தொடர்- 8: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்திய குவாண்டம் கணினியியலின் தந்தை அருண் குமார் பதி (Arun K. Pati)
உலகப் பிரசித்தி பெற்ற இயற்பியலாளர் மிசியோ காக்கு சமீபத்தில் QUANTUM SUPREMACY என்கிற மிகப் பிரபலமான ஒரு நூலை எழுதி இருக்கிறார்.. இந்த புத்தகத்தை வாசித்து கொண்டிருந்த பொழுது எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது.. இந்தியாவில் இயற்பியலாளர் அருண் குமார் பதி (Indian Physicist Arun K. Pati) என்கிற மா மனிதரை அந்த புத்தகத்தில் மிசியோ காக்கு அறிமுகம் செய்திருந்தார்.. குவாண்டம் தகவல் கணக்கீடு மற்றும் குவாண்டம் இயக்கவியலில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்த இந்திய இயற்பியலாளராக நாம் அருண் குமார் பதியை அந்த நூலின் மூலம் அறிகிறோம்
அருண் குமார் தற்போது அலகாபாத்தில் உள்ள ஹரீஷ் சந்திரா ஆய்வு நிறுவனத்தில் குவாண்டம் தகவலியல் துறையில் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார்.. இயற்பியல் துறையை கவிதைகளாகவும் தன் வாழ்க்கையில் ஓவியம் தீட்டுவதை ஒரு முக்கிய வெளிப்பாடாகவும் கருதுகின்ற ஒரு விஞ்ஞானியாக நாம் அருண்குமாரை அறிகிறோம்.. கவிதை படைக்கும் படைப்பாளியாக.. ஓவியம் தீட்டும் ஒப்பற்ற கலைஞராக கூடவே க்வாண்டம் கணினி இயலின் கோட்பாட்டாளர்ஆக அருண் குமார்.. பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்
உலகில் முதன்முதலில் கணினிகள் உருவாக்கப்பட்ட பொழுது இன்றைக்கு இருக்கும் அளவிற்கு அந்த துறை நம் அனைவரையும் ஆக்கிரமிக்கப் போகிறது என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது 1945 இல் அமெரிக்காவினுடைய ENIAC எனும் கணினி 27 டன் எடை கொண்டதாக இருந்தது.. இது நான்கு யானைகளின் எடைக்கு சமமானதாகும் மொத்தமாக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு முழு அப்பார்ட்மென்ட்டை அது அடைத்துக் கொண்டிருந்தது அதில் ஆயிரக்கணக்கான மின் வயர்கள் சுற்றப்பட்டு இருந்தன ஆனா 50 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு நம்முடைய கைபேசி ஒரு கணினியாக செயல்படுவது என்றால் எத்தகைய முன்னேற்றத்தை நாம் அடைந்திருக்கிறோம் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை ..
இதற்கு காரணம் மூர்ஸ் விதி என்கிற புதுமையான அம்சம் ஆகும். மூர்ஸ் விதி என்பது என்ன.. ஒரு ஒருங்கிணைந்த மின் சுற்றில் ட்ரான்சிஸ்டர் களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை இரட்டிப்பாகும் என்பது மூரின் விதியாகும். ஒருங்கிணைந்த மின்சுற்று என்பது எலெக்ட்ராநிக் சர்க்யூட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது ஒரு சிறிய தட்டையான குறைக்கடத்தி பொருளின் மீது அது உருவாக்கப்படுகிறது.. ஒரு மின் சாதனத்தில் உள்ள ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கையை வைத்து அதன் பயன்பாடு அமைகிறது.. அது எவளவு தரவுகளை தக்க வைத்துக் கொண்டு தன்னுடைய நினைவை அதிகப்படுத்த முடியும் என்பது ட்ரான்சிஸ்டர் களின் எண்ணிக்கையை பொறுத்தது.. ஒரு கணினியில் அதிக கூறுகளை செய்வது எனும் தலைப்பில் ஒரு சுருக்கமான கட்டுரையை 1965இல் மூர் எனும் அறிஞர் வெளியிட்டார்.. 1975 ஒரு கால் சதுர அங்குல குறை கடத்தியில் அறுபத்தைந்தாயிரம் கூறுகளை உள்ளடக்க முடியும் என்று அவர் ஊகித்திருந்தார்..
இன்டெல் நிறுவனத்தின் இணை இயக்குனர் கோர்டன் மூர் கொண்டுவந்த இந்த விதி விரைவில் மூர் சட்டம் என்று அறிவிக்கப்பட்டது ஆரம்பத்தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பான டிரான்சிஸ்டர் களின் எண்ணிக்கை 1975 முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பானது.. அதன்படியே இன்று வரை மூரின் விதி செயல்பட்டு வந்துள்ளது..ஆனால் எதிர்காலத்தில் இதையும் கடந்து பல ஆச்சரியங்கள் நிகழப் போகின்றன என்பதற்கு தான் கணினி இயல் க்வாண்டம் மயம் ஆகிற அந்த கண்டுபிடிப்பின் நூற்றாண்டு முனையில் நாம் இன்று நின்றுகொண்டிருக்கிறோம்..
