பேராசிரியர் அருணன் அவர்களின் நூல்கள் குறித்த கட்டுரைகள் 27 அடங்கிய நூலே “அருணன் படைப்புலகம்” என்னும் இந்நூல். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறம் கிளை நடத்திய போட்டிக்கு வந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து நூலாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது சிறப்பு.
பேராசிரியர் அருணன் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளார். எனினும் அவரது 14 நூல்கள் குறித்த 27 கட்டுரைகளை 22 விமர்சகர்கள் எழுதி இந்துவில் வழங்கியுள்ளனர். இவை பேராசிரியர் அருணன் அவர்களின்
நூல்களுக்கான சிறு அறிமுகமே.
ஏற்கெனவே நாடறிந்த மிகச் சிறந்த இலக்கிய ஆளுமை பேராசிரியர் அருணன். பன்முகத்தன்மை கொண்ட அவரது அடிநாதம் மார்க்சியம். எனவே அவரது நூல்கள் மார்க்சியப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளதில் வியப்பில்லை. சில நூலாசிரியர்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாமல் இருப்பர். ஆனால் பேராசிரியர் அருணன் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாதவர். மார்க்சியக் கொள்கையை உயிர்மூச்சாய் வரித்துக் கொண்டவர். “நீங்கள் மட்டும் மார்க்சியத்தைப் படிக்கவில்லையெனில் திக்குத் தெரியாத காட்டில் அலைகிற ஒரு தனியாளாகிப் போவீர்கள்” என்று பிடல் காஸ்ட்ரோ சொன்னது பேராசிரியர் அருணன் அவர்களுக்குப் பொருத்தமானது என்பதை அவர் கூற்றின் வழியே உணரலாம்.
“நிழல் தரா மரம்” நூல் குறித்து துரை.அறிவழகன், கௌரி சங்கர், சுபாஷிணி ஆகியோர் கட்டுரைகளைத் தந்துள்ளனர்.
இந்நூல் புதினம் எனினும் கதையின் மைய ஓட்டம் என்பது “சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இடையேயான பூசல். ஆனால் அதை மட்டுமே ரத்தமும் சதையுமாகக் கொடுக்காமல், காதல், கணிகையர்கள் உலகம், வீரம், சமய பண்பாடு, வாழ்வியல் முரண்பாடுகள் எனப் பல பாடுகளை ஊடுபாவாக்கி அழகிய நெசவாளி போல் நாவலை நெய்துள்ளார் அருணன்” எனும் துரை.அறிவழகனின் கூற்று இப்புதினத்தை வாசிக்கத் தூண்டுகிறது. முற்போக்கு வாதிகள் என்றாலே வரட்டுத்தனம் இருக்கும் என்போருண்டு. ஆனால்”முற்போக்கு வாதிகளால் வெகுஜன மக்களும் ரசிக்கும் வகையில் எல்லோருக்குமான நாவலைப் படைக்க முடியும் என்று புலப்பட்டது” என தன் அனுபவத்தை இந்நாவல் வழி சொல்லிச் செல்கிறார் கௌரிசங்கர். அதற்கேற்ப “எழுத்தாளர் அருணனின் எழுத்து நடையும், வர்ணனைகளும் புதினத்தை வேகமாக வாசிக்கத் தூண்டியது. புதினத்தில் பல இடங்களில் அவரது விவரணைகள் ரசிக்கத்தக்கதாக இருந்தது” என்கிறார் சுபாஷிணி.
