அறிவியல் ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிவும் 2024 நோபல் பரிசுகளும்
2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இயற்பியல் மற்றும் உயிர் வேதியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஐந்து அறிவியலாளர்களுக்கு நோபல் பரிசினைப் பெற்றுத் தந்துள்ளன.
அந்த அறிவியலாளர்கள்,
- இயற்பியலுடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய ஜெஃப்ரி எவரெஸ்ட் ஹிண்டன் (Geoffrey Everest Hinton) மற்றும் ஜான் ஹோப்ஃபீல்டு (John Hopfield)
- ஆல்ஃபா ஃபோல்ட் என்ற செயற்கை நுண்ணறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புரத மடிப்படைதல் குறித்து முன்கணிப்புகளைச் சாத்தியப்படுத்திய டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis), டேவிட் பேக்கர் (David baker) மற்றும் ஜான் எம். ஜம்பர் (John M. Jumper) ஆகியோராவார்.
ஜெஃப்ரி எவரெஸ்ட் ஹிண்டன் (Geoffrey Everest Hinton) மற்றும் என்பவர் பிரித்தானிய – கனடிய கணினி அறிவியலாளரும் அறியுணர்வு உளத்தியலாளரும் ஆவார். இவர் செயற்கை நரம்பிய வலைகளுக்கான ஆய்வுகளுக்காக நன்கறியப்படுபவர். “செயற்கை நுண்ணறிவின் அறிவுத்தந்தை” (“Godfather of AI”) என்றும் போற்றப்படுகிறார். இவருடன் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹோப்ஃபீல்டு (John Hopfield) என்பவருக்கும் இயற்பியல் கூறுகளிலிருந்து இன்றைய சக்தி வாய்ந்த இயந்திரக் கற்றலுக்கான அடிப்படை நடைமுறைகளை மேம்படுத்தியதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவரான டேவிட் பேக்கர் (David baker) புரத அமைப்பு கணிப்புக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் முன்னணி ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக நீண்ட காலமாக இருந்து வருகிறார். அவர் பல பதின்ம ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையில் உழைத்து வந்தார், படிப்படியாக முன்னேற்றங்களை அடைந்தார், புரத அமைப்பின் நன்கு வரையறுக்கப்பட்ட பிரச்சினையும் வடிவமும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளுக்கான பயனுள்ள சோதனைத் தளமாக இருந்தது என்பதை உணர்ந்தார். டெமிஸ் ஹசாபிஸ் (Demis Hassabis) மற்றும் ஜான் எம். ஜம்பர் (John M. Jumper) ஆகியோருடன் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட அனைத்து அறியப்பட்ட புரதங்களின் கட்டமைப்பைக் கணிக்கின்றனர்,
“இத்தருணம் நிச்சயமாக ‘அறிவியலில் செயற்கை நுண்ணறிவிற்கான தருணமாக அமைந்து விட்டது” என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லெவர்ஹூல்ம் எதிர்கால நுண்ணறிவு மையத்திற்கான மூத்த ஆராய்ச்சி அறிஞரான எலினோர் டிரேஜ். “மிகவும் திறமையான மற்றும் புகழ்பெற்ற கணினி அறிவியலாளர்கள் வேதியியல் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகளை வென்றதைப் பார்க்கும்போது, அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதற்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்,” என்றும் அறிவியலாளர்கள் கூறியிருந்தனர்.
மேலும், எலினோர் டிரேஜ் (Eleanor Drage) கூறுகையில், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களுக்கு இயற்பியல் மற்றும் வேதியியல் பரிசுகள் வழங்கப்படுவது “அந்தத் துறைகளுக்குள் மட்டுமல்லாமல், வெளியிலிருந்து பார்க்கும்போதும் ஒரு முக்கியமான சர்ச்சையாக உள்ளது” என்கிறார். இந்த விருதுகள் இரண்டு காரணங்களில் ஒன்றுக்காக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்:
அது,
- கல்விசார் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் எங்கும் நிறைந்த தன்மையால் ஏற்பட்ட துறை எல்லைகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்,
(அல்லது)
- “கணினி அறிவியலாளர்களை நாம் மிகவும் பிரமிப்பாகப் பார்ப்பதால் அவர்களை எங்கு வேண்டுமானாலும் பொருத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்ற மாற்றம்
இங்கிலாந்தைச் சேர்ந்த சுயாதீனமான ஒரு அறிவியல் ஆராய்ச்சி நிறுவன ஒருங்கிணைப்பாளரான மேட் ஹாட்கின்சன் கூறுகையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோபல் பரிசினைப் பெறுவது என்பது இனி வருங்காலங்களில் ஒரு இழக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட இருக்கலாம். ஆனால், இந்த முறை நோபல் பரிசிற்கான அறிவிப்புகள் உண்மையில், அறிவியல் ஆய்வுகளின் திசையை மாற்றக்கூடும். இருப்பினும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்னவெனில் இந்த மாற்றம் ஆய்வாளர்களை சரியான பாதையில் செல்லும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்துமா? என்பதேயாகும்.
ஒவ்வொரு முறையும் அறிவியல் துறையில் சில திருப்பங்கள் நிகழும் போது அதைச் சார்ந்த ஆய்வுகள் பெருமளவில் மேற்கொள்ளப்படும். அதைப்போலவே அறிவியலாளர்கள் தங்கள் அறிவியல் ஆய்வுகளை மடைமாற்றி செயற்கை நுண்ணறிவு சார்ந்த நுட்பங்களின் பின்னே சென்று நேரத்தை செலவழிக்கும் நிலை ஏற்படலாம். ஒரு சிலரின் வெற்றி பலரின் ஆய்வுப் பாதையை மாற்றி விடலாம். இருப்பினும் தேவையின் அடிப்படையில் அறிவியல் துறைகளில் செயற்கை அறிவின் துணையைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மனித இனத்திற்கு பலனளிக்கக் கூடும். காத்திருந்து பார்க்கலாம். காலம் சொல்லப் போகும் விடைகளின் வழியே.
கட்டுரையாளர்:
நா. ரெ. மகாலிங்கம்
விரிவுரையாளர், விக்கிப்பீடியர்,
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
பாலையம்பட்டி,
விருதுநகர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.