எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘ஒரு பிரம்பு ஒரு மீசை (Oru Pirambu Oru Meesai)’ சிறுகதை குறித்த கட்டுரை….
அடி என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை – கட்டுரை
– மணி மீனாட்சிசுந்தரம்.
இலக்கியம் வாழ்வு குறித்துப் பாராமுகமாய் இருப்பதில்லை ; அறிமுகமற்ற ஒருவனைப்போல் கண்டும் காணாமல் கடந்து செல்வதில்லை. ஆர அமர அருகிருந்து விலாவாரியாகப் பேசித்தீர்த்துவிடும் ஒரு நண்பனைப்போல முனைப்புடன், நம் வாழ்வில் எதிர்ப்படும் பிரச்சனைகளைப் பேசிப் பார்க்கிறது.நல்ல இலக்கியம் ஒரு நல்ல நண்பனைப்போல் அதைச் செய்யாமல் இருப்பதில்லை.
மாணவர்களை அடித்து வளர்க்கவேண்டும்,அப்போதுதான் உருப்படுவார்கள்.அன்பாகவே நடந்துகொள்வது எல்லா இடத்திலும் பலனளிக்காது.எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியர் சாம,பேத,தான,தண்ட முறைகளைக் கையாள்வதே பொருத்தமானது.அன்பு காட்ட வேண்டிய இடத்தில் அன்பு காட்ட வேண்டும் ,அடி கொடுக்க வேண்டிய இடத்தில் அடி கொடுத்துவிட வேண்டும்.இன்றைய மாணவ சமுதாயம் முன் எப்போதையும்விடத் தரம் தாழ்ந்து போனதற்கு ஆசிரியர்கள் கைகள் கட்டப்பட்டிருப்பதே காரணம் என்ற எண்ணம் கொண்ட ஆசிரியர்களும் உண்டு ; பெற்றோர்களும் கூட உண்டு ; ஆசிரியர் அடித்துத் திருத்தியதால்தான் இப்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதாகக் கூறும் முன்னாள் மாணவர்களும் இங்கு உண்டு.
“முரட்டுத்தனத்தினால் பிள்ளைகளை அடக்கி ஆள்வது கஷ்டமென்பதை அக்கால ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவில்லை” என எழுதும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூட
“அடிக்குப் பயந்தாவது பிள்ளைகள் படித்தார்கள்.அவர்களுக்குப் பல விஷயங்கள் மனனம் ஆகும்” எனவும் எழுதுகிறார்.
இந்தக் கருத்தை விவாதிப்பதற்கென்று எழுதப்பட்ட சிறுகதையாகவே எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் ‘ஒரு பிரம்பு ஒரு மீசை’ (Oru Pirambu Oru Meesai) சிறுகதையைக் கூறலாம்.
முப்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு கிராமத்தின் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிபவர் மருது சார்.
காலையில் எல்லோருக்கும் முன்னதாகப் பள்ளிக்கு வந்து ,கடைசி ஆளாகப் பள்ளியை விட்டுக் கிளம்பும் பொறுப்பான ஆசிரியர்; மாணவர்களைக் கட்டுக்கோப்புடன் வழி நடத்தும் கறாரான ஆசிரியர்; அவரது முறுக்கி விட்ட மீசையும்,கையில் எப்போதும் சழன்றுகொண்டிருக்கும் பிரம்பும் அவரது செம்மையான பணிக்குரிய சீரிய ஆயுதங்கள்.
“கையில் பிரம்புடன் மேல்நோக்கி முறுக்கிவிட்ட மீசையுடன் அவர் லாந்தும் காட்சி எத்தனையோ மாணவர்களின் கனவுகளில் வந்து ஒன்றுக்கிருக்க வைத்ததுண்டு.அவரது கையின் நீட்சியாகவே அவருக்குப் பிரம்பு ஆகிவிட்டது. பள்ளியில் ஏதாவது ஒரு வகுப்பில் பிரச்சனை என்றால் மருதுசாரைக் கூப்பிட்டு விடுவார்கள்.தினசரி ஒரு பஞ்சாயத்து சாருக்கு வந்துகொண்டே இருக்கும்.