இரண்டு பாகங்களாக வந்திருக்கும் அருணனின் “தமிழரின் தத்துவ மரபு” என்னும் நூலை ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்று கூறும் தப்சுல் ஆசிக் “கருத்துமுதல்வாதம் மற்றும் பொருள் முதல்வாதம் என்று இரண்டே வகையில் ஒரு வாசகனால் எளிதில் பிரித்தறிந்து கொள்ளும் முறையில் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பம்சம்” என்கிறார். மேலும் சங்ககாலம் முதல் நடப்பு காலம் வரையுள்ள மொத்த காலகட்டத்தையும் ஆதி மரபு, வேத மரபு, (இடையிடையே வேத மறுப்பு மரபு) சைவ சித்தாந்த மரபு, சித்தர் மரபு, இஸ்லாம் கிறிஸ்தவ மரபு, சமயச் சீர்திருத்த மரபு, நாட்டார் தெய்வ மரபு என்பன போன்று காலம் வாரியாக பிரித்துவிட்டார் நூலாசிரியர் என்னும் தப்சுல்ஆசிக் இந்துமதம், அயோத்திதாசரின் நோக்கு, பெரியாரியம், மார்க்சியம், நவீன குருமார்கள் என்கின்ற தலைப்புகளில் தமிழகத்தின் படப்புகால தத்துவ செயல்பாடுகளை அருணன் விவரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“மானுடம் தந்த கம்பன்” என்னும் நூல் குறித்த தேவயானியின் கட்டுரை நேர்த்தியானது. “அயோத்தியா காண்டத்தில் அண்ணன் தம்பிகளில் விட்டுக்கொடுத்தல் என்பது அளப்பரிய செய்திகள் என்று சொல்லும் அருணன் அப்படிப்பட்ட ராமனின் பெயரால் இராமாயணத்தின் பெயரால் இன்றைய அயோத்தியில் இஸ்லாமியர்கள் கட்டிய மசூதியை இடித்துத் தள்ளியது மிகப் பெரிய அநீதி” என்று ஆதங்கப்பட்டுப் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது. “மானிடன் எப்படி வாழவேண்டும் என்பதையும் எப்படி வாழக்கூடாது என்பதையும் ராமாயணம் வழி நெடுகிலும் எடுத்துரைக்கிறார். ராமாயணத்தை வாசிப்பவர்கள் தேவர்கள் அல்ல. மானிடர்கள் தான்” என்னும் அருணினின் கூற்றைத் தேற்றமாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு.
“தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு” என்னும் நூல் குறித்து இருவர் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டில் வைகுண்ட சுவாமிகள், வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமணிய ஐயர், அ.மாதவையா, பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் உள்ளிட்டோரின் அளப்பரிய சமூக சீர்திருத்தப் பணிகளும் 20ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார், தந்தை பெரியார், சிங்காரவேலர், பாவேந்தர் பாரதிதாசன், மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்டோரின் அளப்பரிய சமூக சீர்திருத்தப் பணிகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. எனினும் “கிளைகளை வெட்டும் பணிகளையே சமூக சீர்திருத்த வாதிகள்/இயக்கங்கள் மேற்கொண்டுள்ளன. வேரோடு அறுத்தெறியும் பணி நடைபெறவில்லை” என்னும் துரை.அறிவழகன் விமர்சித்துள்ளதைப் புறந்தள்ள முடியாது. “80 ஆண்டுகளுக்கு மேலாகத் தாங்கள் வாழும் பள்ளர் தெருவிற்கு மட்டும் சாமி ஊர்வலம் வராது இருந்தது. இதற்காக திராவிடர் இயக்கத்தினரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் இணைந்து செயல்பட்டதால் சென்ற 2025 ஆம் ஆண்டு முதல் சாமி ஊர்வலம் எங்கள் தெருவிற்குள் நுழையத் தொடங்கிவிட்டது” என்னும் தி.அன்பழகனின் நடப்பு நிகழ்வின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது.
“தத்துவ ஞானம்” என்னும் நூல் குறித்த விமர்சனத்தில் “மகாவீரர் கடவுள் நம்பிக்கை ஆன்மா மீது நம்பிக்கைக் கொண்டும் இருந்தார். புத்தர் இரண்டையும் அற்று இருந்தார். இந்த இருவித இயக்கங்கள்தாம் காலப்போக்கில் சீடர்களால் அவர்களைக் கடவுள் ஆக்கி அவர்கள் பெயரிலேயே மதங்களை உருவாக்கி விட்டு குரு துரோகம் செய்துவிட்டனர் எனும் ஆய்வு நகை முரண் என்றாலும் ஆழமாக யோசிக்க வைப்பவை” என்னும் இறை மொழியின் கூற்று உண்மையில் யோசிக்க வைப்பவை தான்.
