுத்துதல் ஆகியன அடங்கும் (Cosmetic Surgery).
பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் பொழுதே நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்கலாம் என்கிறார்கள். பெரிய வடுக்கள், ரத்த உறைதல், ரத்த இழப்பு, அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் மயக்க நிலையிலிருந்து மீள்வது, நீர் தொகுப்பு,நோய்த் தொற்று, நரம்பு பாதிப்பு போன்றவைகள் பிளாஸ்டிக் சர்ஜரி எதிர்கொள்ளும் சவால்கள்.
இப்படி இருக்கும் போது மனித உடலில் யானையைத் தலையைப் பொருத்தியது உறுப்பு மாற்று சிகிச்சை. அது பிளாஸ்டிக் சர்ஜரியே இல்லை. ஒரு தலைக்குப் பதில் மற்றொரு விலங்கின் தலை ஒட்டுதல். அது எவ்வளவு சிக்கலானது; சவாலானது என்று மருத்துவ உலகமே அறியும். இன்று கூட அது சாத்தியமாகவில்லை. சிறுநீரகம், கல்லீரல், இதயம் என உறுப்பு மாற்று சிகிச்சைகளே இன்று ஓரளவு சாத்தியமாகி உள்ளது. தலையை ஒட்டும் தொழில்நுட்பம் இன்று கூட வரவில்லை.
பண்டைய இந்தியாவின் மருத்துவ அறிவியல் எவ்வாறு இருந்தது?
இந்தியாவின் அறுவைச் சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படும் பண்டைய இந்தியாவின் சுஷ்ருதா கிபி 600ல் கன்னத்தின் தோலை எடுத்து மூக்கில் பொருத்தி முதன் முதல் உலக சாதனை படைத்தார். அவருடைய சுஷ்ருதா சம்ஹிதா என்ற நூலில் எவ்வாறு மூக்கு, காது மடல்கள், இனப்பெருக்க உறுப்புகள் ஆகியனவற்றை மறு புனரமைப்பு செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது செய்யப்படும் முன் தலை தோல் ஒட்டுதல் (rhinoplasty), சிதைந்து போன காது மடலை கன்னத்திலிருந்து எடுக்கப்பட்ட தோலிலிருந்து ஒட்டுதல் (otoplastic) குறித்த முறைகளை விரிவாகவே எழுதியுள்ளார்.
சுஸ்ருதா பண்டைய இந்தியாவின் முதல் மருத்துவ நிபுணராகக் கருதப்படுகிறார். அவரின் சுஸ்ருதா சம்ஹிதா என்பது பண்டைய இந்தியாவின் அறுவைசிகிச்சை குறித்த முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்கள் குறித்தும் அறுவை சிகிச்சை செய்வதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. அதில் மிக முக்கியமாக மூன்று வகையான தோல் மாற்றுச் சிகிச்சை மூலம் மூக்கினை மறு புனரமைப்பு செய்யும் சிகிச்சை முறை கூறப்பட்டுள்ளது. படம்: சுஸ்ருதா பயன்படுத்தியதாகக் கூறப்படும் அறுவை சிகிச்சைக் கருவிகள்.
பிளாஸ்டிக் சர்ஜெரியின் வரலாறு:
கிமு 600க்குப் பின்னர் அறுவை சிக்கிச்சை முறை இங்கு துவங்கி இருக்கலாம் என்றும் சுஸ்ருதா அதன் துவக்க அறுவை சிகிச்சை மருத்துவராக உருவாகி இருக்கலாம் என்றும் அவரது சுஸ்ருதா சம்கிதா சமஸ்கிருதத்தில் இருந்து அரேபிய மொழியிலும் அதன் பின்னர் ஐரோப்பியாவிற்குப் பரவியதும் என்றும் அறியப்படுகிறது( கிபி 750).
ஜோசெப் கார்பியு என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 1815ல் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அதாவது மயக்க மருந்து கண்டுபிடிக்காத காலத்தில் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் பென்சிலின் போன்ற ஆண்டி பயாட்டிக்ஸ் 1928ல் கண்டுபிடித்தது மேலும் உதவி செய்தது.
ஜான் பீட்டர் மேத்யூர் என்பவர் 1827ல் பிளவுபட்ட உதட்டுப் பகுதியில் வெற்றிகரமான சிகிச்சை செய்து இருக்கிறார். இருப்பினும் சர் ஹரால்டு கில்லிஸ் என்பவரே முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலங்களில் நவீன தொழில்நுட்ப வழியில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்தவராகக் கூறப்படுகிறார்.
நிறைவாக இந்தியாவின் அறுவைச் சிகிச்சையின் தந்தை எனப் போற்றப்படும் பண்டைய இந்தியாவின் சுஷ்ருதா கிபி 600ல் கன்னத்தின் தோலை எடுத்து மூக்கில் பொருத்தி முதன் முதல் உலக சாதனை படைத்ததைப் பிரதமர் கூறியிருந்தால் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும். அதை விடுத்து புராணங்களில் காணப்படும் கற்பனைக் கதைகளைக் கூறுவது என்பது இந்து மதத்தின் பெருமையாக முன் வைக்கும் இந்துத்துவா அரசியலைத் தவிர வேறு இதில் என்ன அறிவியல் இருக்கிறது ?