பள்ளியில் மட்டுமல்லாது பள்ளிக்கு வெளியிலும் அவரது பஞ்சாயத்து எல்லை விரிவடைந்து சென்றது. ஒரு வகுப்புப் பையன் ஒரு பொண்ணுக்கு லெட்டர் கொடுத்துவிட்டான் என்றால் அந்தப் பையன் வீட்டுக்கு நேரடியாகப் போய் பெற்றோர்களிடம் பேசி அப்பையனை ‘அடித்துக் கொல்லுவதற்கு’ அனுமதி வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்.
அதன் பிறகு அந்தப் பையன் செத்தான்.முழுமையாக அவன் அவருடைய ஆளுகைக்குள் வந்து விடுவான்.அவன் திருந்தியே தீர வேண்டும்”.
“இவனெல்லாம் ஒரு நாளும் உருப்படவே மாட்டான் என்று பெற்றோர்களாலேயே கைவிடப்பட்ட ‘கிரிமினல்கள்’ ,சேட்டைக்காரப் பையன்கள் என்று பல பேருடைய வாழ்க்கையைத் தன் பிரம்பால் திசைமாற்றி இருக்கிறார் மருது சார். அவர்களெல்லாம் நல்ல படிப்புப் படித்து உத்தியோகங்களுக்குப் போய் லீவுக்கு ஊருக்கு வரும்போது சார் வீட்டுக்குத் தவறாமல் ஸ்வீட் பாக்சுடன் வருவார்கள்.
சார் மட்டும் அன்னைக்கி என்னை அடிச்சுத் திருத்தலேன்னா நான் இன்னிக்கு இப்படி ஒரு மனுஷனா ஆகியிருக்கவே முடியாது என்று நன்றியுடன் பேசிவிட்டுப் போவார்கள்.அந்த நேரத்தில் சார் பெருமிதம் பொங்க ஒரு பெரிய தியாகி போல முகத்தை வைத்துக்கொண்டு நான் என்ன பெரிசா பண்ணிட்டேன் என்பார்”.
“இப்படித் ‘தானுண்டு தன் பிரம்பு உண்டு’ என்று நிம்மதியாகத் தன் தொழிலை நடத்திக் கொண்டு வந்த சாருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக ஒருநாள் வந்து சேர்ந்தது”.
பள்ளிக்கூடத்தின் வெள்ளைச்சுவரில் தன்னுடைய சாதியைச் சேர்ந்த தலைவரின் புகழை ஒரு மாணவன் எழுதுகிறான்,பதிலுக்கு வேறு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் அச்சாதியைக் குறைகூறி வசனங்களை எழுதுகிறார்கள்.
இப்படிப் பள்ளிச் சுவர்களில் நடக்கும் யுத்தத்தால் திகிலடைந்த பள்ளி நிர்வாகம் இந்தப் பிரச்சனையை முதலில் ஆரம்பித்த மாணவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பை மருது சாரிடம் ஒப்படைக்கிறது. தலைமையாசிரியர் மருதுசாரின் கையைப் பிடித்துக்கொண்டு “நீங்க முயற்சி பண்ணினாத்தான் முடியும்” என்கிறார்.
விடுவாரா மருது சார் ? பள்ளியில் உள்ள தன்னுடைய சி.ஐ.டி மாணவர்கள் மூலம் பிரச்சனைக்கான முதல் குற்றவாளியைக்
கண்டுபிடிக்கிறார்.பத்தாம் வகுப்பு ‘இ’ பிரிவு மாணவனான நடராஜன்தான் அவன்.”அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மருது சார் நடராஜன் உடம்பின் மீது பிரம்பாபிஷேகம் நடத்தி அவனது வாக்குமூலத்தைப் பெறுகிறார். ” போய் உங்க அப்பா அம்மாவைக் கூட்டிக்கிட்டு வா” என்று நடராஜனையும் பிரச்சனையைத் தொடர்ந்த வேறு சில மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் வீட்டுக்குத் துரத்தி விடுகிறது.
மருது சார் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்வதைத் தடுக்கவே முயல்கிறார் ; பிரச்சனைக்குரிய மாணவர்களைத் தனது பாணியில் கவனித்து வீட்டுக்கு அனுப்புகிறார்.இதில் அவர் தன்னுடைய சாதிப்பற்றை எங்கும் வெளிப்படுத்தவில்லை.பள்ளியின்
நலனுக்காகவே இவ்வாறு செய்கிறார். ஆனால், கெடுவாய்ப்பாக பள்ளிச் சுவரில் எழுதிய மாணவன் நடராஜனின் எதிர் சாதியை சேர்ந்தவராக மருதுசார் இருந்து விடுகிறார்.இந்த ஒரு காரணம் போதாதா?
