எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் “குழந்தைகள் கொலு” சிறுகதை

சின்னஞ்சிறிய ஆசைகளைச் சிறையிடலாமா?

– மணி மீனாட்சிசுந்தரம்

(எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் ‘குழந்தைகள் கொலு’ சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)

குழந்தைகளை வளர்ப்பதைக் கடமையாகவும் உரிமையாகவும் தியாகமாகவும் பிறவிப்பயனாகவும் கருதுகின்ற சமூகம் நம்முடையது. சமூகத்தின் மிகைஉணர்ச்சி கொண்ட இந்தக் குணங்களே பல சமயங்களில் அல்லது எப்போதும் குழந்தை நலனுக்கு எதிரான செயல்களுக்கும் காரணமாகிவிடுகின்றன.

சமூகத்தின் இந்த எண்ணங்கள் தரும் பதற்ற உணர்வு பெற்றோர்களைத் குழந்தை வளரத் துணை செய்பவர்களாக அல்லாமல் குழந்தைகளை மிக விரைவில் பெரியவர்களாக ஆக்க முயலும் போட்டியாளர்களாக உருமாற்றி விடுகின்றன ; குழந்தைகள் பெற்றோர்களின் வழி வந்தவர்கள் என்ற உண்மையை மழுங்கச் செய்து, குழந்தைகள் பெற்றோர்களாலேயே உருவானவர்கள், உருவாக வேண்டியவர்கள் என்ற கருத்தை வலிமையாக்கவும் முயல்கின்றன.

குழந்தைகள் வளர வேண்டியவர்கள் என்பதை மறுத்து குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தைத் தம் செயலாகக் கொண்டுள்ள ஒரு சமூகம் குழந்தைகளுக்கு எப்போதும் ஆபத்தானது ; அச்சமூட்டுவது ; எதிரானது.

குழந்தைகளின் இயல்புக்கும் மனநிலைக்கும் பருவத்திற்கும் தொடர்பற்ற பழக்கங்களைத் திணிக்கும் பெரியவர்களின் அறியாமையை எள்ளி நகையாடுகிறது எழுத்தாளர் கு.ப ராசகோபாலனின் “குழந்தைகள் கொலு” என்னும் இச்சிறுகதை.

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

 

மீனாவின் கணவன் இறந்து நான்கு மாதங்களே ஆகின்றன.எட்டு வயதுள்ள பாலா என்னும் மகளும், நான்கே வயதான கோபு என்ற மகனும், மீனாவின் வயதான அம்மாவும் அவளுடன் இருக்கிறார்கள்.

துக்க வீடுகளில் ஓராண்டுக்கு எந்த விதமான பண்டிகைகளும் கொண்டாடப்படுவதில்லை. இழப்பு தரும் வலி அந்த வீட்டில் உள்ளவர்களை விழாக்களில் இருந்து ஒதுங்கி இருக்கச் செய்கிறது என்றாலும், இப்பழக்கம் ஒரு வழக்கமாகி, சமூகம் கடைப்பிடிக்கும் ஒரு சடங்காகவும் நிலைபெற்றிருக்கிறது.

துக்கத்தின் வலி பெரிதோ சிறிதோ,விருப்பமோ விருப்பமின்மையோ, சுற்றியுள்ளவர்கள் எண்ண நினைப்பார்களோ எனப் பயந்தும் இச்சடங்கு பின்பற்றப்படுகிறது.

ஆனால் குழந்தைகள் எப்பொழுதும் வழக்கங்களை விரும்பாதவர்கள் ; உலகின் புதிய உயிர்களான அவர்களின் எண்ணங்களும் புதியனவாகவே இருக்கும்.அவர்கள் துன்பமோ, இன்பமோ அந்தந்தத் தருணங்களில் வாழ்பவர்கள்.

கணவன் இறந்ததால் மீனாவின் வீட்டில் அந்த ஆண்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவில்லை. அதைத் தொடர்ந்து வரும் நவராத்திரி விழாவில், வழக்கமாக அவர்கள் வீட்டில் வைக்கப்படும் கொலுவுக்கும் எந்த ஏற்பாடுகளும் இல்லை.

எட்டு வயதான பாலா இதன் காரணத்தைப் புரிந்து கொள்கிறாள்.ஆனால் நான்கே வயதான கோபுவுக்கு ஒன்றும் புரிபடவில்லை.