மூல நூல்கள் 20, வழி நூல்கள் 39 என 59 நூல்களைப் படித்து ஆய்ந்து இந்த “தத்துவ ஞானம்” என்னும் நூலை நமக்களித்துள்ளார் ஆசிரியர் அருணன் என்கிறார் வசந்தா. தத்துவம், பிரபஞ்சம், இயக்கம், வளர்ச்சி, உணர்வு, விதிகள், கடவுள், மனிதன், ஞானம், களம் எனப் பத்து வகைப்பாட்டிற்குள் உருப்பெறும் இந்நூல் ஒவ்வொரு வகைப்பாட்டின் ஐயமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடனேயே அணுகுகிறது என்கிறார் அல்லி உதயன்.
“மதம் பற்றி மார்க்சியம் ஓர் உரையாடல்” என்னும் நூல் மூலம் “இந்து மதம் என்பது பல மதங்களின் கூட்டமைப்பு. இக்கூட்டமைப்பில் உள்ள பிற மதங்கள், சீக்கியம், ஜெயின் மற்றும் புத்த மதம். இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய வரையறைகள் உள்ள நிலையில், நிர்வாகப் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட ஏற்பாட்டினை நூலாசிரியர் கூட்டமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது சரியான வரையறையில்லை என விமர்சிக்கிறார் மானூர் ஜீவா பழனி. அதே நேரத்தில் இந்த நூலைப் படித்ததன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி உழைப்பாளர்கள் கட்சி தானே தவிர அது நாத்திகர்கள் கட்சி அல்ல என்ற கருத்தையும் அறிய முடிவதாகக் குறிப்பிடுகிறார்.
“கவலையை வெல்லும் கலை” நூல் குறித்த கட்டுரையில் எழுத்தாளர் அருணன், மனக்கவலைகளைக் களைய பல மர்ம சாவிகளை நமக்கு இந்தப் புத்தகத்தின் வாயிலாகத் தந்திருப்பதாகக் கூறுகிறார் சாந்தி சரவணன்.
“சரயூ” நாவல் மூலம் “வர்ணம் பிறப்பால் வருவது அல்ல. அதிகார வர்க்கத்தினரையும் ஆட்டிப்படைக்கும் பார்ப்பனர்களால் வருவதுதான் என்பதை ராமனை வைத்தே நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார்” என்கிறார் சாந்தி சரவணன்.
“சங்கர மடத்தின் உண்மை வரலாறு” என்னும் நூலைப் படித்து சாந்தி சரவணன், “முற்றும் துறந்த துறவிகளாக அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதால் மக்கள் அவர்களைத் தெய்வமாக பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் தெய்வமாக மாறிவிடுகிறார்கள். அந்தத் தெய்வங்கள் நிலத்தை அபகரிக்கிறார்கள். பெண்களை அபகரிக்கின்றனர். அரசியல் செய்கிறார்கள். தப்பித்து விடுகிறார்கள். மறுபடியும் மறுபடியும் கொலை, கொள்ளை, பாலியல் வன்மறை என எதுவெல்லாம் தவறென்று இந்தப் பிரபஞ்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அந்த செயல்பாடுகளையே தொடர்கிறார்கள். எந்தச் சாமியாரும் மக்களுக்காக இல்லை. அவர்களுக்காகவே இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.” என்கிறார்.
“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” எனும் நூலை “தாகத்திற்கு தண்ணீர் குடிக்கப் பெரிய அண்டாக்களைவிட, சிறிய குவளைகள் உதவுவது போல, சிறு சிறு கட்டுரைகளைப் பதிவிட்டுள்ளார் என வர்ணிக்கிறார் முனைவர் மோகன். “தலைமைப் பொறுப்புக்கு வரக்கூடிய ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை அம்சங்களையும் கருத்திற் கொண்டு செயல்படுவதில் இடதுசாரிகளுக்கு நிகர் இடதுசாரிகளே. கூட்டுத் தலைமையின் கீழ் செயல்படும் அவர்கள் ஒழுக்கம், நேர்மை, எளிமை, சுய சார்பற்ற தன்மை எனப் பல விடயங்களை எப்படிப்பட்ட நேரத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. ஒரு வகையில் அதுவே அவர்களின் அடையாளம்” எனக் குறிப்பிடுவது நம்பிக்கை அளிக்கிறது.
