அருள்மொழி எழுதிய "கோழைத்தனம்" சிறுகதை புத்தகம் அறிமுகம் | Arulmozhi's Kozhaithanam Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்

எழுத்தாளர் அருள்மொழி அவர்களின் மிகச்சிறந்த சிறுகதை ‘கோழைத்தனம்.’ இக்கதையில் வரும் பெண்ணின் பெயர் மாலதி. மாலதிதான் அவள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகியிருந்தாள். மாலதியின் தந்தை ஒரு லாரி ஓட்டுநர். மாலதியின் தந்தை ‘நான் படிக்கவில்லை என்றாலும் என் பெண் படிக்க வேண்டும்’ என்று எண்ணி மாலதியை டாக்டர் ஆக்கினார். மாலதிக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடினார்கள். மாப்பிள்ளையின் பெயர் சண்முகசுந்தரம். அவர் வீட்டிலும் பெண் தேடிக்கொண்டிருந்தார்கள். இருவர் வீட்டிலும் பேசினார்கள். ஆனால், மாலதிக்கு இதில் விருப்பம் இல்லை. மாலதி தன்னுடைய சித்தப்பாவின் பேச்சைக் கேட்டுச் சம்மதித்தாள். இருவர் வீட்டிலும் பேசும்போது, ‘நாங்கள் பெரிய வீடு, வரதட்சணை குறைவாக இருக்கக் கூடாது, பெண் திருமணம் ஆன பிறகு வேலைக்குச் செல்லக் கூடாது’ என்றார்கள், மாப்பிள்ளை வீட்டார்.

அதைக் கேட்டு அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் மாலதி, ‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து டாக்டர் ஆனேன் என்று எனக்குத் தான் தெரியும். நீங்கள் வேலைக்குப் போகாதே என்று எளிதாகச் சொல்கிறீர்களே’ என்று மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினாள். சண்முகசுந்தரத்தின் அம்மா ‘பெரியவர்கள் உங்கள் நல்லதுக்குத்தானே செய்வாங்க’ என்று மட்டும் சொல்லி முடித்துவிட்டார்.

நல்ல படித்த மாப்பிள்ளை, பெரிய இடம் என்பதால் மாலதி வீட்டாரும் சரி சொல்ல திருமணம் முடிந்தது. இரண்டு வருடங்கள் ஓடின. மாலதி முதலில் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டாள். பிறகு மற்றவர்களுக்குப் பரிமாறிவிட்டு சாப்பிட்டாள்; சமைத்தாள். போகப்போக அவளுக்கு வீட்டு வேலை பார்க்கவே நேரம் சரியாக இருந்தது.

ஒருநாள் மாலதிக்கு ஒரு தபால் வந்தது. அதில் மாலதி இரண்டு வருடத்திற்கு முன்பு விண்ணப்பித்த ஹாஸ்பிடலில் வேலை கிடைத்தது. அதைப் பற்றி சண்முகத்திடம் சொன்னாள். அவர் என் அம்மாவிடம் பேசு என்றார். அது தொலைவாக இருப்பதால் அம்மா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சரி என்று சொல்லிவிட்டு மாலதி மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். மீண்டும் தபால் வந்தது. அதில் வேலூர் ஹாஸ்பிடல் இருந்தது. அது மிகவும் தொலைதூரம். நிச்சயம் வீட்டில் விடமாட்டார்கள் என்று மனதிலேயே நினைத்துக்கொண்டாள். சில நாட்கள் கழித்து அவள் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி வேலூர் ஹாஸ்பிடல் டீனிடம் சென்று கேட்டாள். ஆனால் அவர் நீங்கள் முன்னரே வந்திருக்க வேண்டும். நீங்கள் பதில் அனுப்பாமல் இருந்ததால் அதை வேறொருவருக்குக் கொடுத்து விட்டோம் என்று சொல்லிவிட்டார். மாலதி நிராசையுடன் வீடு திரும்பினாள்.

ஆறு மாத காலம் ஓடியது. மாலதிக்குக் குழந்தை பிறந்தது. அப்படியே மூன்று வருடங்கள் ஓடின. மாலதி மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். சண்முகசுந்தரத்தின் அம்மா, ‘குழந்தையைப் பள்ளியில் சேர்க்க வேண்டும்; கணவர், குழந்தையுடன் இருப்பது தானே ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி’ என்றார். ஆனால் மாலதிக்குக் குழந்தையுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி தான் மற்றும் அது தனது பொறுப்புதான் என்றாலும் அதையும் மற்றவர்கள் முடிவு செய்வதுதான் சற்று மனக்குறையாக இருந்தது. சரி என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பள்ளியில் சேர்ந்ததும் முதலில் எல்லாரும் வந்து போய்க் கொண்டிருந்தனர். போகப் போக மாலதி மட்டுமே குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது. கணவனும் உதவி செய்யவில்லை. கணவனின் அம்மாவும் உதவி செய்யவில்லை.

