“கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்
கோழைத்தனம் கதையில் மாலதியின் தந்தை லாரி ஓட்டுனராக இருந்தார். பின்னர் சொந்தமாக லாரி வாங்கி முதலாளியாக உயர்த்திருக்கிறார். மாலதிதான் அவர்கள் பரம்பரையிலேயே முதன்முதலாக டாக்டராகி இருந்தாள். டாக்டர் மாலதிக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது அவள் தந்தைக்கு தன் மகளை டாக்டர் ஆக்கி இருப்பதில் அளவுகடந்த பெருமை.
மாப்பிள்ளை சண்முகசுந்தரம். அவரும் ஒரு டாக்டர்தான்; குழந்தைகள்நல மருத்துவர். இவர்கள் இருவருக்கும் ஜாதகம் கூட பார்க்கவில்லை. மாப்பிள்ளை மிகவும் வசதியான குடும்பம். மாலதியின் குடும்பமும் ஓரளவு வசதியான குடும்பம்தான். சித்தப்பாவின் அறிவுறுத்தலால் மாலதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது மாலதி வேலைக்குச் செல்வதைப் பற்றி மாப்பிள்ளை வீட்டினர் எதுவும் சொல்லவில்லை. திருமணத்துக்குப் பிறகு மாலதி வேலைக்குச் செல்வதைப் பற்றி கேட்டாலே மாலதியின் மாமியார் பார்க்கலாம், பார்க்கலாம் என்று சொல்லிவிடுவார்.
அதன் பிறகு மாலதி தன் புத்தகங்களை எடுத்துவந்து தானாகவே படிப்பில் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள். படிக்கப் படிக்க அவளுக்குப் புத்துணர்வைக் கொடுத்தாலும், வீட்டுச்சூழல் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவள் படிக்க ஆரம்பித்ததும் வீட்டில் அனைவருக்கும் காஃபி கொண்டு போய் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளும் மாலதியின் தினசரி வேலைகளாக மாற்றப்பட்டன. சமைப்பதும், பின்னர் பாத்திரங்களைக் கழுவுவதும் என்று மாலதிக்குப் படிப்பதற்கே நேரம் கிடைக்கவில்லை.
மாலதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அவன் பெயர் ரிஷ்வந்த். குழந்தையைப் பார்த்துக்கொள்வதே மாலதியின் முழுநேர வேலையாகிப்போனது. அவனுக்கு மூன்று வயது ஆகிவிட்டது. மாலதி ஒருநாள் வேலைக்குச் செல்வதைப் பற்றி கணவனிடம் கேட்டாள். அவர் ‘குழந்தையை யார் பார்த்துக் கொள்வது? நீ வீட்டிலேயே இருந்து ரிஷிக்குட்டியைப் பார்த்துக்கொள்’ என்று கூறிவிட்டார்.
இப்படியே அவள் வாழ்க்கை போனது. குழந்தையைப் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்தனர். ஆனால், ஆண்டுத் தொடக்கத்தில் சேர்ப்பதைவிட விஜயதசமி அன்று குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதுதான் நல்லது என்று முடிவெடுத்தனர். எனவே, அதுவும் தள்ளிப்போனது. இரண்டாவது முறையும் மாலதியால் வேலையில் சேர முடியாமல் போனது.
இறுதியாக, விஜயதசமி அன்று குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தனர். ஏற்கனவே பணி கிடைத்தும் மாலதி சேராததால் அவளது பணி வேறொருவரால் நிரப்பப்பட்டிருந்தது. அடுத்த சீனியாரிட்டியில் வேலை வழங்குமாறு மருத்துவக் கவுன்சிலுக்குக் கடிதம் அனுப்பினாள். வேலையும் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. ஆனால், அது வேலூர் மாவட்டம். வேலூருக்குக் கண்டிப்பாக வீட்டில் விடமாட்டார்கள் என்று சோர்ந்து போனாள்.
சில மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த விருந்தினர் மூலமாகத் தன் வகுப்புத் தோழி அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்திருக்கும் தகவல் கிடைத்தது. மாலதிக்கு நம்பிக்கை பிறந்தது. அந்தத் தோழியின் பெயர் சிவகாமி. அவளிடம் பேசி அவளுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி மாலதியின் பணியிடத்தை மாற்றித் தருமாறு கேட்டாள். சிவகாமியும் முயற்சி செய்தாள். அதற்கு ஒரு இலட்சம் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. மாலதி தன்னிடமிருந்த நகைகளை அடகு வைத்து கொடுத்தாள்.
சில நாட்கள் கழித்து சிவகாமியைத் தொடபுகொண்டபோது பணம் வாங்கிய அதிகாரி வெளியூருக்கு மாற்றலாகிப் போய்விட்டது தெரியவந்தது. இந்தச் சமயத்தில் மாலதியின் அப்பாவுக்கு வாதம் வந்து, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. வீட்டில் நகையைப் பற்றி கேட்டுவிடுவார்கள் என்று பயந்தபடியே இருந்தாள். நகைக்கு வட்டி கட்டாததால் ஏலத்துக்கு வருகிறது என்று கூறினர்.
இவ்வாறு கையறுநிலைக்குத் தள்ளப்பட்ட மாலதி ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாள். அதன் பிறகும் நாட்கள் பல ஓடின. இன்னும் நகை இருந்த லாக்கரை யாரும் திறந்து பார்க்கவில்லை. எனவே, மாலதியின் குற்றங்களில் ஒன்று இன்னும் வெளிப்படாமலேயே இருந்தது.
மாலதியின் தற்கொலைக்கு அவளது கோழைத்தனமே காரணம் என்று சொல்லப்பட்டது. கோழைத்தனம் கெடுக்கும். துணிச்சலே காப்பாற்றும் என்பதே இக்கதையின் மையப்பொருள். வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்லும்போதே மாலதி அதை எதிர்த்துப் பேசி இருக்க வேண்டும். அவள் வேலைக்குச் சென்றிருந்தால் அவளது வாழ்க்கை சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் இருந்திருக்கும். அவளும் இந்தக் ‘கோழைத்தனமான’ முடிவை எடுக்கும் நிலையிலிருந்து வெளிவந்திருப்பாள்.
நூலின் விவரங்கள்:
நூல் : “கோழைத்தனம்” சிறுகதை
ஆசிரியர் : அருள்மொழி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.25
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :
✍🏻 ஜ.ஜெயலட்சுமி
வேதியியல் முதலாமாண்டு
கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
கிருஷ்ணன்கோவில்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