“யுகங்களின் தத்துவம்” எனும் நூலை ஆய்வு செய்த சுபாஷிணி, “மிருக ஜாதியில் இருந்து வந்தவன் உண்மையான மனிதனாவது இப்புது
யுகத்தில் தான். முழுமையாக வளர்ந்த இயற்கையிசம் என்ற இந்த கம்யூனிசம் மனிதயிசத்திற்கு இணையானது என்பதை மார்க்ஸ் 1844ஆம் ஆண்டே கூறியது குறிப்பிடத்தக்கது” என்பது கவனிக்கத்தக்கது.
“சானாதனம்பற்றி சனாதனிகள்” எனும் நூல் குறித்த கட்டுரையில் “எந்தக் காலகட்டத்திலும் சனாதனிகளின் கருத்தியல் மாறப் போவதில்லை என்பதையும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது. தங்களை மனித இனத்தின் தலைமையாக நினைத்து ஊறிக்கிடக்கும் இவர்களை மாற்ற முடியாது. ஆனால் இவர்கள் ஆதரவு தரும் ஆளும் ஒன்றிய அரசை நம்மால் மாற்ற முடியும் என்பதை ஒவ்வொருவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான முதல் அடியாக இந்நூல் உள்ளது என நம்பிக்கை விதைகளை விதைக்கிறார் ஹேமலதா.
“முசோலினி முதல் மோடி வரை” என்னும் நூலில் ஒரே நாடு ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என முதல் பொதுத் தேர்தலிலேயே அறிக்கை வைத்து ஜனசங்கம் பேசியுள்ளதை நூலாசிரியர் அருணன் குறிப்பிட்டுள்ளதைப் புதிய தகவலாக உணர்வதாக பெரணமல்லூர் சேகரன் குறிப்பிடுகிறார். “தொடர் கலவரங்களை உருவாக்கும் மத அரசியல் விவரிப்பை, கலாச்சாரங்களுக்கு ஏற்ப கட்டமைக்கும் உத்தியை, அயோத்தி பிரச்சனையும் தொடர் கலவரங்களும் அவர்களுக்கு வழங்கியிருப்பதையும் வாசகர்கள் எளிமையாகப் புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது” என்கிறார் பேரின்பராஜன்.
“மார்க்சிய அழகியல்” என்னும் நூல் குறித்த கட்டுரையில், “கலை இலக்கியத்தில் எத்தனை வடிவங்கள் உள்ளதோ அனைத்திலும் இயங்க வேண்டும். மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப பிற முற்போக்கு எழுத்தாளர்களையும் இணைத்து உழைக்கும் மக்களுக்கான இலக்கியம் படைக்க வேண்டும் என்பதை விஞ்ஞான ரீதியாக அருணன் இந்நூலில் விளக்கியுள்ளார்” என்கிறார் கதிரேசன்.
அருணன் அவர்களின் “கடம்பவனம்” குறித்த கட்டுரையில், மனம் பற்றிய நிறைய உரையாடல்கள் பக்கங்கள் தோறும் மனித உளவியலையும் நூல் நெடுக நூலாசிரியர் அலசி இருப்பதாகக் குறிப்பிடுகிறார் இளவரசி. இந்நாவல் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி நடைபெறும் நிகழ்வினையும் மக்கள் கோவிலுக்குள் நுழைய கடும் எதிர்ப்பு விதிக்கப்பட்ட நிலையில் அதனை எப்படி அணுகுகின்றனர் என்பதையும் இந்நாவல் எடுத்தியம்புவதாகத் தெரிவிக்கிறார் சின்னச் செல்வம்.
