பெருமகிழ்வின் பேரவை! நாவல்.
அருந்ததி ராய்.
தமிழில் ஜி. குப்புசாமி.
காலச்சுவடு பதிப்பகம்.
விலை ரூ. 550
புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான அருந்ததி ராய் எழுதியுள்ள இரண்டாவது நாவல். பெருமகிழ்வின் பேரவை. “சின்ன விஷயங்களின் கடவுள்” இவருடைய முதல் நாவல்.. அந்த நாவலுக்கு இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றான “புக்கர்” பரிசு 2002ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அருந்ததி ராய், கேரளத்தைச் சேர்ந்த மேரி ரோஸ் என்ற தாய்க்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட மேலாளர் ரஜித் ராய் என்ற தந்தைக்கும் 1961ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் மேகாலயா தலைநகர் ஷில்லாங் நகரில் பிறந்தார். கேரள மாநிலம் ‘ஆய்மணம்” என்ற சிற்றூரில் வளர்ந்த இவர் கோட்டயத்திலும், நீலகிரியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். டில்லிப் பல்கலைக் கழகத்தில் கட்டிடக்கலை பயின்றுகொண்டிருந்த போது சக மாணவர் ஒருவரைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டார். நான்கு வருடங்கள் அவருடன் வாழ்ந்த அருந்ததி ராய் பிறகு அவரிடமிருந்து விலகி பிரதீப் கிஷன் என்ற திரைப்பட இயக்குனரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்கள் எடுத்தனர். அருந்ததி ராய் கதை வசனம் எழுதிக் கணவனுக்கு உதவி செய்தார்.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே தீவிர சிந்தனையாளராக விளங்கினார் அருந்ததி ராய். பள்ளி ஆசிரியர்கள் அவரை ஊக்கப்படுத்தினர். இந்தியாவில் நிலவும் பெண்ணடிமைத்தனம், சிறார் உழைப்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறை ஆகியவற்றுக்கு எதிராகச் சிந்திக்கவும் எழுதவும் செய்தார். மேத்தா பட்கர் தொடங்கிய “நர்மதா பச்சாவோ அந்தோலன்” என்ற அமைப்பில் சேர்ந்து இயற்கைச் சீரழிவுக்கு எதிரான கருத்தியல் யுத்தத்தையும் களப் போராட்ட்த்தையும் நிகழ்த்தினார். அதன்மூலம் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனம் பெற்றார்.
காஷ்மீர் பிரச்சினையை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நாவல் “பெருமகிழ்வின் பேரவை.” மொழி பெயர்ப்பு எழுத்தாளர் ஜி. குப்புசாமி தமிழாக்கம் செய்துள்ளார். மொழிபெயர்ப்பு பற்றிக் கீழ்க்கண்டவாறு அவர் கூறுவது முக்கியமானது.
“சின்ன விஷயங்களின் கடவுள் நாவல், மொழிபெயர்ப்பு அனுபவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது பெருமகிழ்வின் பேரவை மொழியாக்கச் செயல். முதல் நாவல், (சின்ன விஷயங்களின் கடவுள்) எனக்குள் ஒலித்துக்கொண்டிருந்த அருந்ததி ராயின் குரலை மொழிபெயர்க்க வைத்தது என்றால் இரண்டாவது நாவலின் குரல்கள் பழைய தில்லியிலிருந்தும் அதன் கைவிடப்பட்ட மயானத்திலிருந்தும் குஜராத்திலிருந்தும் காஷ்மீரிலிருந்தும் ஆந்திர வனப்பகுதியிலிருந்தும் எனப் பல்வேறு திசைகளிலிருந்து என்னைச் சூழ்ந்து அலைக்கழிய வைத்தன. மூச்சைத் திணறடித்து, உடம்பெங்கும் ஊமை வலிகளையும் குற்ற உணர்வுகளையும் புகுத்தின. அன்னியக் குரல்களாக அதுவரை இருந்தவை, நாவலை மொழிபெயர்த்து முடித்தபோது அந்தரங்க ஓலங்களாக மாறியிருந்தன.” மேலும் அவர் சொல்கிறார். “இந்நாவலின் தலைப்பான ministry of utmost happiness என்பதைத் தமிழாக்கம் செய்வதில் கொஞ்சம் சிக்கல் இருந்தது. Ministry என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் ‘அமைச்சகம்.’ கிறித்துவ மறைமொழியில் “ஊழியம்.” ஆனால், இந்நாவலைப் பொருத்தவரை இவ்விரண்டு சொற்களும் பொருந்தாமல் இருப்பதை நாவலை முழுமையாய்ப் படித்து முடித்ததும் அறிந்து கொள்ளலாம்.”
மினிஸ்ட்ரி என்பதை எப்படித் தமிழாக்குவது என்பதை, ஜார்ஜ் ஆர்வல் எழுதிய ”1984” என்ற புகழ்பெற்ற நாவலிலிருந்து தான் புரிந்துகொண்டதாகக் கூறுகிறார் ஜி, குப்புசாமி. ஏனென்றால் மினிஸ்ட்ரி என்பது மகிழ்ச்சி தாண்டவமாடும் அதிகார அமைப்பு. ஆனால் இந்நாவலின் பாத்திரங்கள் வெளி உலகினரின் நிராகரிப்புக்கு உள்ளாகி விலகிவந்து அந்த மயானத்தில் தமக்கான தனியுலகை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அதனால் அது ஒன்றும் உண்மையான பொருளில் “பெருமகிழ்வு” (utmost happiness) அல்ல. கம்யூன் போல ஒன்று சேர்ந்து வாழ்கின்றனர். ஆகவே அது ஒரு பேரவையாகவே இருக்க முடியும் என்று பல ஆளுமைகளுடன் விவாதித்துத் தெளிவடைந்து அந்தப் பெயரை வைத்ததாகக் கூறுகிறார்.
இதை ஒரு வரலாற்று நாவல் என்றே சொல்லவேண்டும். இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான இந்திய அரசியல் வரலாற்றையும் அதனால் சிதிலமடைந்த சாமான்யர்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகரமாய்ச் சித்தரிக்கிறது.
“க்வாஃப்கா” என்ற அத்தியாயம் ஹிஜ்ராக்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை நடைமுறை பற்றியும் விவரிக்கிறது. க்வாப்கா என்றால் பேரவை. ஹிஜ்ராக்களும் போக்கிடம் இல்லாதவர்களும் சேர்ந்து வாழும் இடம். டில்லி நகரின் கைவிடப்பட்ட மயானமே அது. ஹிஜ்ரா என்பது ஆணுமில்லாத பெண்ணுமில்லாத உடம்புக்காரர்கள். ஆண்டவனால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். (தென் இந்தியாவில் பிரம்மாவின் தும்மல் துளிகள் என பரிகசிக்கப் படுகிறார்கள்.) அஃப்தாப் என்ற ஆண்மகன் ஐந்து வயதிருக்கும் போதே ஆணல்ல என அறியப்படுகிறான். ”அஞ்சும்” என்ற பெண்பெயரைத் தனக்குச் சூட்டிக்கொண்டு அதிகாரம் மிக்க தலைவியாய் க்வாப்காவை ஆட்சி செய்கிறாள். சதாம் உசைன் என்ற ஓர் அனாதை அங்கு வந்து சேரும்போது க்வாப்காவுக்குப் புது உத்வேகம் உண்டாகிறது.
சதாம் உசைன் பசுப் பண்பாட்டுவாதிகளால் பாதிக்கப்பட்டவன். அவன் தந்தை பசுவைக் கொன்றார் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு போலிசாரால் கொல்லப்படுகிறார். அந்தக் காவல் அதிகாரியையும் பசுக்குண்டர்களையும் கொன்றொழிக்க வேண்டுமெனச் சபதம் ஏற்கிறான். (ஆனால் அது கடைசிவரை நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.)
நகைச்சுவை ததும்பி வழியும் இன்னோர் அத்தியாயம் “டாக்டர் ஆசாத் பார்த்தியா.” அப்படியென்றால் “சுதந்திர இந்தியன்.” அவன் அரசு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து பின்வாங்கிக் கொண்ட ஒரு சோஷலிஸ்ட். பனிரெண்டு ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தும் தெம்போடு இருக்கிறான். எப்படியென்றால் உண்ணாவிரதத்தின் போது 48 மணிக்கொரு முறை சைவ உணவு சாப்பிடுகிறான். இந்த வர்ணனையில் நையாண்டிக் குரல் அலைபாய்ந்து ஓடுகிறது. ஒருவேளை இந்தப் பாத்திரம் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த அன்னா அசாரேயைப் பிரதிபலிக்கக் கூடும். ஆசாத் பார்த்தியா 12 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருக்கிறான். அன்னா அசாரே 2011 ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 9 வரை ஐந்து நாட்கள் மட்டும் ஊழலைக் கண்காணித்து அரசு அமைப்பை முறைப்படுத்தும் அதிகாரம் படைத்த லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார். ஆசாத் பார்த்தியாவின் 12 வருட உண்ணாவிரதப் போராட்டமும் அன்னா அசாரேயின் 5 நாள் போராட்டமும் ஒன்றா என்ற கேள்வி எழக்கூடும். ஒப்புமை நோக்கில் ஒத்துப் போகவில்லை என்று தோன்றக்கூடும். உண்மைதான். அங்கதச் சுவையுடன் கூடிய புனைவு தளத்தில் அதை அதிக அழுத்தப் பிரதிபலிப்பாகவே கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது.. ஆசாத் பார்த்தியாவின் பணக்காரச் சித்தரிப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான அபிமானமும் அன்னா அசாரேயைப் பிரதியெடுத்துத் தருகிறது.
இந்த நாவலை நகர்த்திச் செல்லும் மிக முக்கியப் பாத்திரங்கள் நாகா, திலோத்திமா, அம்ரிக்சிங் ஆகியோர். நாகா ஒரு பத்திரிகையாளன். திலோத்திமா கேரள மண்ணையும் குடும்பத்தையும் துறந்து டில்லியிலும் கஷ்மீரிலும் நாகாவுக்குத் துணையாக வாழ்கிறாள். அம்ரிக் சிங் கொடுங்கோன்மை நிறைந்த ராணுவ அதிகாரி. அவனின் சந்தேகப் பார்வைக்குள் பிடிபட்ட யாரும் உயிருடன் இருந்ததில்லை. அவனால் கொன்றொழிக்கப்பட்ட கஷ்மீர் இளைஞர்கள் ஏராளம். அவனின் சுவாரஸ்யமான பேச்சுமொழி விஷம் தடவிய இனிப்புப் பண்டம். சில நேரங்களில் வக்ரமாகவும் வார்த்தையாடுகிறான். “நான் ஓர் ஆண்குறி; தீவிரவாதிகள் அனைவரையும் புணர்ந்துகொண்டே இருப்பேன்” என்கிறான். “உயிருடன் இருக்கும் கஷ்மீரிகள் கொல்லப்படுவதற்குத்தான் வாழ்கிறார்கள் என்ற பயங்கரவாத சொல்லாடல் அவன் மூலமாக உருவாக்கப் படுகிறது.
இன்னொரு முக்கியப் பாத்திரம் மூசா. திலோ விசாரணைக்காக அம்ரிக் சிங்கால் அழைத்துச் செல்லப்பட்ட போது அவளைக் காப்பாற்றுகிறான். அவன் ஒரு சமயல்காரன். ராணுவ வீரர்களுக்குச் சமைத்துப் போடுகிறான். அம்ரிக் சிங்கின் அடாவடித்தனத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தீவிரவாதிகளுக்காக உளவு பார்ப்பவனாக மாறுகிறான். திலோ அவனோடு உறவுகொண்டு அவனுக்கு ஆறுதல் அளிக்கிறாள். ஒருவேளை அவன் கொல்லப்படக்கூடும் என அவளுக்குத் தோன்றுகிறது..
ஆனால் நிலமை வேறு மாதிரி ஆகிறது. சாதாரண மக்கள் தைரியமடைந்து வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறார்கள். விளைவு, அம்ரிக்சிங் அமெரிக்காவுக்குத் தப்பி ஓடித் தற்கொலை செய்துகொள்கிறான். அவன் குடும்பமே துடிதுடித்து மாண்டு போகிறது.
காஷ்மீர் மட்டுமல்ல; ராணுவக் கொடூரம் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறது என்பதை மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய இயக்கவாதியான ரேவதி போலிசாரின் தேடுதல் வேட்டையில் பிடிபடும்போது சித்திரவதை செய்யப்படும் காட்சி புலப்படுத்துகிறது. ரேவதியின் வாழ்வு கண்களில் நீரை வரவழைக்கிறது. காஷ்மீர் தவிர்த்த மற்ற இடங்களிலும் அரசு பயங்கரவாதம் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
நாவலை வாசித்து முடிக்கும்போது காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொல்கிறார். ”காஷ்மீரில் ஒன்பது நபருக்கு ஒரு காவலர் என்ற அளவுக்கு ராணுவக் கட்டுப்பாடு நிலவுகிறது. நான் காஷ்மீருக்குப் போயிருந்த போது எனது சக நாடாளுமன்ற உறுப்பினராகிய ஃப்ரூக் அப்துல்லாவைச் சந்திக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.”
மூஸா சொல்கிறான். “ஒருநாள் கஷ்மீரும் இந்தியாவை இதேபோல சுய அழிப்புச் செய்துகொள்ள வைக்கும். உங்களுடைய ரவைக் குண்டுகளால் எங்களை, எங்கள் ஒவ்வொருவரையும் குருடாக்கி வந்திருக்கிறீர்கள். ஆனால் எங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறீர்கள் என்று பார்ப்பதற்கு உங்களிடம் கண்கள் இருக்கின்றன. நீங்கள் எங்களை அழித்துக்கொண்டிருக்கவில்லை. எங்களைக் கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நீங்களேதான் அழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.”
மேற்கண்ட வாக்கியங்கள் காஷ்மீர் நிலத்தின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்த மக்களுக்கு நமது ஒருமைப்பாட்டையும் நட்புணர்வையும் காட்ட வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் ஒன்றிய அரசின் காஷ்மீர் மக்களுக்கு எதிரான ராணுவக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும்படியான நிர்ப்பந்தத்தைத் தரவேண்டும் எனக் கோருகிறது நாவல். காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக நீடிக்கச் செய்வதில் ஒவ்வோர் இந்தியனின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. .
வாழ்க்கை வாழ்வதற்குத்தானே அன்றி சாவதற்கு அல்ல; சாதல் அங்கக வளர்ச்சியின் முதிர்நிலை. சாவதற்க்காக வாழ்வது கொடுங்கோன்மையின் உச்சம். ராணுவக் கொடுங்கோன்மை என்ற நீரடிப் பிரவாகம் மேலெழுந்து வந்து பூமியை விழுங்குவதற்குள் அணையிட்டு நிறுத்தவேண்டும்.
நாவலை வாசித்து முடிக்கும்போது எழும் கேள்வி அரசு பயங்கரவாதமும் மக்கள் படும் அவதிகளும் மட்டுமே படைப்பாக்கப்பட்டிருக்கிறதே; அரசு அதிகாரத்துக்கு எதிராக முற்போக்கு அரசியல், சமூகவியல் சிந்தனையாளர்கள் முன்னெடுப்பு ஏதும் செய்யவில்லையா? ஒருமைப்பாட்டின் வழியே பெரும்பகுதி மக்கள் கனிவுகொண்டு இயங்கிக்கொண்டு இருக்கிறார்களே; அதன் வீச்சு நாவலில் பதியமாக வேண்டாமா?
சில பல விமர்சனங்களைத் தாண்டி நாவல் விஸ்தாரமான தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாசிக்க வேண்டும்; வாசித்ததை உள்வாங்கி புதிய சிந்தனை ஓட்டத்தின் வழியே புரட்சிகரச் செயல்பாட்டை மறு நிர்மாணம் செய்யவேண்டும்.
தேனி சீருடையான்
e.mail: [email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
தேனி சீருடையான் அவர்களின் இவ்வுரை மிகவும் நேர்த்தியாகவும் பல நடப்பு முன்னுதாரனங்களுடனும் வலுச் சேர்க்கிறது. தினம் தினம் அவர் நடப்புச் செய்திகளை உற்று நோக்குவதன் வாயிலாக இது சாத்தியப்பட்டிருக்கக்கூடும். தோழரின் மிக நுணுக்கமான கட்டுரை மொழி இந்நாவலை வாசிக்கத் தூண்டும் இழுவிசையாக இருக்கிறது. இந்நாவலை மொழிபெயர்த்த குப்புசாமி அவர்களின் நாவலுக்கான பெயர் தேடல் குறித்த பதிவு ஒவ்வொரு வார்த்தைகளும் மொழிபெயர்ப்பில் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்துகின்றன.
புக்டேவிற்கும் தோழர்கள் தேனிசீருடையான் குப்புசாமி ஆகியோருக்கும் வாழ்த்துகள்.