இப்போது நாம் பணத்தை நம்முடைய பணப் பையில் எடுத்துச் செல்வதை விட அனைத்தையும் நம் கைபேசியில் ஆன் லைனில் முடித்துவிடுகிறோம்.. நீங்கள் க்வாண்டம் கணினி என்பதை முழுமையாக நம்புகிறவர் ஆக இருந்தால் எதிர்காலத்தில் கைபேசியும் இல்லாமல் வெறும் காற்றில் தோன்றுகின்ற எலெக்ட்ரான்களை வைத்துக்கொண்டு நாம் தகவல் பரிமாற்றத்தை எடுத்துச்செல்ல இருக்கிறோம்.. இன்று கற்பனையாக உள்ள டெலிபதி என்பது அன்றைக்கு நிஜமாக இருக்கலாம்.. அதை நோக்கித்தான் குவாண்டம் கணினி இயல் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த துறையில் இந்தியாவிலிருந்து மாபெரும் பங்களிப்பை செலுத்தி நம் நாட்டின் க்வாண்டம் கணினி இயலின் தந்தை என்று போற்றப்படும் அருண் குமார் பதி (Arun K. Pati) என்ன கண்டுபிடித்தார் என்பதை இப்போது அறிந்து கொள்வோம்… நாம் எத்தகைய விஷயத்தைத் தட்டச்சு செய்தாலும் நம்முடைய கணினியைப் பொறுத்தவரையில் அனைத்தையுமே அது 0 மற்றும் 1 ஆகிய எண்களாகவே புரிந்து கொள்கிறது.. இது ஏற்கனவே நீங்கள் அறிந்ததுதான்.. ஒரு இஞ்ச் அளவே உள்ள கணினி சிப் அதனுள்ளே எத்தனை மின்பொறி அடைத்து வைக்க முடியும் என்பதற்கான மூர்ஸ் விதி முடிவுக்கு வர இருக்கிறது.. அடுத்த படிநிலையை மூர்ஸ் விதி அடையும் பொழுது.. ஏறத்தாழ ஒரு மூலக்கூறில் அணுக்கள் எப்படி அமைக்கப்பட்டிருக்கின்றனவோ அதுபோல அந்த இடம் மாறிவிடும்.. எனவே சிப்புகளை பயன்படுத்தாமல்.. நாம் அணுக்களையே பயன்படுத்த போகிறோம் அதுதான் குவாண்டம் கணினி இயல் ஆகும்
குவாண்டம் கணினியியல் உள்ள சிக்கல் என்னவென்றால் அணுக்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் டிரான்சிஸ்டர்களாக மாறி நமக்கு தகவல்கள் பரிமாற்றத்திற்கு உதவ வேண்டும்.. அப்படி மாறும் பொழுது டிரான்சிஸ்டர்களை போல அவை திடமானவையாக இருக்காது.. மாறாக அணுக்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் எப்போது அலைகளாக செயல்படும் எப்போது துகள்களாக இருக்கும் என்று அறிய முடியாதபடியான குவாண்டம் நிச்சயமற்ற கோட்பாடு வேலை செய்யும்.. அப்போது புதிய வகை விதிகளின்படி இயங்கும் கணினிகளை நாம் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது.. அப்படிப்பட்ட புதிய விதிகளில் ஒன்றைத்தான் மரியாதைக்குரிய அருண் குமார் பதி (Arun K. Pati) கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்து க்வாண்டம் கணினியியலில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார்
அருண் குமார் பதியின் விதி என்ன? கணினியியலில் தகவல் பரிமாற்றத்தின் உள் அளவீடு பைட்ஸ் என்று அழைக்கப்படும்.. குவாண்டம் கணினி இயலில் அந்த உள்ள வீடு கியூபிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. குவாண்டம் உலகம் கண்ணுக்கு தெரியாத உலகமாகும்.. நம்முடைய கண்ணுக்கு தெரிந்த உலகத்தில் இங்கே அங்கே இது அது என்று இடத்தையும் பொருளையும் இரண்டையும் ஒருசேர குறிப்பிட்டு விடலாம் ஆனால் க்வாண்டம் உலகில் ஒரு அணுவினுடைய இடம் உங்களுக்கு தெரிந்தால் அதன் இருப்பு என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாது அதன் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டால் இடமெங்கே என்பது கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருக்கும்.. இந்த நிலையில் தான் இரண்டு கியூபிட் இடையே தகவல் பரிமாற்றப்படுகிறது.. இந்த இரண்டு கியூப்டுகளும் அருகருகே இருக்கலாம் அல்லது பிரபஞ்சத்தின் இரண்டு மூலைகளிலிருந்தும் செயல்படலாம்.. இவற்றிடையே தகவல் ஒன்று பரிமாறப்பட கால அவகாசம் எதுவுமே தேவைப்படாது.. அடிப்படை கணினி பில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரச்சினைக்கான தீர்வை ஒரு குவாண்டம் கணினி ஒரே வினாடியில் நமக்கு கொடுத்துவிடும்..