“தர்மமும் சங்கமும்-புத்தர்” எனும் நூல் ஆதாரங்கள், ஆவணங்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் தொகுப்பே என்னும் நாட்டராயன் “பவுத்தத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒரு மகத்தான தர்க்கவாதியை, கடவுள் மறுப்பாளரை, ஆன்மா மறுப்பாளரை, வர்ணாசிரம மறுப்பாளரை நெருங்கி நின்று இயல்பாகப் பார்க்க முடிகிறது. வெறிகொண்ட வேதம் இங்கேதான் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதுவே புத்தரது தர்மத்திற்கும் அவர் உருவாக்கிய சங்கத்திற்கும் கிடைத்துள்ள மகத்தான பெருமை. கம்பீரமான அங்கீகாரம் என்று முடிக்கிறார் பேராசிரியர் அருணன்” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“ஞானக் கிறுக்கல்கள் 400” எனும் நூலில் “வாழ்வில் ஒருமுறையாவது சகலத்தையும் ச்நதேகப்படு என்றான் ஒரு ஞானி. நான் பலமுறை சந்தேகப்பட்டதில் கிடைத்தது மார்க்சியம்” என்பதை வத்சலா ரமணி குறிப்பிடுவது அர்த்த அடர்த்தி மிக்கது.
“கனவுகளின் மிச்சம் ஓர் அறிவு ஜீவியின் தன் வரலாறு” நூல் குறித்த கட்டுரையில், “ஓர் இருள் விலகி உதயமானது போல் உள்ளது. அருணனின் படைப்புகள் வழி பல சமூக சீர்திருத்தங்களையும் பல சித்தாந்தங்களையும் மார்க்சிய மூலவர்கள் வாழ்வையும் சிந்தனைகளையும் தமிழில் கொண்டு சேர்த்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்திற்குச் சென்று இருள் நீக்கிய வெளிச்சத்தில் வேறு பார்வை புலப்படுகிறது” என்னும் ஷமீம் உசேனின் வார்த்தைகள் உண்மைதானே.
“கொலைக்களங்களின் வாக்குமூலம்” என்னும் நூல் குறித்த கட்டுரையில், “மூட நம்பிக்கையுள்ள நாயக்கர்கள் கோயில்கள், அணைகள், பாலங்கள் கட்டும்போதே இழிந்த பிறவி என சங்கிலியர்களை சிறைப்பிடித்து பலி கொடுத்த காலம் பரிதாபத்திற்குரிய இந்த சமூகத்திற்கு சாபவிமோசனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்கள் உரிமைகளைப் பெற ஒன்றுபடுத்தி போராட்டக் களத்திற்குக் கொண்டு வந்து கல்வி, வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்று அவர்களது வாழ்வுரிமையை கம்யூனிஸ்ட் இயக்கமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதுகாத்தது இன்றைய சிறப்பு” என முத்தாய்ப்பாய் முத்துசாமி முடிந்திருப்பது நன்று.
“திருக்குறள்-அருணன் உரை” குறித்த ஆய்வில் திருக்குறள் அடிப்படையில் ஒரு சமய நூல். அதே நேரத்தில் இன்றைக்கும் பொருந்துகிற பல அருமையான வாழ்வியல் சிந்தனைகளை அந்தச் சமயம் வழங்கியுள்ளது. அதனால் அது நிலை பேறு பெற்றுள்ளது. திருக்குறளை ஆழ்ந்து வாசித்தால் அதன் சமயச் சார்பு தெரிந்துவிடும் என்கிறார் அருணன்” எனக் குறிப்பிடும் வெங்கட்ராமன் இறுதியில் திருக்குறள் கால வெள்ளத்தில் உருண்டு வந்து நம் கையில் கிடைத்துள்ள ஞானப் பெட்டகம். அதைப் படிக்க வேண்டும். பத்திரப்படுத்த வேண்டும் என்ற பேராசிரியர் அருணன் அவர்களது வேண்டுகோளையும் தமது வேண்டுகோளாக வைத்துள்ளது சிறப்பு.
பேராசிரியர் அருணன் அவர்களின் 14 நூல்கள் குறித்த அலசலே ஒரு நூலாகி அருணனின் நூல்களைப் படிக்கத் தூண்டுகோலாகியுள்ளது எனின் மிகையன்று. பேராசிரியர் அருணனின் நூல்கள் குறித்த இந்த ஆய்வு நூலும் வாசிக்க வேண்டிய நூலே.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | அருணன் படைப்புலகம் |
| ஆசிரியர்: | பேராசிரியர் அருணன் |
| வெளியீடு: | தமுஎகச, அறம் கிளை. |
| விலை: | ₹.350 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 பெரணமல்லூர் சேகரன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

