கவனிக்கப்பட வேண்டிய கோயில் காடுகள்! : முனைவர். பா. ராம் மனோகர்
காடுகள் என்றால், மலைத்தொடரில் அமைந்துள்ள, மிக அதிகமான,பெரிய வன விலங்குகளுக்கு வாழ்விடம் தரும் அடர்ந்த காடுகள் மட்டுமே என்று நாம் நினைக்க தேவையில்லை. ஆம். தொன்று தொட்டு, பாரம்பரியமாக நம் நாட்டின் கிராமப் பகுதிகளிலும், மலைப்பகுதிகளிலும், உள்ளூர் மக்களால், பராமரிப்பு செய்து வந்த இயற்கை பசுமை பகுதி, கோயில் காடுகள் (Temple Forests) ஆகும்! இந்த கோயில் காடுகள், மக்களின் இயற்கை வழிபாடு, ஆன்மீக, இறை நம்பிக்கை அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்தன. எனினும், சமீப காலமாக, கோயில் காடுகள், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில், அவற்றின், உண்மை முக்கியத்துவம் அறியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன. சிலவற்றை,உரிய முறையில் பராமரிக்கும்,கவனிக்கப்படும் நிலை இழந்து விட்டன.
கோயில் காடுகள் உயிரின வேற்றுமையினை தொடர்ந்து பாதுகாக்க உள்ளூர் மக்கள் ஒருங்கிணைந்து பாரம்பரிய இயற்கை வளம் ஆகும். மேலும், சுற்றுசூழலில் ஆங்காங்கே அமைந்துள்ள “கரியமில (கார்பன் )உறிஞ்சு தொட்டி ஆகவும் செயல்படுகின்றன. இங்கு விலங்கு வேட்டை, மர வெட்டுதல் ஆகியவை முழுமையாக தடை செய்யப்பட்ட பகுதியாகும். நம் நாட்டில் இந்தியா முழுவதும், இத்தகைய காடுகள் 14,000 மட்டுமே கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. எனினும் 100000க்கு மேல் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் நகர மயமாக்கம், அத்துமீறிய இயற்கை வளம் சுரண்டல் போன்ற காரணங்களினால் கோயில் காடுகள் அழிந்து வருகின்றன. இது தவிர்த்து இங்குள்ள தெய்வ சிற்பங்கள்,, இப்பகுதியில்கோயில்களை மேம்படுத்தும் நோக்கில் காடுகள் நீக்கப்படும் நிலையும்
உள்ளது. இந்த கோயில் காடுகள், நெடுங்காலமாக, மண் அரிப்பு தடுத்தல், ஆயுர்வேத மூலிகை வளம்,நீர் ஆதாரம் (குளம், நீர் ஓடை ) போன்ற சூழல் பணிகளில் பங்கெடுத்து வருகின்றன. தபோவனம், மகா வனம், ஸ்ரீ வனம் என்று மூன்று பிரிவுகளாக கோயில் காடுகள் என்ற புனித தோப்பு (SACRED GROVES ) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிஷ்னாய் இன மக்களும், குர்ஜர் இன மக்கள்கோயில் காடுகள் (Temple Forests), அங்குள்ள கடவுளர்களை வழிபாடு , செய்தும் இயற்கையினை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர். கேரளா, கர்நாடக மாநிலங்களில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கோயில் காடுகள் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் இவை “காவுகள்” (Kaavu) எனவும் அழைக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பட்சமாக 3000 காடுகள், கேரளாவில் 2000, கர்நாடகா மாநிலத்தில் 1424, தமிழ்நாட்டில் 1400 எண்ணிக்கையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டது. மேலும் ஆந்திரா, மேற்கு வங்காள மாநிலங்களில் முறையே 691,மற்றும் 670 எண்ணிக்கை உள்ளதாக பதிவு செய்யப்படுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த காடுகள் “சார்நாஸ்”, சத்திஸ்கார் மாநிலத்தில்” தேவ்குடிஸ்”, என்ற பெயர் கொண்டு வழிபாட்டு தலங்களாக உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில்” ஓரான்ஸ் “என்று கூறப்பட்டு வரும் இந்த கோயில் காடுகள் வெவ்வேறு பகுதியில், மாறுபட்ட அளவிலும், பல்வேறு வகை மரங்கள் கொண்டு அமைந்துள்ளன.நம் நாட்டில் 33,000ஹெக்டர் பரப்பளவு கோயில் காடுகள் (0.01%இந்திய மொத்த நிலபரப்பில் ) அமைந்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் உள்ளது. சதீஸ்கர் மாநிலத்தில் உள்ள உதந்தி-சித்தநாடி புலி பாதுகாப்பு காடுகள், அங்கு வசிக்கும் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதி,பல்வேறு தாவர, விலங்குகளின் ஓவியங்கள் வரைதல், பழங்குடி மக்கள் இயற்கை வழிபாடு, அங்குள்ள 190 ஹெக்டர் ஆக்கிரமிப்பு நிலங்களை, மாநில வனத்துறை சிறப்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு சீர் செய்தது.2006 ஆம் ஆண்டு சட்டத்தின் படி (வன உரிமை சட்டம் ) வளங்களை குறிப்பிட்ட அளவுக்கு பழங்குடியினர்
பயன்படுத்தி வரும் நிலையில் குறிப்பிட்ட பகுதி கோயில் காடுகள் என்று மாற்றப்பட்டு, அங்கு கால்நடை மேய்ச்சல், மரமழிப்பு ஆகியவை தடுக்கப் பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிஞ்ச வாடி கிராமம், கோயில் காடுகள் (Temple Forests), புலிகள் சிலை வழிபாட்டுக்காக, உள்ளூர் மக்கள் ஒதுக்கி வைத்து இருந்து வருகின்றனர். கொக்னா, தக்கர், வார்லி பழங்குடி மக்கள் பங்கு இதில் முக்கியமாக இருந்து வருகிறது. மேலும் ததோபா -அந்தேரி என்ற சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள வனத்தில் புலிகள் சிலைகள்,அங்கு புலிகளால் பாதிக்கப்பட்ட கோண்ட் மற்றும் மனா பழங்குடி மக்களால் நிறுவப்பட்டு வழிபடப்படுகின்றன. இங்குள்ள அந்த மக்கள் வசிக்கும் வனப் பகுதி ஒருங்கிணைந்து, விலங்குகளுடன் வாழக் கற்றுக்கொண்டு வந்துள்ளனர். புலிகள் போன்ற அரிய வன விலங்குகள் குறைந்து வரும் இன்றைய காலத்தில் பாரம்பரிய கலாசார,நடைமுறைகள் பின்பற்றி உயிரின வேற்றுமையினை பாதுகாக்க முயற்சி செய்வது நன்று. குறிப்பிட்ட புவி அமைப்பில் OECM என்ற, (வழக்கமான அரசு பாதுகாப்பு செயல்பாடுகள், தவிர்த்து)தீவிர உள்ளூர் இயற்கை பாதுகாப்பு மேலாண்மைக்கான முறைகள் கடைபிடிக்க வேண்டிய அவசியம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.ஆரேய் வனம், சஞ்சய் தேசிய பூங்காவிலும், கோயில் காடுகள் (Temple Forests) போலவே புலிகள் வழிபாடு பழங்குடி மக்கள் மேற்கொள்ளும் முறை இருக்கிறது. இங்கு 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 26 சிறுத்தைபுலிகள் காணப்படுகின்றன. இமாசல பிரதேச மாநிலத்திலும் இத்தகைய அருமையான கோயில் காடுகள் உள்ளன.
நம் தமிழ் நாடு மாநிலத்திலும் கிராம கலாசாரம், இந்து மத நம்பிக்கை அடிப்படையில் கோயில் காடுகள், அய்யனார் காளி, பிடாரி, மாரி, முனீஸ்வரன், கறுப்பன் ஆகிய கிராம கடவுளர்கள், கோயில் காடுகள் பகுதியில் உள்ளூர் மக்கள் வழிபட்டு, வணங்கி வருகின்றனர். சென்னை C. P. ராமசாமி சுற்றுசூழல் கல்வி மையம் நம் மாநிலத்தில் 448 கோயில் காடுகள் காணப்படுவது குறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆல மரம், அரச மரம், அத்தி மரம் போன்ற தாவரங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே போற்றி, பாதுகாக்கப் பட்டு வந்தன என்று ஹரப்பா கல்வெட்டு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்து, பௌத்த துறவிகளின் பாதுகாப்பு செயல்பாடுகள் பாராட்ட வேண்டிய தகவல் ஆகும்.
கோயில் காடுகள் மூன்று அடுக்குகளாய் உள்ளன. சிறு தாவரங்கள், படர் தாவரங்கள், மூன்றாவதாக உயர செடி, மரங்கள் என்று அமைந்துள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் அத்திவெட்டி, பிச்சினி காடு (பட்டுக்கோட்டை), வைரவர் பெரிச்சியம்மன், பெரியாண்டவர் கடவுளர்கள், ஏனாதி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் காடு அமைந்துள்ளன. சூரக் கோட்டை கிராமத்தில் அய்யனார் கோயில் காடு காணப்படுகிறது. பிச்சினிகாடு மழவராயர் என்ற சிற்றரசரால் அங்கு உருவாக்கப்பட்டு காட்டை காக்க வந்த பெரிச்சியப்பன் என்ற காவலர் இறந்த பின் அவரையே கடவுளராக மக்கள் வழிபாடு செய்தனர். 1999-2000 ஆண்டு பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, நாட்டு நல பணித் திட்ட மாணவர்கள் குழு, மேற்கூறப்பட்ட கோயில் காடுகள் (Temple Forests) பகுதியில் “கால்நடை மேய்ச்சல், மரம் வெட்டுதல் “ஆகியவற்றை தடுத்து நிறுத்த, தம் ஆசிரியர் பா. ராம் மனோகர், (இந்த கட்டுரை ஆசிரியர்) வழிகாட்டுதல் அடிப்படையில் அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உள்ளூர் மக்களின் கருத்துக்களை சேகரித்து, தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இந்திய அரசு நடத்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் (கோவா மாநிலத்தில்) “பட்டுக்கோட்டை கோயில் காடுகள், பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு தீர்வுகள் “பற்றிய குறு ஆய்வு கட்டுரை யினை சமர்ப்பித்தனர்.அதன் மூலம் பாராட்டுக்கள் பெற்றது மட்டுமில்லாமல்,தொடர்ந்து, உள்ளூர் இயற்கை பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் துவங்கி அங்குள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வந்தனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்ந்த உணவு, விவசாயம் பிரிவின் தலைவர் திரு.யென் பெர்ணாண்டேஸ் டீ லார்ரின்றா என்பவர், சூழலியல் கோட்பாடுகள் பூமியில் அறியப்படும் முன்பே, ஒவ்வொரு நாட்டின் உள்ளூர் மக்கள் சிறப்பாக இயற்கை பாதுகாப்பு மேலாண்மை செய்து வந்தனர் என்பது உண்மை!என தெரிவிக்கிறார். உலகம் காலநிலை மாற்றங்கள் மூலம் பல்வேறு பாதிப்புகளை அடைந்து வரும் இந்த அபாய கால கட்டத்தில், அருமையான அரிய உயிரின பல்வகை,வளம் காப்பாற்ற வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. எனவே நாட்டின் கலாசார, சமூக, இயற்கை வழிபாடு அடிப்படையில், உள்ளூர் மக்கள் கோயில் காடுகள் (Temple Forests) பாதுகாப்பில் ஈடுபட உரிய ஊக்கம், திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டும்.
2030 க்குள், உலகின் கார்பன் உமிழ்தல் குறைக்க, காடுகள் பெருக்கும் முயற்சி, பல நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், நம் நாட்டிலும் ஒன்றிய அரசு, மாநில அரசுகள், வனத் துறை,சுற்றுசூழல், துறைகள் மூலம் எடுக்கும் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்ந்த போதும் உள்ளூர் கோயில் காடுகள் (Temple Forests) பாதுகாப்பு மேற்கொள்ள விழிப்புணர்வு இன்றியமையாதது.
கட்டுரையாளர் :
– முனைவர். பா. ராம் மனோகர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.