தேசமே விவசாயி தான்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாநிலங்கள் கரங்கள் தூக்கி
நேயமுடன் வணங்கப்பட வேண்டிய விவசாயி
நம்முன்னே கை குவித்துப் பரிதவித்து நிற்கின்றார்
கண்களில் கவியும் ஏக்கம்
வான் நோக்கும் வெறித்த விரக்திப் பார்வை
விதி வலியை வேதனை வரிகளாய்
வலிந்து சுமக்கும்
சுருங்கிய நெற்றிப் பரப்பு
இந்த நிலை வர என்ன காரணம் ?
சிந்திப்போமா சில நொடிகள் . . . .
காடு திருத்தினார்
கழனி படைத்தார்
உள்ளங்கால்களும்,உழைக்கும் கைகளும்
ஒன்று சேர்த்து
உச்சி வெயில் வேர்வையில்
உடல் நனைந்திட உழவு செய்தார்
களை பறித்தார்
நீர் வார்த்தார்
நேரிய உரம் சேர்த்தார்
வரப்புக்கு வாகாக வேலி சமைத்தார்
பல நாட்கள் பசி மறந்து
பக்குவமாய்ப் பயிர் செய்தார்
இத்தனை வேலைகளில் இன்னல்கள் பல கண்டு
இன்று உண்மை உழைப்பின் உயர் பலனடையாமல்
வெந்தணல் வேதனையை வெகுமதியாய்
வீணிலே நெஞ்சொடிய சுமக்கின்றார்
உலக மக்களே உங்களுக்கொரு செய்தி
ஆளும் அரசுகளுக்கு அவசர அவசியத் தகவல்
சோறு கொடுக்கும் விவசாயி
சோகமுற்றால் இச்செகத்தில்
வாழும் உயிர்கள் வாட்டமுற்று உடல் நலிந்து
உறுபசியில் உணவின்றி உயிர் துறக்கும்
சுழன்றும் ஏர் பின்னது உலகமென்றார்
செந்தமிழ் புலவர் சீர்மிகு வள்ளுவனார்
மேதினி மேம்பட மெய்யுருகப் பாடுபட்டு
உழைக்கும் தேசமே விவசாயி தான்
பாடுபட்டுப் பயிர் வளர்க்கும் விவசாயி
வீடு நிறைய பொருள் குவித்து வளம் பெருக
தோள் கொடுத்துத் துணை செய்வோம்
பரந்த இப்பாருக்கு நிறைந்த நற்பாடமதை
நித்திய சத்தியமாய் நாளும் நாம் சொல்வோம்
: : (A.R) அருண் ரமணன்.
அருமை வாழ்த்துக்கள்