அருண் குமார் பதியின் விதி அப்படி பரிமாறப்படும் தகவலை பற்றியது ஆகும்.. இன்று பரிமாறப்படும் தகவல்களை நம்முடைய கணினிக்கு அவை வரும்பொழுது நாம் நினைத்தால் அவற்றை டெலிட் செய்ய முடியும்.. ஆனால் குவாண்டம் கணினியில் அதுபோல டெலிட் செய்ய இயலாது.. குவாண்டம் முறையில் ஒரு முறை அனுப்பப்பட்ட தகவலை.. குவாண்டம் நிலையில் உள்ள உலகம் நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ளும் … இதுதான் அருண் குமார் பதியின் NO DELETING THEOREM என்று அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் குவாண்டம் கணினியை உருவாக்குவதற்கான பிரம்மாண்ட சோதனையில் இரவும் பகலும் ஈடுபட்டிருக்கும் குழுவின் தலைவராக நாம் அருண்குமார் பதவியை அறிகின்றோம்
அருண் குமார் பதி (Arun K. Pati) ஒரிசாவில் பிறந்தவர்..1981 ஆம் ஆண்டு கஞ்சம் என்னும் ஊரில் ஹரிஹரா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து அஸ்கா அறிவியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் ஆக இயற்பியல் துறையை எடுத்துப் படித்தவர்..1987 ஆம் ஆண்டு ஒரிசாவிலுள்ள பெர்காம்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை வென்றார்.. 1988 ஆம் ஆண்டு அவர் மும்பையில் உள்ள BARC கல்வியகத்தில் அவர் முனைவர் பட்டம் பெற்றார் அதன் பிறகு 1989 முதல் அவர் குவாண்டம் கோட்பாடு குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் குவாண்ட்டம் தகவல் பரிமாற்ற துறைகளில் பணியாற்றி வருகிறார்.. ஒரே சமயத்தில் இங்கிலாந்தின் வேல்ஸ் பல்கலைக் கழகத்திற்கும் சீனாவின் ஹாங்கோவிலுள்ள ஜேஜியாங் பல்கலைக்கழகத்திலும் அவர் வருகை தரும் பேராசிரியராக இருக்கிறார்.
சாமுவேல் பிரவுன்ஸ்கின் எனும் அறிஞரோடு இணைந்து குவாண்டம் கணினி இயலின் குவாண்டம் டெலிபோர்டேஷன் கோட்பாட்டில் பல முக்கிய பங்களிப்புகளை செய்தார். இதர குவாண்டம் விஞ்ஞானிகளாக உள்ள கரெக்ட் அபௌட் மற்றும் பால் டேவிஸ் இவர்களோடு இணைந்து அருண் குமார் பத்தி எழுதிய சமீபத்திய புத்தகமான THE QUANTUM ASPECTS OF LIFE நூலுக்கு நோபல் அறிஞர் ரோஜர் பென்ரோஸ் முன்னுரை எழுதி மகுடம் சூட்டி இருக்கிறார் என்பது அருண் குமார் பதியைப் பற்றிய சமீபத்திய செய்தி ஆகும். அறிவியல் தொழில்நுட்பம் என்றாலே அமெரிக்காதான் என்று ஒரு கூட்டம் நெருப்புக்கோழி மனநிலையோடு பிதற்றிக் கொண்டிருக்கும் பொழுது குவாண்டம் கணினிகளை உருவாக்குவதில் உலக அளவில் நடக்கும் தொழில்நுட்ப போட்டியில் அடிப்படை கோட்பாடுகளை அமைப்பதில் இந்தியாவிலிருந்தும் வல்லுனராக ஒருவர் பணியாற்ற முடியும் என்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: கோவிட் தடுப்பூசி வழங்கிய இந்திய மருத்துவ விஞ்ஞானி பிரக்யா யாதவ்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அரிய சுவாரசியமான தகவல்கள் அடங்கிய கட்டுரை. விஞ்ஞானி அருண்குமாரை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி
ஆச்சரியம் அளிக்கும் செய்தி. இப்படி ஒரு சமகால அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானி ஆகிய அருண்குமார் ஆராய்ச்சி செய்வது அறிந்து மனம் மகிழ்கிறேன்.
குவாண்டம் தியரியின் சித்து விளையாட்டுகளை இனி வரும் காலங்களில் பார்க்கப் போகிறோம். திரு.அருண்குமார் பதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.