மாணவன் நடராஜனையும் அவனது பெற்றோரையும் சாதி சார்ந்த இளைஞர்கள் பின்னின்று இயக்க, மருதுசாரின் மேல் போலீஸில் புகார் கொடுக்கப்படுகிறது.
வெலவெலத்துப்போன மருது சார் டி.எஸ்.பி மூலம் சமரசத்திற்கு அலைகிறார். இந்த சமயத்தில் மாணவர் நடராஜனை யாரோ கடுமையாகத் தாக்கி வயல் காட்டுச் சகதியில் போட்டு விட்டுப் போய்விட பிரச்சனை இப்போது ஊர்க் கலவரமாக வெடிக்கிறது.
மருதுசாரின் சாதியைச் சேர்ந்தவர்கள்தான் நடராஜனை அடித்துப் போட்டுவிட்டார்கள் என்ற வதந்தி ஊரில் சாதிக்கலவரமாகி பக்கத்து ஊர்களுக்கும் பரவுகிறது.”மருதுசாரைக் கைது செய்தால்தான் மக்களின் கோபம் கொஞ்சமாவது தணியும்” என்ற நிலையில் போலீஸ் மருதுசாரைக் கைதுசெய்ய வருகிறது.
மயங்கிச் சரிகிறார் மருதுசார். மருது சாரை விடுதலை செய்யக்கோரி அவருடைய சாதிக்காரர்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறிக்க அங்கே தடியடி நடக்கிறது. பிரச்சனை முழுதும் சாதிக்கலவரமாக உருமாறுகிறது.
சாதிக்கலவரம் தென் மாவட்டங்கள் முழுதும் பரவி பெரும் அபாயம் ஏற்படப் போகிறது என அஞ்சிய மாவட்ட நிர்வாகம் இரு தரப்பையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமரசக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறது.
கூட்டத்தில் மருதசார் சாதி பார்த்து நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.”சமூகம் முழுக்க சாதியிலே அடைபட்டுக் கிடக்கு.எங்க பையன் கிட்ட அது லேசா வெளிப்பட்டிருக்கு. அதுக்காக இவனை மட்டும் அடிச்சது வன்கொடுமை இல்லாம வேறென்ன? என்கிறான் நடராஜனுக்கு ஆதரவான இளைஞன்.
மருது சார் தான் அப்படிப்பட்டவரல்ல என்று மன்றாடுகிறார்.மருதுசாரின் பிரம்பு சாதி பார்ப்பதில்லை என்று ஆதாரத்துடன் வாதிடுகிறார் தலைமையாசிரியர் .
கலெக்டர் “மாணவர்களை அடிப்பது பொதுவாகப் பார்த்தா தப்புத்தான். ஆனா நடைமுறையிலே அது தவிர்க்க முடியாது தம்பி.நான் இன்னக்கி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மாவட்டக் கலெக்டராக உக்காந்திருக்கேன்னு சொன்னா
அதுக்கு முக்கிய காரணம் எட்டாம் வகுப்பிலே என்னை அடித்துத் திருத்தின ஒரு வாத்தியார்தான் என்பதை மறுக்க முடியாது” என்கிறார்.
இதற்கு அந்த இளைஞன்,”இதே மருது சாரிடம் அடி வாங்கப் பயந்து பள்ளிக்கூடத்துக்கே போகாமல் படிப்பை விட்ட பையன்கள் எங்க தெருவுல மட்டும் ஏழெட்டுப் பேர் இருக்காங்க சார். முதல் தலைமுறையாகப் படிக்கப் போன பிள்ளைகள் அடிக்குப் பயந்து படிக்கப் போகலைன்னா அது எவ்வளவு பெரிய நஷ்டம்”? என்கிறான்.
பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடுகிற ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து வருகின்ற மாணவர்களுக்கு அடி என்பது மற்ற மாணவர்களுக்கு இருப்பதைப் போல் சாதாரண தண்டனையாக இருந்து விடுவதில்லை என்ற இளைஞனின் பார்வை நுட்பமானது ; சிந்திக்க வைப்பது.