குழந்தையைப் பராமரிப்பதில் சில காலம் ஓடிய பிறகுபாலைவனத்தில் வெகுநாள் கழித்து கிடைத்த நீர் போல அவள் தோழி திடீரென பார்க்க வந்தாள். தோழியின் பெயர் சிவகாமி. ‘கலெக்டர் ஆபீஸில் நிறைய பேர் பணம் கொடுத்து வேலைக்குப் போறாங்க, நீயும் பணம் கொடுத்துப் பார்’ என்றாள் சிவகாமி. மாலதி கணவனிடம் சொன்னாள். ‘லஞ்சமாக, அதும் மூன்று லட்சம் வேண்டாம். எதற்கு அவ்வளவு பணம் கொடுத்து வேலையில் சேரவேண்டும்’ என்று மறுத்துவிட்டார் அவர். மாலதி சிந்தித்து தனது லாக்கரில் இருந்த நகைகளை அடமானம் வைத்து பணத்தை கொடுத்தாள். வெகு நாட்களாக எந்த ஒரு பதிலும் வரவில்லை.

மாலதிக்கு வேலையும் கிடைக்கவில்லை. பணமும் திரும்ப கிடைக்கவில்லை. பணத்தை வாங்கியவர் இப்போது எங்கே உள்ளார் என்று தெரியவில்லை. மாலதிக்கு உடனே பயமாக இருந்தது என்ன செய்வது என்று தெரியவில்லை. ‘பெற்றேர்களிடம் கேள்’ என்று சிவகாமி சென்னாள். ஆனால் மாலதி, ‘என் கல்யாணத்துக்கு செய்த சீர்வரிசையே கஷ்டப்பட்டு உழைத்துச் செய்தார்கள்; நான் மீண்டும் கேட்டால் அவர்களின் இரத்தத்தை உறிஞ்வதைப் போல இருக்குமே’ என்று மறுத்துவிட்டாள். அப்படியே சில நாட்கள் ஓடின.

மாலதி அப்பாவுக்கு தீடிரென பக்கவாதம், அதுவும் வண்டி ஓட்டும்போது வந்துவிட்டது. மாலதியின் அம்மாவால் தனியாக அவரைப் பார்த்து கொள்ளமுடியவில்லை. மாலதியின் கணவன் வீட்டில் அவளைப் போக அனுமதிக்கவில்லை. மாலதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

எல்லோரும் என்ன காரணம் என்று தெரியாமல் கேட்டார்கள். சம்மந்தி வீட்டார், ‘எதுவாக இருந்தாலும் எங்களிடம் கேட்டு இருக்கலாம். ஏன் இந்த கோழைத்தனம்?’ என்று சொன்னார்கள். மாலதியின் சித்தப்பாவுக்கு ‌இதைக் கேட்டவுடன் கோபம் வந்து வெளியே சென்று விட்டார். எழவு வீட்டுக்கு வந்த எல்லாரும் டீ, காபி குடித்து கதை பேசிக் கொண்டு இருந்தார்கள். கடைசி வரை யாரும் லாக்கரைத் திறந்து பார்க்கவில்லை. அதனால் கோழைத்தனம் என்ற குற்றச்சாட்டுடனே இறந்து போனாள்.

கணவன் சண்முகசுந்தரம் மாலதிக்கு உதவவில்லை. மாலதி தன் வீட்டைவிட்டு வந்து அவனை நம்பியே இருந்தாள். அவன் மாலதி ஏதாவது உதவி கேட்கும்போதெல்லாம் சரி சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்றான். அவனின் அம்மா கேட்கும் போது ஏதும் பேசவில்லை, அமைதியாக இருந்தான். அவனின் அம்மா மாலதியை வீட்டு வேலைகளைப் பார்க்க வைத்தாள். எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியாக மாலதி எனக்கு நான் இருக்கிறேன் என்று வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அதிலும் ஏமாற்றம் அடைந்தாள். மற்றொரு புறம் அப்பாவுக்கு பக்கவாதம். அப்போதும் மாலதியை அப்பாவைப் பார்ப்பதற்கு அவளின் கணவன் வீட்டில் இருந்து மாலதியை அனுப்பவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் தற்கொலை செய்வதற்கு காரணம் மாலதியின் கணவர் மற்றும் அவனின் அம்மாதான். மாலதிக்கு எந்தவொரு உதவியும் செய்யாமல் அவளின் விருப்பு வெறுப்புகளைப் பற்றி ஏதும் கேட்காமல் மாலதி மனதைப் பாதிக்கும்படி செய்து தற்கொலை செய்துகொள்ள வைத்தார்கள். எனவே, மாலதி தற்கொலை செய்தது கோழைத்தனத்தால் அல்ல, அவளது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் தவறால்தான் என்பது என் கருத்து.

நூலின் விவரங்கள்:

நூல் : கோழைத்தனம்
ஆசிரியர் : அருள்மொழி
வெளியீடு :
விலை: ரூ.25
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 செல்வமாதவன்
கணிதவியல் முதலாமாண்டு
கலசலிங்கம் பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *