இங்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது..? : அருந்ததி ராய் | முத்து

என்ன இது? நமக்கு என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? இது ஒரு நச்சுக்கிருமி. ஆம். அந்தக் கிருமிக்கு அறம் ஏதும் கிடையாது. ஆனால் இது வெறும் நச்சுக்கிருமி அல்ல. நிச்சயம் அதற்கு மேலே ஏதோ ஒன்று. இது மனிதர்களுக்கு கடவுள் கற்பிக்கும் பாடம் என்று சிலர் நம்புகிறார்கள். தனது ஆதிக்கத்தின் கீழ் உலகத்தைக் கொண்டு வருவதற்கு சீனா செய்கின்ற சதி என்று சிலர் கூறுகிறார்கள்.

எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். கொரோனா வைரஸ் எல்லாம் வல்லவர்கள் எனப்படுவோரை மண்டியிட வைத்திருக்கிறது. வேறு எதனாலும் சாதிக்க முடியாத வகையில் உலகத்தின் அசைவை நிறுத்திக் காட்டியிருக்கிறது. நமது சிந்தனை பின்னும் முன்னும் அலைபாய்கிறது. இயல்பு நிலை திரும்பாதா என்று ஏங்குகிறது. நம்முடைய எதிர்காலத்தை நம்முடைய கடந்த காலத்துடன் எப்படியாவது இழுத்துப் பிடித்துத் தைத்து விட முடியாதா என்று நம் சிந்தனை முயற்சிக்கிறது. இழைகள் அறுபட்டுக் கிழிந்து தொங்குகின்ற எதார்த்தநிலையை நம் சிந்தனை அங்கீகரிக்க மறுக்கின்றது.

அங்கீகரிக்க மறுத்தாலும், முறிவு இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கைகள் தகர்ந்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், நமது இறுதித் தீர்ப்பினை எழுதுவதற்கு நம் கைகளால் நாமே உருவாக்கிக் கொண்டிருக்கும் எந்திரம் குறித்து மீளாய்வு செய்து பார்ப்பதற்கு இந்த முறிவு நமக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியிருக்கிறது. இயல்புநிலை என்று சொல்கிறோமே, அந்த இயல்புநிலை அப்படியே திரும்புவதுதான் மிகமிக ஆபத்தானது.

பெருந்தொற்று நோய்கள் கடந்த காலத்திலிருந்து முறித்துக் கொண்டு, தங்களது உலகை புதிய முறையில் கற்பனை செய்து பார்க்க மனித குலத்தை நிர்ப்பந்தித்திருக்கின்றன. இது வரலாறு. இன்று நாம் எதிர்கொள்ளும் சூழலும் அப்படிப்பட்டதே. இதோ இது ஒரு திறப்பு. ஒரு உலகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிச் செல்வதற்கான நுழைவாயில்.

நாம் இதற்குள் நுழைந்து கடந்து செல்லலாம். அவ்வாறு போகும்போது, நமது தப்பெண்ணங்கள், வெறுப்புகள், பேராசைகள், நமது தரவுக் கிடங்குகள் – மக்கிப்போன கருத்துகள், நமது செத்துப்போன ஆறுகள் – புகை மண்டிய வானங்கள் அனைத்தையும் நம்முடனே இழுத்துச் செல்லலாம்.

அல்லது அவற்றையெல்லாம் துறந்து விட்டு, கடந்த காலத்தின் சுமைகள் ஏதுமின்றி, புதியதோர் உலகினைக் கற்பனை செய்த வண்ணம், மிதந்தும் செல்லலாம். புதிய உலகிற்காகப் போராடுவதற்கும் ஆயத்தமாகலாம்.

நன்றி: அருந்ததி ராய், பைனான்சியல் டைம்ஸ். ஏப்ரல் 3
தமிழாக்கம்: முத்து