” அம்மா நம்மாத்துலே பிள்ளையார் ஏன் வாங்கல்லேம்மா?” என்று கோபு பிள்ளையார் சதுர்த்தியன்று அம்மாவைக் கேட்டான்.

“என்ன சொல்லுவாள் தாய்?”

அந்த மாதிரி கோபு கேட்கும்போதெல்லாம் மௌனமாகக் கடந்துவிடுகிறாள் மீனா.ஒவ்வொரு பண்டிகையும் கோபுவின் ‘ஏன்?’ என்ற கேள்விக்குப் பதில் பெறாமலே கழிகிறது.

கோபு அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு ” அம்மா, இன்னிக்குக் கொலு வைக்கணும் ‘ என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

“கண்ணு நம்மாத்துல இந்த வருஷம் கொலு வைக்கப்படாதுடா, அப்பா!” என்றுதான் மீனாவால் சொல்ல முடிந்தது. அவள் தொண்டை அடைத்துக் கொண்டது. குழந்தைகளை விட்டுவிட்டுக் கொல்லைக் கட்டிற்குப் போய்விட்டாள்”.

கோபு , காவேரியில் குளித்துவிட்டு வாயில் ஏதோ பாட்டை முணுமுணுத்தபடி வந்துகொண்டிருந்த, ஆச்சாரம் குறையாத தன்னுடைய பாட்டியிடம்,
“பாட்டி , நம்மாத்துலே ஏன் கொலு வைக்கல்லை?” என்று கேட்டுக்கொண்டு ஓடினான்.

” கொலுவா? கொலு வக்கறாப் போலத்தானே இருக்கு? அதான் உங்கப்பாவை உருட்டிப்பிட்டு உட்கார்ந்திருக்காளே?” என்று பாட்டி சிடுசிடுப்புடன் சொன்னாள்”.

அதைக்கேட்ட பாலா ரோசத்துடன் ‘அம்பி இங்க வாடா’ என்று கோபுவை வெளியில் அழைத்துக்கொண்டு போகிறாள்.

அந்தச் சிறிய கிராமத்தின் அக்கிரகாரத்தில் இரண்டு வரிசைகளில் இருபத்தைந்து வீடுகள் உள்ளன.மற்ற வீடுகளில் பண்டிகைகள் நடக்க, தம் வீட்டில் செம்மண் கோலம் கூடப் போடாமல் இருப்பது சிறுவனான கோபுவுக்குப் பெருத்த புதிராக இருக்கிறது.

” ஏண்டி பாலா நம்மாத்துல ஏன் கொழுக்கட்டை பண்ணலே?”

” அப்பா செத்துப்போட்டாரோல்லியோ,
அதனால்தான்!”

ஒரு சின்னுஞ்சிறு மழலைக்கு இறப்பின் வலி தெரியுமா? அப்பாவின் மேல் அன்பிருந்தாலும் அவரது மறைவின் சோகத்தை அக்குழந்தை எவ்வளவு தூரத்திற்கு நினைத்திருக்க முடியும்? விழாக்கள் தரும் நினைவுகளையும் இன்பத்தையும் வேண்டாமென்று சொல்லும் எந்தக் காரணத்தையும் அதன் மனம் ஏற்றுக்கொள்ளுமா?

” கோபுவுக்கு அப்பாவின் மேல் கொஞ்சம் கோபம் கூட வந்தது.
அப்பா ஏன் செத்துப் போனார்?”

” அப்பாவுக்கு ஜொரம் வந்துதோல்லியோ…?”

” அந்த வியாக்யானம் ஒன்றும்
கோபவின் மனசிற்குத்
திருப்திகரமாகப் படவில்லை.
” எல்லோரும் கொலு வச்சிருக்கா ; பாட்டிதான் வெக்கக் கூடாதுங்கறா! பாட்டியைக் கண்டா எனக்குப் பிடிக்கல்லே.பாட்டி எப்போ செத்துப்போவா,பாலா?”

” ஐயையோ, அப்படிச் சொல்லப்படாது!”

குழந்தைகளின் விருப்பத்திற்காக மீனா தன் அம்மாவிடம் இரண்டு படி கொலு வைக்கப் போவதாகக் கூறுகிறாள்.