மருது சார் எழுந்து “நான் அந்த மாணவனை அடிச்சது தப்புத்தான். அதுக்காக இந்தச் சபையிலே மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.இதைச் சாதிப் பிரச்சனையாக்க வேண்டாம்.என் மேலே ஏதும் நடவடிக்கை எடுக்கிறதானாலும் எடுத்துக்குங்க. எங்க பள்ளிக்கூடத்துனாலே மீண்டும் நம்ம பக்கம் ஒரு சாதிச்சண்டை வந்துர வேண்டாம்” என்று கையெடுத்துக் கும்பிட்டபடி நின்று கொண்டிருக்கிறார்.
மருது சார் நல்லவர்தான். சாதி பார்ப்பவரில்லைதான். மாணவர்களின் நலனுக்காகவும் பள்ளியின் நலனுக்காகவும் உழைக்கிற அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்தான். ஆனால், மாணவர்களைத் திருத்த அடிதான் வழி என்ற அவரது நடைமுறை மட்டும் அவரிடம் இருந்திராவிட்டால் இப்படி ஒரு நிலைமை அவருக்கு வந்திருக்குமா?
கதையில் ஓரிடத்தில் மருது சாரைப்பார்த்து ஒருவர் இப்படிக் கேட்கிறார்,” காலம் எவ்வளவோ மாறிப் போச்சு சார். நீங்க இன்னமும் மாறாம அப்படியே போன நூற்றாண்டிலேயே இருந்தா எப்படி சார்?”
இந்தக் கேள்வி மருது சாருக்கு மட்டுமல்ல. மாணவர்களை நல்வழிப்படுத்த அடி ஒன்றே வழி என நினைத்து வேறு வழிகளை எண்ணாத ஆசிரியர்கள் அனைவருக்கும்தான்.
பிரச்சனைகள் ஓய்ந்து மருது சார் பள்ளிக்குப் போகிறார். ஆனால் அவர் முகத்தில் முறுக்கிய மீசையும் இல்லை.கையில் பிரம்பும் இல்லை என்பதுடன் கதை முடிகிறது.
அடி என்பது மாணவர்க்கு மட்டுமல்ல,ஆசிரியர்க்கும் தீங்காக அமைந்துவிடும் என்பதையும், ஆசிரியர்களின் செயல்பாட்டை சாதிக் கண் கொண்டு சமூகம் பார்க்கிறது என்பதையும், பள்ளியில் கவனக்குறைவாக அணுகப்படும் சிறு பிரச்சனையும் சமூகக் கலவரமாக மாறும் அபாயம் உள்ளது என்பதையும் உணர்த்தும் இச்சிறுகதை, மாறும் உலகிற்கேற்ப ஆசிரியர்களிடம் இருக்க வேண்டிய மாற்றத்தையே முதன்மையாக வலியுறுக்கிறது.
உதவிய நூல்கள்:
1.என் சரித்திரம் – (உ.வே.சா) டாக்டர் உ.வே.சாமிநாதைய்யர் நூல் நிலையம், சென்னை -90.
2.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்- (ச.தமிழ்ச்செல்வன்) பாரதி புத்தகாலயம், சென்னை -18.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இன்றைய ஆசிரியர்களுக்கான அருமையான படைப்பு 👏👏👏👏👏
உண்மையில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையை மையப்படுத்திய அருமையான உளப்பிரச்சினை சார்ந்த கதை. 1 முதல் 12 வரை உள்ள அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கதை.
Deserving all qualities of a short story.Can be taken as a short film.
இன்றைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான சிறுகதை. நன்று.
உயிரோட்டம் உள்ள நல்ல கதை இன்றைய இளைஞர்கள் தவறான பாதையில் செல்வத இக்கதையே ஒரு சாட்சி. ஆசிரியர்களை சரியான இடத்தில் அரசு பாதுகாப்பாக வைக்காத வகையில் குற்றங்கள் பெருகித்தான் செய்யும். மாணவர் நலனின் ஆசிரியருக்குமுழு சுதந்திரம் அளித்தால் நாடு நலம்பெரும். சுதந்திரமாக இருக்கும் சுதந்திர இந்தியா. நன்றி.