” ஏண்டி உனக்கென்ன பைத்தியம் பிடிச்சுடுத்தா? அதுகள் சொல்றதுன்னு கொலு வைக்கிறதா? ஆகுமோ? ஊருக்குத்தான் நன்னாயிருக்குமோ?”
என்று அம்மா கோபமாகத் திட்டுகிறாள்.

ஊருக்குத் தெரிய வேண்டாம்.குழந்தைகளுக்காகச் செய்கிறேன் என்று அவள் கூறினாலும் தாய் செய்யக் கூடாதென்கிறாள்.

” கொலு வச்சுக்கொடு; நீயும் போயி நாலு ஆத்திலே அழைச்சுட்டு வா.உன் அடங்காப் பிடாரித்தனத்துக்கு ஏத்தாப்போலத்தான்….என்று கிழவி ஆரம்பித்தாள்”.

” மீனா வெறுப்புடன் தாயை எரிப்பது போல் பார்த்துவிட்டு அப்புறம் போனாள்”

தாய்க்கும் மகளுக்கும் இப்படி வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் போது, கொல்லைப் புறத்தில் பாலா தன் தம்பியின் விருப்பத்தை நிறைவேற்றத் தொடங்குகிறாள்.

எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் (K. P.Rajagopalan) "குழந்தைகள் கொலு" சிறுகதை (Kozhanthaikalain Kolu Sirukathai - Short Story ) - https://bookday.in/w

” பாட்டிக்குத் தெரியவே படாது.சொல்லிப்பிடாதே!” என்று தம்பியை எச்சரித்துக் கொண்டே” பாலா கொதிக்கும் வெயிலில் களிமண்ணைப் பிசைந்து கொலு பொம்மைகளைச் செய்யத் தொடங்குகிறாள்.எலி,பாம்பு, பூனை, பாம்பு,தட்டு,சொப்பு, கிருஷ்ணன் என முடிந்தவரைப் பொம்மைகளைச் செய்கிறாள்.பின்பு தம்பியுடன் சேர்ந்து அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போகிறாள்.தூங்கும் பாட்டிக்கும் அடுக்களையில் வேலையில் இருக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் ஒரு மூலையில் ஸ்டூல் ஒன்றைப் போட்டுத் துண்டை விரித்துக் கொலுப்படி அமைக்கிறாள்.பிறகு மண் பொம்மைகளை அதன்மேல் வைத்து எதிரில் மாக்கல்லால் கோலம் போடுகிறாள்.மெதுவாக ” ஜயஜய‌ கோகுல பாலா?” என்று பாட்டுப் பாடுகிறாள்.

” அடி..விளக்கு வைக்க வேண்டாமா?”
என்று கேட்டான் கோபு.

” அதோ இரண்டு பக்கத்திலும் வச்சிருக்கேன் பாரு, ரெண்டு குத்துவிளக்கு!” என்று காண்பித்தாள் பாலா.

” ஈர்க்குச்சியின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு மண் உருண்டைகளைத் தட்டையாகத் தட்டிச் செருகி இரண்டு பக்கங்களிலும் வைத்திருந்தாள்.

” அடி பாலா, அடுத்தாத்து யோகுவையும் எதிராத்துக் காமுவையும் கூட்டிண்டு வரட்டுமா!” என்று ஆவலுடன் கேட்டான் கோபு.

பாலா விசனத்துடன் ‘கூடாது’ என்று தலையசைத்தாள்.

பின்பு இருவரும் சேர்ந்து கொலுவுக்கு ஆரத்தி எடுக்கிறார்கள்.கோபு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறான். தற்செயலாக அங்கு வந்த மீனா அந்தக் காட்சியைப் பார்த்து அப்படியே ஸ்தம்பித்துப்போய் நின்று விடுகிறாள்.

ஒரு கனம் அவள் தன்னிலை மறந்து ஓடிப்போய்க் குழந்தைகளை வாரி‌ அணைத்துக்கொண்டு சிரிக்கிறாள்.குழந்தைகள் திகைத்துப்போய் நிற்கின்றன.மறுகனம் செய்யக்கூடாததைச் செய்துவிட்டதைப் போலத் திகலடைந்து குழந்தைகளை விட்டு விலகி நிற்கிறாள்.

அப்போது மீனாவின் தாய் அங்கு வந்து விடுகிறாள்.” யாராவது பார்த்தா சிரிக்கப் போறா! எனக்கு மானம் போறது!” என்றபடி அறைக்குள்

நுழைகிறாள்.

“உள்ளே வராதே.வெளியிலே நில்லு.என் குழந்தைகள் கொலு வச்சிருக்கு நீ பார்க்கக் கூடாது – நீ ஊரார்!” எனக் கத்துகிறாள் மீனா.

தன்னுடைய மகள்,பேரப்பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் எதற்கெடுத்தாலும் ஊரார் ஊரார் என்று ஊரின் வழக்கங்களுக்கு வக்காலத்து வாங்கும் தாயை மீனா எதிர்க்கிறாள். நாம்தாம் கணவனை இழந்துவிட்டோம்,தன் பிள்ளைகளுக்கு இந்தச் சின்னச் சந்தோசமாவது கிடைத்துவிட்டுப் போகட்டுமே என்ற ஆதங்கம் அவள் குரலில் தொனிக்கிறது.

பொதுவாக இச்சமூகம் கடைப்பிடிக்கும் அர்த்தமற்ற வழக்கங்களைச் செய்ய மறுப்பவரை அச்சுறுத்த அது

பிரயோகிக்கும் கடைசி ஆயுதம் கடவுள்.

மீனாவின் அம்மாவும் அதையே செய்கிறாள்.

” மகிஷாசுரமர்த்தினி குத்தம் வரும்”
என்கிறாள் மீனாவின் அம்மா.

” மகிஷாசுரமர்த்தினி இங்கே வந்து கொலு இருக்கிறாளே! அதோ பார்! என்று மீனா பெண் பொம்மையாக உட்கார்த்தப்பட்டிருந்த மண் உருண்டையைக் காண்பித்தாள்.”

குழந்தைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விடுகிறாள் மீனா.அவள் தாயோ ஊரார் யாரும் இதைப்பார்த்துவிடக் கூடாதென கதவைச் சாத்துகிறாள்.

இந்தக் கதையில் வரும் கோபுவின் மனநிலையைப் புரிந்துகொண்டு

அவனது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிப்பவளும் ஒரு சிறு பெண்தான்.
அதற்குப் பின்பே மீனாவும் அவர்களுடன் இணைந்துகொள்கிறாள்.அவள் தாய் கடைசிவரை அவர்களைப் புரிந்துகொள்ளவில்லை. குழந்தைகள் ஒத்த மனநிலையுடையவர்கள், அவர்கள் எளிதாக ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள்.சமூகத்தை நன்கு புரிந்ததாகக் காட்டிக்கொள்ளும் பெரியவர்களோ குழந்தைகளைப் புரிந்துகொண்டு நடப்பதில் இடர்ப்படுகிறார்கள்.

கதையில் வரும் பாட்டி சொல்வது சரிதான்.குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே சமூகத்தின் வழக்கங்களைச் சுட்டிக்காட்டி வளர்த்தால்தானே நாளை அவர்கள் கட்டுப்பாட்டுடன் குடும்பத்திற்கும் சமூகத்திற்குமான மனிதர்களாக

உருமாறுவார்கள் என்றும் சிலர் எண்ணலாம்.

ஆனால்,இப்படி நினைப்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.போலியான மதிப்புகளின் வழியாக ஓர் உயர்வான சமூகத்தை ஒருபோதும் கட்டி எழுப்ப முடியாது. கதையில் வரும் பாலா சிறியவளானாலும் அதை உணர்ந்தவளாக இருக்கிறாள்.அவளைப் போன்றவர்களே உயர்வான சமுகத்தின் எதிர்காலப் பிரதிநிதிகள் என்பதைக் கு.ப.ரா-வின் இக்கதை உணர்த்துகிறது.

மணி மீனாட்சிசுந்தரம்.

உதவிய நூல் :

1.கு.ப.ரா.சிறுகதைகள் (முழுத்தொகுப்பு), பதிப்பாசிரியர் :

பெருமாள்முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் -629001.

கட்டுரையாளர்:

மணி மீனாட்சி சுந்தரம்
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.
அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. நாகேந்திரன் இ

    குழந்தைகள் கொழு மிகவும் சிறப்பு ஐயா. மூடநம்பிக்கைகளை குழந்தைகள் வழி சாதாரணமாக மாற்றி அமைப்பது பாராட்டுக்குரியது. எதார்த்த நிலை. அருமையான பார்வை. சிறந்த கதை. வாழ்த்துகள் ஐயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *